குறிப்பாக கடந்த சனிக்கிழமை பிரித்தானியாவில் நடைபெற்ற பேரணியில் ஏறத்தாள 125,0000 மக்கள் கலந்து கொண்டது மக்களை மட்டுமல்லாது பல நாடுகளையும், அரசியல் தலைவர்களையும், ஆய்வாளர்களையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியிருக்கும் என்பதில் ஜயம் இல்லை. 1995 ஆம் ஆண்டு சூரியக்கதிர் என்னும் படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது வலிகாமத்தில் இருந்து ஒரே இரவில் தென்மராட்சி நோக்கி இடம்பெயர்ந்த இலச்சக்கணக்கான மக்களின் இடம்பெயர்வின் அனுபவத்தை இந்த பேரணி அதில் பங்குபற்றியவர்களுக்கு நினைவுபடுத்தியிருந்தது. அதாவது நாம் சில அடி தூரங்களை கடப்பதற்கு பல பத்து நிமிடங்களை செலவிடவேண்டியிருந்தது.
அனைத்துலக ரீதியாக நாம் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் தற்போது சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் கொடுமையான போரை நிறுத்துவதற்கு மட்டும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக தமிழ் மக்களின் உரிமைகளையும், அதற்காக போராடும் விடுதலைப்புலிகள் அமைப்பும் உலகளாவிய ரீதியில் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற வாதங்களையும் முன்நிறுத்தியே தமிழ் மக்கள் இந்த போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் என விடுதலைப்புலிகளை தடை செய்து தமிழ் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய நாடுகளின் பட்டியல்கள் நீளம். எனவே தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்கள் அவர்களின் நடவடிக்கைகளில் மற்றங்களை ஏற்படுத்துவதையே நோக்கமாக கொண்டது. அகிம்சை வழியில் மூன்று தசாப்தங்களாக போராடி பெறமுடியாது போன தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு என பலமான படைத்துறை சக்தியான உருவாகியுள்ள விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு சிறீலங்கா அரசிற்கு உதவிய இணைத்தலைமை நாடுகள் தற்போது சிறீலங்கா அரசிற்கு அழுத்தங்களை கொடுப்பதை தவிர்த்து, விடுதலைப்புலிகளை சரணடைய சொல்லி கேட்கின்றனர். அதாவது அவர்களின் உண்மையான உளக்கிடக்கை தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் அனைத்துலகத்திற்கு எதிரான எந்த செயற்பாடுகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை, பலஸ்த்தீனத்தில் போராடிய அமைப்புக்கள் அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், அவுஸ்திரேலியர்கள் என கொன்று குவித்த வெளிநாட்டுகாரர்களின் எண்ணிக்கைகள் மிக அதிகம். எனினும் காசா தொடர்பாக கருத்துக்களை வெளியிடும் அனைத்துலகம், விடுதலைப்புலிகளை புறம் தள்ளி தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை கண்டும் காணாமல் விடுவது ஏன்? புலம்பெயர் நாடுகளில் தற்போது புறக்கணிக்க முடியாத சக்தியாக ஒன்றுதிரண்டுவரும் தமிழ் இனம் தான் அதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இந்தியாவை பொறுத்தவரையிலும் தற்போது நடைபெற்றுவரும் போரை முன்னின்று நடத்துவது இந்தியாதான். அதாவது இந்த போரை மகிந்த- சோனியா கூட்டுப்போர் என குறிப்பிட்டாலும் தவறில்லை. இது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் (09.11.08) வீரகேசரி வாரஏட்டில் எழுதிய பத்தியில் குறிப்பிட்டிருந்தேன். அதன் முக்கிய சில பகுதிகளை இங்கு மீண்டும் குறிப்பிடுவது பொருத்தமானது. "இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் பதவியில் அமர்ந்துள்ள போதும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஜக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வழிகாட்டு தலைவருமான சோனியாக காந்தியின் வழிநடத்தலில் தான் இந்தியாவின் ஆட்சி அதிகாரம் சென்று கொண்டிருப்பதாக எதிர்த்தரப்பினர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.சோனியா காந்தியின் மேற்குலகம் சார்பான கொள்கைகள் இந்தியாவின் அடையாளத்தை வருங்காலத்தில் அழித்துவிடும் என்ற கருத்துக்களும் வலுவாக தோன்றி வருகின்றன.இந்திய அரசு மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான நிலைப்பாட்டிற்கும் சோனியா கந்தியின் அழுத்தம் காரணம் என்பது எதிர்த்தரப்பின் வாதம் இதற்கு எதிராக கடந்த ஆண்டு ஜுலை மாதம் மன்மோகன் சிங்கிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட போது 19 வாக்குகளால் அரசு தப்பி பிழைத்திருந்தது. இந்த வாக்கெடுப்பில் தமிழகத்தின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு சார்பாக வாக்களித்திருந்தனர். தமிழகம் எதிர்த்து வாக்ழகளித்திருந்தால் அன்றே அரசு கவிழ்ந்திருக்கும்.
