பிரான்சில் வாழும் தமிழ்மக்களுக்கான பிரான்சுத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் விசேட அறிக்கை

சிறிலங்கா சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது. 61 ஆவது சுதந்திர தினத்தை சிறிலங்கா கொண்டாடவிருக்கும் இந்த நாட்களில் ஈழத்தமிழர்கள் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர்.

இரத்தக்கறைபடிந்த நாட்களாகவும் தூக்கமின்றிய இரவுகளாகவும் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. உலகத்தமிழினமே உறவுகளின் அழுகுரலோடு கடந்து செல்லும் இந்நாட்களை நாம் வெறுமனே எண்ணிக்கொண்டிருந்தால் எங்கள் உறவுகளின் சமாதிகளைக்கூட சிங்கள பேரினவாதம் விட்டுவைக்கப்போவதில்லை.

நாம் காலம் தாமதிக்கும் ஒவ்வொரு கணங்களும் எம் உறவுகள் அங்கே துடித்துக்கொண்டிருக்கும் கணங்களாகவே கழிகின்றன. நாம் வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் பெப்ரவரி 4 ஆம்திகதியை கறுப்புதினமாக முன்னெடுத்து உலகின் கண்களில் உண்மையைக்கொஞ்சம் உறைக்கச்சொல்வோம்.

அன்றையதினத்தை மாபெரும் கறுப்புதினமாக முன்னெடுக்கும் முயற்சியில் பிரான்சிலுள்ள தமிழ்வர்த்தகர் சங்கமும் தனது பெரும் பங்களிப்பைச்செய்துள்ளது. அன்றையதினம் கடையடைப்பு தினமாக முன்னெடுப்பதாகவும் அறிவித்துள்ளனர். அத்தோடு பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கறுப்பு தினத்தில் பங்கெடுப்பதற்காய் முன்னாயத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு தமிழ் அமைப்புக்களும் இதற்கான தமது ஆதரவுகளைத்தெரிவித்தும் வருகின்றன. ஒவ்வொருதமிழனையும் வரலாற்றுக்கடமை அழைக்கின்றது. எழுச்சிகொண்ட தமிழர்களே மரணப்போராட்டத்தில் நின்று எம்மினம் மீளும் வரை அத்தியாவசியத்தேவைகள் தவிர்ந்த அத்தனையும் விடுதலைக்கே என்று சத்திய சபதம் எடுத்துக்கொள்வோம். எதிர்வரும் இந்த 4 ஆம் திகதியன்று தமது அத்தனை கடமைகளையும் நிறுத்திவிட்டு உறவுகளின் உயிர்களை மீட்கும் போராட்டத்தில் இறங்குவதற்காய் தமிழர்கள் எழுச்சிகொண்டுள்ளனர்.

காசாவில் 22 நாட்களில் 1200 உயிர்கள் பலிகொள்ளப்பட்டபோது வன்மையாகக்கண்டனம் செய்த உலகின் கண்களுக்கு நாளாந்தம் எண்ணிலடங்காமல் தொடரும் படுகொலைகள் கண்களில்படவில்லை . உலகத்தமிழ்நெஞ்சங்களே நாம் ஒவ்வொரு தமழனும் எமக்காய் குரல் கொடுக்கின்றபோதுதான் எமது தேசத:;தின் விடுதலை சாத்தியமாகும் . விண்மட்டும் புகழுற்று நின்ற தமிழன் விறைப்பற்று வீழ நாம் விட்டுவிடக்கூடாது. எம் இனத்தை முழுமையாகத்துடைத்தழிப்பதற்காய் எத்தனையோ வஞ்சகங்களையெல்லாம் சிங்களம் தயங்காமல் செய்கின்றது.

பாதுகாப்பு வலயம் என்று ஓர்பகுதியினை அறிவித்து அப்பகுதியில் கோரத்தனமாகத்தாக்கி பல்லாயிரக்கணக்கில் தமிழுயிர்களைக்குடித்தும் இரத்தவெறியடங்காத பேரினவாதிகள் சுதந்திரதினத்திற்குள் அத்தனை தமிழரையும் அழித்துவிடுவோம் என்று கங்கணம் கட்டி அலைகின்றது. அணியணியாய் நாம் அனைவரும் திரள்வோம்.

பயங்கரவாதத்திற்கெதிரான போர் எனக்கூறிக்கொண்டு பச்சிளம் பாலகர் மீதும் பல்குழல் எறிகணைத்தாக்குதல்களும் குழந்தைகள் முதல் வயோதிபர்கள்வரை தமிழர் என்ற ஒரே பார்வையை மட்டும் வைத்துக்கொண்டு அரக்கத்தனமாகவும் கண்மூடித்தனமாகவும் மேற்கொள்ளப்படும் விமானக்குண்டுவீச்சுக்களையும் உடன்நிறுத்தக்கோரி சர்வதேசமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும் வீடுகளைவிட்டு வீதிகளில் இறங்கிப்போராடுவோம் .

உலகத்தமிழ்நெஞ்சங்களே ஒவ்வொரு கணமும் உறவுகளின் உயிர்கள் பறிக்கப்படுகின்றது. துயரத்தின் உச்சியிலே நின்று வாழ்வா சாவா என்று வாழும் எம் மக்களின் கண்ணீர் துடைப்போம் . கைகொடுப்பார் யாருமில்லை உலகமே எம்மைக்கைவிட்டாலும் எமது தொப்புழ்கொடி உறவுகளான தமிழ்நாட்டின் தமிழுணர்வு கொண்ட மக்களும் நாமும் இருக்கின்றோம் என்பதை உணர்வுடன் உலகின் செவிகளில் ஓங்கி உரைத்திடுவோம்.

தமிழனின் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் எமது பலம் தான் உறவுகளின் உயிரின் இருப்பை நிர்ணயிக்கப்போகின்றது. எத்தனையோ இடர் மிகுந்த பொழுதுகளிலெல்லாம் எம்மை எமது போராட்டம் தான் காப்பாற்றி வந்திருக்கின்றது. ஆனால் இன்றோ மிகுந்த நெருக்கடியான ஓர் சூழ்நிலையில் இமயவரம்புகளில் நின்று எம்தேசம் போராடிக்கொண்டிருக்கின்றது.

பாரெங்கும் வாழும் தமிழர்களே வரலாற்றுக்கடமை எம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றது. அன்பான உறவுகளே நாம் யாரும் இந்த வரலாற்றுக்கடமையிலிருந்து தவறி எமது இனத்தின் அழிவிற்குக்காரணமானவர்களாக வேண்டாம்.

உலகத்தமிழினமே இன்று நாம் தூங்கினால் என்றுமே எம்மினம் நிம்மதியாகத்தூங்கமுடியாது.உலகின் கண்களைத்திறந்து உறவுகளின் உயிர்களைக்காப்போம்.அனைவரும் எழுந்து வாருங்கள் ! எழுச்சிகொள்வோம்! பேரெழுச்சிகொள்வோம் !

Comments