போருக்குள் வாழும் மக்களும் - அவர்களை மறந்த உலகமும்

altமுல்லைத்தீவு மாவட்டத்தில் குறுகிய நிலப்பரப்புக்குள்- வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களைப் புலிகள் மனிதகவசமாகப் பயன்படுத்துவதாக அரசாங்கம் குற்றம்சாட்டி வருகிறது. இலங்கை அரசாங்கத்தின் இந்தப் பிரசாரத்தை நம்பி சில சர்வதேச நாடுகள்- நிறுவனங்களும் கூடப் புலிகள் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தவறவில்லை.

இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வு இன்று கேள்விக்குறி ஆக்கப்பட்டிருப்பதற்கு அரசாங்கமே காரணம் என்பதை உலகம் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக் கொண்டு போரை நடத்துவது யார், போர் நிறுத்தத்துக்கு மறுப்பது யார் என்பதை ஆராயாமல்- புலிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் சர்வதேசத்துக்கு அப்படியொரு ஆர்வம்.

போருக்குள் வாழும் பொதுமக்களின் வாழ்வுக்கு உத்தரவாதம் கொடுக்க- அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கமோ சர்வதேசமோ தவறிவிட்டன. புலிகளின் பிரதேசத்துக்குள் வசிக்கின்ற மக்களின் பாதுகாப்புக்கு தாம் உத்தரவாதம் கொடுக்க முடியாதென்று அரசாங்கம் எப்போதோ அறிவித்து விட்டது.ஆனால் இதே அரசாங்கம் முன்னர்- தாம் புலிகளிடம் இருந்து மக்களை விடுவிக்கவே போர் நடத்துவதாகக் கூறிவந்தது.

ஆனால் இன்று அந்த மக்களைக் கொன்று- நிலங்களைப் பிடிக்கின்ற போரை நடத்துகிறது. மக்களை மீட்பதற்கான போராக- அவர்களைக் காப்பாற்றுகின்ற மனிதாபிமான நடவடிக்கையாக இருந்திருப்பின் அங்குள்ள மக்களுக்கு இத்தனை அழிவுகள் வந்திருக்காது.

நாளொன்றுக்கு சராசரி 50 பேர் கொல்லப்படுவதும், 100பேர் சராசரியாக காயப்படுவதும் வன்னி மக்களின் அன்றாட வாழ்வாகப் போயிருக்கிறது.எத்தனை மனித அவலங்களை தாங்கிக் கொண்டு அங்குள்ள மக்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இவையே சாட்சி.

கொழும்பு நகர வீதிகளில் காயமுற்ற படையினருடன் பத்து அம்புலன்ஸ் வண்டிகள் தொடராகச் சென்றாலே தென்னிலங்கைச் சிங்கள மக்களின் மனங்களில் பீதி தொற்றிக் கொள்ளும்.ஆனால் வன்னியில் காயமுற்ற 1200 பேர் கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். மேலும் பல நூறு பேர் வவுனியா, மன்னாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
இந்த எண்ணிக்கை வன்னிக்குள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும், அங்கு இன்னமும் எவ்வளவு பேர் இப்படியான காயங்களுடன் உயிருக்காகப் போராடுவார்கள் என்பதையலெ;லாம் சர்வதேசம் மனிதாபிமான நெருக்கடியாகப் பார்க்கத் தவறிவிட்டது.

ஆயிரக்கணக்கில் மக்களைக் கொன்றும் காயப்படுத்தியும் தான், அவர்களை விடுவிக்க வேண்டுமா? இதுதான் மனிதாபிமான நடவடிக்கையா? என்று இலங்கை அரசாங்கத்தைப் பார்ந்து எந்தவொரு நாடும்- அமைப்பும் தட்டிக் கேட்தாகத் தெரியவில்லை.

இந்தநிலையில் கடைசியாக வெளிவந்திருக்கின்ற யுனிசெப்பின் அறிக்கை ஒன்றில் - புலிகள் 14 வயதுள்ளோரைப் படையில் சேர்ப்பதற்கு முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் பிறந்து சில நாட்களேயான பிஞ்சுகளும், பத்து வயதுக்குட்பட்ட சிறார்களும்- பீரங்கி தாக்குதல்களிலும், விமானத் தாக்குதல்களிலும் சிதைந்து சின்னா பின்னமாகக் கிடக்கின்ற காட்சிகள் இந்த அமைப்புகளின் கண்களில் படுவதேயில்லை.

முன்னர் சிறார் படைச்சேர்ப்பு பற்றி புலிகள் மீது குற்றம்சாட்டிய ஐ.நாவின் அமைப்புகள் சிறிது காலமாக மௌனமாக இருந்து விட்டு இப்போது அதே பல்லவியைப் பாடத் தொடங்கியிருக்கின்றன.