சோனியா காந்தியின் மேற்குலகம் சார்ந்த அரசியல் நலன்களுக்கு அப்பால் தமிழ் மக்களை பழிவாங்கும் அரசியல் ஆதங்கமும் அதிகம். அதாவது சிறீலங்காவின் இனப்பிரச்னைகளில் இருந்து இந்தியா ஒதுங்கியிருப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை வெளியில் உருவாக்கியபடி தமிழ் மக்களின் விடுதலைப்பேரை முற்றாக நசுக்கிவிடுவதே அவரின் உள்ளாந்த திட்டம் என்பது தற்போது பலருக்கும் தெளிவாகி உள்ளது.
இது அவரின் புதல்வர் ராகுல் காந்தி விடுத்த அறிக்கையில் இருந்தும் காணக்கூடியதாக இருந்தது.
அதாவது இதனை சோனியாவின் மெல்ல கொல்லும் உத்தி அல்லது மறைந்திருந்து தாக்கும் உத்தி என்று கூட வரையறுத்துக் கொள்ளலாம்.
தற்போதைய அரசு போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து தன்னிச்சையாக விலகிய போது கருத்துக்கூற மறுத்த இந்திய மத்திய அரசு படைத்துறை உதவிகளை மிகவும் அதிகளவில் வழங்கி வருவதன் நோக்கம் அதுவே" மேற்குலகின் ஆளுமைக்குள் சிக்கியுள்ள காங்கிரஸ் இந்தியாவுக்கோ அல்லது தமிழக மக்களுக்கோ எந்த நன்மையையும் வழங்கப்போவதில்லை.
இந்திய அரசின் இந்த போரை முறியடிக்க வேண்டும் எனில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசிற்கு எதிராக நாம் அனைத்து வழிகளிலும் போரிட வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழக உறவுகளுடன் எமது உறவுகளை மேலும் வலுப்படுத்துவது முக்கியமானது.
தமிழ் மக்களின் போராட்டம் அனைத்துலக ரீதியில் ஒரு உறுதியான நிலையை நோக்கி நகர்ந்து வருகையில் வன்னி களமுனைகளில் நடைபெறும் தாக்குதல்களும் உக்கிரம் பெற்று வருகின்றன.விடுதலைப்புலிகளை கடல் தரை வான் வழிகளில் முற்றுகைக்கு உட்படுத்தியுள்ள சிறீலங்கா அரசு அங்கு சிக்கியுள்ள பொதுமக்களின் மீது கண்மூடித்தனமான வான் மற்றும் எறிகணை தாக்குதல்களை நிகழத்திவருகின்றது. இந்த தாக்குதல்களில் கடந்த மாதம் ஏறத்தாள 475 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 1800 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும் கடந்த சில நாட்களாக வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களின் மீது சிறீலங்கா இராணுவம் வெள்ளைபொஸ்பரஸ் (white phosphorus shells) சேர்க்கப்பட்ட அதிஉயர் வெடிமருந்து கொண்ட எறிகணைகளை (எரிகுண்டுகளை) பீரங்கிகள் மூலம் ஏவிவருகின்றது.இந்த எறிகணைகள் வீழந்து வெடிக்கும் போது பொருட்களும், பொதுமக்களின் உடல்களும் தீப்பற்றி எரிவதுடன், பாரிய சேதங்களும் ஏற்படுகின்றன. இராணுவம் வெள்ளைபொஸ்பரஸ் (white phosphorus shells) சேர்க்கப்பட்ட அதிஉயர் வெடிமருந்து கொண்ட எறிகணைகளை பீரங்கிகள் மூலம் ஏவிவருவதனால் இந்த பேரனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.
