இலங்கையில் உயிர்பறிக்கப்பட்ட கடத்தப்பட்ட கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள்



உயிர் பறிக்கப்பட்டவர்கள்...

சுப்ரமணியம் சுகிர்தராஜன் (ஜனவரி 24, 2006)

திரிகோணமலை துறைமுகப் பணியாளராகவும் பத்திரிகையாளராகவும் இருந்த இவர், கடந்த ஜனவரி 24, 2006-ல் தனது பணிக்கு செல்வதற்கு பேருந்துக்காக காத்திருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். திரிகோணமலையில் இலங்கை ராணுவத்தையும், துணை ராணுவப்படையினரையும் விமர்சித்து இவர் எடுத்த புகைப்படங்களும், இவரது செய்திக் கட்டுரையும் 'சுடரொலி' நாளிதழில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. திரிகோணமலையில் ஜனவரி 2-ம் தேதி மாணவர்கள் 5 பேர் கொல்லப்பட்டது, கிரேனேடு குண்டுகள் வீசப்பட்டுதான் என்பதை சுகிர்தராஜின் புகைப்படங்கள் வெளிச்சம் போட்டு காண்பித்தன.

சுரேஷ் குமார், ரஞ்சித் குமார் (மே 3, 2006)

கொழும்பு நகரில் உலக பத்திரிகை சுதந்திர தினத்தை அனுசரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் பலர் திரண்டிருந்தனர். அப்போது, யாழ்ப்பாணத்தின் வடக்குப் பகுதியில் உள்ள 'உதயன்' நாளிதழ் அலுவலகத்துக்குள் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று நுழைந்து வன்முறையில் ஈடுபட்டது. அதில் மார்க்கெட்டிங் மேனேஜர் சுரேஷ் குமார் மற்றும் சர்க்குலேஷன் பிரிவைச் சேர்ந்த ரஞ்சித் குமார் ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக 6 பேரை காவல்துறை கைது செய்தது.

சாம்பா லக்மல் டி சில்வா (ஜூலை 2, 2006)

பகுதிநேர பத்திரிகையாளரான சாம்பா லக்மல் டி சில்வா, தெற்கு கொழும்புவிலுள்ள போரல்லஸ்கமுவாவில் தனது இல்லத்தில் இருந்து காலை 5 மணியளவில் கடத்தப்பட்டர். பின்னர், அவர் அடையாளம் தெரியாத கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது இல்லத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மார்த்தியாஸ் மனோஜ்ரங்ராஜ் (ஆகஸ்ட் 1, 2006)

செய்தித்தாள் விற்பனையாளரான மார்த்தியாஸ் மனோஜ்ரங்ராஜ், ஜூலை 27-ல் யாழ்ப்பாணத்துக்கு செய்தித்தாள்களை வினியோகம் செய்வதற்கு செல்லும் வழியில் டிடேனட்டர் வெடிக்கச்செய்து கொல்லப்பட்டார்.

சதாசிவம் பாஸ்கரன் (ஆகஸ்ட் 16, 2006)

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 'உதயன்' நாளிதழ் வினியோகிப்பாளர், சதாசிவம் பாஸ்கரன். ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டதால், உதயம் நாளிதழை வினியோகிப்பதற்காக சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வாகனத்தில் சென்றபோதுதான் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது தெளிவு.

சின்னத்தம்பி சிவமஹாராஜா (ஆகஸ்ட் 21,2006)

யாழ்ப்பானத்தைச் சேர்ந்த 'நமது ஈழநாடு' நாளிதழின் நிர்வாக இயக்குனர் சின்னத்தம்பி சிவமஹாராஜா. வெள்ளிப்பாலையில் இவர் சுட்டுக் கொல்லப்படடார். இதன் விளைவாக, அந்த நாளிதழே நிறுத்தப்பட்டது.

ருஷிகா பிரசாதினி (வேலைக்குச் செல்லும் வழியில் விபத்தில் இறந்தவர்) (டிசம்பர் 19, 2006)

பத்திரிகையாளரான ருஷிகா பிரசாதினி என்ற பெண் கார் விபத்தில் படுகாயமடைந்தார். இந்த விபத்துக்கு காரணமானவர் ஒரு அரசு அதிகாரி. படுகாயமடைந்த ருஷிகா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நீதி கேட்டு அலைந்த ருஷிகாவின் குடும்பத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அரசுக்கு எதிராக போராட முடியாத நிலைக்கு அந்தக் குடும்பம் ஆளானது.

