டெல்லியில் ஒலிக்கப்போகும் தோழமைக் குரல்!--புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்...'

ழத்தமிழர்களுக்காக நாள்தோறும் ஆதரவுக் குரல் களும், அமைப்புகளும் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில்...

மாணவர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மகளிர் அமைப்புகள், திருநங்கைகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக் கானோர் அடங்கிய புது அமைப்பு ஒன்றை படைப் பாளிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

'ஈழத் தமிழர் தோழமைக் குரல்' என்பது அதன் பெயர். இந்த அமைப்பின் சார்பில் வரும் 12-ம் தேதி தலைநகர் டெல்லிக்குச் சென்று, அங்கு நாடாளுமன்றத்தின் முன்பு பல்வேறு போராட் டங்களை நடத்தப் போகிறார்கள்.

'ஈழத்தமிழர் தோழமைக் குரலி'ன் அமைப்பாளர்களாக எழுத்தாளர் பா.செயப்

பிரகாசமும், கவிஞர் லீனா மணிமேகலையும் இருக்கிறார்கள். அவர்களை சந்தித்தோம்.

''இந்திய அரசுதான் ஈழத்தில் இனப் படுகொலையை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பற்றி பேசும் ஒருவர்கூட, இலங்கையில் இந்தியாவின் ஏகாதிபத்தியம் பற்றிப் பேசுவதில்லை. காரணம், இப்படியரு இனப் படுகொலை நடப்பதே பலருக்குத் தெரியவில்லை. கேரள கம்யூனிஸ்ட் தோழர் ஒருவரிடம் பேசியபோது, 'அப்படியா?' என்று கேட்கிறார். தேசியக் கட்சியான கம்யூனிஸ்ட்களில்கூட தமிழக எம்.பி-க்களைத் தவிர வேறு யாரும் கவலைப்படாததால் வந்த வினை இது. இங்கே அம்மா தொலைக்காட்சியும், அய்யா தொலைக்காட்சியும் சேர்ந்துகொண்டு முத்துக் குமாருடைய இறுதி ஊர்வலத்தைக்கூட இருட்டடிப்பு செய்கின்றன. மீடியாவைக் கைப்பற்றியதன் மூலம் மக்களாட்சி, மாஃபியாக்களின் கையில் மாட்டிக் கொண்டுவிட்டது. எனவே, டெல்லியில் இருக்கும் பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், அருந்த திராய், மேதாபட்கர் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரைச் சந்தித்து ஆதரவு திரட்டவிருக்கிறோம்...'' என்றவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''ஈழப் பிரச்னை நீடித்துக்கொண்டிருக்க சகோதர யுத்தம்தான் காரணம் என்று முதல்வர் குற்றம் சாட்டுகிறாரே?''

''சகோதர யுத்தம் மூள்வதற்கு யார் காரணம் என்பதையும் கலைஞரே தன் வாயால் சொல்லியிருக்கிறார். 'இலங்கைத் தமிழ் அமைப்புகளுக்கு இடையே பிளவை யும் மோதலையும் ஏற்படுத்திய இந்தியப் புலனாய்வுத்துறை 'ரா', மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் பிளவை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது' என்று 1990-ம் ஆண்டு சட்டமன்றத்திலேயே எடுத்துச் சொல்லியிருக்கிறார். இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றிருந்த நேரத்தில், இந்திய உளவுத் துறையுடன் கைகோத்துக்கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப்., டெலோ ஆகிய அமைப்புகள் ஒரே நேரத்தில் சுமார் அறுநூறு புலிகளை கொன்று குவித்தன. எனவே, கருணாநிதி சொல்வதுபோல், சகோதர யுத்தத்துக்கு காரணம் புலிகள் அல்ல, இந்தியாதான்.''

''ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தால், அதிகாரத்தை ஒப்படைக்கத் தயார் என்று ராஜபக்ஷே அறிவித்திருக்கிறாரே?''

