களத்துக்கு வெளியே காத்திருக்கும் பணி

'ஹமாஸ் ஒரு சமூக அரசியல் இயக்கம், அவர்கள் காசா மக்களிடையே ஆழ வேருன்றிப் போயுள்ளார்கள். அத்தகைய தன்மை வாய்ந்த ஒரு அமைப்பின் இராணுவப் பிரிவையோ அல்லது அரசியல் பிரிவையோ முற்று முழுதாக அழிப்பதென்பது சாத்தியமான ஒரு விடயம் அல்ல அத்துடன் அது ஒரு தவறான கணிப்பீடும் ஆகும்" எனக் கூறியிருக்கிறார் நியூயோர்க்கை தளமாகக் கொண்ட வெளிநாட்டு உறவுகளுக்கான சபையைச் சார்ந்த கலாநிதி றிச்சாட் ஹாஸ் அவர்கள்.

யார் கூறியிருக்கிறர் என்பதை விட என்ன விடயம் கூறப்பட்டுள்ளது என்பதுவே இங்கு மிக முக்கியமானது. அடுத்து, அவருடைய கருத்தென்பது தனித்து ஹமாஸ் இயக்கத்திற்கு மட்டும் பொருத்தமானதல்ல, இது இன விடுதலைக்காக போராடுகின்ற குறித்த தேசிய இனத்தினரிடையே ஆழ வேரூன்றியுள்ள அனைத்து விடுதலைப் அமைப்புகளுக்கும் பொருத்தமானது.

காசாவிலும் வன்னியிலும் இடம்பெற்ற சமர்களுக்கு இடையில் ஒருமைப்பாடுகள் இருப்பினும் ஹமாசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

குறிப்பாக மேற்கூறிய இரு அமைப்புக்களினுடையதும் இராணுவ பலத்திற்கிடையிலும் அவர்கள் மோதுகின்ற இராணுவத்திற்கிடையிலும் ஒப்பிட முடியாத இடைவெளிகள் அதிகம்.

அதேவேளை, ஹமாஸ் பல்வேறு அரபு நாடுகளின் பின்னணியுடன், அமெரிக்காவை பின்னணியாகவும் நவீன தொழில்நுட்ப சாதனங்களையும், ஆயுத தளபாடங்களையும் கொண்ட இஸ்ரேலுடன் முட்டி மோதுகிறது.

காசா பகுதி மீதான தாக்குதலும் அதற்கான பதிற்குறிகளும், வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலமும், பல்வேறு தரப்புகளுக்கும் வௌ;வேறு கேள்விகளை தோற்றுவித்துள்ள புரியப்பட முடியாத புலிகளின் மௌனமும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாக இக்காலப் பகுதியிலே கருதப்படக்கூடியன.

இருப்பினும் ஊடகங்களோ, இராஜதந்திர வட்டாரங்களோ காசாவில் இடம்பெற்ற அல்லது இடம்பெறுகின்ற சம்பவங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வன்னியில் உருவாகியுள்ள மனிதப் பேரவலத்திற்கு வழங்கவில்லை என்பது வேதனைக்குரியது மட்டுமல்ல, சர்வதேச சமூகத்தின் மீது தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த நம்பிக்கையும் அறுத்தெறிந்துள்ளது.

தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கத்தாலும் அதன் படைகளாலும் மேற்கொள்ளப்படும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ளாமை ஒருபுறமிருக்க, அதற்கு ஆதரவாக தட்டிக் கொடுக்கும் செயற்பாடு தமது எதிர்காலம் தொடர்பாக தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கோடிட்டுக்காட்டுகிறது.

அதனை செய்ய வேண்டிய பொறுப்பு போர் முனைகளுக்கு அப்பால் வசிக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் உரியது.

