58-2 ஆவது பிரிகேட் லெப். கேணல் சன்சாயா வன்னியசிங்கா தலைமையில் மேற்கில் இருந்து கிழக்காக புதுக்குடியிருப்பு நோக்கியும், நடவடிக்கை படையணி எட்டு அதன் கட்டளை அதிகாரி கேணல் ரவிப்பிரியா தலைமையில் தெற்கில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கியும், 58-1 பிரிகேட் அதன் கட்டளை தளபதி லெப். கேணல் தேசபிரியா குணவர்த்தனா தலைமையில் வடக்கில் இருந்து தெற்காக புதுக்குடியிருப்பு நோக்கியும் நகர்வை விரைவாக்கிய போது தீவிர மோதல்கள் வெடித்துள்ளன. இராணுவத்தின் இந்த அணிகளுக்கு துணையாக லெப். கேணல் நிகால் சமரக்கோன் தலைமையில் 5 ஆவது கவசப்படையும், 53 ஆவது டிவிசனும் தாக்குதலை நடத்தி வருகின்றன.
விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு மண் அணைகளை உடைத்து கொண்டு புதுக்குடியிருப்பு நகருக்குள் நுழைய முயன்ற இந்த படையணிகள் மீது விடுதலைப்புலிகள் மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தி வருவதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த பத்தி எழுதப்படும் போது இராணுவம் புதுக்குடியிருப்பு நகரத்தினை கைப்பற்றும் இறுதிக்கட்ட முயற்சிகளில் இறங்கியுள்ளது. மிகவும் அருகாமையில் இரு தரப்பும் மோதல்களில் ஈடுபட்டு வருவதுடன், விடுதலைப்புலிகள் ரீ-55 ரக டாங்கிகள் இரண்டையும் பயன்படுத்தி வருவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து செவ்வாய்கிழமை வரையிலும் அங்கு நடைபெற்ற மோதல்களில் 1000 இற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், 3,000 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற மோதல்களில் 400 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 900 பேர் படுகாயடைந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
விடுதலைப்புலிகளின் அணிகளை கேணல் தீபன், கேணல் செர்ணம், கேணல் விதுசா ஆகியோர் வழிநடத்தி வருவதாகவும் மொத்த நடவடிக்கையையும் பொட்டு அம்மான் நெறிப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
புதுக்குடியியிருப்பு நகர்மீதான இராணுவத்தின் நடவடிக்கை அணிகளை பிரிகேடியர் சவீந்திர சில்வா, கேணல் ரவிப்பிரியா, பிரிகேடியர் கமால் குணரட்னா, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் ஆகியோர் வழிநடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு மூன்று டிவிசன்களை களமிறக்கியுள்ள இராணுவம் ஏனைய டிவிசன்களை ஓய்வில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது மோதலில் ஈடுபட்டுவரும் படையணிகள் இழப்புக்களை சந்தித்து களைப்படையும் நிலையை அடையும் போது அவற்றை புதிய அணிகளினால் பிரதியீடு செய்வதே படையினாரின் திட்டம். அதாவது விடுதலைப்புலிகளை தொடர்ச்சியாக மோதலில் ஈடுபட வைப்பதற்கு படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை இரவு வான்புலிகள் மேற்கொண்ட அதிர்ச்சிகரமான நடவடிக்கை சிறீலங்கா அரசின் பொய்யான பிரச்சாரங்களை முறியடித்துள்ளது. விடுதலைப்புலிகளின் விமான ஓடுபாதைகளை கைப்பற்றி வருவதாக சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக தெரிவித்து வந்த கருத்துக்கள் சிங்கள மக்களுக்கு ஆனந்தமாக இருந்தாலும், உலகிற்கு ஆச்சரியமாக இருந்தது.
ஏனெனில் ஏழு விமான ஓடுபாதைகளை தாம் கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்திருந்தது. இந்த ஏழு ஒடுபாதைகளும் கனரக விமானங்கள் இறங்க கூடிய பாதைகள் எனவும் தனது பிரச்சாரத்திற்கு அரசு வலு சேர்ந்திருந்தது.
பலாலி, இரத்மலானை, கட்டுநாயக்கா, வவுனியா, அனுராதபுரம், அம்பாந்தோட்டை, மின்னேரியா, சீனன்குடா என ஏறத்தாள 10 இற்கும் குறைவான விமான ஓடுபாதைகளை அரசு கொண்டுள்ள நிலையில் விடுதலைப்புலிகள் ஏழு ஓடுபாதைகளை கொண்டிருந்தது பலருக்கும் ஆச்சரியமானதாகவே இருந்தது.
