நேற்று செவ்வாய்க்கிழமை செனட் சபை உறுப்பினர் பொப் கேஷியின் தலைமையில் நடவடிக்கைகைள் ஆரம்பமாகிய போது அமெரிக்க அதிகாரம் வாய்ந்த செனட் சபையில் இலங்கை நிலவரம் குறித்து வெளிவிவகார குழு முன்னிலையில் கவனம் செலுத்தப்பட்டுதுடன் முன்னாள் தூதுவருட்பட மூவர் சாட்சியமளித்துள்ளனர்.
சாட்சியத்திற்காக அழைக்கப்பட்டிருந்த மனித உரிமைகள் காப்பகத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் அனா நீஸ்டாட் இலங்கையில் கடந்த 25 வருடங்களாக மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். தற்போது வன்னியில் அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திற்குள் படையினரின் எறிகணை வீச்சுக்கள் காரணமாக பலர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் தமிழீழ விடுதலைப்புலிகளும் தமது கட்டுப்பாட்டில் உள்ள மக்களை வெளியேறுவதற்குத் தடை விதித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
"அரசாங்கத்தினால் பல தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் போயுள்ளார்கள். அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றார்கள். இதற்கெதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை" என இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஷெவ்ஃரி லங்ஸ்டட் இதன்போது தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்படுவதாகவும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் உலக நாடுகள் இலங்கை விடயத்தில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என ஷெவ்ஃரி லங்ஸ்டட் தெரிவித்தார்.
சர்வதேச நன்கொடையாளர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு நிபந்தனைகளை விதிக்க முடியும் எனவும் அவர் பரிந்துரைத்தார். இந்த நிபந்தனைகளில் மீள்குடியேற்றம்இ மனித உரிமை நிலவரங்கள் என்பனவும் உள்ளடக்கப்படவேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அனா நீஸ்டாட் தெரிவிக்கையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை இலங்கையின் மனிதாபிமான நிலவரம் குறித்து அமர்வு ஒன்றினை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்த சாட்சியங்களின் பின்னர் கருத்துரைத்த ஜனநாயக கட்சியின் செனட் சபை உறுப்பினர் பொப் கேஷி, "இலங்கை அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட ரீதியில் தமிழர் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற நடைமுறை நீக்கப்படவேண்டும். அத்துடன் நடைமுறை யுத்தம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என இலங்கை அரசாங்கம் கூறுகின்றபோதும் அரசாங்கத்தால் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மாற்றாகத் தமிழ் பிரதிநிதிகளை தேடிக்கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இவ்வாறு அந்த இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது
Comments