ஈழமக்களுக்காக குரல் கொடுக்கிறோம்: தமிழக அரசை எதிர்த்து அல்ல: பழ.நெடுமாறன்


இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பா.ஜ.க. சார்பில் தமிழிசை சௌந்தரராஜன், பழ.நெடுமாறன் உள்பட தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இவ்வியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், ஈழத்தில் இருக்கும் நம் மக்களை காக்கவே குரல் கொடுக்கிறோம். ஈழப்பிரச்சனையில் ஆட்சியை கலைக்க சிலர் சதி செய்வதாக முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார். நாங்கள் போராடுவது ஈழத்தமிழர்களுக்காகத்தான். தமிழக அரசை எதிர்த்து அல்ல.

ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் முதல்வர் கருணாநிதி அவர்கள், தமிழக மக்களை திசை திருப்ப பார்க்கிறார். அவருடைய ஆட்சியை யாரும் கலைக்க முடியாது. இன்னும் இரண்டரை வருடங்கள் திமுக ஆட்சி நடத்தலாம். ஈழத்தமிழர் பிரச்சனையில் ஆட்சி கலைப்பு என்று தமிழக மக்களை திசை திருப்பும் முதல்வரின் செயல் வருத்தம் அளிக்கிறது.

கேள்வி: இலங்கை தமிழர் நல உரிமை பேரவை என்று திமுக ஆரம்பித்திருக்கிறதே, அது உங்களுக்கு போட்டி இயக்கம் என நினைக்கிறீர்களா?

பழ.நெடுமாறன்: நாங்கள் போட்டியாக நினைக்கவில்லை. வரவேற்கிறோம். ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சித் தலைவர்களும்ஆதரித்தனர். முதல்வர் தலைமையில்தான் அனைத்துக் கட்சித் தலைவர்களும் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தமிழர்கள் நிலை குறித்து விளக்கினார்கள்.

ஈழத்தமிழர்களுக்காக அவர் பலமுறை குரல் கொடுத்தும், இந்திய அரசு செவி சாய்க்கவில்லை. இதையடுத்து முதல்வரும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் நாங்கள் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பித்தோம். மக்களை குரல் எழுப்ப வைக்கிறோம்.

கேள்வி: இந்த இயக்கத்திற்கு அழைப்பு இல்லை என்று முதல்வர் கூறியிருக்கிறாரே?

பதில்: அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பினோம். முதல்வருக்கும் அழைப்பு அனுப்பினோம். முதல்வருக்கு அனுப்பிய நகல்கூட இருக்கிறது.

கேள்வி: விடுதலைப்புலிகள் ஆயுதங்ளை துறந்து சரணடைய வேண்டும் என்று ஜெயலலிதா கூறுகிறாரே?

பதில்: ஜெயலலிதா சொல்வதைப் பார்த்தால் ஈழப் பிரச்சனைகள் பற்றி எதுவும் அவருக்கு தெரியாது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். ஈழத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் ஆளா இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

பாதிக்கப்படும் தமிழர்களை காக்கவே சில இளைஞர்கள் அப்போது ஆயுதம் எடுக்க வேண்டி வந்தது. ஈழத்தில் விடுதலைப்புலிகள் இல்லாமல் போயிருந்தால் ஈழத்தமிழினம் முற்றிலும் அழிந்திருக்கும். இப்போதும் விடுதலைப்புலிகள் இல்லாவிட்டால் தமிழினம் முற்றிலும் அழிந்துவிடும்.

ராமதாஸ்: என் மீது முதல்வர் வீண்பழி சுமத்துகிறார். ஆட்சியை கலைக்க சதி என்கிறார். ஆட்சியை எப்படி கலைக்க முடியும். இவருக்கு ஆதரவு கொடுக்க 35 பேர் இருக்கையில் (35 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்) ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது. இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இருக்கட்டும்.

முதல்வருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பிரச்சனை உண்டாக்கி, நான் குளிர்காய்வதாக கூறியுள்ள முதல்வர், நான் என்ன பிரச்சனையை உண்டாக்கினேன்? என்ன குளிர்காய்ந்தேன் என்று கூறவேண்டும்.

முதல்வர் பல நடவடிக்கைகள் எடுத்ததாக சொல்கிறார். அதன் பிறகும் போர் நிறுத்தம் வராததுஏன்? என உலகத்தமிழர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். முதல்வர் போர் நிறுத்தம் வராததற்கான காரணத்தை சொல்லட்டும்.


Comments