மகிந்தவின் பாதுகாப்பு வலயமும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களும்

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களை அடிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை ஏறத்தாழ முற்றுப்பெறும் நிலையை அடைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு அதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. மக்களை ஒரு சிறிய இடத்துக்குள் அடைத்து அப்பகுதி மீது தீவிர எறிகணைத் தாக்குதல்கள் விமானக் குண்டுவீச்சுக்கள் என்பவற்றை நடத்தி அவர்களைப் படுகொலை செய்தும் காயமுறச் செய்தும் வருவதுடன் தொடர்ந்து மக்களை பதற்ற நிலையில் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

மக்களைப் பாதுகாத்தவாறே தான் யுத்தத்தை நடத்துவதாகக் கூறுவதற்கு பெயருக்கு ஒரு பாதுகாப்பு வலயத்தை அமைத்துள்ள அது பாதுகாப்பு வலயம் மீதே தாக்குதல் நடத்தி அச்சம் ஊட்டுகிறது. பாதுகாப்பு வலயம் என ஒரு பிரதேசம் அறிவிக்கப்பட்ட நேரம் முதல் பாதுகாப்பு வலயப்பகுதியை தினமும் ஐந்து பேருக்கு மேல் சாவடையவும் பத்திற்கு மேற்பட்டோர் காயமடையவும் அது எறிகணைத்தாக்குதலை நடத்துகிறது. மக்கள் எங்கிருந்து எங்கு போவது என்று தெரியாது கையில் வைத்திருப்பதையும் இழந்து விடும் நிலையில் உயிரைக் காப்பாற்ற ஓடும் நிலைக்குத் தள்ளிவிட்டது.

இதற்குக் காரணம் தமிழ் மக்களை விடுவிப்பதற்கே மகிந்த அரசாங்கம் நடத்தும் மனிதாபிமான நடவடிக்கையே காரணமாக இருக்கின்றது. சிங்கள தேசத்திடமிருந்து தமிழ்மக்கள் ஒருபோதும் இணக்கப் போக்கையோ மனிதாபிமானத்தையோ மனித அறத்தையோ ஒருபதும் எள்ளளவும் எதிர்பார்க்க முடியாது. அவ்வாறான அரசாக அது இல்லை என்பது தெரிந்து கொள்ளப்பட்டதனாலேயே தமிழ் மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிரான இப்போராட்டத்தை நடத்திவருகின்றனர்.இப்போதுதான் சிறிலங்கா அரசு மனிதாபிமானம் பற்றிப் பேசுகின்றது. அதுபேசுவது மட்டுமே மனிதாபிமானமாகும்.ஆனால் தமிழ் மக்கள் மீதான படுகொலையையும் ஒடுக்குமுறையையும் தீவிரப்படுத்தி முற்று முழுதாக அடிமைகொள்ளும் நோக்கத்துடன் செயற்பட்டுவருகின்றது.

இந்த நிலையிலேயே இந்தியா இப்போது கூறுகின்றது. தமிழ் மக்களின் பாதுகாப்பை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தவிடம் விட்டுள்ளதாக அதாவது மகிந்தராஜபக்ச தமிழ் மக்களை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக இந்தியா கூறுகின்றது. அதேவேளை சர்வதேச சமூகம் ஐ.நா. என்பனவும் தமிழ்மக்கள் யாரிடம் தமக்குப் பாதுகாப்பு இல்லை என உணர்ந்து போராட்டம் நடத்தினார்களோ அதற்கும் மேலாக யாரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயன்றார்களோ அவர்களே பாதுகாப்பு வளங்குவார்கள் அவர்களிடம் போங்கள் எனக் கூறுகின்றனர். அற்கும் மேலாக சிங்கள ஆட்சியாளர்களிடம் சிக்கி விடக்கூடாது என இடைவிடாது இடம்பெயர்ந்து சென்று கொண்டிருக்கின்ற நிலையில் அவர்கள் சிங்கள அரசிடம் தான் செல்லவேண்டும் என்பது போலக் கூறுகின்றனர். இவ்வளவுக்கும் காரணம் சிறிலங்கா ஓர் இறைமை உள்ள நாடாக இருப்பதாலே அதாவது சிங்களம் அன்னியரிடம் இழந்த உரிமையை மீட்டுக்கொண்டிருக்க தமிழினம் அதனைச் சிங்களத்திடம் இழந்து மீட்க்காதிருப்பதாகும்.

சிறிலங்கா பொருளாதார ரீதியாகவோ அல்லது படைத்துறை ரீதியாகவோ மிகவும் பின்தங்கிய நாடாகும். போர் ஆரம்பிக்க முன்னரே அது வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் இருக்கவில்லை. அது வளமுக நாடாக அதாவது வளர்ச்சியடைந்து வரும் நாடாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் வளர்ச்சி வேகமாக ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நாடாக இருந்தது. எனினும் இனப்பிரச்சினை காரணமாக போர் ஏற்பட்டதும் அது கீழ்நிலைக்குச் சென்றது. அது தனது அனைத்து வளங்களையும் போருக்குத் திருப்பியதன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டது. யுத்தத்தை விரைவில் முடித்துவிட்டால் அனைத்தும் சரியாகிவிடும் என கணக்கிட்டு 1977 முதல் ஆட்சிக்கு வந்தவர்கள் தீவிரமாகப் போரை நடத்தியதால் மேலும் மேலும் பொருண்மியச் சிக்கலில் மாட்டிக்கொண்டதுடன் வளங்களை விற்கும் நிலைக்கும் தள்ளப்பட்டது. அதாவது அது படிப்படியாக தனது பொருண்மியத்தை அன்னிய முதலீட்டாளர்களிடம் இழந்து வருகின்றது.இது ஒரு வகையில் தனது இறைமையை இழந்து வருவதற்குச் சமனானது.

எவ்வாறாயினும் அருகிலுள்ள இந்தியா முதற்கொண்டு அனைத்து நாடுகளினதும் ஆலோசனைகளைக் கேட்பதில்லை. அதிலும் யுத்தத்தின் போதான மனிதஉரிமை மீறல்கள் விடயத்தில் மட்டுமல்ல இன்று ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகள், தமது ஆட்சிக்கு எதிரானவர்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் கூட எவரையும் மதிக்கத் தயாராக இல்லை. அதற்குக் காரணம் அது இறமையுள்ள நாடாகவும் சனநாயகத்தின் பெயரால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கொண்டிருப்பதனாலாகும். அதேவேளை தமிழ்மக்கள் இன்று மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாலும் அடிக்கடி அவர்களுக்கு ஏற்படுகின்ற பொருளாதார இழப்புக்களும் அவர்கள் தமது இறைமையை மீட்கத் தவறியதே காரணமாகும். எனவே எவ்வளவு துன்பங்களைத் தாங்கியாயினும் இறைமையை மீட்டெடுப்பதன் மூலம் தமழ் மக்கள் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் வாழமுடியும் என்பதே உண்மை நிலையாகும்.

- வேலவன் -

www.tamilkathir.com



Comments