வன்னிக்குள் எந்தவொரு ஊடகவியலாளர்களையோ, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களையோ அல்லது மனிதாபிமானப் பணியாளர்களையோ அனுமதிக்காத சிறிலங்கா அரசாங்கம், அங்கு இடம்பெறும் சம்பவங்களுக்கு நேரேதிரான செய்திகளையே வெளியிட்டு உள்நாட்டையும், உலகையும் ஏமாற்றுகிறது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறிலங்கா அரசாங்கத்தின் செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு சர்வதேச சமூகமும், அரச சார்பற்ற அமைப்புக்களும், குறிப்பிடத்தக்க நாடுகளும் செய்திகளை, அறிக்கைகளை வெளியிடுகின்றன.

இத்தகைய நிலையை மாற்றி தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற உண்மை நிலையை வெளிக்கொணர்வதனூடகாவே தமிழ்த் தேசிய போராட்டத்தை வென்றெடுக்க முடியும். தமிழர்களுடைய போராட்டம் என்பது இன்று பல்வேறு தளங்களில் நின்று வௌ;வேறு வழிமுறைகளில் முன்னெடுக்கப்பட அவசிய சூழலுக்குள் 'அகப்பட்டுள்ளது".

சிங்கள அரசு தமிழ்மக்களுக்கு எதிரான இன அழிப்பு போரை கட்டவிழ்த்து விட்டுள்ள அதே நேரம், தமிழர்களின் உளவியலை பாதிக்கக்கூடிய பரப்புரைப் போரையும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

அது மட்டுமன்றி சர்வதேச சமூகத்தை ஏமாற்றக்கூடிய வகையில் செய்திகளை திரிவுபடுத்துவதோடு, உண்மைச் செய்திகள் வெளிவருவதைத் தடுப்பதில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுகிறது.

சர்வதேச செய்தியாளர்களையோ, மனித நேயப் பணியாளர்களையோ அல்லது இராஜதந்திரிகளையோ போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லவிடாமல் தடுக்கும் சிங்கள அரசாங்கம், இராணுவ நடவடிக்கைகளுக்கு முன்னர் அந்த இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளை எறிகணைகளாலும், விமானக் குண்டுத் தாக்குதல்களாலும் சின்னாபின்னப்படுத்துகின்றன.

இவற்றையெல்லாம், புத்திக்கூர்மையுடனும், இராஜதந்திரமாகவும் வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்களுக்குரியது.

மேற்கூறியவற்றை ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா செய்தது. அதனையே இஸ்ரேல் காசாவில் மேற்கொண்டது. இரண்டினையும் பின்பற்றி வளமான வன்னி மண்ணையும், மக்களையும் அழிக்கிறது சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும்.

இராணுவ நடவடிக்கைகளுக்கு முன்னர் குறிப்பிட்ட பிரதேசங்களை குண்டுகளால் துவம்சம் செய்தல், அப்பகுதியில் வாழும் மக்களை பட்டினியாலும், போதிய மருத்துவ வசதிகளும் இன்றி மரணமடைய செய்தல் உட்பட்ட அவல நிலைக்கு தள்ளுதல், அத்தகைய பகுதிகளுக்கு சுயாதீனமான செய்தி ஸ்தாபனங்களையோ, தொண்டு நிறுவனங்களையோ செல்லவிடாமல் தடுத்தல் போன்றவற்றை அமெரிக்காவும், இஸ்ரேலும் செம்மையாகவே கடைப்பிடித்து வந்தன.

அதனையே தமது இன்றை நண்பனும், எதிர்கால நயவஞ்சகனுமான சிறிலங்காவுக்கு போதிக்கின்றன.

ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயம் யாதெனில், மார்ச் 2003 தொடக்கம் இன்று வரை 4,243 படையினரை பலிகொடுத்து படுதோல்வியுடன் ஈராக்கை விட்டு வெளியேற தயாராகிறது உலக வல்லரசான அமெரிக்காவின் படை.

647 படையினரை பலிகொடுத்த பின்னும் உலகை ஆளவேண்டும் என்ற பேராசையில் ஆப்கானிஸ்தானில் ஆளணி, ஆயுத வளத்தைப் பெருக்க முற்படும் அமெரிக்கா கடந்த 8 வருட காலப்பகுதியில் எதனை சாதித்தது?

மாறாக புதிய வலிமையுடன் தலிபான்கள் ~மறுமலர்ச்சி| கட்டத்தை நோக்கி நகர்கிறார்கள்.

இது சாதாரணமாக தொடர்ந்து நிலைக்கா விட்டாலும் இதுவரை அமெரிக்கா நினைத்து எதுவும் குறிப்பிடும்படியாக நடைபெறவில்லை. அடுத்து, பெரும் படைபலத்துடன் இதோ காசா பகுதிக்கான இரகசிய சுரங்கப் பாதைகளை அழித்து, ஹமாசின் கதையை முடித்து அவர்களின் வரலாற்றையே இல்லாமல் செய்கிறேன் என மார்தட்டிப் புறப்பட்ட இஸ்ரேல் தனது நிகழ்ச்சி நிரலை நிறைவு செய்யாமலே திரும்பியது.

இஸ்ரேலால் காசாவின் பெரும்பாலான பகுதிகளையும் கைப்பற்ற முடிந்தது. ஆனால், ஹமாஸ் மீண்டும் புத்தெழுச்சியுடன் எழுவதை தடுக்க முடியவில்லை.

இஸ்ரேலிய படைகள் காசா பகுதியை விட்டு வெளியேறிய அடுத்த தினமே ஹமாஸ் வழமைபோல செயற்படத் தொடங்கியது.

விடுதலைக்காக போராடும் போராளிகள் பயங்கரவாதிகளாகவும், மக்களைக் கொன்றொழிக்கும் அரச பயங்கரவாதம் இறைமையுடைய அரசாகவும் நோக்கப்படும் சூழலில் ஹமாஸ் எந்த வகைக்குள் அடங்குவார்கள் என்பதை ஆய்வு செய்வதை விடுத்து, மேற்கூறிய விடயங்களுக்கூடாக ஈழப் போராட்டத்திற்குப் பொருத்தமான விடயங்கள் என்னவென்பதை அலசுவோம்.

தமிழ்த் தேசிய போராட்டம் தனித்து சிங்களப் படைகளுடன் மோதுவது என்பதைக் கடந்து, சர்வதேச வல்லாதிக்க சக்திகளுடன் மோத வேண்டிய நிர்ப்பந்தத்தையும், துர்ப்பாக்கிய சூழலையும் எதிர்கொண்டு நிற்கிறது.

உலகை ஆட்டிப் படைக்க அவாக்கொண்டுள்ள பல முன்னனி நாடுகள் தமது தேசிய நலனை முதன்மையாகக் கொண்டு தமிழர் மீதான இனப் படுகொலைக்கு ஆதரவு நல்கி வருகின்றன.

புலிகளை அழிப்பதாக கூறிக்கொண்டு தமிழ் மக்களைக் கொன்றொழிக்கிறது சிங்கள அரசும் அதன் படைகளும். இது தற்செயலான ஒரு செயல் அல்ல.

புலிகள் மீன்கள் என்றால் அந்த மீன்களின் உயிர் வாழ்வுக்கு அவசியமான தண்ணீராக மக்களே திகழ்கிறார்கள். மீன்களை அழிக்க முடியாததென்பதை உணர்ந்த சிங்கள அரசாங்கமும் அதன் பெரியண்ணாவும் அவரின் கூட்டணிகளும் மக்களை அழிப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள். அல்லது தமிழர்கள் மீதான திட்டமிட்ட இன அழிப்பை கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெயர் மட்டுமல்ல நிகழ்ச்சி நிரலே இல்லாமல் தொடங்கப்பட்ட சிங்களப் படைகளின் இராணுவ நடவடிக்கைகள் எல்லாம் நேரடியாக தொடவேண்டிய மூக்கை தலையை சுற்றி தொட்ட கதையாகத்தான் முடிந்திருக்கின்றன.

அதேபோல்தான், போராட்டத்தின் உயிர் நாடியாகத் திகழும் மக்களை அழித்தால் புலிகள் தன்னியல்பாகவே வேரறுந்து விழுந்து போவார்கள் என்ற கணக்கில் சிங்கள இனவாதம் செயற்படுகிறது.

புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களை விட்டு விலகுகிறார்கள் என்பது யாராலும் நிராகரிக்க முடியாதது. அதேவேளை, பின்நகர்ந்த இடங்களில் சிலவற்றை வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் கைப்பற்றியிருக்கிறார்கள் என்பது பலருக்கு தெரியாத விடயம்.

விடுதலையை நோக்கிய தூரநோக்கை அடிப்படையாகக் கொண்டு, கல்மடு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சில வெற்றிகரமான நடவடிக்கைகள் தொடக்கம், இனி இடம்பெறப் போகிற வெற்றிகரமான நடவடிக்கைகள் வரை எதுவுமே குறிப்பிட்ட ஒரு கட்டத்தை அடையும் வரை முற்று முழுதாக வெளிவரப்போவதில்லை.

அடுத்து, மனிதப் பேரவலத்திற்கு மத்தியிலும் இந்த நிமிடம் வரை கணிசமான நிலப்பரப்பும், கடற்பரப்பும், மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன, இருக்கின்றார்கள்.

அது மட்டுமன்றி, விடுதலைப் புலிகள் பலத்த சாவலை; எதிர்கொண்டிருப்பதாக பல்வேறு தரப்புகள் எண்ணிக்கொண்டிருக்கையில், விசுவமடுவிலுள்ள இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து 1½ கிலோ மீற்றர் தொலைவில் புலிகளினுடைய விமானம் இறங்கியது கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும். அதனை சிறிலங்கா படைகள் தான் உறுதிசெய்கின்றன.

அதுமட்டுமன்றி, 20 கிலோமீற்றர் கடற்பரப்பே கடற்புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனையும் 4 வலயங்களாகப் பிரித்து கடற்புலிகளை ஒரு இறுக்கமான முற்றுகைக்குள் வைத்திருப்பதாக பரப்புரையை மேற்கொண்ட சிங்களக் கடற்படை இறுமாப்புடன் இருந்த வேளையில், வௌ;வேறு சம்பவங்களில் இரு சுப்பர் டோரா படகுகளை கடற்புலிகள் மூழ்கடித்துள்ளார்கள்.

கடந்த வாரம் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் முல்லைத்தீவு கடற்பரப்பிலிருந்து 52 கடல்மைல் தொலைவிலேயே இடம்பெற்றுள்ளது. இந்த சிறிய உதாரணத்திலிருந்தே கடற்புலிகள் தாம் நினைத்ததை சாதிக்கும் வல்லமையுடன் தற்போதும் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இந்த தாக்குதலினுடாக வெளிவருகின்ற மற்றுமொரு விடயம் யாதெனில், முல்லைத்தீவில் கடற்புலிகளின் பலம் முடக்கப்பட்டதாக மேற்கொள்ளப்படும் பரப்புரை கேள்விக்குறியாகியுள்ளது.

முல்லைத்தீவு பகுதியிலிருந்த சென்ற கடற்புலிகள் தாக்குதலை மேற்கொள்ளவில்லையென்றால், பிடரியடியாக ஒரு தாக்குதலை கடற்பரப்பில் நடத்துமளவிற்கு முல்லைத்தீவுக்கு மாற்றீடான கோட்டையொன்றை கடற்புலிகள் கட்டியெழுப்பி விட்டார்கள் என்று அர்த்தப்படுத்தலாம்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலே, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக காணப்பட்டவற்றில் அதிகமானவை புலிகளால் உருவாக்கப்பட்டனவையே தவிர, தன்னியல்பாக அமையப்பெற்றவையல்ல.

காலம் மாறலாம், காட்சி மாறலாம், களநிலவரம் மாறலாம், ஆனால் இலட்சியத்தை வரித்துக் கொண்ட போராட்ட இலக்கு மாறமாட்டாதென்பது கடந்த காலங்களில் பல்வேறு தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.

