சிறீலங்காவுடன் மட்டுமா புலிகள் போரிடுகின்றனர்!

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி சுங்கிவிட்டது. ஒன்றன் பின் ஒன்றாக விடுதலைப் புலிக ளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளும் நகர்ப் பகுதிகளும் இராணுவத்திடம் வீழ்ச்சி கண்டுவிட்டன. அதாவது புலிகளால் இழக்கப்பட்டு வருகின்றன. இவை புலிகளின் பின்னடைவைக் குறிக்கின்றது என்பது பரவலான கருத்தாக மாறிவருகிறது.

பலம் இழந்துவிட்டனர் புலிகள். இராணுவத்தினரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது பின்வாங்கி வருகின்றனர். இனிப் புலிகளால் போரிடமுடியாது. புலிகளின் நாட்கள் எண்ணப்படுகின்றது என்பது போன்ற பிரசாரங்களும் ஒருபுறமாகவுள்ளன. இதில் சிறீலங்காவின் இராணுவத் தளபதியின் மதிப்பீட்டின் படி இன்னும் ஓரிரு வாரங்களி ல் புலிகள் முறியடிக்கப்பட்டு விடுவார்கள். இன்னமும் 1000 வரை யான (சுமார் இருவாரங்களுக்கு முற்பட்ட மதிப்பீடு) புலிகள் மட்டு மே உள்ளனர். இவர்களை இராணுவத்தினர் இலகுவில் வெற்றி கொண்டு விடுவர் என்பதாகும்.யதார்த்த பூர்வமாகப் புலிகள் பெரும் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை அதாவது நிலப்ப ரப்பை இழந்துள்ளனர் என்பது உண்மையே ஆனால் புலிகள் பலமிழந்து விட்டார்கள் போரிடும் ஆற்றலை இழந்து விட்டார்கள் என்பதெல்லாம் எந்தவகையில் பொருத்தப்பாடானது?

சிறீலங்காப் படைத்தரப்பு வன்னியில் நடவடிக்கை ஆரம்பித்து சுமார் இரண்டு வருடங்கள் ஆகி ன்றன. இரண்டு வருட காலமும் விடுதலைப் புலிகள் சிறீலங்கா இராணுவத்தினருக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போரிட்டு வந்துள்ளனர் வருகின்றனர் என்பதை மறுக்கமுடியுமா? அதாவது இது வரையில் சிறீலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற நீண்டகாலப் போராக இதுவே உள்ளது.

ஜெயசிக்குறு நடவடிக்கை ஓராண்டை எட்டிய போது இதுவே தென்னாசியப் பிராந்தியத்தில் நீடித்த காலம் இடம்பெற்ற போர் நடவடி க்கை எனக்கொள்ளப்பட்டது. ஆனால் தற்பொழுது மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கையே மிக நீண்டதாகும். அதாவது தென்னாசியப் பகுதியில் இடம்பெற்ற நீண்ட படை நடவடிக்கை ஆகும்.இத்தகைய நிலையில் விடுதலைப் புலிகள் போரி டவில்லை எனக்கூறுவது எந்தவகையில் பொருத்தப்பாடானதாக முடியும். அடுத்ததாக யுத்தம் மிகத் தீவிரமானதாகவும் கடுமையானதாகவும் உள்ளது என்பதை சிறீலங்காப் படைத்தரப்பு வெளியிட்டுள்ள ஓரிரு தகவல்களே நிரூபணம் செய்யப்போதுமானதாகும்.

எடுத்துக்காட்டாகச் சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் தகவல் ஒன்றைச் சுட்டிக்காட்ட முடியும். அவர் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சிக்கான சமரில் 12000 துருப்புக்கள் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவித்திருந்தார். இதில் அவர் இராணுவத்தின் உயிரிழப்புக் குறித்த தகவலை வெளியிடவில்லை. அதே சமயம் அவர் உண்மையான தகவலை வெளியிட்டிருந்தாரா? என்பது சந்தேகமே. அவ்வாறு இருந்தும் 12000 துருப்புக்கள் காயப்பட்டிருப்பின் அதனை ஏற்படுத்தியவர்கள் யார்? புலிகள் கடுமையாக வோ தீவிரமாகவோ போரிடாது விட்டால் இத்தகைய இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டா?