''தமிழ் அமைப்புகள் அங்கே காந்திய வழியில் போராட்டம் நடத்தியபோது புத்தத் துறவிகள்கூட ஒத்துழைக்கவில்லை. 'ஒரு தமிழனைக்கூட விட்டு வைக்காதீர்கள். அனைவரையும் கொல்லுங்கள்' என்று துறவிகள் கொலைவெறியுடன் அறிவித்த பூமி அது. 1958-ல் பண்டாரநாயகா அதிபராக இருந்தபோது, 'கிழக்கு, வடக்கு மாகாணங் களை ராணுவத்தின் ஆளுகைக்குக் கொண்டு வந்துவிட்டேன். இப்போது அங்கே ராணுவ ஆட்சிதான் நடைபெறுகிறது' என்று கூறியிருக்கிறார். ஜெயவர்த்தனேவோ, 'தமிழர் களை எங்கெல்லாம் காணுகிறீர்களோ, அங்கெல்லாம் அவர்களைக் கொன்று ஒழியுங்கள்' என்று கூறியிருக்கிறார். இவர்கள் சொல்லாததையெல்லாம் தமிழர்களிடம் சிங்கள ராணுவம் நடத்தியது. அப்படிப்பட்ட வர்களிடம் ஆயுதங்களை ஒப்படைப்பது தற்கொலைக்குச் சமம். முதலில் புலிகள் மீதான தடையை நீக்கச் சொல்லுங்கள். பிறகு பேச்சுவார்த்தைக்கு அழைக்கலாம்.''

''ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கும் அவர்கள் மீதான தடையை நீக்குவது எப்படி சாத்தியமாகும்?''

''ஜெயின் கமிஷன் அறிக்கையில்கூட புலிகள்தான் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்படவில்லை. இதில் மிகப்பெரிய அரசியல் சதி அடங்கியிருக்கிறது. எப்படி யென்றால், 'சிவராசனும் தணுவும் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறியவர்கள்.

இவர்கள் சந்திராசாமியைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்கள். சந்திராசாமி, நரசிம்மராவின் நெருங்கிய நண்பர். இளையவரான ராஜீவ் காந்தி இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிரதமராகும் வாய்ப்பைப் பெற்றவர். இதனால் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் யாரும் பிரதமராக முடியாத நிலை இருந்தது.

சந்திராசாமி, சிவராசனை தொடர்புகொள்கிறார். இதையடுத்து தணு அணிந்திருந்த வெடிகுண்டுகள், சந்திராசாமியின் ஆசிரமத்தில் வைத்து பூஜிக்கப்பட்டு கொலைக்காக அனுப்பி வைக்கப் பட்டன' என்று ராஜீவ் கொலையில் தூக்குத்தண்டனை விதிக்கப் பட்டவர்களுக்கு வீடு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பெங்களூரு ரங்கநாத், சோனியாவைச் சந்தித்து ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

'இதை நீங்கள் புலனாய்வுத் துறையிடம் சொன்னீர்களா?' என்று சோனியா கேட்டதற்கு, 'ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த கார்த்திகேயனிடம் சொன்னேன். 'இந்த உண்மையை நீ வெளியே சொன்னால் உயிரோடு இருக்கமாட்டாய்' என்று மிரட்டினார் என்று பதில் கூறியிருக்கிறார் ரங்கநாத்.

கொலை நடப்பதற்கு பதினைந்து நிமிடங்கள் முன்பாக பி.பி.சி. போன்ற செய்தி நிறுவனங்களைத் தொடர்புகொண்ட சுப்ரமணி யன் சுவாமி, ஏதேனும் முக்கிய செய்தி உண்டா என்று கேட்டதாக, ஜெயின் கமிஷன் விசாரணையின்போது தெள்ளத் தெளிவாக பதிவு செய்திருக்கிறார் திருச்சி வேலுச்சாமி. அதேபோல, புலவர் புலமைப்பித்தன் தன்னுடைய 'பூகோளமே பலிபீடமாய்' என்ற நூலிலும் இதனைச் சொல்லியிருக்கிறார்.

ஆனால், இதையெல்லாம் அரசியல் லாபங்களுக்காக பலர் மறைக்கப் பார்க்கிறார்கள். இப்படி ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் காங்கிர ஸார் இருப்பதாக நிறைய தகவல்கள் வெளியாகி இருக்கும் சூழ்நிலையில், அதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்தோ சோனியா தரப்பிலிருந்தோ இன்றளவிலும் எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காப்பது ஏன்? ஆனால், இங்கே புலிகளுக்கு தடை விதித்து கஷ்டப்படுத்துவார்களாம்... இதெல்லாம் என்னவகை நியாயாம்? எனவே, உடனே புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். இதையெல்லாம்தான் நாட்டு மக்களிடம் நாங்கள் எடுத்துச் செல்லவிருக்கிறோம்!'' என அதிர்வுகளை ஏற்படுத்தும் வண்ணம் பேசுகின்றனர், டெல்லிக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் பா.செயப்பிரகாசமும், லீனா மணிமேகலையும்.

- எம்.பாலச்சந்திரன்


Comments