எதிர்மாறான களமுனைகளும் ஏற்படக்கூடிய மாற்றங்களும்

வன்னியில் தமிழ் மக்கள் கொல்லப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இராணுவம் தனது முழு வளங்களையும் பிரயோகித்து வன்னி மீதான படை நடவடிக்கையை முனைப்பாக்கி வருகின்ற போதும், பொதுமக்களுக்கும் பேரழிவு ஏற்படுகின்றது.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள இடங்களின் மீது குறிப்பாக பாதுகாப்பான பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்ட பிரதேசங்கள் மீதும் தொடர்ந்து குண்டு வீச்சுகளும், எறிகணை வீச்சுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை வரையிலுமான காலப்பகுதிகளில் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 1129 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 3639 பேர் படுகாயமடைந்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வன்னிப்பகுதியில் உள்ள மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களின் மீது வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகள் கொத்தணிக் குண்டுகளை கொண்டிருப்பதாகவும் வன்னி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு எறிகணை வீழ்ந்து வெடித்ததும் பல சிறிய குண்டு வெடிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகவும், அதனால் அதிக சேதங்கள் ஏற்படுவதாகவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.

கொத்தணிக் குண்டுகளைப் பொறுத்தவரையில் அவற்றை விமானங்கள் மூலமோ அல்லது பீரங்கிகள் மூலமோ வீசமுடியும். இரு ஆண்டுகளுக்கு முன்னர் லெபனானில் நடைபெற்ற போரின் போது இஸ்ரேலிய இராணுவம் கொத்தணி குண்டுகளை பீரங்கிகள் மூலமும் வீசியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது. இதற்கென சிறப்பாக வடிவமைக்கப்படும் எறிகணையானது பல சிறிய துருப்பு எதிர்ப்பு எறிகுண்டுகளை கொண்டதாகும்

அவை வீழ்ந்து வெடிக்கும் போது öசல்லும் தூரங்களின் பரப்பளவு அதிகரிப்பதுடன், பொதுமக்கள் மத்தியில் பாரிய சேதங்களையும் ஏற்படுத்த வல்லøவ. இந்த வகை குண்டுகள் ஜெனிவா போரியல் சட்டங்களின் அடிப்படையில் தடை செய்யப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அண்மையில் வன்னியில் இருந்து வந்த பௌத்த மதகுரு கூறிய தகவல்களும் மிகவும் வேதனையானது. அவர் தெரிவித்த கருத்துக்களில் சிலவற்றை இங்கு தருகின்றேன்: வன்னி வீதிகளில் மரங்களிலும், வீதியோரங்களிலும் மனிதர்களின் உடற்பகுதிகள் சிதறிக்கிடக்கின்றன. பாதுகாப்பான பிரதேசத்தை நோக்கி அதிகளவான மக்கள் இடம்பெயர்ந்து வருவதால் பலர் மரங்களின் கீழ் தங்கியுள்ளனர். சுடும் வெய்யிலும், மழையும் அவர்களை மேலும் துன்பத்தில் தள்ளியுள்ளது. உணவுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுகின்றது.

உணவுப் பொருட்களை பெற்று கொள்வதற்கே பெரும்பாலன மக்கள் பாதுகாப்பு பகுதிகளை நோக்கி செல்கின்றனர். அந்தச் சமயத்தில் இராணுவம் மேற்கொண்ட எறிகணை வீச்சுக்களில் 300 இற்கு மேற்பட்ட மக்கள் ஒரு நாளில் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் படுகாயமடைந்தனர். நான் அதனை நேரில் கண்டேன். சடலங்கள் எங்கும் சிதறிக்கிடந்தன. மூன்று கிழமைகள் நான் பயங்கர அனுபவங்களை பெற்றிருந்தேன். அதில் இருந்து நான் இன்னமும் விடுபடவில்லை. பதுங்குகுழிக்குள் பதுங்கி கொள்ளும் மக்கள் சிறிய ரொட்டி துண்டையும், தேநீரையுமே அருந்துகின்றனர்.