சுபாஷ் சந்திரபோஸ் (ஏப்ரல் 16, 2007)

'நிலம்' என்ற தமிழ் மாத இதழின் ஆசிரியர் சுபாஷ் (வயது 32) சந்திரபோஸ். தன்னுடைய மனைவி, எட்டு வயது குழந்தையுடன் வவுனியாவிலுள்ள திருனவத்குளத்தில் வசித்து வந்தார். 2007-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதியன்று வீட்டில் இலங்கை நேரப்படி இரவு 7.30 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

செல்வராஜ் ராஜிவர்ணம் (ஏப்ரல் 30, 2007)

'உதயன்' நாளிதழில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்த இவர், யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். கிரைம் தகவல்கள் திரட்டி வந்தவர்.

நிலக் ஷன் சகாதேவன் (ஆகஸ்ட் 1, 2007)

யாழ்ப்பாணத்தில் ஊடகவியல் பயின்று கொண்டே பகுதி நேர பத்திரிகையாளராக இருந்து வந்த துடிப்பான 22 வயது இளைஞர். அந்த காலை நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். யாழ்ப்பாணத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, கோகுவில். அங்குள்ள வீட்டில் அதிகாலை 5 மணியளவில் மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர் தனது துப்பாக்கியால் நிலக் ஷனை சுட்டுக் கொன்றான். அப்போது, கோகுவில் பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அங்கு, இலங்கை ராணுவம் தீவிரப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது.

இசைவிழி செம்பியன், சுரேஷ் லின்பியோ, டி.தர்மலிங்கம் (நவம்பர் 27, 2007)

இலங்கை அரசின் ஜெட் விமானங்கள் வீசிய குண்டுகளில், கிளிநொச்சியில் உள்ள 'வாய்ஸ் ஆஃப் டைகர்ஸ்' வானொலி நிலையம் இரையானது. இதில், பொதுமக்கள் மூன்று ஊடகப் பணியாளர்கள் உள்பட 11 பேர் கோல்லப்பட்டனர்.

இசைவிழி செம்பியன் என்கிற சுபாஜினி, சுரேஷ் லின்பியோ மற்றும் டி.தர்மலிங்கம் ஆகியோரே அம்மூவர்.

டபிள்யூ.குணசிங்க (டிசம்பர் 6, 2007)

சிங்கள நாளிதழ் திவய்னா-வின் கெபிதிகோலேவ பகுதியின் சிறப்பு நிருபராக பணிபுரிந்து வந்த இவர் சென்ற பேருந்து கண்ணிவெடித் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் குணசிங்க உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

காணமால் போன / கடத்தப்பட்டவர்கள்...

நடராஜா குருபரன் (ஆகஸ்ட் 28, 2006)

சூரியன் பண்பலை வானொலியில் செய்திப் பிரிவில் பணிபுரிந்து வந்த நடராஜா குருபரன், 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதியன்று கடத்தப்பட்டார். கொழும்புவில் உள்ள ஏ.பி.சி. ரேடியோ நெட் வொர்க் குழுமத்தின் பிரபல தமிழ் சேனல் ஆகும். இலங்கை மற்றும் சர்வதேச அளவில் உள்ள பத்திரிகை சுதந்திரத்துக்கான அமைப்புகள் வெகுண்டெழுந்து போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, நடராஜா குருபரன் 24 மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டார்.

எம்.ஏ.சிசிர பிரியங்கர, எம்.எல்.செனவிரத்ன, நிஹால் சேரசிங்க (பிப்ரவரி 5, 2007)

இலங்கை ரயில்வெ தொழிற்சங்கவாதிகளும், அச்சங்கத்தின் 'அக்குண' பத்திரிகையில் பணியாற்றிவர்களுமான பத்திரிகை வெளியீட்டாளர் எம்.ஏ.சிசிர பிரியங்கர (38), வடிவமைப்பாளர் எம்.எல்.செனவிரத்ன (35) மற்றும் தொழிற்சங்கவாதியான நிஹால் சேரசிங்க (40) ஆகியோர் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதியன்று கடத்தப்பட்டனர். பிறகு, அம்மூவரும் காவல்துறையினரின் பிடியில் இருந்தது தெரியவந்தது. அம்முவரும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்று இலங்கை அரசு குற்றம்சாட்டியது.

