அரசியலில் என்றும் இல்லாதவாறு கடும் போக்காளர்களின் ஆதிக்கம்

பேரினவாதிகளுக்குச் சரியான பதிலை இறுக்கக் கூடியவர்கள் இடதுசாரிகளே. எனினும், இடதுசாரிகளைப் பலப்படுத்துவதற்குப் பதிலாகப் பாராளுமன்றவாத இடதுசாரிகள் சிலர் இழைத்த தவறுகளை மீண்டும்,மீண்டும் பேரினவாத முதலாளித்துவ சக்திகள் செத குற்றங்களைவிட பெரிதாகக் காட்டி இடதுசாரி விரோத போக்குகளை தமிழ்த் தேசியவாதிகளும் பேரினவாதக் கட்சிகளின் அடிவருடிகளுமான சில தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோரும் இடதுசாரி விரோதப் போக்கை கடைப்பிடித்து வந்ததனால் இன்று தமிழ் மக்கள் அநாதரவாக விடப்பட்டுள்ளனர்.

சிங்கள மக்களும் ஏனையவர்களும் பேரினவாத மாயைக்குள் மாட்டிக் கொண்டுள்ளனர். இந்நிலையில், இலங்கையின் அரசியலில் என்றுமில்லாதவாறு பேரினவாத, முதலாளித்துவ, வலதுசாரி கடும் போக்காளர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இது ஆரோக்கியமான நிலைமையல்ல.

இவ்வாறு புதியஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத் தரணியுமான இ.தம்பையா தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை பற்றி அவரிடம் கருத்துக் கேட்டபோது அவர் மேற்படி தெரிவித்தார்.

கேள்வி : வன்னியில் நடைபெறும் அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளினால் பாதிக்கப்படுகின்ற மக்களின் பாதுகாப்பிற்கு வழியென்ன?

பதில் : எமது நிலைப்பாடு யாதெனில், மோதலில் ஈடுபடுபவர்கள் வேறு மக்கள் வேறு என்பதாகும். இதனையே சர்வதேச மனிதாபிமான சட்டம் கூறுகிறது. சர்வதேச மனிதாபிமான சட்டத்தை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பிற்கு அரசால் உத்தரவாதமளிக்கப்பட வேண்டும். அவர்கள் இடம்பெயர விரும்பினால் பாதுகாப்பாக இடம் பெயரவும் எதுவித தொந்தரவுமின்றி விரும்பிய இடங்களுக்கு இடம்பெயரவும் இடமளிக்கப்பட வேண்டும். அவர்கள் ஆயுள்கால அகதிகளாகவன்றி மிகக் குறுகிய காலத்தில் மீளக் குடியமர்த்தப்படவும் வேண்டும்.

கேள்வி : அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளின் முன்னேற்றத்தினால் ஏற்படப்போகும் விளைவுகள் பற்றி என்ன கூறுவீர்கள்?

பதில் : தமிழ் மக்கள் மத்தியிலிருந்து ஆயுத ரீதியான நடவடிக்கைகள் ஏற்படுவதற்குக் காரணம் தமிழ் மக்கள் மீதான நிறுவனப்படுத்தப்பட்ட பேரினவாத, அடக்குமுறைகளும், பாரபட்சங்களும், இராணுவ ரீதியான அடக்குமுறைகளுமாகும். அவற்றை இல்லாமலாக்கி தமிழ் மக்களுக்கும் "கௌரவமான சமாதானம்' ஏற்படும் வகையில் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் மக்களின் சுயாட்சி, சமத்துவம் போன்றன உறுதி செயப்படும் வகையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.

இல்லாவிட்டால் இராணுவ நடவடிக்கைகளை முடிவிற்குக் கொண்டுவர முடியுமென நம்புவதற்கில்லை. சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பது பிரிவினையோ தனிநாடோ கேட்பது ஆகாது. தமிழ் மக்களுக்கு தனிநாடு என்பதை தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக நாம் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. தனி நாட்டிற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

கேள்வி : மாகாண சபைகளை அமுல்படுத்தினால் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகள் பூர்த்தி செயப்படுமா?

பதில் : வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையை இயங்கவிடாமல் செததும் அதற்குரிய அதிகாரங்களை கொடுக்காமல் விட்டதும் யார்?