அனைத்துல விதிகளின் அடிப்படையில் பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் இந்த வகை எறிகணைகள் பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது.1980 களில் உருவாக்கப்பட்ட ஜெனிவா சட்டவிதிகளிலும் (Under the Geneva Treaty of 1980) இந்த ஆயுதங்கள் பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. வெள்ளை பொஸ்பரஸ் எறிகணைகள் வெடிக்கும் போது பாரிய புகைமண்டலங்களையும், தீயையும் உருவாக்கும் தன்மை கொண்டவை. இதன் போது ஏற்படும் எறிகணை சிதறல்கள் மனிதர்களின் தோல்களில் ஒட்டி எரிவதுடன், அதன் இரசாயணப்பொருள் உடலினுள் பரவும் தன்மையும் கொண்டது. உடலினுள் பரவும் பொஸ்பரஸ் இரசாயணம் ஈரல், சிறுநீரகம் போன்ற உறுப்புக்களை செயலிழக்க செய்யும் தன்மை கொண்டது. வளிமண்டலத்தில் ஒக்சிசன் போதியளவில் இருக்கும் வரையிலும் பொஸ்பரஸ் துகள்கள் தொடர்ந்து எரியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசின் இந்த வன்முறைகளை நிறுத்தும் முயற்சிகள் அனைத்துலக ரீதியில் மேற்கொள்ளப்படும் அதே சமயம் தமது பாசறைகளை நெருங்கி வரும் சிறீலங்கா இராணுவத்தின் மீது விடுதலைப்புலிகளும் தாக்குதல்களை வலுப்படுத்தியுள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் விடுதலைப்புலிகளின் சிறப்பு அணிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் நிலைகொண்டிருந்த 59 ஆவது படையணியின் முன்னனி நிலைகள் மீது ஒரு ஊடறுப்பு தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
விடுதலைப்புலிகளின் இலகுகாலாட்படை அணிகள் புதுக்குடியிலுப்புக்கு கிழக்குபுறம் இருந்து தாக்குதலை மேற்கொண்ட போது, ஈரூடகப்படையணியினர் நந்திக்கடல் ஊடாக ஒரு தரையிறக்கத்தை மேற்கொண்டு இராணுவத்தின் பின்னனி நிலைகளை ஊடறுத்து தாக்கியுள்ளனர். ஏறத்தாள 30 ஈரூடகப்படை கொமோண்டோக்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் அதிகாலை 1.00 மணிக்கு ஆரம்பமான தாக்குதல் மாலை 6.00 மணிவரை நீடித்தாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.எனினும் இந்த தாக்குதலில் 150 இற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், 350 இற்கு மேற்பட்டோர் காயமடைந்திதுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மூன்று ரீ-55 ரக டாங்கிகள் உட்பட பல கனரக வாகனங்கள் அழிக்கப்பட்டதுடன், பெருமளவான கனரக ஆயுதங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல வாகனங்களில் விடுதலைப்புலிகள் ஆயுத தளபாடங்களை எடுத்துச்சென்றுள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவித்தள்ளன.இதனிடையே விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் இரு ரீ-55 ரக டாங்கிகள், இராணுவ பேரூந்து, உழவு இயந்திரங்கள் என்பன அழிவடைந்துள்ளதை படை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் அரசின் இறுக்கமான ஊடகத்தடைகளை மீறி படைத்தரப்பின் இழப்புக்களை அறிவது மிகவும் கடினமானது.
