இலங்கையில் போர் நிறுத்தம் கோர முடியாது என்ற ஐ.நா. பொதுச் செயலரின் கருத்தை மறுக்கின்றார் பாதுகாப்பு சபையின் தலைவர்

இலங்கையில் நடைபெறும் போரினால் பெரும் இரத்தக்களரி உண்டாகி வருகின்றபோதிலும், அந்த நாட்டின் விவகாரம் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாததால், அங்கு போர் நிறுத்தம் செய்யுமாறு சிறீலங்கா அரசாங்கத்தை தான் கோர முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீன் மூன் கூறியிருந்தார்.

ஆனால், பொதுச் செயலாளர் பான் கீன் மூன் கூறியது ஏற்புடையதல்ல என்று கூறியிருக்கின்றார் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் இந்த மாதத்துக்கான தலைவர் யுகியோ டக்காசு. நாடு ஒன்றினது அமைதி மற்றும் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படும் போது, அது குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரும் மிகவும் முக்கியமான பொறுப்பு, ஐ.நா. சாசனத்தின் கீழ் அதன் பொதுச்செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார் பாதுகாப்புச் சபையின் தலைவரான ஜப்பானைச் சேர்ந்த யுகியோ டக்காசு.

இந்தியா, பாகிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்ததன் பின்னர் கடந்த செவ்வாய்கிழமை நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்திய பான் கீ மூனிடம், "இன்னர் சிற்றி பிறெஸ்" ஊடகத்தின் செய்தியாளர் மத்தி ரஸல் லீ, காஸா, கொங்கோ ஆகிய நாடுகளில் போர் நிறுத்தத்தை கோரியது போன்று, ஏன் பெரும் இரத்தக்களரி உண்டாகியுள்ள இலங்கையில் போர் நிறுத்தம் கோரவில்லை என்று கேட்டார்.

அப்போதே இலங்கை விவகாரம் குறித்து பாதுகாப்பு சபையின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாமையால் தன்னால் போர் நிறுத்தம் கோர முடியவில்லை என்று பான் கீ மூன் கூறியிருந்தார்.

அத்துடன், இலங்கை நிலைவரம் தொடர்பாக இரு வாரங்களுக்கு முன்னர் நியூயோர்க்கிற்கு வந்திருந்த அந்த நாட்டின் சிறப்புப் பிரதிநிதியுடன் (பசில் ராஜபக்ஷவுடன்) ஆராய்ந்தேன். மேலும் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனும் இந்த விடயம் தொடர்பாகத் தொலைபேசியில் தீவிரமாக ஆராய்ந்தேன்.

அவர் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவேண்டும், மோதலில் சிக்கியுள்ள மக்களுக்கும் உதவ வேண்டும். இதன் மூலம் அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றலாம் எனத் தெரிவித்திருந்தேன். அவர் தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்குவார் எனத் தெரிவித்திருந்தார்.

தமிழின அழிப்பில் ஈடுபடும் சகோதரர்களிடமே பான் கீ மூன் நிலைமையைப் பகிர்ந்துகொண்டு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, நாடொன்றின் இறைமையை மதிப்பது என்ற விடயத்தை தனது முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ளேன். எனினும் இலங்கை மற்றும் காஸா நிலைவரங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்ட விடயங்களாகும்.சர்வதேச தராதரங்கள் மீறப்படுதல் தொடர்பாக நான் தொடர்ச்சியாக எனது ஆழ்ந்த கண்டனத்தைத் தெரிவித்து வந்துள்ளேன்.

இலங்கையில் தொடரும் முறைகள் தொடர்பாக தொடர்ச்சியாக எனது கவலையைத் தெரிவித்து வந்துள்ளதுடன் இராணுவத் தீர்வல்ல, அரசியல் தீர்வே அவசியம் என்பது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளேன். இலங்கையில் காணப்படும் நிலைவரம் குறித்து குறைந்த எண்ணிக்கிகையிலேயே தகவல்ககள் வெளியாகியுள்ளன.

எந்த மோதல் சூழ்நிலையிலும் நீங்கள் முதலில் அறிய விரும்புவது உண்மை நிலைவரம் எவ்வாறானதாக உள்ளது என்பதையே என்றும் கூறியுள்ளார்.


Comments