இவ் வேண்டுகோளுக்கு தமிழ் நாடு வணிகர் சங்கப் பேரவை மற்றும் பல அரசியல் கட்சிகள், தொழிலாளர் சங்கங்கள், மீனவர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், தமிழ் அமைப்புகள், திரைத்துறையினர் ஆகியவை ஆதரவாகத் திரண்டன.
ஆனால் தமிழக அரசு இப்போராட்டம் சட்ட விரோதமானது என அறிவித்ததோடு கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என மிரட்டியது. இதுவரை தமிழகத்தில் எந்த அரசும் செய்யாத ஒன்றை தி.மு.க அரசு செய்யத் துணிந்தது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ்.சிறீபதி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியே எச்சரிக்கைக் கடிதங்களை பிப்ரவரி 3ம் திகதி நள்ளிரவில் வழங்கச் செய்தார். அக் கடிதத்தில் உச்ச நீதிமன்றம் முழு அடைப்பு நடத்துவதையே சட்ட மீறல் என்ற பொருளில் தடுத்து நிறுத்தி இருப்பதாலும், அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் முடியாது இருக்கும் நிலையில் நீங்கள் அறிவித்துள்ள 4ம் திகதி முழுஅடைப்பு சட்ட விரோதமானது என்று எச்சரிக்கப்படுகிறது' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிப்ரவரி 3ம் திகதி நள்ளிரவில் இக்கடிதம் ஒவ்வொரு தலைவரையும் தட்டி எழுப்பி வழங்கப் பட்டது. அதாவது 1997ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினைச் சுட்டிக்காட்டி எங்க ளை தலைமைச் செயலாளர் எச்சரித்திருக்கிறார். ஆனால் அதற்கு பல மணிநேரங்களுக்கு முன் னதாகவே 03.02.2009 அன்று பிற்பகல் 3 மணி அளவில் உச்ச நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையில் மேலும் இரண்டு நீதியரசர்களைக் கொண்ட ஆயம் ‘'பந்த் நடத்துவது ஜனநாயக உரிமையாகும். மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவே பந்த்கள் நடத்தப்படுகின்றன. எனவே, அதற்குத் தடை போட முடியாது`` என்ற தீர்ப்பினை வழங்கிய பிறகு, பழைய தீர்ப்பினைத் தேடி எடுத்து மேற்கோள்காட்டி எங்களை தலைமைச் செயலாளர் மிரட்டுகிறார்.
அவராக இதைச் செய்திருக்க மாட்டார் என்பது திண்ணம்.முதல்வர் ஆணையின்றியோ அனுமதியின்றியோ இவர் அதைச் செய்திருக்க முடியாது. நாட்டில் நடைபெறுவது எதுவுமே தெரியாமல் தமிழக அரசு எப்பேர்ப்பட்ட குழப்பத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.அரசு தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைமை இயக்குநர் போன்ற உயர் அதிகாரிகளைக் கொண்டு மக்களையும் அரசியல் கட்சிகளையும் ஒருபுறம் மிரட்டுகிற முதலமைச்சர், தி.மு.க செயற்குழுவைக் கூட்டி வேறு வகையில் புலம்புகிறார்.இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பயன்படுத்தி தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றிக் குழப்புகிறார். ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் முதல்வர் பொறுப்பில் இருப்பவர் இவ்வாறு நடந்து கொள்வது முறைதானா? சரி தானா? ஈழத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசை வற்புறுத்திச் செயல்பட வைக்கத் தவறியவர், தன்னுடைய ஆட்சிக்கு ஆபத்து எனக் கூக்குரலிடுவது கேலிக்கூத்தாகும்.
தமிழகத்தின் முதல்வர் பதவி இந்தியாவின் பிற மாநிலங்களின் முதல்வர்களுக்கே பலமுறை வழிகாட்டிய பதவியாகும். ராஜாஜி, காமராஜ், அண்ணா போன்ற பெருமைக்குரிய பல தலைவர்கள் வகித்த பதவி அது. தமிழர்களுக்கு நெருக்கடியான காலகட்டங்கள் இருந்த போது அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழுக்கும் தமிழர்களுக்கும் அபாயம் நேரிட்டபோது எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டங்களைக் கண்டு அவர்கள் ஒரு போதும் அஞ்சியது இல்லை. ஆட்சிக்கு ஆபத்து என்று புலம்பியதும் இல்லை.மாறாக அப்போராட்டங்கள் நடக்க ஜனநாயக ரீதியில் அனுமதி அளித்துவிட்டு அந்தப் போராட்டங்களையும் அதன் விளைவுகள் குறித்தும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்து தமிழர்களுக்கு வர இருக்கும் அபாயங்களையும் இழப்புகளையும் தடுத்து நிறுத்தக்கூடிய மதியூகமும் துணிவும் அந்தத் தலைவர்களுக்கு இருந்தது.