பூகோள மயமாக்கலும், தகவல் தொழில்நுட்ப புரட்சியும் களநிலவரங்களை உடனுக்குடன் அறியக்கூடிய வாய்ப்பை அளித்திருக்கிறது. செய்திகளை அறிய இருக்கின்ற ஆர்வத்தை அது எந்தளவு உண்மையாக இருக்கும் என்பதை ஆய்வு செய்வதில் வாசகர்கள் காட்டுவதில்லை.

இது எதிரியின் பரப்புரை போருக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்பட வேண்டும். அந்த அடிப்படையிலேயே, நாம் தோற்றுத்தான் போவோமோ என்ற தூரநோக்குப் பார்வையற்றதும், முட்டாள்தனமானதுமான கேள்வி பல தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

1980-களின் இறுதிப் பகுதியிலே, சுமார் 1 இலட்சம் இந்தியப்படைகள் (சிறப்புப் படைகள், நவீன வானூர்திகள் உள்ளடலங்கலாக) மணலாற்று காட்டை சுற்றிவளைத்து, இதோ புலிகளின் கதை முடியப்போகிறது என்ற பரப்புரையை மேற்கொண்டிருந்த போது, சில நூறு போரளிகளுடனும், மட்டுப்படுத்தப்பட்ட ஆயுத வளத்துடனும் தீவிரமாக போராடி இந்தியப் படைகளை தோற்கடித்தார்கள் புலிகள்.

அமெரிக்கப் படைகளுக்கு வியட்னாம் எப்படி புதைகுழியாக மாறியதோ, அதேபோன்றதொரு நிலைதான் இந்தியப் படைகளுக்கு ஈழ மண்ணில் உண்டானது. அன்று தமக்கு உருவான அவமானத்துக்கு பழிவாங்கும் முகமாகவே இன்று இந்தியாவின் மத்திய அரசாங்கம் செயற்படுகிறது.

ஆனால், என்றைக்கும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போராட்டத்துக்கு தமது உயிரையும் கொடுக்க தயங்காத தொப்புள் கொடி உறவான தமிழகம் தொடர்ந்தும் தனது இரத்த பாசத்தை ஈழத் தமிழர்ளுக்காக காட்டுவது, மெய்நிலை உணராத காங்கிரஸ் அரசாங்கம் மீண்டும் படுதோல்வியை சந்திக்கப்போகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு பொருத்தமற்ற சோதனையை ஏற்படுத்தியுள்ளதால், எமது மக்கள் வேதனையை அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய சூழல் உண்டாகியுள்ளது.

ஆனால், தமிழ் தேசிய போராட்டத்தை தனது தேசிய நலனுக்காக வல்லாதிக்க சக்திகள் பயங்கரவாதமாக வர்ணிக்கின்றனவே தவிர, முற்று முழுதாக ஒழித்து கட்டுவதற்கு தமது ஆதரவை வழங்கவில்லை.

பயங்கரவாதத்தை தோற்கடித்து கிளிநொச்சியை கைப்பற்றி விட்டோம் என ஜனாதிபதி ராஜபக்ச அறிவித்த போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் தாயும் தந்தையுமான அமெரிக்கா கொடுத்த பதில் பாராட்டல்ல.

மாறாக போர் நிறுத்தத்தினை மேற்கொண்டு போரிடும் தரப்புக்கள் பேச்சுக்களுக்கு திரும்ப வேண்டும் எனக் கூறியதோடு இனப்பிரச்சனைக்கு இராணுவ தீர்வு சாத்தியமாகாது என்பதையும் திட்டவட்டமாக அறிவித்தது.

இதன் அர்த்தம் தமிழ்த் தேசியப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதல்ல. பதிலீடாக தமது தேசிய நலனுக்காக தமிழ்த் தேசியப் போராட்டத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதே ஆகும்.

1990-களின் இறுதியில், ஜயசிக்குறு இராணுவ நடவடிக்ககை மூலம் வன்னியின் பெரும்பாலான பகுதிகளை சிங்கள இராணுவம கைப்பற்றிய போது புலிகளுக்கு தமது இராணுவ பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

அது பயங்கரவாத்திற்கு எதிரான போருக்கு முந்தைய உலக ஒழுங்கு.