மாகாண சபைகளுக்கிருக்கும் அதிகாரங்கள் போதுமானவையாக இருந்திருந்தால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவருடைய அரசியல் தீர்வுத் திட்டத்தை 2000ஆம் ஆண்டு சமர்ப்பித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தும் ஒஸ்லோ பிரகடனத்தை 2002இல் ஏற்றிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

இதிலிருந்து வெளிப்படுவது என்ன? தேசிய இனப்பிரச்சினைத் தீர்விற்கு மாகாண சபைகளை விடவும் கூடிய அதிகாரங்களைக் கொண்ட அதிகாரப் பகிர்வு அல்லது சுயாட்சியே அவசியம் என்பதனையே வரலாறு உணர்த்துகிறது.

கேள்வி : இடதுசாரி சக்திகள் பலமாக இல்லாத போது, அச் சக்திகளால் தாக்கமான வேலைகளைச் செயமுடியாத போது அவை மீது நம்பிக்கை வைக்கும்படி கேட்பதெப்படி?

பதில் :தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதை வலியுறுத்தி இடதுசாரிகள் தாக்கமான வேலைகளைச் செயவில்லை என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக இடதுசாரிகளின் யுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளைக் குறைத்து மதிப்பிட முடியாது.

இடதுசாரிகளின் தலைமையில் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் பலமாகஇருந்த யுத்த எதிர்ப்பு இயக்கத்தில் என்.ஜி.ஓக்களும், தென்னிலங்கையிலிருக்கும் சில தமிழ் கோமாளிகளும் புகுந்த பிறகு யுத்த எதிர்ப்பு இயக்கமானது சிங்கள மக்களை அணிதிரட்டுவதற்குப் பதிலாக என்.ஜி.ஓ.செயற்றிட்டங்களுக்கும் குறிப்பிட்ட கோமாளிகளின் வாக்கு வங்கிகளைப் பெருக்கிக் கொள்ளும் குறுகிய நோக்கத்திற்காகவும் முன்னெடுக்கப்பட்டது.

யுத்த எதிர்ப்பு இயக்கமென்பது சிங்கள மக்களின் நிகழ்ச்சி நிரலல்ல என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டது. அதனாலேயே யுத்த எதிர்ப்பு இயக்கம் பலவீனமடைந்தது. யுத்த எதிர்ப்பு இயக்கம் சிங்கள மக்களின் நிகழ்ச்சி நிரலாக இருக்கும் வரையே தாக்கமானதாக இருக்க முடியும் என்பதே உண்மை.

இடதுசாரிகள் சக்திகள் தானாக ஒரேயடியாகப் பலமடைய முடியாது. மக்கள் தான் அவைகளைப் பலப்படுத்த வேண்டும். குறிப்பாக தமிழ் மக்கள் இடதுசாரிகளைப் பலப்படுத்த வேண்டும். அரசாங்கமோ, எதிர்க்கட்சியோ தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் செயற்படப் போவதில்லை. அரசாங்கத்துடனும், எதிர்க்கட்சியுடனும் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழ், மலையக, முஸ்லிம் கட்சிகளால் எவ்வித அழுத்தங்களையும் கொடுக்க முடியாது. அவை அவற்றின் சுயநலத்திற்காகவே அவ்வாறு ஒட்டிக் கொண்டு நியாயம் பேசிக் கொண்டிருக்கின்றன.

இந்த உண்மை நிலைமைகளைப் புரிந்து கொண்டு மக்கள் சிறிய சிறிய அளவிலேனும் இடதுசாரிகளைப் பலப்படுத்த வேண்டும். அதற்காக நடைபெறுகின்ற தேர்தல்களிலிருந்து எல்லாச் சந்தர்ப்பங்களையும் மக்கள் பயன்படுத்த வேண்டும்.

இவ்விடத்தில் இடதுசாரி சக்திகளும், தேசிய ஜனநாயக சக்திகளுடன் ஐக்கியப்பட்டு தேர்தல் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் தேசிய ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், தேசிய இனங்களின் உரிமைகளை வென்றெடுக்கவும்,பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் இயங்க வேண்டும்.

கேள்வி: தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழர்கள் மீது இருக்கும் அனுதாபம் பற்றி?

பதில்: அவை வரவேற்கத்தக்கன. இந்திய இடதுசாரிகள் அங்கு நடக்கும் போராட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன.

ஆனால், இந்திய ஆளும் வர்க்கத்தினரின் மேலாதிக்க நிலைப்பாடும், ஏகாதிபத்தியவாதிகளின் நிலைப்பாடும் எப்போதும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருக்கப் போவதில்லை.

இலங்கை மக்களின் ஒருமைப்பாடு தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைக்கு அனைத்து மக்களின் ஆதரவும் குறிப்பாக சிங்கள மக்களின் ஆதரவும் வென்றெடுக்கப்பட வேண்டும்.

-பி.ரவிவர்மன்-



Comments