எனது அனுபவம் தமிழரின் வேதனையை புரிய போதுமானது- மேரி கொல்வின் அம்மையார்

சண்டே டைம்ஸ் இதழின் மூத்த அனைத்துலக புகழ் பெற்ற பத்திரிக்கையாளர் மேரி கொல்வின் அம்மையார் 2001 இல் சிறிலங்கா படைகளின் தன் மீதான மூர்க்க தாக்குதலில் ஒரு கண் பார்வையை இழந்ததை நினைவு கூர்ந்த அவர் அந்த அனுபவம் தமிழர்களின் அவலத்தை புரிந்துகொள்ள போதுமானது என்று இன்றைய சண்டே டைம்ஸ் இதழில் எழுதியுள்ளார்.

2001 இல் தமிழர் தாயகம் மீதான அவல நிலையை கண்டறிய சந்திரிகாவின் தடையை மீறி வன்னிக்குள் இரகசியமாக புகுந்த துணிகர பத்திரிகையாளரான மேரி கொல்வின் அம்மையார் அங்கு தமிழ் மக்களின் அவலங்களை தரிசித்து அங்கிருந்தே பத்திரிகையில் செய்தியை வெளியிட்டார். அவர் உள்ளே சென்றுவிட்டதை அறிந்த சிறி லங்கா படைகள் அவர் மீள வரக்கூடும் என்று எதிர்பார்த்த இடங்களில் காத்திருந்தனர். அவர் தனது அரச கட்டுப்பாட்டு பகுதிக்கான பயணத்தை 8 ஆண்டுகளின் பின்னர் மனம் திறந்து வேதனையுடன் விபரிக்கிறார்..

''2001 இல் வன்னியில் 5 இலட்சம் தமிழரின் மனிதாபிமான அவல நிலையை வெளிக்கொணர பாரிய புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் பிரவேசித்தேன். அங்கு செல்ல பத்திரிகையாளருக்கு தடை விதிக்க பட்டு இருந்தது.

அங்கிருந்து மீண்டு வரும்போது சிறிலங்க படைகளின் குறி வெளிச்ச விளக்குகளின் ஒளி, முட்கம்பி வேலிகள், இடுப்பளவு தண்ணீர் ஊடான காட்டு பாதை. நான் வருவதை கண்டவுடன் துப்பாக்கி சூட்டை ஆரம்பித்தனர். வெளிச்ச குண்டுகளை வீசினர். நான் பத்திரிக்கையாளர் என்று கத்தினேன். அப்போது கிரனேட் தாக்குதலில் காயமடைந்தேன். என்னை தமிழ் புலியென நினைத்து தாக்கியிருக்க கூடும் என்று நினைத்தபடி நான் முன்வந்தேன்.என்னால் நிற்கமுடியவில்லை.

உடல் இரத்தம் தோய்ந்திருந்தேன். அப்போதுகூட அவர்கள் என்னை பிடித்தவுடனும் விடவில்லை.என்னை பலமாக தாக்கினார்கள், என் உடைகளை கிழித்து என்னை நிர்வாணமாகினார்கள். நான் மூச்சு விட கஷ்டப்பட்டு கொண்டும்,தலையில் காயத்துடனும், நெஞ்சில் வெடி காயத்துடனும் இருந்தபோதும் என்னை கனரக வண்டிகளில் வீசினார்கள்.''

எப்போதும் சிறிலங்கா படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி கொண்டுள்ள தமிழ் மக்களை 'நாம் உம்மை பாதுகாப்போம், வாருங்கள்' என்ற சிறிலங்கா அரசின் அழைப்பு தமிழ் மக்களிடம் கொஞ்சமும் எடுபடாது என்று கூறியுள்ளார். தமிழர் என்றும் படும் அவலத்துடன் ஒப்பிடுகையில் எனக்கு ஏற்பட்ட அவலம் பெரியதல்ல என்றும் கூறியுள்ளார்.


Comments