புதுக்குடியிருப்பின் தென்பகுதியில் 59 ஆவது படையணியின் 9 ஆவது சிங்க றெஜிமென்ட், 4 விஜயபா பற்றலியன், 7 கெமுனுவோச் பற்றலியன் ஆகிய படையணிகள் நிலைகொண்டிருந்த 1.5 கி.மீ நீளமான முன்னனி நிலைகளை விடுதலைப்புலிகள் ஊடறுத்து தாக்கி அழித்துள்ளதுடன், இராணுவ அணிகளை ஒரு முற்றுகைக்குள் கொண்டுவந்திருந்தனர். இதன் போது சரமாரியான மோட்டார் மற்றும் பீரங்கி தாக்குதல்களையும் அவர்கள் மேற்கொண்டுடிருந்ததாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களில் இந்த 3 பற்றலியன்களும் பேரழிவை சந்தத்துள்ளன.இதனை தொடர்ந்து 59 ஆவது படையணியின் தென்பகுதி முன்னனி நிலைகள் பின்நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதுடன், பல அணிகள் தொடர்புகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
59 ஆவது படையணி சந்தித்த பேரிழப்புக்களை ஈடுசெய்யும் முகமாக 53 ஆவது படையணியின் ஒரு பிரிகேட் புதுக்குடியிருப்பு பகுதிக்கு அவசரமாக நகர்த்தப்பட்டுள்ளது. இந்த பிரிகேட்டானது, 59 ஆவது டிவிசன் மற்றும் நடவடிக்கை படையணி நான்கு என்பன நிலைகொண்டுள்ள பிரதேசங்களுக்கு இடையில் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை 59 ஆவது படையணி மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வலிந்த தாக்குதலை தொடர்ந்து அவசர அவசரமாக 53 ஆவது படையணி அங்கு நகர்த்தப்பட்டது 59 ஆவது டிவிசன் இராணுவத்தினர் பேரழிவை சந்தித்துள்ளதை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் முல்லைத்தீவு நோக்கிய தனது நடவடிக்கையை மணலாற்று பகுதியில் இருந்து ஆரம்பித்த 59 ஆவது படையணி சந்தித்த கடுமையான இழப்பும் இதுவாகும். இதனிடையே தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் இனந்தெரியாத விமானம் ஒன்று விசுவமடுவின் கிழக்கு பகுதியில் தரையிறங்கிதை தாம் அவதானித்ததாக 58 ஆவது படையணியினர் கொழும்பு தலைமையகத்திற்கு அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து படைத்தரப்பு அப்பகுதியை நோக்கி பீரங்கி தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் அவை மேலும் தெரிவித்துள்ளன. எனினும் விமானம் மீண்டும் எழுந்து சென்றதற்கான தடயங்கள் இல்லை என படையினாரின் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.எனவே விமானம் தரையிறங்குவதை இலகுவாக்கும் பொருட்டு விடுதலைப்புலிகள் இராணுவத்தினாரின் கவனத்தை திசைதிருப்பவே 59 ஆவது படையணியினரின் முன்னனி நிலைகள் மீது தாக்குதலை நடத்தியிருக்கலாம் என படைத்தரப்பு தற்போது தெரிவித்து வருகின்றது.
விமானம் மூலம் விடுதலைப்புலிகள் முக்கியமான ஆயுதங்களை எடுத்து வந்தனரா? என்ற கேள்விகளும் படை அதிகாரிகளின் மத்தியில் தற்போது தோன்றியுள்ளது.
சிறீலங்கா அரசு தனது 61 ஆவது சுதந்திர தினக்கொண்டாட்டங்களை ஒரு படைத்துறை வெற்றியுடன் மிகவும் கோலகாலமாக கொண்டாட முற்பட்டிருந்தது. இதற்கு ஏதுவாக சுண்டிக்குளம் பகுதியில் நிலைகொண்டுள்ள 55 ஆவது டிவிசன் படையணி 59 ஆவது டிவிசன் படையணியுடன் ஒர் இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் போரின் பெரும் பகுதியை நிறைவு செய்துவிடலாம் என அரசு எதிர்பார்த்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக சுண்டிக்குளம் பகுதியில் இருந்து சாலை பகுதி நோக்கி நகர்வில் ஈடுபட்ட 55 ஆவது படையணி கடுமையான எதிர்த்தாக்குதல்களை சந்தித்து வருகின்றது.அது மட்டுமல்லாது, புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஊடறுப்பு தாக்குதலும் அதில் படைத்தரப்பு சந்தித்த ஆயுத மற்றும் ஆளணி இழப்புக்களும் அரசுக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது.
அதாவது தரையிலும், கடலிலும் மேற்கொள்ளப்படும் இந்த பதில் தாக்குதல்கள் அரசின் எதிர்பார்ப்புகளை போலவோ அல்லது கணிப்புக்களை போலவோ களமுனைகள் இருக்கப்போவதில்லை என்பதை எடுத்துக்காட்டி வருகின்றன. மேலும், தொடர் தாக்குதல்களின் தாக்கம் அரசின் தற்போதைய கனவுகளை கூட கலைத்துவிடலாம் எனவும் நம்பப்படுகின்றது.
- அருஷ்-
நன்றி - ஈழமுரசு
Comments