இங்கே சிறார்படைச் சேர்ப்பை நியாயப்படுத்துவது எமது நோக்கமல்ல. ஆனால் சிறார்கள் கொல்லப்படுவதை விடவும் ஆயத மயப்படுத்துவது பயங்கரமான விடயமா? என்ற கோணத்தில் ஐநாவோ அல்லது சர்வதேச நாடுகள்- நிறுவனங்களோ சிந்திக்கவில்லையே.

வன்னிப் பகுதிக்கு கடந்த மாதம் 29ம் திகதிக்குப் பின்னர் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எதுவுமே அனுப்பப்படவில்லை.
குறுகிய நிலப்பரப்பில் வாழும் இலட்சக்கணக்கான மக்களால் சுயசார்பு உற்பத்திகளில் தங்கியிருக்க முடியாது. அங்குள்ள நீர்ப்பாசன, பயிர்ச் செய்கைப் பிரதேசங்கள் அனைத்தும் படையினரால் கைப்பற்றப்பட்டு விட்டன. உணவு தானிய, மரக்கறி உற்பத்திகள் ஸ்தம்பித்து விட்டன. கடலுணவுகளைப் பெறுவதற்கு கடற்படையினரின் தாக்குதல்கள் தடையாக உள்ளன.
ஆக வன்னியில் வாழும் மக்களுக்கு வெளியே இருந்து தான் அனைத்தும் கிடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் சண்டையைக் காரணம் காட்டி உணவு, மருந்துப் பொருட்களை அனுப்புவதை அரசாங்கம் தன்னால் இயன்றளவுக்கு தடுத்து வருகிறது.
நிலமை இறுக்கமடையத் தொடங்கியதை அடுத்து இப்போது கப்பல் மூலம் உணவு அனுப்பப் போவதாக கூறியிருக்கிறது.

ஏற்கனவே சர்வதேச செஞ்சிலுவைக் குழு 3 தடவைகள் கப்பல் மூலம் வன்னியில் இருந்து காயமுற்றோரை ஏற்றி வந்த- புதுமாத்தளன் கடற்பகுதி பகுதி ஊடாகவே இந்த உணவு விநியோகம் நடைபெறப் போவதாக அரசு கூறியிருக்கிறது.

பாதுகாப்பு வலயமாக அரசாங்கம் அறிவித்த அந்தப் பகுதியில் கடற்புலிகளின் நடவடிக்கைகளை தடுப்பதற்கே இந்த உத்தியை அரசு கையாள்கிறது.
கடற்புலிகளின் செயற்பாட்டுப் பிரதேசம் சாலைக்கும் வட்டுவாகலுக்கும் இடையிலான 15கி.மீ பகுதிக்குள் குறுகிப் போயிருக்கும் நிலையில்- அதற்குள் 12கி.மீ நீளமான பகுதியை பாதுகாப்பு வலயமாக அரசு அறிவித்திருக்கிறது.
இராணுவ நோக்கங்களுக்காகவே அரசு இந்தப் பாதுகாப்பு வலயத்தை அறிவித்ததே தவிர- மக்களின் பாதுகாப்புக்காக அல்ல. புலிகள் கடல்வழியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்துவதற்கே இந்த பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இருட்டுமடுவில் பாதுகாப்பு வலயத்தை அறிவித்த அரசு அதற்குள் தாக்குதல்களை நடத்தி நூற்றுக்கணக்கானோரைப் பலியெடுத்தது.
இப்போது முல்லைத்தீவுக் கரையோரப் பாதுகாப்பு வலயத்துக்குள்ளேயும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அந்த் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் நோயாளர் மீட்பு, உணவு விநியோகம் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினது செயற்பாடுகளைத் அதிகரித்து கடற்புலிகளின் நடவடிக்கைகளை முடக்க அரசு திட்டம் போடுகிறது.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டு புலிகளை- அரசாங்கம் வேறுவழியின்றி இந்தப் பொறிக்குள் தள்ளுவதற்கு எத்தனிக்கிறது.
உணவு, மருந்து அனைத்தையுமே அரசாங்கம் புலிகளுக்கு எதிரான ஆயதமாக வன்னிக்களத்தில் பாவிக்கிறது. மக்களின் பாதுகாப்பைப் பற்றிய கவலையின்றி- அவர்களைக் கொன்றழிப்பதிலேயே அக்கறை காட்டுகிறது.

வன்னியில் போருக்குள் வாழும் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமல், அவர்களுக்கான உணவு, மருந்து மற்றும் அடிப்படை வசதிகளை ஆயுதமாகப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை அரசாங்கத்தை சர்வதேசம் கண்டு கொள்வதாகவே இல்லை.

போரை நிறுத்துவதற்கு, தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு, நியாயமான நிரந்தர அரசியல் தீர்வொன்றைத் தமிழ்மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்குத் தான் இந்த சர்வதேசத்தால் முடியவில்லை என்றால்- மக்களின் உயிர் வாழ்வை உறுதிப்படுத்த, அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் கிடைப்பதையாவது உறுதிப்படுத்த முடியாதா என்ன?

Comments