இந்தநிலையில் இலங்கையின் அரசு தொலைக்காட்சியான ரூபவாகினியோ, `விஸ்வமடுவில்தான் சண்டை நடக்கிறது. புதுக்-குடியிருப்பை நோக்கி ராணுவம் முன்னேற முயன்று வருகிறது' என்ற செய்தி வெளியிட்டு குழப்பி விட்டது.
`புதுக்குடியிருப்பு வீழ்ந்ததா? இல்லையா?' என்ற கேள்வியை, களத்தைக் கவனித்து வரும் சிலரிடம் நாம் முன்வைத்தோம்.
``பெரும் பதற்றமாக இருக்கிறது. பின்வாங்கி ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அது யாருக்கு?' என்பதை பிறகு சொல்கிறேன்'' என்று நமக்கு சஸ்பென்ஸ் வைத்த அவர்கள் கள நிலவரத்தை நமக்கு விளக்கினார்கள்.
``கடந்த வாரம் வன்னியில் உள்ள ராணுவத் தலைமையகத்துக்கு தளபதி சரத் பொன்சேகா வந்தார். அப்போது புலிகளின் புதுக்குடியிருப்பு நகரை வீழ்த்தும் பொறுப்பை 58_வது டிவிசன் தளபதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் அவர் ஒப்படைத்தார். இந்த 58-வது படையணிதான் சிலாவத்துறையில் தொடங்கி மன்னார் கரையோரங்கள், பூநகரி, பரந்தன், விஸ்வமடு பகுதிகளை புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பிரிவு. அந்த அனுபவம் காரணமாக புதுக்குடியிருப்பைப் பிடிக்கும் பொறுப்பு அந்தப் படையணிக்கு வழங்கப்பட்டது.
புதுக்குடியிருப்புக்கு வடக்கு மற்றும் வடமேற்காக இந்தப் படையணி நெருக்க, இன்னும் ஆறு படையணிகள் தெற்கு, தென்மேற்கில் இருந்து புலிகளைத் தாக்க, ஆபரேஷன் இனிதே தொடங்க ஏற்பாடானது. இந்த நேரம் அதிபர் ராஜபக்ஷேவின் தம்பியும், ராணுவத்துறைச் செயலாளருமான கோத்தபய ராஜபக்ஷே ஒரு மணிவாசகத்தை உதிர்த்தார். ``இனி களத்தில் சிக்கும் தமிழ்ப்பெண்கள் ராணுவத்தினருக்கு விருந்தாகட்டும். ஆண்களாக இருந்தால் கடலுக்கு இரையாகட்டும்'' என்பதுதான் அந்த மணிவாசகம்.
ஆயிற்று. கடந்த ஞாயிறு காலையில் பீரங்கிகளின் பிளிறலுடன் தொடங்கிய ராணுவ நடவடிக்கை திங்கள் மாலை வரை நீடித்தது. ஒருகட்டத்தில் முன்னேற முடியாமல் திக்கித் திணற ஆரம்பித்தது ராணுவம். நந்திக்கடலுக்கு மேற்காக வடக்கு நோக்கி வந்த 8_வது பிரிகேடைச் சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் சடசடவென சடலமாகச் சரிந்தார்கள். இரண்டாயிரம் பேருக்கு மேல் காயம் அடைய, ஆயிரக்கணக்கானோர் ராணுவத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டுத் தப்பியோடினர். இந்தத் தகவல் பற்றி மறந்தும் கூட மற்ற படைப்பிரிவுகளுக்கு ராணுவ உயர்அதிகாரிகள் சொல்லவில்லை. மேற்கொண்டு முன்னேறிய மற்ற படையணிகள் மீது நூறு பேர் கொண்ட பெண்புலிகளின் ஊடறுப்பு அணி தாக்குதல் நடத்த, அதிலும் ராணுவத்தரப்பில் கடும்சேதம். கடந்த செவ்வாயன்று மாலை விஸ்வமடுவில் இருந்து மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேறி வந்த 58-வது படைப்பிரிவால் புதுக்குடியிருப்புக்கு எட்டு கி.மீ. தூரத்திலுள்ள தேவிபுரம் வரை மட்டுமே முன்னேற முடிந்தது. அந்தச் சண்டையில் மட்டும் 1800 ராணுவத்தினர் பலியானார்கள். மூவாயிரம் பேருக்குக் காயம். ஆக, தேவிபுரத்தில் நின்றபடிதான் புதுக்குடியிருப்பைக் கைப்பற்றிவிட்டதாக புளுகி இருக்கிறது சிங்கள ராணுவம்.
கடந்த ஒரே வாரத்தில் மூவாயிரம் ராணுவத்தினர் பலியாகி, ஐயாயிரம் பேர் வரை படுகாயமடைந்து இருக்கிறார்கள். புலிகள் எதிர்பார்க்கும் ஒரு முக்கிய ராணுவத் தளவாடம் வந்து சேர்ந்தால் ராணுவத்தின் நிலை இன்னும் பரிதாபமாகி விடும்'' என்றனர் அவர்கள்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நிலவரத்தைக் கவனித்து வரும் பத்திரிகைத்துறை நண்பர் ஒருவரிடம் பேசினோம்.
``கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐயாயிரம் ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களை கொழும்பு மருத்து-வமனைகளுக்குக் கொண்டு-வராமல் நீர்க்கொழும்பில் வைத்து அரசு மருத்துவம் செய்கிறது. அந்த வீரர்களின் குடும்பங்கள் கொதித்துக் கொந்தளித்தபடி கொழும்பு நகரில் திரிந்த வண்ணம் இருக்கிறார்கள். ராணுவத் தணிக்கை காரணமாக இதுபோன்ற செய்திகளும் வெளியாவதில்லை.
அதுபோல களத்தில் இருந்து சிங்களப் படையினர் தப்பியோடுவதும் அதிகரித்து வருகிறது. அண்மையில் 37 ராணுவ வீரர்கள் ஒரு படகில் ஏறி தப்பி தெரியாத்தனமாக இந்தியக் கடல் எல்லையில் புகுந்து, ரோந்துப்படையிடம் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை புலிகள் என்று ஆரம்பத்தில் நினைத்த இந்திய ரோந்துப் படையினர், அவர்கள் ராணுவத்தினர் என்று தெரிந்ததும் புத்திசொல்லி திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்'' என்றார் அவர்.
தென்னிலங்கை பாதுகாப்பு ஆலோசனை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, புலிகளின் வியூகம் பற்றி விளக்கி நம்மை வியக்க வைத்தனர் அவர்கள்.
``பின்வாங்கி ஓடுவதைப் போல போக்குக் காட்டிய புலிகள், ராணுவத்தை நன்றாக ஏமாற்றியிருக்கிறார்கள். கிளிநொச்சியை புலிகள் விடமாட்டார்கள் என்று கருதியபோது புலிகள் அதைக் கைவிட்டார்கள். அதுபோல முல்லைத்தீவு நகரம், சாலை கடல்தள நகரத்தையும் புலிகள் கைவிட்டனர். அதுபோல இப்போது எஞ்சியிருக்கும் புதுக்குடியிருப்பு நகரத்தையும் புலிகள் விட்டுவிட்டு காடுகளுக்குள் பின்வாங்கி விடுவார்கள் என்று ராணுவம் கணித்தது. அதைத் தடுக்க புலிகளை முந்திக் கொண்டு காடுகளுக்குள் படைகளை இறக்கியது. புதுக்குடியிருப்புக்குத் தெற்காகவும், தென்மேற்காகவும் காடுகளுக்குள் ராணுவம் முகாம் அமைத்துக் காத்திருக்கிறது. புலிகள் விரும்பியது இதைத்தான். இப்போது ஏதாவது ஓரிடத்தில் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றை நடத்தினால் ஆயுதம், உணவு, மருந்து எதுவும் கிடைக்காமல் ராணுவம் பொறியில் அகப்பட்டுக் கொள்ளும். அடர்ந்த காடுகளில் விமானம்மூலம் சப்ளைகளைப் போடுவது சாத்தியம் இல்லை. அங்கு சரியான சாலைகளும் இல்லை. இந்த நிலையில் புலிகளின் கணக்குப்படி ராணுவம்தான் இப்போது முடக்கப்பட்டு நிற்கிறது.
ஏற்கெனவே பிப்ரவரி முதல் வாரத்தில் புலிகள் நடத்திய ஓர் இடைவெட்டுத் தாக்குதலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ராணுவத்தினர் மரித்து, மூவாயிரம் பேருக்கு மேல் காயமடைந்தனர். `ஒரேஓர் இடைவெட்டுத் தாக்குதலையே ராணுவத்தால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்ற நிலையில், அடுத்தடுத்து நாம் தாக்குதல் நடத்தினால் ராணுவத்தின் கதி என்ன ஆகும்?' என்று புலிகளின் களஆய்வுப் பொறுப்பாளர் யோகி கூறியுள்ளார்.