அது ஒருபுறம் இருக்க கிளிநொச்சிக்கான மோதலில் 12000 துருப்புக்கள் காயமடைந்திருப்பின் இதற்கு முன்னரான நடவடிக்கையின் போது காயமடைந்த கொல்லப்பட்ட படையினரின் எண் ணிக்கை என்ன? அதாவது மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையிலிருந்து இற்றை வரை அதாவது விசுவமடு முல்லைத்தீவு வரையில் காயமடைந்த படையினர் எத்தனை பேர்? கொல் லப்பட்ட படையினர் எத்தனை பேர்? இத்தகைய இழப்புக்கள் விடுதலைப் புலிகள் கடுமையாக போரிடாது எவ்வாறு ஏற்பட்டது? இவ் இழப்பானது ஜெயசிக்குறு நடவடிக்கையின் போது சிறீல ங்கா இராணுவம் சந்தித்த இழப்பை விட பலமடங்கு அதிகம்.

விடுதலைப் புலிகளை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்து விட்டதாகப் பிரச்சாரம் செய்வோரால் ஒவ்வொரு கிராமத்திற்கும் நகரத்திற்குமாகச் சிறீலங்காப் படைத்தரப்பு இறந்தவர்களினதும் காயமடைந்தவர்களினதும் எண்ணிக்கையை வெளியிட முடியுமா? சிறீலங்காப் படைத்தரப்பு தனது ஆக்கிரமிப்புக் குறித்துப் பிரச்சாரம் செய்யும்போது அதற்காகக் கொடுக்கப்பட்ட விலை குறித்து ஏன் பேசவில்லை? அதிகவிலை கொடுத்து வாங்கும் பொருளை இலாபகரமான தொன் றாகக் கொள்ளமுடியுமா? ஆனால் சிறீலங்காப் படைத்தரப்பின் இழப்புக் குறித்து உண்மைத் தன்மையைப் பேசியிருப்பின் அதன் வெற்றி குறித்து கேள்வி எழுப்பப்பட்டுவிடும் என்பதன் காரணமாகவே அது பேசமறுக்கின்றது.

சரி! கடந்த காலத்தில் ஏற்பட்ட மோதல்களில் குறித்த தகவல்களை வெளியிடாமை உள்ளமை ஒருபுறம் இருக்க கடந்த ஒருவாரத்திற்கு மேலாக புதுக்குடியிப்பில் இருந்து உடையார்கட்டுச் சந்திப் பகுதி வரையிலுள்ள ஏ-32 வீதியில் ஏறுவதற்கு மேற்கொண்ட முயற்சி நேற்றுவரை ஏன் வெற்றி அளிக்கவில்லை. விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்ட நிலையிலும் கடுமையாகப் போரிடும் சக்தி இழந்துவிட்ட நிலையிலும் இத்தாமதம் ஏன்? இராணுவம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி டைவதற்கு அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் காரணம் இல்லையா? இழப்புக்கள் ஏற்படாது போனால் இராணுவம் ஏன் வீதியைக் கைப்பற்றாது உள்ளது. அவ்வாறானால் விடுதலைப் புலிகள் ஏன் தொடர்ச்சியாக பின்வாங்க வேண்டி ஏற்பட்டது! என்ற கேள்வி தவிர்க்கப்பட முடியாததேயாகும். ஏனெனில் புலிகள் பின்வாங்கியுள்ளமை யதார்த்த பூர்வமானது.

ஆனால் கடந்தகாலச் சமர்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை நடைபெறும் யுத்தமானது பல பரிமாணங்களால் வேறுபட்டது. இதில் முதலில் குறிப்பிடத்தக்க விடயம் பெருமளவிலான நவீனரக ஆயுதங்களும் கனரக ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிறீலங்காவின் அரசு இந்த வருடம் சுமார் 20000 கோடி ரூபாக்களை யுத்தத்திற்கென ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் களமுனை முன்னரை விடக் கடுமையானதாகவும் தீவிரமானதாகவும் உள்ளது. அத்தோடு இடைவெளியின்றி இரண்டாண்டுகளாக நாளாந்தம் இப் போராட்டம் தொடர்ந்த வண்ணமுள்ளது. இதில் பயன்படுத்தப்படும் துருப்புக்களின் அளவும் அதிகமாகும்.

இது ஒருபுறம் இருக்க கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் சிறீலங்கா இராணுவத்தினருட னும் இந்திய இராணுவ த்தினருடனும் போரிட்டுள்ளனர். ஆனால் இந் நாடுகள் அன்று புலிகளு டன் தனித்து நின்றே போரிட்டனர். அதாவது சிறீலங்கா இராணுவத்துடனும். இந்திய இராணுவ த்துடனும் தனித்தனியே போரி ட்டுள்ளனர். ஆனால் தற்பொழுது நிலைமை அவ்வாறானதாக இல்லை.

சிறீலங்கா இராணுவம் விடுதலைப் புலிகளுடன் தனித்துப் போரிடவில்லை. ஆசிய வல்லரசுகள் அனைத்தினதும் ஆயுதமாற்று தகவல் பரிமாற்ற தொழில்நுட்ப உதவியுடனும் மற்றும் பொருளாதார உதவியுடனும் போரிட்டு வருகின்றது என்பதே உண்மையாகும். அதிலும் குறிப்பாக இந்தியா ஆயுத தளவாட உதவிகள் தகவல் பரிமாற்றம் ஆளணி பரிமாற்றம் மற்றும் பொருளாதார உதவி என்ற ரீதியில் சிறீலங்கா அரசிற்கு யுத்தத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொண்டு வருகின்து.

அண்மைக்காலம் வரையில் சிறீலங்காவிற்கான இராணுவ உதவிகள் குறித்து வெளிக்காட்டிக் கொள்ளாத இந்தியா தற்பொழுது போருக்கு வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ள தோடு தாக்குதலுக்குரிய கனரக ஆயுதங்களையும் சிறீலங்காவிற்கு வழங்கி வருகின்றது. இதே சமயம் இந்தியப் படைத்தரப்பைச் சார்ந்தோர் சிறீலங்காவில் பணியாற்றுவது ஏற்கெனவே அறியப்பட்ட விடயம். ஆயினும் தற்பொழுது அதற்கான ஆதாரங்கள் மேலும் மேலும் அதிகரித் துள்ள நிலையிலுள்ளது.

இதனை இந்திய அரசு நிராகரிப்பதாகவும் இல்லை.அதுமட்டுமன்றி சிறீலங்கா ஈட்டமுனையும் இராணுவ வெற்றியில் இந்திய அரசம்உரிமை கோரக் கூடிய நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லைப்போல் தெரிகின்றது. ஏனெனில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் போரில் வெற்றி பெற்றுவருவதாக சிறீலங்காத் தரப்பு தெரிவிக்க முற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்ட முடியும். அத்தோடு இராணுவ வெற்றியை இந்தியாவும் எதிர்பார்த்துள்ளமை அறியத்தக்கதாயுள்ளது.

இந்தியாவைத் தவிர சிறீலங்கா கோரிய எவ்வேளையிலும் ஆயுததளபாட உதவிகளை வழங்க பாகிஸ்தானும் சீனாவும் தயாராகவுள்ளது. இவற்றைத் தவிர போரில் சிறீலங்கா அரசு வெளிநா ட்டுக் கூலிப்படையினரையும் பயன்படுத்தியிருக்கின்றது.குறிப்பாகச் சிறீலங்கா விமானப்படை யில் பல வெளிநாட்டு விமானிகள் பணியாற்றுவதைச் சுட்டிக்காட்டமுடியும். இந்த வகையில் பார்க்கையில் புலிகள் தனியாகச் சிறீலங்கா அரசுடன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகக்கொள்ள முடியாது. இலங்கை யில் நடைபெறும் யுத்தத்தில் சிறீலங்கா அரசுடனும் ஆதரவு சக்திகளு டனும் போரிடுகின்றன என்றே கொள்ளுதல் முடியும்.

ஆகையினால் யுத்தில் ஏற்பட்டுள்ள பின்வாங்கல்களைத் தந்திரோபாய நடவடிக்கை எனக் கூற வோ ஏற்றுக்கொள்ளவோ எவரும் தயாராக இல்லாது விடினும் ஒருவகையில் அதாவது விடுத லைப் புலிகள் தமது சக்திக்கும் வளத்திற்கும் ஏற்றதான ஒரு தந்திரோபாய நடவடிக்கை யாக அது மேற்கொண்டிருப்பதாகவே கருத இடமுண்டு. அவ்வாறு இல்லாதுவிட்டால் சிறீலங்கா இராணுவம் இன்னமும் புலிகள் முன்னணி நிலைகளில் நின்று போரிட்டுக் கொண்டிருக்க வேண்டியநிலை இருந்திருக்கமாட்டாது.

சிறீலங்காப் படைத்தரப்பு தெரிவித்திருந்த கால கட்டத்திற்குள் யுத்தம் முடிவிற்கு வந்திருத்தல் வேண்டும்.இதேசமயம் தேசிய இனங்கள் பல தமது விடுதலைக்கான போராட்டங்களில் பல ஏற்றங்களைச் சந்தித்ததுண்டு. அவை ஒன்றிற்கு மேற்பட்ட வல்லரசுகளுக்கு எதிராகப் போராடியதும் உண்டு. ஆனால் உறுதியுடன் நடந்த போராட்டங்கள் தோல்வியடைந்ததாக வரலாறு இல்லை.

-ஜெயராஜ்


Comments