எனினும் அவற்றை எல்லாம் தாம் கைப்பற்றிவிட்டதாக அரசு தெரிவித்திருந்த நிலையில் வான்புலிகள் மீண்டும் பறப்பை மேற்கொண்டது அரசின் பிரச்சாரங்களுக்கு பலத்த அடியாகவே அமைந்துள்ளது.
மேலும் இரவு 8.30 மணியளவில் புதுக்குடியிருப்பில் இருந்து புறப்பட்ட விமானங்கள் ஏறத்தாள ஒரு மணிநேரத்தின் பின்னர் கொழும்பை அடையும் வரையிலும் அவற்றின் பாதைகளை கண்டறிந்து தாக்குவதற்கு சிறீலங்கா வான்படையினால் முடியாது போனதும், பெரும் சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. வான்புலிகளின் விமானங்கள் 300 அடி உயரத்திலும் குறைவான உயரத்தில் பறந்ததனால் வான்படை விமானங்களால் அவற்றை தாக்கமுடியவில்லை என படைத்தரப்பு கூறிவருகின்றது.
வான்புலிகளின் இந்த உத்திகளால் வான்படையினாரின் ராடார் திரைகளிலும் விமானங்கள் தொடர்ச்சியாக அவதானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு வான்பரப்பை அடைந்த விமானங்களில் ஒன்று வான்படை தலைமையகத்தையும், மற்றயது கட்டுநாயக்கா வான்படை தளத்தினையும் தாக்க முனைந்துள்ளன.
முன்னைய பறப்புக்களை போலல்லாது விமானங்கள் தமது இலக்கினை நோக்கி தாழ்வாக பறந்துள்ளன. இந்த பறப்புக்கள் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் எதிரியின் செறிவான பீரங்கி மற்றும் துப்பாக்கி சூடுகளில் அவை சிக்கி கொள்ளும் ஆபத்துக்கள் அதிகம்.சிறீலங்கா படையினர் கொழும்பின் அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள பெரும்பாலான உயரமாக கட்டங்களில் எல்லாம் விமான எதிர்ப்பு பீரங்கிகளை நிறுவியுள்ளனர். ஹில்டன் ஆடம்பர விடுதியில் கூட அவர்களின் பீரங்கி நிலைகள் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று முன்னர் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கேணல் றூபன் ஒட்டிச்சென்ற விமானம் வான்படை தலைமையகத்திற்கு எதிராக உள்ள உள்நாட்டு வரித்திணைக்களத்தின் 12 ஆவது மாடிக்கும் 13 ஆவது மாடிக்கும் இடையில் மோதி வெடித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்த 210 கிலோ எடையுள்ள சி-4 வெடிமருந்தின் தாக்கத்தினால் அந்த கட்டடத்தொகுதி பலத்த சேதமடைந்ததுடன், அருகில் இருந்த வான்படை தலைமையகம், ரான்ஸ் ஏசியா ஆடம்பர விடுதி என்பன உட்பட பல கட்டங்கள் சேதமைடந்துள்ளன. இருந்த போதும், வான்படை தலைமையகத்தை சூழவுள்ள அதியுயர் பாதுகப்பு வலையப்பகுதிக்குள் இருந்த நான்கு மாடி கட்டடம் ஒன்று முற்றாக தகர்ந்து போயுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும் அரசின் இறுக்கமான ஊடகத்தடை காரணமாக இது தொடர்பான முழு தகவல்களையும் பெறமுடியவில்லை.
இதனிடையே லெப். கேணல் சிரித்திரன் ஒட்டிச்சென்ற 905 இலக்கமுடைய சிலின்-143 விமானம் கட்டுநாயக்கா வான்படை தனத்தினை அண்மித்த போது சிறீலங்கா படைத்தரப்பு விமானத்தை நோக்கி ஏவுகணையை ஏவியிருந்தது. ஆனால் ஏவுகணையின் தாக்குதலில் இருந்து தப்பும் பொருட்டு விமானத்தின் இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்திவிட்டு வான்படை தளத்தினை நோக்கி விழ எத்தனித்த போது அருகில் இருந்த தென்னைமரம் ஒன்றில் விமானம் மோதியதனால் அது நிலை தடுமாறிய சமயம் துப்பாக்கி சூடுகளுக்கும் இலக்காகி உள்ளது.
