ஓய்ந்திடுமா விடுதலைப் போர்? ஒருபோதும் நடக்காது!

வன்னியில் வரலாறு காணாத மனிதப் பேரழிவை இலங்கை இராணுவம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

பாதுகாப்பு வலயம் என்று அறிவித்து, அதற்குள் மக்களைப் பதுங்கச் செய்த பின்னர், அவர்களைக் கொன்றழிக்கின்ற கீழ்த்தரமான தந்திரோபாயங்களைக் கையாள்கிறது இராணுவம்.

தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருமாறு தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோள்களைப் புறக்கணித்து விட்டு, புலிகளின் பகுதிக்குள் ஒதுங்கிப் போயிருக்கின்ற மக்கள் மீது அரசாங்கத்துக்கும், அரச படைகளுக்கும் தீராத வஞ்சம் இருக்கிறது.

அங்குள்ள 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் ஆதரவில்தான் புலிகள் இருக்கிறார்கள் என்று அரசாங்கம் உறுதியாக நம்புகிறது.
அதனால், அந்த மக்களையும் கொன்று புலிகளையும் முற்றாக அழித்து விடுகின்ற தந்திரோபாயத்தை கையாண்டு வருகிறது.

வன்னியில் இருந்து மக்களை அச்சுறுத்தி வெளியேற்ற பல்வேறு தந்திரங்களையும் கையாண்டு தோல்வி கண்ட அரச படைகள், இப்போது பாதுகாப்பு வலயம் ஒன்றை அறிவித்து விட்டு அதற்குள் மக்களை கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாகக் கொன்று குவிக்கின்ற முயற்சியில் இறங்கி இருக்கின்றன.

கடந்த கிழமை மாத்திரம் 300 பேர் வரையில் கொல்லப்பட்டு 1000 பேர் காயமுற்றதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த வருடத்தில் மாத்திரம் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 500 ஐத் தாண்டி விட்டது.

அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றழித்தவாறு போரை நடத்துகின்ற மகிந்தவின் அரசாங்கத்துக்கு ஜப்பான் வந்து ஆசி கூறி விட்டுப் போகிறது. இந்தியா வந்து ஆதரவு கொடுத்து விட்டுப் போகிறது. பாகிஸ்தான் வந்து கைகொடுத்து உதவுகிறது.

ஆனால், நிர்க்கதியாக நிற்கின்ற வன்னி மக்களுக்கு உதவ, அவர்களின் சார்பில் குரல் கொடுக்க எந்த நாடுமே வரவில்லை.
இத்தோடு போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதாக சலிப்படைந்து போயிருப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.

வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப்;;; பிரதேசம் 300 சதுர கிலோ மீற்றரை விடவும் சுருங்கிப் போயிருப்பது உண்மை. இது கூடப் பறி போகலாம்.

ஆனால் புலிகளின் கையில் இருந்து நிலத்தைப் பறிப்பதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் முடிந்து விடாது. அது ஓய்ந்து போகாது.

ஏனென்றால், இது நிலங்களைத் தக்க வைப்பதற்காக தொடங்கப்பட்ட போராட்டம் இல்லை. தமிழ் மக்களின் உரிமையை மீட்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் இன்று ஒரு நிரந்தர தளப் பிரதேசத்தைக் கொண்டு மரபுவழியில் நடக்கிறது. நாளை அது கெரில்லா தந்திரத்துக்கு மாறும் நிர்ப்பந்தமும் ஏற்படலாம்.

ஆனால், அதுவே போராட்டத்தின் அழிவாக, முடிவாக அமைந்து விடாது. அப்படியான கருத்துடன் இருக்கின்றவர்கள் நிறையப் பேர்.

புலிகளின் பலத்தைக் கண்டுதான் உலகமே பயந்தது. ஆனால், அந்தப் பலத்தை வைத்துக் கொண்டே பெறமுடியாத உரிமைகளை, சிங்கள அரசு அரசியல்தீர்வு ஒன்றின் மூலம் வழங்கிவிடும் என்ற நப்பாசை வந்து விடக் கூடாது.

புலிகளை அழித்துவிட்டு அரசியல் தீர்வு காணப் போவதாக மகிந்த ராஜபக்ஸ சொல்லிக் கொண்டிருந்தாலும் அது நடக்காத ஒரு காரியம்.