இங்கே இரண்டு எடுத்துக்காட்டுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.1953ம் ஆண்டில் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொட்டி சிறீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார். அதன் விளைவாக ஆந்திரத்தில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. அதுவரை மொழிவழி மாநிலப் பிரிவினையை ஏற்க மறுத்த பிரதமர் நேரு 02.10.53ல் ஆந்திர மாநிலம் தனியாகப் பிரிக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார்.ஆனால் ஆந்திரர்கள் சென்னை நகரின் மீது உரிமை கொண்டாடினார்கள். முழுமையாக சென்னையை அளிக்க முடியாவிட்டால் அதை இரண்டாகப் பிரித்து ஆந்திரமும் தமிழகமும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள். அதுவும் முடியாது என்றால் இரண்டு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகராக சென்னை ஆக்கப்பட வேண்டும் என்றார்கள். இதுவும் இயலாது என்றால் சென்னையை மத்திய ஆட்சிக்குட்பட்ட பகுதியாக மாற்ற வேண்டும் என்றும் கூறினார்கள்.
ஆந்திர மாநிலப் பிரிவினை தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரை தர நியமிக்கப்பட்ட நீதிபதி வாஞ்சு தனது பரிந்துரையில் ஆந்திராவின் தலைநகராக இடைக்காலத்தில் சென்னையே இருக்கலாம் என்று கூறியுள்ளார் என்ற செய்தி தமிழர்களைக் கொதித்தெழ வைத்தது. சென்னை மாகாண சட்ட மன்றத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சென்னை தமிழகத்திற்கே உரியது என்பதை வற்புறுத்தி கையெழுத்திட்ட அறிக்கையை ம.பொ.சி., மேயர் செங்கல் வராயன் ஆகியோர் பிரதமர் நேருவிடம் கொடுத்தனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்னை தமிழகத்திற்கே உரியது என்ற கூட்டறிக்கையை தில்லியில் வெளியிட்டனர்.13.02.53 அன்று சென்னையில் கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சென்னை நகரம் தமிழகத்திற்கே உரியது என்ற தீர்மானத்தை வலியுறுத்தினர்.தமிழ்நாடு கொங்கிரஸ் தலைவர் காமராஜ் ‘சென்னை நகரில் ஆந்திராவிற்கு எந்த விதமான பங்கு தந்தாலும் சரி, இதுவரை கண்டிராத அளவுக்கு பெரும் எழுச்சி எழும்' என எச்சரித்தார்.
இப்படி தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று குரல் கொடுத்ததோடு நில்லாமல் பல போராட்டங்களையும் நடத்தின. அந்தப் போராட்டங்களைக் கொச்சைப்படுத் துவதற்கோ அடக்குவதற்கோ முதலமைச்சர் ராஜாஜி முயலவில்லை. மாறாக பிரதமர் நேருவைச் சந்தித்துப் பேசுவதற்காக தில்லி சென்றார். தமிழ் மக்களின் கொதிப்புணர்வை நேருவிடம் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டினார்.பிறகு பின்வரும் அறிக்கையை வெளியிட்டார். ‘சென்னையையோ அதன் பகுதியையோ ஆந்திரத்திடம் தருவதென மத்திய அரசு முடிவெடுக்குமானால் அதை அமுல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு தரும் சக்தி எனக்கு இல்லை. இந்த நிலையில் வேறு முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என பிரதமரிடம் கூறிவிட்டேன்' என்று பத்திரிகையாளரிடம் ராஜாஜி கூறினார். அவரின் இந்த அறிக்கைப் பிரதமர் நேருவை அதிர்ச்சி அடைய வைத்தது. 23.05.53 அன்று நாடாளுமன்றத்தில் நேரு வெளியிட்ட அறிவிப்பில் சென்னை தமிழ் நாட்டிற்கே உரியது என்பதை ஒப்புக்கொண்டார். ராஜாஜி தனது முதல்வர் பதவியைத்துறக்க முன்வந்த செயல் நேருவின் மனதை மாற்றியது. தமிழர்களுக்குச் சென்னை நகரைப் பெற்றுத் தந்தது.