12.7 மி.மீ கனரக இயந்திர துப்பாக்கி சன்னங்கள் விமானியின் இடது கரம் மற்றும் இடது மார்பு பகுதிகளை தாக்கியுள்ளன. அந்த விமானம் பின்னர் வான்படை தளத்தில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள வளவு ஒன்றில் வீழ்ந்துள்ளது. விமானத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை அருகில் இருந்த நீர்த்தொட்டியில் மோதி வெடித்ததாக படை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
விமானம் வீழந்த வேகத்தில் அதன் இயந்திரப்பகுதி முற்றாக சிதைந்த போதும் அதில் இருந்த வெடிமருந்துகள் வெடிக்கவில்லை. ஆனால் இந்த விமானம் வான்படை தளத்திற்குள் வீழ்ந்து வெடித்திருந்தால் பேரனர்த்தம் ஏற்பட்டிருந்கும் என வான்படை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
வான்புலிகளின் விமானங்கள் முன்னர் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குண்டுதுளைக்காத கவசதகடுகள் பொருத்தப்பட்ட நிலையில் தாக்குதலில் ஈடுபட்டதுடன், அவை 50 - 75 கிலோ குண்டுகளையும் சுமந்து வந்திருந்தன. ஆனால் தற்போது அதிக எடை கொண்ட குண்டுகளை கொண்டுவருவதற்கு ஏதுவாக அவர்கள் விமானத்தின் கவசத்தகடுகளை அகற்றியிருப்பதாக தாம் கருதுவதாக படைத்துறை தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 20 ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர்கள் கடந்த ஊதாகதிர்களை குழம்பும் சாதனங்கள்,ராடார் கதிர்களை குழப்பும் சாதனங்கள் போன்றவற்றை பயன்படுத்தவில்லை எனவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல்களில் இருந்து படைத்தரப்பு தப்பி பிழைத்து கொண்ட போதும், அரசிற்கு இது பலத்த பின்னடைவாகும். விடுதலைப்புலிகளின் கதை முடிந்து வருவதாக அரசு தொடர்ச்சியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகையில் சிறீலங்காவின் தலைநகரத்தினை சில மணிநேரம் வான்புலிகள் செயலிழக்க செய்தது அரசின் பிரச்சாரத்திற்கு பலத்த அடி என்பது மட்டுமல்ல சிறீலங்காவின் பொருளாதாரதிற்கும் இது பலத்த பின்னடைவை ஏற்படுத்த வல்லது.
ஏற்கனவே வீழச்சி கண்டுள்ள உல்லாசப்பயணத்துறையை இது மேலும் பாதிப்பதுடன், முதலீட்டாளர்களையும் சிறீலங்காவை விட்டு விலகி நிற்கவே செய்யும். விடுதலைப்புலிகளுக்கு இருப்பதற்கே இடமில்லை என்ற தொனியில் அரசின் பிரச்சாரம் அமைந்திருந்த வேளையில் வான்புலிகள் எங்கிருந்து புறப்பட்டு வந்தார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த தாக்குதல் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக ஊடகம் ஒன்று விடுதலைப்புலிகளின் கதை முடியும் தறுவாயில் உள்ளதாக அரசு தெரிவித்து வருகின்ற போது மேற்கொள்ளப்பட்ட வான்புலிகளின் தாக்குதலின் பரிமாணம் பெரிதாகும் என தெரிவித்துள்ளது. வான்புலிகளின் விமானங்கள் ஒவ்வொன்றும் 210 கிலோ எடை கொண்ட அதிசக்தி வாய்ந்த வெடிமருந்தை காவிச் செல்லும் ஏவுகணைகளைவே தற்போது கருதப்படுகின்றன.
அவை சிறீலங்காவின் தலைநகரத்தினை அடையும் வரை அரசினால் தடுக்க முடியாது போனது அரசிற்கும் பலத்த பின்னடைவு. தலைநகரத்தினை அடைந்த பின்னர் அவை எங்கு வீழந்தாலும் அரசிற்கு அது இழப்புத்தான். அவை படைத்துறை ரீதியாக இருக்கலாம், பொருளாதார ரீதியாக இருக்கலாம், அரசியல் ரீதியாக இருக்கலாம்.புதிதாக தோன்றியுள்ள இந்த அச்சுறுத்தல் தலைநகரத்திற்கு மட்டுமானது என அரசு நிம்மதி அடைந்துவிட முடியாது.
சிறீலங்கா முழுவதிலும் உள்ள படைத்துறை பொருளாதார கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை பாரிய ஆபத்துக்கள் சூழ்ந்துள்ளன. ஏனெனில் வான்புலிகள் முன்னர் வீசிய 25 கிலோ குண்டுகளை விட இதன் தாக்கம் பத்து மடங்கு அதிகமானது. இலக்குகள் தெளிவாக தாக்கப்பட்டால் அது பேரழிவாக இருக்கும்.
- வேல்ஸிலிருந்து அருஸ்
நன்றி: ஈழமுரசு
Comments