இன்று புலிகள் பலமிழந்து போயிருப்பினும் அவர்களைப் பலமாக மீளக் கட்டியெழுப்ப வேண்டியது தமிழ் மக்களின் கடமையாக இருக்கிறது. புலிகள் இல்லையேல் தமிழரை நாய் கூட மதிக்காதென்பது இலங்கையில் வாழும் அனைவருக்கும் தெரிந்த விடயம்.

அப்படிப்பட்ட நிலையில் புலிகளின் பலத்தை அழித்து விட்டதாக கொக்கரிக்கின்ற சிங்கள அரசு ஒரு போதுமே தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கவும் மாட்டாது. அவர்களுக்குப் பாதுகாப்பு இருக்கவும் மாட்டாது.

தமிழ் மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குரியதாக மாறிவருகிறது. தினமும் இலங்கையில் நடக்கின்ற கடத்தல்கள், காணாமல் போதல்கள், கைதுகள், கொலைகள் என்று எல்லாவற்றுக்குமே காரணமாக இருப்பது அரச படைகள் தான்.

இதே அரச படைகளின் ஆட்சியில் வடக்கும் கிழக்கும் இருக்கின்ற போது தமிழ் மக்களுக்கு, தமிழ் இளைஞர்களுக்கு எத்தகைய பாதுகாப்பு கிடைக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

புலிகளிடம் இருந்து நிலப்பரப்பு முழுவதையும் அரச படைகள் கைப்பற்றினால் கூட, தமிழ் மக்களின் பாதுகாப்பை சர்வதேசத்தினாலே அல்லது வேறெந்த தரப்பினராலோ உறுதிப்படுத்த முடியாது.

சந்தேகம், விசாரணை, கைது என்று தொடங்கப் போகின்ற இந்த அடிப்படை உரிமை மீறல்கள் கடைசியில் சுட்டுக் கொலை, எரித்துக் கொலை வரை நீண்டு செல்லும்.

அப்போது போராட்டம் மீண்டும் எழுச்சி கொள்ளும் நிலை ஏற்படும். மக்களின் எதிர்ப்பும் வெறுப்பும் அரச படைகளுக்கு எதிராகக் கிளம்பும்.
தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான வாழ்வும், அவர்களுக்கான உரிமைகளும் உறுதிப் படுத்தப்படாத நிலை இருக்கின்ற வரையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஒருபோதும் சாவு வராது.

இந்தியப் படைகளின் காலத்தில் புலிகளை துரத்திக் கொண்டு போய் வன்னியின் காடு;க்குள் ஒரு மூலைக்குள் முடங்கி வைத்திருந்தது இந்தியா.
ஆனால், வடக்கு கிழக்கின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் பயிற்சிக்காக மணலாற்றுக் காட்டைத் தேடி எதற்காக ஓடினார்கள்?

தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள அன்று புலிகளைத் தேடி ஓட வேண்டிய நிலை எப்படி ஏற்பட்டதோ, அதே நிலை தான் விரைவில் ஏற்படும்.
எனவே, நிலங்களின் இழப்பின் மூலம் ஒரு விடுதலைப் போராட்டத்தின் இறுதி அத்தியாயத்தை எழுதிவிட முடியாதென்ற உண்மை விரைவிலேயே மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்துக்கு தெரிய வரும்.

அதேவேளை, இந்தக் கட்டத்தில் போராட்டம் முடிந்து போய்விட்டதாக குழம்பிப் போனவர்களும் சரி, இனிமேல் எல்லாம் முடிந்து விட்டதென்று கன்னத்தில் கைவைத்தவர்களும் சரி, இந்த தீர்க்கமான கட்டத்தில் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்.

இதற்கு முன்னர், எல்லாவற்றுக்கும் புலிகள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

புலிகள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பது இருக்க, நாம் ஒவ்வொருவரும் போராட்டத்தை முன்னோக்கித் தள்ளிச் செல்ல, சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள, என்ன செய்திருக்கிறோம்? என்ன செய்யப் போகிறோம்? என்ன செய்ய வேண்டும்? என்று சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஏதோ வன்னி மக்களின் அவலத்தைத் தீருங்கள் என்று புலம்பெயர் நாடுகளில் கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்துவதும் கலைந்து செல்வதும் தான் போராட்டத்துக்குச் செய்கின்ற பங்களிப்பா?

இதெல்லாம் எந்தளவுக்கு எமது மக்களின் நலனுக்கு பயன்பட்டிருக்கின்றன என்றும் பார்க்க வேண்டும்.