சுப்ரமணியம் ராமச்சந்திரன் (பிப்ரவரி 15,2007)

'தினக்குரல்' மற்றும் 'வலம்புரி' ஆகிய பத்திரிகைகளில் நிருபராக பணியாற்றியவர், சுப்ரமணியம் ராமச்சந்திரன். இவரை அடையாளம் தெரியாத கும்பல் கடத்திச் சென்று கொன்றுவிட்டது.

பாக்யநாதன் விஜயசந்தானம் (மே 18, 2007)

பாக்யநாதன் விஜயசந்தானம் பத்திரிகைத் துறையிலும், நடிப்புத் துறையிலும் இயங்கி வந்தவர். தமிழ் நாளிதழ் ஒன்றுக்காக திரிகோணமலையின் சிறப்பு நிருபராக பணியாற்றியவர். 2004 வரை சென்டர் ஃபார் பாலிசி அலட்நேட்டிவின் 'பீஸ் மானிட்டர்' தமிழ் பதிப்பில் பணியாற்றியவர். இவர் 2007-ம் ஆண்டு மே 18-ம் தேதி கடத்தப்பட்டார். நாடு முழுவதும் ஊடக மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைப்பினர் பலரும் கடுமையான போரட்டத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து, 19-ம் தேதி காலையில் விடுவிக்கப்பட்டார்.

அந்தோணிப்பிள்ளை ஷெரின் சித்ரஞ்சன் (நவம்பர் 5, 2007)

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யாழ் தினக்குரல் நாளிதழில் செய்தித்தாள் விநியோகப் பிரிவில் பணிபுரிந்து வந்தவர். இவர் 2007-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி முதலே காணமால் போனது தெரியவந்தது. 33 வயதான ஆந்தோணிபிள்ளை தன்னுடைய மனைவியுடனும், ஒரு குழந்தையுடனும் யாழ்ப்பாணத்திலுள்ள அன்னைக்கோட்டையில் வசித்து வந்தார். கே.கே.எஸ். சாலையிலுள்ள யாழ் தினக்குரல் அலுவலகத்தில் இருந்து செய்தித்தாள்களை எடுத்துக் கொண்டு நவம்பர் 5 ஆம் தேதி காலை 6 மணியளவில் விநியோகிக்க சென்ற போது கடத்தப்பட்டார்.

வடிவேல் நிமலராஜா (நவம்பர் 17, 2007)

யாழ்ப்பாணத்திலுள்ள 'உதயன்' நாளிதழில் பிழைத்திருத்தும் பணியைச் செய்துவந்தவர். கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதியில் இருந்து இவரைக் காணவில்லை. முந்தைய 3 ஆண்டுகளாக இரவு நேரப் பணியை மேற்கொண்டு வந்தவர். நிமலராஜா தனது சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், நாவலர் ரயில்வே பாதையை கடந்து கொண்டிருக்கும்போது இரவு 7.30 மணியளவில் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்பட்டார். 31 வயது இளைஞரான இவர், யாழ்ப்பாணத்திலுள்ள நிகோலஸ் லேனில் குடியிருந்து வந்தவர்.

கெய்த் நோயஹர் (மே 22)

'தி நேஷன்' என்ற ஆங்கில வார இதழின் துணை ஆசிரியரும், ராணுவம் தொடர்பான கட்டுரைகளை எழுதி வருபவருமான கெய்த் நோயஹர், மே 22-ல் கடத்தப்பட்டார். கடுமையாக தாக்கப்பட்ட அவர், மறுநாள் 23-ம் தேதி காலை வீட்டில் கொண்டு வந்து விடப்பட்டார். அவரது கைகள் கட்டப்பட்டிருந்தன; நினைவு இழந்திருந்தார். அவரை கடுமையாகத் தாக்கிய மர்ம கும்பல், 'ராணுவம் தொடர்பான தகவல்களைத் தருவது யார்?' என்று துருவித் துருவிக் கேட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்...

