எந்நேர மும் கைதாகலாம் என்கிற நிலையிலும், கடந்த 15-ம் தேதி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடந்த முத்துக்குமார் வீர வணக்க விழாவில் சீமான் வழக்கமான ஆவேசத்தைக் கொட்ட... அதுவும் வழக்காக வடிவம் பெற வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் போலீஸ் தரப்பில்.
இந்நிலையில், சீமானை அவருடைய வீட்டில் சந்தித்தோம். இலங்கைத் தமிழர் பிரச்னையை மனதில் இருத்தி நிலை கொள்ளாமல் இருந்தவர், நாம் வாயைத் திறப்பதற்கு முன்னரே சீறத் தொடங்கி விட்டார்!
''எதற்கு என் மேல் வழக்கு? செத்துக் கிடக்கும் என் ரத்த உறவுகளுக்காக ஒப்பாரி வைத்ததற்கா? ரத்தமும் காயமுமாய்த் திக்கற்றுத் தவிக்கும் என் அக்கா, தங்கைகளுக்காக அழுததற்கா? போரை நிறுத்துங்கள் என்று நாங்கள் கதறியது உங்கள் காதுக்குக் கேட்கவில்லை... ஆனால் நாங்கள் வைக்கும் ஒப்பாரி மட்டும் உங்களுக்குக் கேட்டுவிட்டதா... உங்களை உசுப்பிவிட்டதா? கைது செய்... எத்தனை தடவை வேண்டுமானாலும் கைது செய். என் இனத்தின் கண்ணீரை
துடைக்க முடியவில்லையே என்று துடிக்கிற என் கைகளை வெட்டி வீசு. உன் மிரட்டலுக்கும் அடக்குமுறைக்கும் பயந்து என் உணர்வை அடகு வைத்துவிடுவேன் என்று மட்டும் எண்ணாதே...'' -சீமானிடமிருந்து உணர்ச்சிமிக்க வார்த்தைகள் சுடச்சுட விழ... அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம். அந்தப் பார்வை எதை உணர்த்தியதோ... மெள்ள மெள்ள தன்னை வசப்படுத்திக்கொண்டு, நம் கேள்வியை எதிர் நோக்கினார் -
''வீம்பாகப் பேசி அடுத்தடுத்து சிறைக்குச் செல்வதைவிட பக்குவமாக உங்கள் கருத்துகளை எடுத்துவைக்கலாமே..?''
''சுய பிழைப்புக்காக நான் பேசவில்லை. மனசாட்சி அற்றவனைப் போல் நானும் மௌன மாக இருக்க முடியாது. என் வார்த்தைகளைத் தவறென்று பாய்கிறார்களே... இந்தியாவின் மூத்த குடிமகள் பிரதீபா பாட்டீல் போரை நிறுத்தச் சொல்லிப் பேசினாரே... அந்த வார்த்தைகளுக்கு மதிப்பிருந்ததா? சிங்கள வெறியர்கள் இந்திய முதல் குடிமகள் சொன்ன வார்த்தைகளைக் கேட் டார்களா? போரை நிறுத்தினார்களா? இந்திய ஜனாதிபதியின் வார்த்தைகளே இங்கே செல்லாக் காசாகிக் கிடக்கையில், என் பேச்சுக்கு மட்டும் ஏன் இத்தனை கவனிப்பு? இறையாண்மை என்பது இந்தியாவில் கிடையவே கிடையாது. முல்லை பெரியாறு, காவிரி விவகாரங்களில் என் தமிழ் சாதி காய்ந்து தவித்தபோது இறையாண்மை எங்கே போனது?
மும்பை குண்டுவெடிப்பில் பலரும் இறந்து போனார்கள் என்பதற்காக பாகிஸ்தானோடுஇந்தியா மட்டைப்பந்து ஆடாது என்று அறிவித்தார்களே... 410 அப்பாவி தமிழ் மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்களே... அவர்களோடு, மட்டும் நாம் ஆடலாமா? என் இனம் ஒரு பக்கம் கொத்துக் கொத்தாகச் செத்துக்கொண்டிருக்கையில் இன்னொரு பக்கம் மட்டைப் பந்து விளையாட்டை நடத்தினார்களே... இதுதான் இறையாண்மையா? மனசாட்சியும் மனிதநேயமும் இற்றுப்போன ஈனப் பிறப்புகளே... என் இனத்தின் சாவுக்கு இன்றுவரை இரங்கல்கூடத் தெரிவிக்காத இந்திய அரசை நான் கொஞ்சியா பேச முடியும்..?''
