ஐ.நா பாதுகாப்புக் கவுன்ஸிலில் இலங்கை மனிதாபிமான நிலவரங்கள் குறித்து கலந்துரையாட அமெரிக்கா ஆதரவளிக்க வேண்டும் ‐ அனா நிஸ்டாட்

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்ஸிலில் இலங்கையின் மனிதாபிமான நிலவரங்கள் குறித்து கலந்துரையாட அமெரிக்கா ஆதரவளிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் அனா நிஸ்டாட் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவில் போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் வன்னியில்

மக்களுக்கெதிரான துஸ்பிரயோகத்தில் இலங்கை இராணுவமும் விடுதலைப் புலிகளும் எனும் தலைப்பிலான 45 பக்க அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

அவர் தனது அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது இலங்கையின் இன்றைய நிலைமைகள் குறித்து தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஆற்றலும் பொறுப்பும் இணைத்லைமை நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இருக்கிறது. இலங்கை அரசாங்கத்தினதும் விடுதலைப் புலிகளதும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்தும் அண்மைய வருடங்களில் அமெரிக்கா கவனம் செலுத்தி வந்துள்ளது.

வன்னியிலுள்ள பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் குறித்து ஒபாமாவின் அரசாங்கமும் காங்கிரசும் உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அத்தோடு இராணுவ இலக்குகளா அல்லது பொதுமக்கள் உள்ள வைத்தியசாலையா என்ற வேறுபாடின்றி மேற்கொள்ளப்படும் ஆட்லறித் தாக்குதல்கள் மற்றும் விமானத்தாக்குதல்கள் உட்பட போர் விதிமுறைகளை மீறும் எல்லாவகையான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும். பொதுமக்கள் செறிவாக உள்ள பிரதேசங்களினருகாமையில் இருந்து பல்குழல் ஏவுகணைகள் வலுவுள்ள பீரங்கித் தாக்குதல்கள் என்பன மேற்கொள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

போர் நடைபெறும் பிரதேசங்களில் அகப்பட்டுள்ள பொது மக்களை அங்கிருந்து வெளியேற்றும் வகையிலான நடவடிக்கைகளை விடுதலைப் புலிகளுடைய ஆதரவுடன் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

செப்.2008இல் வன்னியில் இருந்து வெளியேற்றப்பட்ட மனிதாபிமான நிறுவனங்கள் அங்கு மீண்டும் சென்று பணியாற்றவும் அபாயக் கட்டத்திலுள்ளவர்களுக்கு அவசியத் தேவைகளை வழங்கவும் மக்களுடைய எல்லாவகையான அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலும் அவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அகற்றப்பட வேண்டும். அத்தோடு அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்தின் இடையீடு இன்றிப் பணியாற்ற உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.

ஊடகவியலாளர்கள் உட்பட சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் மோதல் பிராந்தியத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அது அங்குள்ள நிலைமைகள் பற்றிய சரியான தகவல்களை உடனடியாகக் வெளிக்கொணர உதவுவதோடு பொதுமக்களுக்கு அங்கு எனன நடைபெறுகிறது என அறியவும் உதவும்.

சட்டத்திற்குப் புறம்பான வகையிலும் காலவரையறையன்றியும் இடம் பெயர்ந்தவர்கள் தடுத்து வைக்கப்படுவது உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்படுதல் வேண்டும்.
தடுத்த வைக்கப்பட்டுள்ளவர்கள் சட்டத்திற்குப் புறம்பான கைதுகள் காணாமல் போதல்கள் பற்றி கண்காணிக்க சர்வதேசக் கண்காணிப்பாளர்களை அனுமதிக்க வேண்டும்.