சர்வதேசத்தை தட்டி எழுப்பி எமது பக்கத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

அதேவேளை இந்தியா அதைச் செய்யும், இதைக் கிழிக்கும் என்ற வாய்ச்சவடால்கள் எல்லாமே பொய்யாகிப் போயிருக்கின்றன.

அங்குள்ள அரசியல் தலைவர்கள் அனைவருமே தமது எல்லைக்குள் நின்று போராட்டம் நடத்துவார்களே தவிர அதற்கு அப்பால் வரமாட்டார்கள் என்பதை கடந்த சில மாதங்களில் நன்கு புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

உண்மையில், தமிழக அரசியல் தலைவர்களைப் பற்றி நாம் புரிந்து வைத்ததை விட சரத் பொன்சேகா புரிந்து கொண்டது அதிகமென்றே சொல்லலாம்.

பிரணாப் முகர்ஜியை கண் துடைப்புக்காக அனுப்பியிருந்த இந்தியா அவரது பயணத்தின் மூலம் எதைப் பெற்றுக் கொண்டிருக்கிறது?

500 தமிழ் மக்களை கொன்று குவித்து பசியாறிப் போயிருக்கின்ற மகிந்தவிடம் போய், தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லாமல் போரை நடத்துமாறு அவர் கோரியிருக்கிறார்.

போரை நிறுத்துமாறு தமிழகக் கட்சிகள் ஒரு மனதாக தீர்மானத்தை அறிவிக்க தமிழரைக் கொல்லாமல் போரை நடத்துமாறு ஆசி கூறி விட்டு வந்திருகிறார் பிரணாப் முகர்ஜி.

தமிழ் மக்களின் பாதுகாப்பு மீது இந்தியாவுக்கு உண்மையான அக்கறை இருந்திருக்குமேயானால் கொழும்பில் போய் சொன்ன இந்தச் செய்தியை புதுடெல்லியில் இருந்தவாறே காரியமாகச் சாதித்திருக்கும்.

இந்திரா காந்தி அம்மையார் புதுடெல்லியில் இருந்தவாறு அப்படித்தான் இலங்கை அரசை ஆட்டிப் படைத்தார்.

ஆனால், தமிழர்களின் அழிவை ரசித்து மகிழும் இந்தியாவுக்கு வன்னியில் அப்பாவிகள் கொல்லப்படுவது ஒன்றும் வேதனையைத் தரவில்லை.

வன்னியில் நடக்கின்ற போரில் புலிகள் அழிந்து போவதாக இந்தியா குதூகலித்து கொண்டிருக்கிறதே தவிர தமிழ் மக்களின் மீது இந்தியாவுக்கு எந்தக் கரிசனையும் கிடையாது.

இந்தச் சூத்திரங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டால் தமிழ் மக்களுக்கு இந்தியாவோ சர்வதேசமோ ஒருபோதும் நிலையான நிரந்தரமான தீர்வை உறுதிப்படுத்தப் போவதில்லை என்ற உண்மை புரிந்து விடும்.

புலிகள் இருக்கும் வரை ஓடியோடி கிளிநொச்சிக்குப் போன சர்வதேச நாடுகள் இன்று மகிந்தவிடம் ஓடிப் போய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி தருவதாக உறுதி வழங்குகின்றன.

இதிலிருந்து ஒன்றை விளங்கிக் கொள்ள முடிகிறது. பலம் இருக்கும் வரை தான் உலகம் எம்மைத் திரும்பிப் பார்க்கும். அதற்குப் பின்னர் யாருமே திரும்பியே பார்க்க மாட்டார்கள்.

இந்த நிலையில் சர்வதேசமோ இந்தியாவோ எமக்கான உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் என்று நம்ப முடியாது.

மீண்டும் எமது பலத்தை உறுதிப்படுத்த நாமே முயற்சிக்க வேண்டும். அதற்கான வழிகளைத் தேட வேண்டும். அதன்மூலம் தான் மீளவும் இதே சர்வதேசத்தை எம் முன் கொண்டு வந்து நீதி கேட்கச் செய்ய முடியும்.

அதற்கான பொறுப்பு அனைவரிடத்திலும் உள்ளது. அது எப்படிப்பட்டதென்று உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆராய வேண்டும். அதற்கான வழிகளைத் தேட வேண்டும்.

அதுவே தான் ஈழத் தமிழினத்துக்கு நிலையான, நிரந்தரமான, அமைதியான வாழ்வைப் பெற்றுத் தரும்.



Comments