சிவரம்யா (மே 1, 2007)

கொழும்புவில் 2007-ம் ஆண்டு மே 1-ல் யுனெஸ்கோ ஏற்பாடு செய்திருந்த பத்திரிகை சுதந்திர தினம் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பெண் பத்திரிகையாளரும், நிவாரணப் பணிகள் மேற்கொள்பவருமான சிவரம்யா கைது செய்யப்பட்டார். இலங்கை அமைச்சரைக் கொல்வதற்காக நியமிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் மனித வெடிகுண்டு என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. யுனெஸ்கோ மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தலையிட்டதைத் தொடர்ந்து அவர் 3-ம் தேதி விடுவிக்கப்பட்டார். அதன்பின், இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து, அதில் வெற்றியும் கண்டார், சிவரம்யா!

டிரன் அல்லெஸ் (மே 30, 2007)

முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவர், ஸ்டாண்டர்ட் நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட் தலைவருமான டிரன் அல்லெஸ் மே 30 முதல் ஜூன் 13 வரை சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவரை, பயங்கரவாத புலனாய்வு அதிகாரிகள் மாலை 6.45 மணியளவில் கைது செய்து விசாரித்தனர். அதன்பின், அவர் மீது எவ்வித வழக்கும் பதியாமலேயே மூன்று மாதம் கழித்து விடுதலை செய்துவிட்டனர்.

ரங்கன் (டிசம்பர் 2, 2007)

'சுடரொலி' நாளிதழில் பணிபுரிந்து வந்த பத்திரிகையாளர் ரங்கன், ராஜகிரியா போலீசாரல் தேடப்பட்டு கைது செய்யப்பட்டார். 12 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டார். நாளிதழ் நிர்வாகம் தலையிட்டதைத் தொடர்ந்து பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர் மீது எந்தக் குற்றச்சாட்டையும் போலீசார் அளிக்கவில்லை.

கேபுசினே ஹென்றி, சி.சிமோன் (டிசம்பர் 24, 2007)

வீடியோ பதிவின் மூலம் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்களை கிறிஸ்துமஸ் இரவில் ராணுவம் கைது செய்ததது. கேபுசினே ஹென்றி என்ற பெண் பத்திரிகையாளரும், சி.சிமோன் என்ற கேமரா மேனும் ரத்கமா காவல்நிலையத்தில் வைக்கப்பட்டனர். கிறிஸ்துமஸ் தினத்தன்று சிறையிலுள்ள தங்களது உறவினர்களைப் பார்ப்பதற்காக வந்த தமிழ் குடும்பம் ஒன்றைப் பற்றி அவ்விருவரும் வீடியோவில் பதிவு செய்து கொண்டிருந்தனர். கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டு 43 மணி நேரத்துக்குப் பிறகு 26-ம் தேதி அவர்களை போலீசார் விடுவித்தது. அவர்கள் மீது எவ்வித குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.

ஆர்தர் வாமனன் (அக்டோபர் 24, 2007)

அமைச்சர் மனோ விஜேரத்னே அளித்த புகாரின் பேரில் 'தி சண்டே லீடர்' பத்திரிகையாளர் ஆர்தர் வாமனன் (வயது 23) அக்டோபர் 24-ம் தேதி குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என செல்பேசி மூலம் அமைச்சர் மனோ விஜேரத்னேவிடம் பேசியிருக்கிறார், ஆர்தர் வாமனன். ஆனால், தன்னிடம் ஆர்தர் வாமனன் பணம் கேட்டு மிரட்டியதாக பொய்யான புகாரை அளித்தார் அமைச்சர்.

பின்னர், அக்டோபர் 26-ல் ஆர்தரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட சி.ஐ.டி. போலீசாரை கடுமையாகக் கண்டித்தது.