இரு தினங்களின் பின்னர் நான் வவுனியாவில் உள்ள மெனிக் பாம் இடைத்தங்கல்

முகாமிற்கு சென்றிருந்தேன். அங்குள்ள மக்களின் நிலை மிகவும் மோசமானது. அவர்கள் கைதிகளை போலவே நடத்தப்படுகின்றனர். பழுதடைந்த உணவுகளே அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆற்றங்கரைக்கு குளிப்பதற்கு அவர்கள் செல்லும் போதும் இராணுவத்தினர் கூடச் செல்கின்றனர்.

வன்னியில் இருந்து கொண்டுவரப்படும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் கடுமையான பாதுகாப்புக்களுடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நோயாளர்களுடன் பராமரிப்புக்கு வருபவர்கள் நெலுக்குளம் முகாமிற்கு அனுப்பப்படுகின்றனர். இதனை விட மோசமான மனித உரிமை மீறல்களை காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கடுமையான துன்பங்களைக் கூட தடுப்பதற்கு தவறும் மேற்குலகம் தமிழ் மக்களிற்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும் என தொடர்ச்சியாக கூறிவந்தது. ஆனால் அந்த கோரிக்கைகளின் பகட்டுத்தன்மைகளும் தற்போது தெளிவாக அம்பலமாகி வருகின்றன. வன்னியில் ஒரு முழு அளவிலான போர் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது, விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என கோருவது ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் தற்கொலைக்கு ஒப்பானது.

ஒரு தடவை இந்திய இராணுவத்திடம் தமிழ் மக்களின் பாதுகாப்பை கையளித்து ஆயுதங்களை கையளித்த பின்னர் நடைபெற்ற பேரழிவுகளை தமிழ் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதன் பின்னர் ஆயுதக்களைவு என்ற பதங்கள் ஈழப்போர் வரலாற்றில் பயன்படுத்தப்பட்டதில்லை. பலமான நிலையில் உள்ளபோதே அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுக்களை புறந்தள்ளிவந்த பதவியிலிருந்த அரசாங்கங்கள் ஆயுதங்களை கையளித்த நிலையில் அது தொடர்பாக சிந்திப்பதையே நிறுத்திவிடும் என்பது யாவரும் அறிந்தவையே.


எனினும் தமது பூகோள அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்காக வேற்று இன மக்களை பலிக்கடாவாக்கி வரும் மேற்குலகம் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் இரட்டை வேடம் பூண்டு வருவதும் எதிர்பார்க்காத ஒன்றல்ல. சமபலமான நிலையில் பேசப்படும் அரசியல் தீர்வுதான் நிலையானதும், நியாயமானதுமான தீர்வை தரும் எனயூகோஸ்லாவியாவில் கொள்கைகளை வகுத்தவர்கள் தற்போது தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக சரணடைய சொல்வது வேடிக்கையானது.

ஈரான் அரசுக்கு எதிராக முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம்ஹுஸைனின் பாதுகாப்பில் இயங்கிவந்த ஈரானிய மக்கள் முஜாஹிதீன் அமைப்பின் மீதான தடையை (கஞுணிணீடூஞு'ண் Mதடீச்டடிஞீஞுஞுண Oணூஞ்ச்ணடிண்ச்tடிணிண ணிஞூ ஐணூச்ணகMOஐ) கடந்த மாதம் ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது. 1997 களில் அமெரிக்காவும் அதனை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் அந்த அமைப்பை தடை செய்திருந்தன. எனினும் கடந்த மாதத்தின் இறுதிப்பகுதியில் அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது.

முன்னர் ஈரானுடன் நல்லுறவை வளர்த்து அதன் அணுவாயுத திட்டங்களை செயலிழக்க செய்யும் நோக்கத்துடன் இந்த அமைப்பின் மீது தடை கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போது ஈரானை தமது காலடியில் விழவைப்பதற்கு அதன் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அனைத்துலகத்தின் குத்துக்கரணங்கள் ஏராளம். இதே அணுகுமுறையை தான் அவர்கள் தமிழ் மக்கள் மீதும் பிரயோகிக்கின்றனர்.

