தமிழர்களுக்குள் வேண்டாம் சகோதர யுத்தம்

இரண்டாம் உலகப் போர்க்காலம் அது. அந்த காலனி ஆதிக்கப் போரை முடிவுக்குக் கொண்டுவர எதிரி நாடுகள் மீது அணுகுண்டை வீச அமெரிக்கா முடிவு செய்தது.

ஜேர்மனி மீது அணுகுண்டை வீசலாம் என்பது அமெரிக்காவின் முதல் திட்டம். ஆனால், அமெரிக்காவில் வசித்த ஜேர்மானியர்கள் அந்தத் திட்டத்தை தவிடுபொடியாக்கி விட்டார்கள்.

அமெரிக்க இராணுவத்தின் அடுத்த இலக்கு இத்தாலி. ஆனால், அமெரிக்க வாழ் இத்தாலியர்கள் தங்கள் தலையைக் கொடுத்து அணுகுண்டுகள் ரோம் மீது விழாமல் அரண் அமைத்து தடுத்து விட்டார்கள்.

அந்தோ பரிதாபம் ஜப்பான். அப்போது ஜப்பானிய மக்கள் அமெரிக்காவில் மருந்துக்குக்கூட கிடையாது. அடுத்தடுத்து ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் விழுந்தன. கொத்து, கொத்தாய் ஜப்பானிய மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இந்த வரலாறு எந்த ஏட்டிலும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை. ஆனால் இது உலகறிந்த உண்மை.

அன்று ஜேர்மானியர்களுக்கு, இத்தாலியர்களுக்கு இருந்த இனப் பாசம், புத்திசாலித்தனம் தமிழர்களுக்கு இல்லையா?.

ஈழத்தமிழர்களை காப்பாற்ற பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள் என்றார் முதல்வர். தமிழக மக்கள் தொகையில் பிரதமருக்கு அனுப்பப்பட்ட தந்திகளின் எண்ணிக்கை மிக, மிகச் சொற்பம்.

அரசியல்வாதிகள் கொள்கை, கோட்பாடு என்று பிரிந்து பகைமை பாராட்டலாம். என் இனிய தமிழா, நீ அப்படி இருக்கலாமா?.

உன் சகோதரி துகிலுரியப்படுகிறாள். உன் இன பிஞ்சுகள் குண்டுமழையில் இரத்தத்தில் குளிக்கிறார்கள். உனக்கு உணர்வு இல்லையா?.

ஈழத்தை கூறு போட வேண்டாம். அங்கு வாழும் உன் இனம் அழிக்கப்படாமல் தடுத்து நிறுத்து. அதற்கு தலைநகர் டில்லி முதல் தென்கோடி குமரி வரை வாழும் ஒவ்வொரு தமிழனும் வீறு கொண்டு எழ வேண்டும்.

ஈழத்தில் என் இனத்தை காப்பாற்று என்று ஆறரைக் கோடி தமிழர்களும் ஒரே குரலில் உரக்கக் கூற வேண்டும். நீ எழுப்பும் குரல் பிரதமரின் வீட்டு வாசலை உடைத்து திறக்க வேண்டும்.

என் இனிய தமிழா, நீ இன்னொரு வரலாறையும் தெரிந்து கொள்ள வேண்டும். சிங்களவர்கள் என்றாலே நீ சினம் கொண்டு பார்க்க வேண்டாம். அவர்களும் உன் ஒன்றுவிட்ட சகோதரர்கள்தான். அவர்களில் சில பாசிஸ சக்திகளைத்தான் ஒழிக்க வேண்டும்.

இலங்கைத் தீவில் ஆதிமுதல் வசித்தவர்கள் தமிழ் மக்கள். ஆனால் அப்போதே சேர, சோழர், பாண்டியர் என தமிழ்நாடு 3 மண்டலங்களாகப் பிரிந்திருந்ததால் இலங்கைத் தீவு அவர்கள் ஆட்சியின் கீழ் மாறி, மாறி வந்தது.

சிங்களவர்களின் முதல் மன்னரான விஜயன், 700 வீரர்களுடன் கடல்மார்க்கமாக இலங்கையில் கால் பதித்து அந்தத் தீவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்.

மன்னர் விஜயனை "பிரின்ஸ் ஆப்ரா' என்று அழைக்கிறார்கள். அதாவது தற்போதைய மேற்கு வங்கத்திலிருந்து அவர்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

உருவத் தோற்றத்தில் அவர்கள் மேற்குவங்க மக்களைப் போன்று இருப்பதே சான்று. அவர்கள் பேசும் சிங்களமொழி, சமஸ்கிருதமும், பாணியும் கலந்த கலவை.

இந்தியாவில் தமிழர்களும், மேற்கு வங்க மக்களும் சகோதரப் பாசத்துடன் பழகும்போது இலங்கையில் மட்டும் இனப்போர். இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு பெரியண்ணனாகிய மத்திய அரசுக்கு உள்ளது.

எங்கிருந்தோ வந்த நோர்வே, சமாதான முயற்சிகளை மேற்கொள்கிறது. ஆனால், இந்திரா, ராஜீவ் காந்திக்குப் பிறகு இலங்கைப் பிரச்சினையை துணிவுடன் கையாளும் தலைவர்கள் இந்தியாவில் இல்லாமல் போனது வேதனைக்குரியது.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியா இப்போது தலையிடா விட்டால் வரும் காலத்தில் "திருகோணமலையில்' கடற்படைத் தளம் அமைக்க அமெரிக்காவோ, சீனாவோ மூக்கை நுழைக்கும். அப்போது அது இந்தியாவுக்கு பேராபத்தாக முடியும்.

பொதுக்குழு, செயற்குழு, அரசியல் விவகாரக் குழு கூட்டம் என்று நாம் வீணடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அங்கு உயிர்க் கொலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

நம் குடும்பத்தில் ஓர் உயிருக்கு ஆபத்து என்றால் இதயம் எப்படிப் பதறுமோ, அந்த பாசம்தான் இப்போது தேவை. இலங்கை விவகாரத்தில் நமக்குள் சகோதர யுத்தம் வேண்டாம். நாம் ஒன்றுபட்டு எழுந்தால் இலங்கை வரலாற்றைத் திருத்தி எழுத முடியும்.



Comments