''அடுத்தடுத்த சிறைவாசம் உங்களின் ஈழப் போராட்ட முயற்சிக்கே தடையாகிவிட வாய்ப் பிருக்கிறதே?''
''சிறையில் தள்ளுவதன் மூலமாக சீமானின் நாக்கை நறுக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள்... சீமானுக்கு எத்தனை தம்பிகள் இருக்கிறார்கள் என்று இவர்களுக்குத் தெரியாது. இனிமேல் எந்தப் பொதுக் கூட்டத்தில் பேசினாலும், அருகே இருக்கும் சிறைக்கு நானே போய்விடலாம் என முடிவெடுத்திருக்கிறேன். சிறைக் கம்பிகள் என்னை என்ன செய்துவிடும்? சிறைக்குள் இருக்கும் என் தமிழ் சாதி மக்கள் என்னிடம் பேசும்போது இப்படிச் சொன்னார்கள்... 'வெறும் வெட்டிப் பயல்களை வெட்டிவிட்டு நாங்கள் இங்கே கிடக் கிறோம். இப்போதுதான் புரிகிறது, நாங்கள் வெட்டி வீசவேண்டிய ஆட்கள் வேறெங்கோ இருக்கிறார்கள்' என்றார்கள். சிறைக்குள்ளும் இந்த சீமானால் கிளர்ச்சியை உண்டாக்க முடியும். ஈழத்தில் தவிக்கும் என் தமிழ்ச் சாதியின் துயரங்கள் முற்றாகத் துடைக்கப்படும் நாளில்தான் இந்த சீமானின் சினம் அடங்கும். அதற்காகத்தான் சொல் கிறேன். என்னைக் கைது செய்வதற்குப் பதிலாக ஒரேயடியாகத் தூக்கில் போட்டுக் கொன்று விடுங்கள். என்னைத்தானே கொல்ல முடியும்... என் எண்ணத்தை என்ன செய்ய முடியும்?''
''சோனியாவுக்கு எதிராக நீங்கள் ஆவேசத்தைக் கொட்டுவதால்தான் அடுத்தடுத்து உங்கள் மீது நடவடிக்கை பாய்வதாகச் சொல்கிறார்களே..?''
''மனிதநேயமிக்க மாபெரும் தலைவி சோனியா, ஈழப் பிரச்னைகள் குறித்து ஒரு வார்த்தையைக்கூட இதுநாள்வரை உச்சரிக்கவில்லை! 'அன்னை சோனியா' என வாஞ்சையான பாசத்தோடு நாற்பது தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணிக்கு வாரிக் கொடுத்தோமே...
அதற்கு அவர் காட்டும் நன்றிக் கடனா இது? தமிழகம் கொந்தளித்துக் கிடக் கிறது. என் தம்பிகள் தீக்குளித்து மடிகிறார்கள்; தமிழக மக்கள் ஆற்றாமையில் துடிக்கிறார்கள். இதெல்லாம் அன்னையாருக்குத் தெரியாதா? இந்திய உளவு விமானங்கள் இலங்கையில் பறப்பது சோனியாவுக்குத் தெரியாமலா? இரண்டாயிரம் கோடி ரூபாய் பணத்தை வட்டியில்லாக் கடனாக இலங்கைக்கு வாரி வழங்கியிருக்கிறார்களே... எங்களின் வரிப் பணத்தை வைத்து எங்கள் இனத்தை அழிக்க வாள் வாங்கிக் கொடுக்கிறீர்களே...
இதற்காகத்தானா உங்களை மாசற்ற தலைவியாக, மனிதநேய அன்னையாக வணங்கி வாகை சூடவைத்தோம்? சோனியாவை இத்தாலிக்காரி என சரத்பவார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களே வசைபாடினார்கள்.
அப்போது புதுச்சேரியில் காங்கிரஸ§க்கு ஆதரவாகப் பேசிய நான், 'நம் இந்திய கிரிக்கெட் அணிக்கு நியூஸிலாந்தை சேர்ந்த ஜான்ரைட்டைப் பயிற்சியாளராக வைத்திருக்கிறோம். சம்பளத்துக்காக வேலை பார்க்கும் ஜான்ரைட்டே நமக்கு விசுவாசமாகச் செயல்படும்போது, நம் மண்ணின் மருமகளாக வாழ்க்கைப்பட்டு வந்து வாழ்ந்துகொண்டிருக்கும் சோனியா எப்படி விசுவாசத்தை மறப்பார்?' என கேள்வி எழுப்பினேன். கைதட்டினார்கள் காங்கிரஸ் காரர்கள்!
