சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானது - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

வன்னிப் பிரதேசத்தில் சிக்கியுள்ள சிவிலியன்கள் சுதந்திரமாக இடம்பெயர தமிழீழ விடுதலைப் புலிகள் உடனடியாக ஆவண செய்ய வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

யுத்த பிரதேச மக்கள் சுதந்திரமாக இடம்பெயர எவ்வித தடையும் இல்லை என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்த போதிலும், யதார்த்தத்தில் அவ்வாறான சுதந்திரம் காணப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் சிவிலியன்களது உயிரை பணயம் வைத்து யுத்தத்தை முன்னெடுப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களுக்கு அமைய யுத்த பிரதேசத்திலிருந்து சிவிலியன்கள் அகற்றப்பட வேண்டியது யுத்தத்தில் ஈடுபட்டு வரும் சகல தரப்பினரதும் முதன்மை கடமை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, விடுதலைப் புலகிளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தங்கியிருக்கும் சிவிலியன்களது பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை ஏற்க முடியாதென அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக நாளுக்கு நாள் சிவிலியன்களின் சேதம் அதிகரித்து வருவதாகவும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

விடுவிக்கப்படாத பிரதேசத்தில் சிக்கியுள்ள சிவிலியன்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாதென்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது ஜனநாயக அரசாங்கமொன்றின் முக்கிய பொறுப்பு என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட வகையில் சிவிலியன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் யுத்த நடவடிக்கைள் சர்வதேச போர்க் குற்றமாகவே கருதப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து வரும் சிவிலியன்களை முகாம்களை தடுத்து வைக்கும் செயன்முறையை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், குறித்த நபர்கள் தங்களது சொந்தங்கள் அல்லது நண்பர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு தரப்பின் யுத்த குற்றங்கள் மற்றொரு தரப்பின் யுத்த குற்றங்களினால் மூடி மறைக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ முடியாதென பிரட் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments