ஈழத் தமிழர்கள் விவகாரம் குறித்து திபெத் ஆன்மீக தலைவர் தலாய்லாமா விசேட பேட்டி

லாய்லாமா முன்பு காலம் தோற்றுவிட்டதோ... 20 வருடங்களுக்கு முன்பு பார்த்த மாதிரி இன்னமும் அப்படியே இருக்கிறார்!

உடலிலும் மனதிலும் சின்ன மாறுதல்கூட இல்லை. உலகத்தின் மிகப் பெரிய நாடான சீனாவின் சிம்ம சொப்பனம். திபெத்தின் 14-வது தலாய்லாமாவாக 58 ஆண்டுகளுக்கு முன் பதவிக்கு வந்தவர். சென்ற வருடம் புளித்துப்போய் 'பதவி விலகப் போகிறேன்' என்றார். அடுத்த தலாய்லாமா பதவிக்கு யாரும் போட்டிக்குக்கூட வரவில்லை. அவ்வளவு செல்வாக்கு உள்ளவர். சென்னைப் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்தார். சில நிமிடச் சந்திப்பு இது...

''நான் ஓர் அகதி. அடைக்கலம் தேடி இந்தியாவுக்கு வந்தவன். சீனாவிடமிருந்து நாங்கள் தனி நாடு கேட்கவில்லை. எங்களை நாங்களே ஆட்சி செய்துகொள்ளும் சுயாட்சி அதிகாரத்தைக் கேட்கிறோம். பிரிவினை எங்கள் நோக்கம் அல்ல. இப்போது திபெத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சி நடக்கிறது. அங்குள்ள 90 சதவிகித மக்கள் அதிருப்தியுடன் வாழ்கிறார்கள். சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடப்பதாகச் சொல்கிறார்கள். அது மார்க்ஸ் சொன்ன கம்யூனிஸம் இல்லை, முதலாளித்துவ கம்யூனிஸம்'' என்று திபெத் பற்றிப் பேசிவிட்டுத்தான் கேள்வியை எதிர்பார்க்கிறார் தலாய்லாமா.

''இலங்கையில் உங்கள் புத்த மதம்தான் ஆட்சி செய்கிறது. அங்கே உங்களைப் போலவே சுயாட்சி கோரிக்கை கேட்கிறார்கள் ஈழத் தமிழர்கள். இந்தப் பிரச்னையை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''நான் போருக்கு எதிரானவன். ஆயுதங்கள் மூலமாக எதையும் சாதிக்கலாம் என்று நினைத்தால் அது தவறான எண்ணம்.

'சக மனிதர்களுடன் சண்டை போடுங்கள்' என்று எந்த மதமும் சொல்லவில்லை. அன்பையும் சமாதானத்தையும் மட்டுமே மதங்கள் வலியுறுத்துகின்றன. போருக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை. போருக்கு அரசியல் மட்டுமே காரணம். இதை இலங்கை அரசாங்கம் உணர வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதுவே என் வேண்டுகோளும் பிரார்த்தனையும்!''

''இலங்கையில் போரை நிறுத்தும்படி நீங்கள் கூறுவீர்களா?''

''1960-ல் நான் இலங்கை போவதாக இருந்தது. அப்போது மாவோ பண்டாரநாயகா ஆட்சியில் இருந்தார். கடைசி நேரத்தில் எனது பயணம் ரத்தாகியது. அந்த நேரத்தில் இலங்கை அரசு சீனாவுடன் நெருங்கிய தொடர்புவைக்க ஆரம்பித்தது. அந்த உறவால் இன்று வரை நான் இலங்கை செல்ல முடியவில்லை. நான் இலங்கைக்குச் செல்வதும் சாத்தியமில்லாத விஷயம். எல்லோரும் ஒன்று சேர்ந்து போரை நிறுத்தும்படி வலியுறுத்த வேண்டும்.''

''ஆனால் அதற்கு முன்பு இலங்கையில் அப்பாவித் தமிழர்களை இலங்கை அரசு அழித்துவிடுமே?

''நல்லது நடக்கவே நாம் பிரார்த்திப்போம். தலைவிதியை நொந்துகொள்வதைத் தவிர, எனக்கு வேறு வழி தெரியவில்லை!'' - வருத்தமாகப் பேசி முடிக்கிறார் தலாய்லாமா.


Comments