ஜெமுனு அமரசிங்கே (பிப்ரவரி 12,2008)

கொழும்புவில் உள்ள இசிபதனா கல்லூரிக்கு திரும்பும் மாணவர்களை படமெடுத்துக் கொண்டிருந்த 'அசோசியேட் பிரஸ்' செய்தி நிறுவனத்தின் புகைப்பட பத்திரிகையாளரான ஜெமுனு அமரசிங்கேவை உள்நாட்டு ராணுவ கமிட்டி உறுப்பினர்கள் கைது செய்தனர். ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த கல்லூரி, மீண்டும் திறந்தது குறித்த கட்டுரைக்காக படமெடுத்தபோதே, அவர் கைது செய்யப்பட்டு, நரஹன்பிதா காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு இரண்டு மணி நேரம் துருவி துருவி விசாரிக்கப்பட்டார். கொழும்புவில் உள்ள ஊடக அமைப்புகளும், பத்திரிகை நிறுவனங்களும் தலையிட்டவுடன், இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

என்.ஜசிஹரன், ஜே.எஸ்.திசைநாயகம் (மார்ச் 6-7, 2008)

மார்ச் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் பத்திரிகையாளர்கள் பலரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் சிலரை பயங்கரவாத புலனாய்வு போலீசார் தீவிரமாக விசாரித்தனர். OUTREACHSL என்ற செய்தி இணையதளத்தைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆவர்.

இ-குவாலிடி பிரின்டிங் பிரஸ்சின் உரிமையாளரும், எழுத்தாளருமான என்.ஜசிஹரனும், அவரது பங்குதாரர் வளர்மதியும் உறுதியான காரணங்கள் ஏதுமின்றி மார்ச் 7-ல் கைது செய்யப்பட்டனர். OUTREACHSL இணையதளத்தின் ஆசிரியர் ஜே.எஸ்.திசைநாயகத்தை மார்ச் 7-ல் பயங்கரவாத புலனாய்வு போலீசார் கைது செய்தனர். இவ்விருவரும் வெகுநாட்களாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திசைநாயகம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கே.விஜேசிங்கே, உதயனன், ரங்க லசந்த (மார்ச் 7-8, மார்ச் 2008)

OUTREACHSL இணையதளத்தின் ஊடகவியாளர்களான கே.விஜேசிங்கே (பத்திரிகையாளர்), ரங்க லசந்த (கேமராமேன்) மற்றும் உதயனன் (விஷுவல் எடிட்டர்) ஆகியோர் மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கைது செய்யப்பட்டு மார்ச் 13-ல் விடுவிக்கப்பட்டனர். அம்மூவரின் மீது எவ்வித வழக்கும் பதியவில்லை. அவர்களுக்கு எதிராக புகாரும் அளிக்கப்படவில்லை.

வசந்தன் சிவகுமரன் (மார்ச் 8, 2008)

எஃப்.எம்.எம். செய்தித் தொடர்பாளரும், சரிநிகர் இதழின் ஆசிரியருமான எ.சிவகுமார் என்கிற பாலசுப்ரமணியம் வசந்தன், பயங்கரவாத புலனாய்வு பிரிவு போலீசாரல் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர், அதேநாளவில் விடுவிக்கப்பட்டார். அவர் அலுவலகத்துக்கு வரும் வரை அவருடைய சகோதரர்களில் ஒருவரை மார்ச் 7-ம் தேதி பயங்கரவாத புலனாய்வு பிரிவு போலீசார் பிணைக்கைதியாக வைத்திருந்தனர்.

விடுதலை...

சுசந்தி தம்பிராசா (மார்ச் 27, 2008)

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படையில் இருந்ததாக கைது செய்யப்பட்ட சுசந்தி தம்பிராசாவை விடுதலை செய்ய கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மார்ச் 27, 2008-ல் உத்தரவிட்டது. முன்னதாக, அவரை விடுவிப்பதில் எவ்வித தடையும் இல்லை என்று நீதிமன்றத்திடம் ஜனவரி 31-ல் அட்டார்னி ஜெனரல் தெரிவித்தார். கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் 23-ல் வெல்லவேட்டில் சவோய் சினிமா அருகில் சுசந்தியும், எம்.பரமேஸ்வரி என்ற பத்திரிகையாளரும் கைது செய்யப்பட்டனர். இலங்கை ஒலிபரப்பு கழகத்தின் நிவாரண அறிவிப்பாளராக இருந்தவரும், சுனேரா அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்காக பணிபுரிந்தவரே சுசந்தி.

மூலம் : www.freemediasrilanka.org



Comments