தீயிட்டு உயிரைப் மாய்த்துக்க் கொள்ளாமல், மக்கள் போராட்டங்கள் மூலமே ஈழத்தமிழர்களை பாதுகாக்க முடியும் - இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள்

கொளத்தூர் முத்துக்குமார், பள்ளப்பட்டி இரவி, சீர்காழி இரவிச்சந்திரன், சென்னை வண்ணாரப் பேட்டை மா.அமரேசன், மலேசியா இராஐா, ஸ்டீபன் ஜெகநாதன் இன்று ஈழத்தமிழர்களைக் காக்க தியாக தீபங்களாகி விட்டனர்.

இதுபோல் இனியும் நிகழக்கூடாது என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் ஒன்றாய் கையெழுத்திட்ட அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மரு.ச.இராமதாசு, இந்திய கம்யூனிஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் தா.பண்டியன், ம.தி.மு.கா பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பாரதிய ஐனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் ஆகியோர் ஒன்றாய் இணைந்து கையெழுத்திட்ட வேண்டுகோள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது:

இலங்கையில் சிங்கள இராணுவத்தினரால் தொடர்ந்து படுகொலைச் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த இந்திய, தமிழக அரசுகள் உருப்படியான முயற்சிகள் செய்யாததைக் கண்டு மனம் பொறுக்காத நிலையில் சென்னை கொளத்தூர் முத்துக்குமார், பள்ளப்பட்டி இரவி, சீர்காழி இரவிச்சந்திரன், சென்னை வண்ணாரப்பேட்டை மா.அமரேசன், மலேசியா இராஐா, ஸ்டீபன் ஜெகநாதன் ஆகியோர் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.

மேலும் சிலர் உயிர்த்தியாகம் செய்ய முனைந்து காப்பாற்றப்பட்டு உள்ளனர். இவர்களின் தியாகங்களை மதித்து நாங்கள் தலை வணங்குகிறோம். ஆனால், அதே வேளையில் இத்தகைய உயிர்த்தியாகங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்வது எங்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் தீராத மன வேதனையை அளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றினணந்து உருவாக்கியுள்ள ''இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்" மக்கள் ஆதரவுடன் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. மக்களின் ஒன்றுப்பட்ட போராட்டங்களின் மூலம் ஈழத்தமிழர்களை நம்மால் பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்து எங்களுடன் ஒத்துழைக்குபடி அனைவரையும் வேண்டிக் கொள்கிறோம்.

இனிமேல் யாரும் தீக்குளிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாமென மீண்டும் மீண்டும் வேண்டிக் கொள்கிறோம் என அறிக்கை தெரிவிக்கிறது.

Comments