புலிகள் வசம் வெறும் ஆயிரம் பேர் மட்டும் இருந்தால், ஏழு டிவிஷன்களைக் கொண்ட சிங்களப் படையை எதிர்த்து ஒரே ஒருநாள் கூட தாக்குப் பிடிக்க முடியாது. புலிகள் வசம் பதினைந்தாயிரம் பேருக்கு மேல் இருக்கிறார்கள். போர்ப்பயிற்சி பெற்ற மக்களையும் சேர்த்தால் முப்பதாயிரம் பேர் வரை தேறுவார்கள். இதுபோக புலிகளிடம் ராணுவ டாங்கிகள், கவச வாகனங்கள், ஆர்டிலரி, மார்ட்டர் பீரங்கிகள், பல்குழல் உந்துகணைச் செலுத்திகளும் இருக்கின்றன.
இதுதவிர, புலிகளிடம் இன்னும் பல விமானங்கள் இருக்கின்றன. அண்மையில் கொழும்பு நகரில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய விமானங்கள் என்பது புலிகள் அதற்காகவே தயாரித்த, ஒருவர் ஓட்டக்கூடிய விசேஷ விமானங்கள். இதுதவிர நான்கு பேர் வரை ஏறிச்செல்லக் கூடிய போர்விமானங்களும் புலிகளிடம் இருக்கின்றன.
களநிலவரப்படி இலங்கை ராணுவத்தின் பல டிவிஷன்கள் வீரர்களின் உயிரிழப்பால் உருக்குலைந்து போய்விட்டன. அந்த அரைகுறை டிவிஷன்களை வைத்துக் கொண்டு எதையும் சாதிக்க முடியாது'' என்றன அந்த வட்டாரங்கள்.
ராணுவம் நடத்தப்போகும் ரத்தக்களரி!
``வரலாறு காணாத விதத்தில் ஒரு லட்சம் தமிழர்களைக் கொன்று குவிக்க இலங்கை ராணுவம் திட்டமிட்டுள்ளது'' என்று ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிக்கிறார் மனிதாபிமானமிக்க சிங்களப் பெண்மணி ஒருவர். `வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்' போல ஒரு சிங்களப் பெண்மணியே இலங்கை அரசைப் பற்றி இப்படிப் பேசுகிறாரே என்ற வியப்புடன் அவரிடம் பேசினோம்.
``கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றிய போது இரண்டரை லட்சம் தமிழர்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ராணுவம் அறிவித்தது. கடந்த மாதம் 29-ம் தேதி நாற்பத்தெட்டு மணிநேர போர் நிறுத்தம்(?) அறிவிக்கப்பட்டபோது, வெறும் முந்நூறு தமிழர்கள் மட்டுமே அங்கிருந்து வெளியேறி வந்தனர். அதன்பின் படிப்படியாக புலிகள் வசமிருந்த முப்பத்து நான்காயிரத்து அறுநூறு தமிழர்கள் வெளியேறி வந்து விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.
இவர்களின் கணக்குப்படி ஐம்பதாயிரம் தமிழர்கள் அங்கிருந்து வெளியேறியதாக வைத்துக் கொண்டாலும், இன்னும் இரண்டு லட்சம் தமிழர்கள் அங்கிருக்க வேண்டுமே? ஆனால் அண்மையில் இலங்கை மனித உரிமைத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்கே `எழுபதாயிரம் தமிழர்கள்தான் இன்னும் புலிகள் வசமிருப்பதாகத்' தெரிவித்துள்ளார். அவரது அறிவிப்பில் சதித்திட்டத்துடன் கூடிய ஓர் உள்நோக்கம் இருக்கிறது.
இந்தநிலையில் புலிகள் வசமுள்ள தமிழர்களை வெளியேறுமாறு கூறி இலங்கை அரசு இன்னொரு முறை `போர்நிறுத்தம்' அறிவிக்கும். ஆனால் தமிழர்கள் யாரும் பெரிய அளவில் அங்கிருந்து வெளியேற மாட்டார்கள். இலங்கை அரசின் ஆசையும் அதுதான். அதன்பின் புலிகள் பகுதி முழுவதும் `ஷமக்காள குண்டுகளை' (கார்பெட் பாம்) வீசி ஏறத்தாழ ஒரு லட்சம் தமிழர்களைக் கூண்டோடு ஒழிக்க அது திட்டமிட்டுள்ளது. இதற்காகத்தான் புலிகள் பகுதியிலுள்ள தமிழர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்துக் காட்டியுள்ளது.
இதற்குப் பிறகும் `புலிகள் முழுமையாக அழிக்கப்படவில்லை, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் எஞ்சியிருக்கிறார்கள்' என்று கூறி, அவ்வப்போது சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தி மிச்சசொச்ச தமிழர்களையும் கொன்று குவிக்கப் போகிறது'' என்றார் அந்தப் பெண்மணி.
- இரா.முருகேசன்
Comments