அதேபோல 1956ம் ஆண்டில் தட்சிணப் பிரதேசம் என்ற பெயரில் தமிழகமே இல்லாமல் செய்துவிட அபாயகரமான திட்டம் ஒன்றினை பிரதமர் நேரு உருவாக்கினார். மொழி வழி மாநிலங்களுக்குப் பதில் பல மாநிலங்களை இணைத்து இந்தியாவையே ஐந்து மண்டலங்களாக்கும் திட்டத்தை வகுத்தார்.அதன்படி தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் இணைக்கப்பட்டு தட்சிணப்பிரதேசம் என்ற அமைப்பை உருவாக்க நேரு விரும்பினார். இத்திட்டத்திற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
27.01.56ல் ம.பொ.சி.யின் முயற்சியின் பேரில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அண்ணா, இரா.நெடுஞ்செழியன், ப.ஜீவானந்தம், க.ர. நல்லசிவம், ப.சு.சின்னத்துரை, பாரதிதாசன், சி.பா. ஆதித்தனார், கா.அப்பாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். பி.டி.இராசன் தலைமையில் போராட்டக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இக்கு ழுவின் சார்பில் 20.02.56ல் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. பெரியார் இக் குழுவில் சேராவிட்டாலும் தட்சிணப்பிரதேசத் திட்டத்தை எதிர்த்துத் தனியே போராட்டம் நடத்தினார்.இப் போராட்டங்களைத் தடுக்கவோ, திசை திருப்பவோ முதல்வர் காமராஜ் எதுவும் செய்யவில்லை.
மாறாக இத்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக பெங்களுரில் பிரதமர் நேரு கூட்டியிருந்த மூன்று மாநில முதல்வர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றார். கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.ஆனால் தமிழக முதலமைச்சர் காமராஜ் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சியினரும் ஒன்றுபட்டு நடத்திய போராட்டத்தைச் சுட்டிக்காட்டி தமிழர்கள் இத்திட்டத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை எடுத்துக் கூறினார். காமராஜ் இதை உறுதியாக ஏற்க மாட்டார் என்பதைப் புரிந்து கொண்ட நேரு இத்திட்டத்தைக் கைவிட்டார்.தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகள் ஒன்றுபட்டு நடத்திய போராட்டம் தனது ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்று கருதாமல் அதை பிரதமர் நேருவிடம் துணிவாகச் சுட்டிக்காட்டி தட்சிணப்பிரதேசத் திட்டத்தை கைவிடச் செய்தவர் காமராஜ்.
ராஜாஜியும் காமராஜும் முதல்வர்களாக இருந்தபோது தமிழ்நாட்டுப் பிரச்னைகளுக்காகப் பதவியைத் தூக்கி எறியவும், மத்திய அரசுடன் துணிந்து போராடவும் அவர்கள் முன்வந்த காரணத்தினால் தான் சென்னை நகரம் தமிழர்களுக்குச் சொந்தமாயிற்று. தட்சிணப் பிரதேசத்திற்குள் தமிழகம் மூழ்கிப் போகாமல் காப்பாற்ற முடிந்தது. இவ்வளவுக்கும் இந்த இரு தலைவர்களும் நேருவுடனும் பிற தலைவர்களுடனும் தோளோடு தோள் நின்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். அகில இந்திய அரசியலில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தவர்கள். தில்லி தலைவர்களால் நன்கு மதிக்கப்பட்டவர்கள்நேரு போன்ற தலைவர்களுடன் கொண்டுள்ள உறவு முக்கியமா அல்லது தமிழகத்தின் நலன் முக்கியமா என்ற கேள்வி எழுந்த போது, பின்னதையே தேர்ந்தெடுத்தனர். நேருவுடன் மோதவும் துணிந்தனர்.
இன்றைய முதல்வர் கருணாநிதிக்கு தில்லி தலைமையுடன் எத்தனை கால உறவு? வாஜ்பாய் இருந்தால் அவருடன் உறவு, மன்மோகன் வந்தால் அவருடன் உறவு, வேறு யாராவது வந்தாலும் அவருடன் உறவு, இது அரசியல் ரீதியாக தன்னலம் சார்ந்த உறவே தவிர வேறு ஆழமான தோழமை அல்ல.ராஜாஜியும் காமராஜும் தேசியத் தலைவர்களாக இருந்தும், தியாகத்தாலும் நட்பாலும் பிணைக்கப்பட்ட உறவை தில்லி தலைமையுடன் கொண்டிருந்த போதும் அதைத் தூக்கி எறியத் தயங்கவில்லையே.ஆனால் தன்னலம் சார்ந்த குறுகிய கால உறவுக்காக தமிழர்களின் நீண்டகால நலன்களைப் புறக்கணிப்பது எல்லா வகையிலும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, வரலாற்றில் அழியாத பழியையும் சுமக்கத் தக்கதாகும்.
- பழ.நெடுமாறன்
- தினமணி-
Comments