இன்றைக்கு அதே புதுச்சேரியில் இந்த சீமானின் பேச்சு அம்மையார் காதுவரை போய் அவரை வருத்திவிட்டதாக்கும்? அன்னையாக நாங்கள் யாரை நம்பினோமோ, அவர்களே எங்களின் அடிமடியை அறுக்கிற கொடு வினையை எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? போர்நிறுத்தத்தை வலியுறுத்தி சோனி யாவோ பிரதமர் மன்மோகன் சிங்கோ முழங்க மாட்டார்கள். அவர்களை நம்பிப் பலனில்லை. ஏனென்றால், ஈழத்தில் தமிழினத்தை அழித் தொழிக்கும் போரை நடத்துவதே இந்தியா தான்.''
''உங்களை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கவேண்டும் என காங்கிரஸார் ஆவேசம் காட்டுகிறார்களே..?''
''தடை செய்த இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவது தவறில்லை என உச்ச நீதிமன்றம் சொன்ன கருத்தை மதிக்காமல், தொடர்ந்து அவதூறு பேசும் காங்கிரஸார் மீதுதான் வழக்குப் போடவேண்டும். என் காரை எரித்த காங்கிரஸார் மீது தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைக்கு தா.பாண்டியன் ஐயாவின் காரை எரித்திருப்பார்களா?
தமிழகத்தில் மானமுள்ள காங்கிரஸ்காரனாக இருந்தது ஒரே ஒரு ஆள்தான். அவரும் சமீபத்தில் சீர்காழியில் தீக்குளித்து இறந்து போய் விட்டார். கை சின்னத்தைத் தவிர என் குடும்பத்துக்கு வேறு சின்னங்கள் தெரியாது. ஆனால், இன்றைக்கு என் தாய் புலம்புகிறாள். 'போரை நிறுத்துவதற்காக நீ செத்தாலும் பரவாயில்லையடா மகனே' என்கிறாள்.
தமிழனுக்காக உயிராயுதம் ஏந்தி களமாடும் வீரப்புலிகளுக்கு ஆதரவு தெரி வித்தால் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயுமா? பாயட்டும்... நானா, அடக்குமுறையா என்று பார்த்துவிடுவோம்.
தமிழனின் தோலை உரித்து சிங்களவன் செருப்பு தைத்துக்கொள்ளப் பார்ப்பதை காங்கிரஸ்காரர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குத் தக்க பதிலடியை வரும் தேர்தலில் என் தமிழ் சாதி கொடுக்கும். 'மறக்க மாட்டோம்;
மன்னிக்க மாட்டோம்' என ராஜீவ் கொலையை மையப்படுத்திப் பேசும் காங்கிரஸ்காரர்கள், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதே வாதத்தை வைத்துப் பிரசாரம் செய்வார்களா? இந்த வாதத்தை வைத்துக்கொண்டு தனித்துப் போட்டியிட தைரியமிருக்கிறதா?''
''ஈழ விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் செயல்பாடுகள் பெரிதாகத் திருப்தி அளிக்க வில்லை என ஈழ ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்களே?''
''தமிழினத்தின் மூதறிஞராக கலைஞரைத்தான் நாங்கள் மதிக்கிறோம். அவர் போர்நிறுத்தம் கோரி அனுப்பிய தீர்மானத்தைக் குப்பையில் போட்டு வைத்திருக்கிறது மத்திய அரசு. கலைஞருக்கு உண்டான இந்த அவமானத்தைத் தமிழ்ச் சமுதாயத்துக்கே உண்டான அவமானமாகத்தான் நினைக்கிறோம். இன்றைக்கு மாணவ சமுதாயம் தொடங்கி மொத்த தமிழ்ச் சமுதாயமும் ஈழ எழுச்சிக்காகப் பொங்கி வெடித்துக் கொண்டு இருக்கிறது. இந்த எழுச்சியை தலைவர் கலைஞர் பயன்படுத்திக்கொள்ளாததுதான் என்னை வருத்துகிறது. தமிழீழ விடிவுக்காக தமிழகத்தில் உண்டாகி இருக்கும் உணர்வுபூர்வமான போராட்டங்களுக்கு கலைஞர் தலைமை வகித்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் தி.மு.க. தனித்தே வெற்றிபெற்றிருக்கும். அதைச் செய்ய கலைஞர் தயங்கியதுதான் பெரிய பிழை. தமிழகத்தில் காங்கிரஸின் பலம் என்னவென்று முதல்வருக்குத் தெரியாதா... நடக்கக்கூடாத தவறு நடந்துவிட்டது. என்ன செய்வது?''
- வி.அர்ஜுன்,இரா.சரவணன்
படங்கள்: 'ப்ரீத்தி' கார்த்திக்
Comments