தமிழக அரசியலைத் தற்போது உலுக்கிவரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது இலங்கைத் தமிழருக்காக நேரடியாக நடக்கும் ஆர்பாட்டங்களும் அந்த ஆர்பாட்டங்களில் மறைமுகமாக உலவிவரும் விடுதலைப் புலிகள் ஆதரவு பிரச்சாரங்களும்.
இதை மையமாக வைத்து அரசியல் தலைவர்கள் நடத்தும் நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல - அதிலும் தி.மு.க தலைவர் நடத்தும் நாடகத்திற்கு இணையான ஒன்றை உலகில் பார்க்கவே முடியாது போல இருக்கிறது.
தற்போது புலிகளைத் தான் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் முதல்வரின் புலிகள் மீதான பாசப்பிணைப்புகளைப் பார்த்தால் தலை சுற்றும். ராமதாஸ், வைகோ, திருமா போன்றவர்களின் புலிப்பாசத்திற்கு கொஞ்சமும் சளைந்ததல்ல முதல்வரின் புலிப்பாசம்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியும் பாராட்டியும் உருகியும் பக்கம் பக்கமாக கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியவர் தான் தி.மு.க தலைவர்.
சில மாதங்களுக்கு முன்பு தமிழ்செல்வன் இறந்தபோது இரங்கற்பா பாடிய கலைஞருக்கு அப்போது தெரியவில்லை புலிகள் சர்வாதிகாரிகள் பயங்கரவாதிகள் என்று. இப்போதுதான் தெரிந்துள்ளது உண்மை - அதாவது தனி ஈழம் மலர்ந்தால் அங்கே பிரபாகரன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சிதான் இருக்கும் என்று… மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் தயவு தனக்கு தாராளமாகத் தேவை என்ற இன்றைய நிலையில் இவரது இத்தகைய அந்தர் பல்டியை புலிகள் எதிர்பார்க்கவில்லை என்றாலும் காங்கிரஸ் மேலிடம் நிச்சயம் எதிர்பார்த்தது - கேட்டது கிடைத்தது அவர்களுக்கு.
ஆனாலும் தனது மறைமுக புலிப்பாசத்தால் தான் காங்கிரசை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கும் திருமா, சீமான் போன்ற ஆட்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள தயக்கம் காட்டுகிறார் கருணாநிதி.முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது என்பது தி.மு.க தலைவருக்கு கைவந்த கலை.
ஒரு காலத்தில் குல்லுக பட்டர், குள்ளநரி என்று கருணாநிதியால் விமர்சிக்கப்பட்டவர் ராஜாஜி. காமராஜரைத் தோற்கடிக்க தி.மு.கவிற்கு ராஜாஜியின் தயவு தேவைப்பட்டபோது ராஜாஜி ஒரு குள்ளநரி என்று சொன்ன அதே கருணாநிதி மூதறிஞர் ராஜாஜி என்று கூறினார். அதைப் போலவே எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியை திட்டித் தீர்த்த கருணாநிதி தமிழகத்தில் தான் ஆட்சி அமைக்க இந்திராவின் தயவு தேவை என்று வந்தபோது - நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!! என்றெல்லாம் புகழ்ந்தார்.
ஹிந்தி எதிர்ப்பு விஷயத்திலும் இதே கதைதான். இவர் சொன்னதற்காக இந்தி மொழியை படிக்காமல் வீராப்பாக இருந்துவிட்டு தற்போது இந்தி பேசத்தெரியாமல் நாட்டின் பிற பகுதிகளில் அவதிப்பட்டுவரும் பலரும் - இந்தி தெரிந்த ஒரே காரணத்தால் இன்று டெல்லியில் கோலோச்சும் அவரது மகளையும் பேரனையும் பார்த்து வயிறெரிந்து கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் கருணாநிதியின் சந்தர்ப்பவாத பேச்சுகளுக்கான சில உதாரணங்கள் தான்.
தமிழர்களுக்கு நல்வாழ்வு மலர தாங்கள் ஆட்சியைத் துறக்கத் தயார் என்றும், தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க எம்.பிக்கள் ராஜினாமா செய்யத் தயார் என்றும் பலவிதமாக நாடகம் நடத்திய முதல்வர் சில நாட்களுக்கு முன்பாக “ஈழத்தமிழர்களே கூறிவிட்டார்கள் நாங்கள் ஆட்சியைத் துறக்க வேண்டாம் என்று - நாங்கள் ஆட்சியில் இருந்தால்தான் அவர்களுக்கு நல்லது நடக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்..”
என்று கூசாமல் அறிக்கை விடும் இவரைப் பற்றி / இவரது நாவன்மை பற்றி சொல்ல இன்னும் என்ன இருக்கிறது ?
”மத்திய அரசின் நெருக்குதலால் வேறு வழியில்லாமல் தான் எங்கள் தலைவர் புலிகளைப் பற்றி அப்படிக் கூறினார்..” என்று பல வருடங்களுக்குப் பிறகு இவரது அடிபொடிகளில் ஒருவர் அறிக்கை விடுவார்.
தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள்..
காங்கிரஸ¤ம் ஜெயலலிதாவும் புலிகளை காலம் காலமாக எதிர்க்கிறார்கள் - அவர்களது நிலையில் கொஞ்சமும் மாற்றமில்லை.
பழநெடுமாறன், வைகோ போன்றவர்கள் புலிகளை காலம் காலமாக ஆதரிக்கிறார்கள் - அவர்களது நிலையிலும் கொஞ்சமும் மாற்றமில்லை.
ஆனால் புலிகளை ஆதரிப்பதாக கூறிய தி.மு.க இன்று சொந்த லாபத்திற்காக புலி எதிர்ப்பாளர்களாக மாறியுள்ளது..
நாளை பா.ம.க, விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இதையே செய்யலாம்..
“போர்களத்தில் உனக்கு எதிரில் துணிவாக நிற்கும் எதிரியைக் கூட நம்பலாம் - ஆனால் உன் கூடாரத்தில் உனக்குப் பக்கத்திலேயே இருக்கும் துரோகியை நம்பாதே” என்பது பழமொழி.
மக்களே இதன் உள் அர்த்தத்தை நீங்கள் உணர்வீர்களா ?
எதிரிக்கு மன்னிப்பு உண்டு - ஆனால் துரோகிக்கு கிடையாது என்பதை இத்தகைய அரசியல்வாதிகளுக்கு நீங்கள் உணர்த்துவீர்களா ??
Comments