இல்லையேல் ஐக்கிய நாடுகளின் பொது அடிப்படைகளான இடம் பெயர்ந்தவர்களுடைய சுதந்திர நடமாட்டத்தை அங்கீகரித்தல் இடம் பெயர்ந்தவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பிப் போகும் அவர்களுடைய உரிமையை மதித்தல். இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ மனிதாபிமான நிறுவனங்களுக்கு அனுமதியளித்தல் வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இது தவிர விடுதலைப் புலிகள் போர்ப்பிராந்தியத்திலிருந்து மக்களை வெளியேற அனுமதிக்கவில்லை என்றும் அவ்வாறு வெளியேறுபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாகவும் உதாரணங்களுடன் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு விடுதலைப் புலிகள் கட்டாயப்படுத்தி ஆட்சேர்ப்புச் செய்வதாகவும் அதுவும் 18 வயதிற்குக் குறைந்தவர்களையும் போரில் ஈடுபடுத்துவதாகவும் பயிற்சி பெறாத இவர்கள் போர்முனைகளில் ஈடுபடுத்தப்படுவதானால் கொல்லப்படுவது அதிகமாவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அரசாங்கம் தான் பாதுகாப்பவலயம் என்று அறிவித்த பிரதேசங்களுக்குள்ளேயே ஆட்லறித் தாக்குதல்களையும் விமானத் தாக்குதல்களையும் மேற்கொண்ட பல சம்பவங்கள் தம்மால் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் ஜனவரி 1 ஆம் திகதி பாதுகாப்பு வலயத்தை அறிவித்ததாகவும் ஆனால் ஜனவரி 24ஆம் திகதி அப்பபுதி மீது அரச படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர் 15 பேர் காயமடைந்தனர். ஜனவரி 22க்கும் 29க்கும் இடையே இப்பாதுகாப்பு வலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர் என்றும் பல நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தவிர வன்னிக்கான உணவு வாகனத் தொடரணி அனுப்பப்படும் போது அதனைக் காப்பரணாகக் கொண்டு படையினர் புலிகளின் பிரதேசங்களை நோக்கி முன்னேற முயன்ற பல சம்பவங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 29ஆம் திகதி படையினரின் இறுதிக்காப்பரணாக உள்ள ஒட்டிசுட்டானிலிருந்து 13 கி.மீற்றர் தொலைவிலுள்ள புலிகளின் காப்பரண் உள்ள புதுக்குடியிருப்பு தெற்கு உணவு வாகனத் தொடரணி சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பாதுகாப்புடன் செல்ல முன்ற போது அதனைக் காப்பரணாகக் கொண்டு படையினரும் முன்னேற முயன்றதால் விடுதலைப் புலிகள் திருப்பித் தாக்கினர்.

இதனால் உணவு வாகனத் தொடரணியை இடைநடுவில் நிறுத்த வேண்டியதாயிற்று. இச்சம்பவத்தில் எவரும் பாதிக்கப்படவில்லை. ஆனால், மறுநாள் அரசாங்க அதிபரின் உணவு வாகனத் தொடரணி புறப்பட்ட போதும் படையினர் இவ்வாறு அதனைக் காப்பாக வைத்து முன்னேற முயன்றதால் அன்றும் விடுதலைப் புலிகள் திருப்பித் தாக்கினர். இந்த மோதலில் உணவு வாகனத் தொடரணியின் வாகனச் சாரதி ஒருவர் படுகாயமடைந்தார்.

டிசம்பர் 15 முதல் 2008 முதல் பெப்.10, 2009 வரை வன்னியிலுள்ள வைத்தியசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்:

1. 15.12.2008 முல்லைத்தீவு வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்.

2. 17.12.2008 வட்டக்கச்சி வைத்தியசாலை மீது தாக்குதல்.
3. 19.12.2008 முல்லைத்தீவு வைத்தியசாலை மீது தாக்குதல்.
4. 20.12.2008 முல்லைத்தீவு வைத்தியசாலை மீது தாக்குதல்.
5. 22.12.2008 கிளிநொச்சி வைத்தியசாலை மீது தாக்குதல்.
6. 25.12.2008 கிளிநொச்சி வைத்தியசாலை மீது தாக்குதல்.
7. 30.12.2008 கிளிநொச்சி வைத்தியசாலை மீது தாக்குதல்.
8. 08.01.2009 தர்மபுரம் வைத்தியசாலை மீது தாக்குதல்.
9. 10.01.2009 புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல்.
10. 13.01.2009 புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல்.
11. 19.01.2009 வள்ளிபுனம் வைத்தியசாலை மீது தாக்குதல்.
12. 21.01.2009 வள்ளிபுனம் வைத்தியசாலை மீது தாக்குதல்.
13. 22.01.2009 வள்ளிபுனம் வைத்தியசாலை மீது தாக்குதல்.
14. 26.01.2009 உடையார்கட்டு வைத்தியசாலை மீது தாக்குதல்.
15. 31.01.2009 புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல்.
16. 01.02.2009 புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது மூன்று முறை தாக்குதல்.
17. 02.02.2009 புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல்.
18. 03.02.2009 புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தாக்குதல்.
19. 05.02.2009 பொன்னம்பலம் வைத்தயசாலை மீது தாக்குதல்.
20. 10.02.2009 புதுமாத்தளன் வைத்தயசாலை மீது தாக்குதல்.

Comments