இதனிடையே ஏறத்தாழ 200 சதுரகிலோமீற்றர் பரப்பளவிற்குள் முடக்கப்பட்டுள்ள மக்களையும், விடுதலைப்புலிகளையும் சுற்றி இலங்கை அரசு தரை, கடல், வான் வழிகளில் ஒரு முற்றுகையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் தென்னிலங்கை மக்கள் தொடக்கம் அனைத்துலக சமூகம் வரையிலும் இறுதிப் போரின் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

பெரும்பாலான படைத்துறை அதிகாரிகள் இறுதிப் போர் கிளிநொச்சியில் அல்லது முல்லைத்தீவில் அல்லது சாளைப் பகுதியில் நிகழலாம் என எதிர்பார்த்தனர். ஆனால் எதுவும் நிகழவில்லை. முல்லைத்தீவில் இருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கியது பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது. அவர்கள் அங்கு தமது ஆயுதக் களஞ்சியங்களையும், படையணிகளையும் வைத்திருப்பார்கள் என பலர் எண்ணினர்.

ஆனால், பல வருடங்கள் இராணுவம் முகாம் அமைத்து இருந்த இடம் முல்லைத்தீவு. அதன்பூகோள அமைப்பு இலங்கை இராணுவத்திற்கு நன்கு பரீட்சயமானது. எனவே அங்கு பின்தளத்தை பேணுவது ஆபத்தானது. எனினும் முல்லைத்தீவை தமது பிரதான தளமாகவும், சாளையை கடற்புலிகளின் பிரதான தளமாகவும் எல்லோரையும் விடுதலைப்புலிகள் நம்ப வைத்திருந்தனர். ஆனால் படையினர் அப்பகுதியை கைப்பற்றியபோது அங்கு அதிகமாக எதுவும் இருக்கவில்லை.

யாரும் எதிர்பார்க்காத தாக்குதல் களமாக புதுக்குடியிருப்பை அவர்கள் தெரிவு செய்துள்ளனர். புதுக்குடியிருப்பை ஊடறுத்து செல்லும் ஏ35 நெடுஞ்சாலைக்கு தெற்குப்புறம் தான் அதிக காடுகளை கொண்ட பிரதேசம் உள்ளது. கிழக்குப்புறம் சிறிய காடுகளும் குடியிருப்புக்களுமே அதிகம். அதற்கு கடலுடன் தொடர்பும் உண்டு.

தற்போது இராணுவம் ஏ35 வீதிக்கு தெற்குப்புறமே நிலைகொண்டுள்ளது. அதாவது காட்டுப்பகுதிக்குள் அவர்கள் சென்றுள்ளனர். புதுக்குடியிருப்பின் கரையோரப் பகுதிகளை இரு படையணிகள் கைப்பற்ற முனைந்து வருகையில் ஏனைய 5 டிவிசன்களும் தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் நிலைகொண்டுள்ளன.
விடுதலைப்புலிகள் இராணுவத்திற்கு காட்டுப்புற பகுதிகளை விட்டுவிட்டு நகர்ப்புற பகுதிக்கு நகர்ந்துள்ளனர். விடுதலைப்புலிகள் காட்டுப்புற பகுதியில் நிலையெடுக்க போகின்றனர் என ஆய்வாளர்கள் சிலர் தெரிவித்து வந்த நிலையில் அதற்கு மறுதலையான களமுனை மாற்றம் அங்கு நிகழ்ந்துள்ளது.

இராணுவம் தற்போது காட்டுப்பகுதியில் நிலையெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. காட்டுப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் மீது வலிந்த தாக்குதல்களை விடுதலைப்புலிகள் தீவிரப்படுத்தலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான ஆரம்பமே கடந்த 1 ஆம் நாள் புதுக்குடியிருப்பில் நிலைகொண்டிருந்த 59 ஆவது படையணிக்கு ஏற்பட்ட அனுபவம்.
விடுதலைப்புலிகள் வசம் 1000 போராளிகளே உள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அது தவறான தகவல் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஏனெனில் 1000 பேர் 7 டிவிசன் படையணிகளை பல முனைகளில் எதிர்த்து ஒரு நாள் கூட சமர் புரிய முடியாது.

வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்களை பார்க்கும் போது விடுதலைப்புலிகள் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகளின் பகுதியில் ஏறத்தாழ 300,000 மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 10 சதவீதமானவர்கள் போரிடும் தகைமை உடையவர்கள் என வைத்து கொண்டால் கூட அவர்களின் பலம் 30,000 இனால் அதிகரித்துவிடும். விடுதலைப்புலிகளின் வசம் ஏற்கனவே 15,000 பயிற்றப்பட்ட போரளிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அவர்களின் பலம் 45,000 ஆக அதிகரிக்கலாம். விடுதலைப்புலிகளின் செயற்றிறன் மிகவும் அதிகம்.

கடந்த 1 ஆம் நாள் நடைபெற்ற மோதல்களை சுருக்கமாக பார்த்தால் எதிர்காலச் சமரின் உக்கிரமும் தற்போதைய களமுனை உத்திகளின் தாக்கமும் புரியும். அதாவது கடந்த 1 ஆம் நாள் அதிகாலை 1.00 மணிக்கு ஆரம்பமாகிய தாக்குதலின் 72 மணிநேர முடிவின் போது, மூன்று ரீ55 ரக டாங்கிகள் உட்பட 25 இற்கு மேற்பட்ட கனரக வாகனங்கள் அழிக்கப்பட்டிருந்தன, 59 ஆவது படையணியின் 3 ஆவது பிரிகேட் 3.5 கி.மீ தொலைவுக்கு பின்வாங்கியிருந்ததாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இந்த மோதல்களில் 1000 இற்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 2000 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். 7 ஆவது கெமுனுவோச் பற்றலியனை சேர்ந்த ஒரு படைச் சிப்பாய் காயங்களுடன் விடுதலைப்புலிகளால் காப்பாற்றப்பட்டிருந்தார்.

மாங்குளம் பகுதியில் பின்னிருக்கை படையணியாக வைக்கப்பட்டிருந்த 53 ஆவது படையணியின் வான்நகர்வு பிரிகேட், இரு சிறப்பு படை கொம்பனிகள், ஒரு கொமோண்டோ படை பிளட்டூன் என்பன புதுக்குடியிருப்பின் கேப்பாபுலவு பகுதிக்கு நகர்த்தப்பட்டன.ஆனால் விடுதலைப்புலிகளின் சுற்றி வளைப்புக்குள் இரு சிறப்புப் படை கொம்பனிகளும் சிக்கிக்கொள்ள சமர் மேலும் உக்கிரமடைந்தது.

விடுதலைப்புலிகளின் முற்றுகைக்குள் சிக்கியுள்ள சிறப்புப் படையணிகளை மீட்பதற்கு இராணுவத்தின் வான்நகர்வு பிரிகேட் உட்பட பல படைப் பிரிவுகள் முயன்று வருவதுடன், அங்கு வான் தாக்குதல்களும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
ஏறத்தாழ 50 இற்கு மேற்பட்ட மோட்டார்கள், 10,000 இற்கும் மேற்பட்ட எறிகணைகள் உட்பட பெருமளவான கனரக ஆயுதங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ள போதும் அதன் எண்ணிக்கைகளை அவர்கள் வெளியிடவில்லை. மேலும் இரண்டு பல்குழல் உந்துகணை செலுத்திகளும் விடுதலைப்புலிகளால் எடுத்து செல்லப்பட்டதாக படைத்தரப்பினரை ஆதாரம் காட்டி கொழும்பு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய படை நடவடிக்கைகளில் இராணுவம் பாரிய சுடுவலுவையும் படை வலுவையும் நம்பியே களமிறங்கியுள்ளது. இந்த நிலையில் களமுனைகள் கைமாறும் போது இந்நிலைமையில் மாற்றம் ஏற்படலாம் என்பதும் யதார்த்தமானது.

- வேல்ஸிலிருந்து அருஷ்-

நன்றி - வீரகேசரி



Comments