இன்று, மீண்டும் வன்னியின் பெரும்பாலான பகுதிகளை விட்டு அகன்றிருக்கும் புலிகளுக்கு நிரூபிக்க வேண்டியிருப்பது, விடுதலைப் போராட்டத்தை தூரநோக்குப் பார்வையில் அடிப்படையாகக் கொண்ட இராஜதந்திர சாணக்கியமே.

இது பயங்கரவாத்திற்கு எதிரான போருக்கு பிந்திய உலக ஒழுங்கின் அழுத்தம்.

அந்த இராஜதந்திர களத்தினை வலுப்படுத்துவதற்கான 'ஒருபக்க உந்து சக்தியே" தமிழகத்தின் எழுச்சியும், புலம்பெயர் தமிழர்களின் விழிப்புமாகும்.

அதற்கான உடனடி அறுவடைதான்; சிங்கள அரசுக்கு விருப்பமில்லாத போர் நிறுத்தத்த்தை மேற்கொள்ளும்படி செவ்வாக்கு மிக்க பல நாடுகள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளன.

மேற்குறிப்பிட்ட இராஜதந்திர நகர்வு ஈழப்போரட்ட வரலாற்றிலே என்றைக்குமே இடம்பெற்றதில்லையென்பதை உண்மைநிலையறியாது மனமுடைந்து போகும் மக்கள் சிந்திக்க வேண்டும்.

ஜயசிக்குறு, தீச்சுவாலை போன்ற இராணுவ நடவடிக்கைகளை முறியடித்த போது, ஆனையிறவை கைப்பற்றிய போது, அல்லது கட்டுநாயக்காவிலும் அனுராதபுரத்திலும் புலிகள் சாதித்த போது, ஏன் 1995 ஓக்ரோபரில், இரண்டு நாட்களுக்குள் சுமார் 5 லட்சம் மக்கள் ஒற்றையடி பாதையூடாக யாழ் மண்ணைவிட்டு வெளியேறிய போது, தமிழகத்திலும், புலம்பெயர் மக்களிடமும் இன்று ஏற்பட்டுள்ள எழுச்சி அன்று ஏற்பட்டிருந்ததா?

அல்லது குறுகிய காலத்துக்குள் ஏழுக்கும் மேற்பட்ட நாடுகள் போர் நிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என இரு தரப்புகளுக்கும் அன்றைய காலப்பகுதிகளில் அழுத்தம் கொடுத்திருந்தனவா? ஆக மொத்தத்தில் இதன் வெளியீடு என்ன?

அதாவது, தேசிய விடுதலைக்கான போராட்டமென்பது பூகோள அரசியலுக்கும், புதிய உலக ஒழுங்கிற்கும் ஏற்ப புதிய வடிவங்களுடன் நுணுக்கமாக நகர்த்தப்பட வேண்டியது.

அது தான் இன்று ஈழப் போரட்டத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று தமிழர் நிலங்கள் அவர்களிடம் இல்லையென்பது, எதிர்காலத்தில், முற்றுமுழுதான மண்மீட்பும், நிலையான விடுதலையும் எட்டப்படும் என்பதற்கான அடையாளக் குறியே ஆகும்.

இது, களத்துக்கு வெளியே தற்போது ஏற்பட்டுள்ள எழுச்சியோடு மட்டும் அடையப்படக் கூடியதல்ல.

புலம்பெயர்ந்தோரால் இன்று மேற்கொள்ளப்படுகின்ற உத்வேகப் போராட்டங்கள் மென்மேலும் தீவிரம் அடைய வேண்டும்.

அதற்காகவே, பலம் இருந்தும் தமிழர் படை காத்திருக்கிறது.

களமும், புலம்பெயர்ந்தோரும் மேற்கொள்கின்ற வௌ;வேறு வடிவங்களைக் கொண்ட போராட்டங்கள் கைகோர்க்கின்ற வேளையிலே 'இறுதி இலக்கு" கைகூடும்.

- நி. பாலதரணி -


Comments