முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொது வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது - ஐ.சி.ஆர்.சி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கிவந்த பொது வைத்தியசாலை இராணுவத்தின் கடுமையான எறிகணைத் தாக்குதலினால் மூடப்பட்டுள்ளது என்பதனை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக வைத்தியசாலைப் பிரதேசத்திற்கு கடும் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் ஆகியோர் பாதுகாப்பான வேறொரு இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளனர் எனி்னும் எத்தனை நோயாளிகள் இடம்நகர்த்தப்பட்டனர் என்பது குறித்த தகவல்களை உறுதிபடக் கூற முடியாதென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் இயங்கி வந்த வைத்தியசாலையை பாதுபாப்பான பிரதேசத்திற்கு இடம் நகர்த்த தமது அமைப்பு பூரண ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புதுக்குடியிருப்பு வைத்தியசாலை அரசாங்கத்தின் உத்தரவின் பெயரில் முல்லைதீவுக்கு வடக்கே உள்ள புதுமாத்திரன் சமூதாய மையப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் 350க்கும் மேற்பட்ட நோயாளர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை முல்லைத்தீவுப் பகுதிக்குள் இடம்நகர்த்தியுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.



Comments