|
ஈழத் தமிழர்கள் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களைக் காக்க போர் நிறுத்தம் செய்யுமாறு மத்திய அரசு சிறிலங்க அரசை வலியுறுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தமிழ்நாட்டில் இருந்து ஒரு சேர எழுந்த குரல், சட்டப் பேரவையில் தீர்மானங்களாகவும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த தீர்மானங்களாகவும் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிற்கு தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் தமிழர்களின் எண்ணங்களை - ஈழத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை - வெளிப்படுத்த உண்ணாவிரதம், மனித சங்கிலி, மறியல், மாநாடு என்று ஜனநாயக ரீதியான எல்லா வழிகளிலும் வற்புறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட இந்த எழுச்சி சிறிலங்க அரசை அச்சத்திற்குள்ளாக்கியது. தமிழர்கள் மீதான தாக்குதலின் வேகம் குறைந்தது. அந்த நிலையில்தான் சிறிலங்க அதிபரின் ஆலோசகர் ஃபசில் ராஜபக்ச டெல்லி வந்து பிரதமரையும், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்துப் பேசினார். அப்போது ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு மட்டுமின்றி, சிறிலங்க கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு குறித்தும் உத்தரவாதம் பெறப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது.
ஆனால், பசில் ராஜபக்ச சிறிலங்கா திரும்பியதும், அதுவரை நிறுத்தப்பட்டிருந்து சிறிலங்க விமானப்படைத் தாக்குதல் மீண்டும் தொடரப்பட்டது, முன்பை விட தீவிரமாக. அதன் பிறகு, இதுநாள் வரை எவ்வித கட்டுப்பாடும் இன்றி சகட்டுமேனிக்கு காட்டுமிராண்டித்தனமாக ஈழத் தமிழர்கள் மீது இனவெறியுடன் தாக்குதல் நடத்தி வருகிறது சிறிலங்க அரசுப் படைகள்.
போரை நிறுத்து என்று மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டின் சட்டப் பேரவையில் இருந்தும், மக்கள் மன்றத்திலிருந்தும், போராட்டங்கள் வாயிலாகவும் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் யாவும் மத்திய அரசால், பிரதமர் மன்மோகன் சிங்கால் கண்டுகொள்ளப்படவில்லை.
பிரதமருடன் அனைத்துக் கட்சித் தலைவர்கள் நடத்திய சந்திப்பும் எந்தப் பலனையும் அளிக்கவில்லை.
|
ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்க அரச படைகள் நடத்தும் இனவெறித் தாக்குதலை இந்தியா ‘மெளனமாக’ ஆமோதிக்கிறதா? என்று சந்தேகம் எழுந்தது. ஏற்கனவே ராடார் உதவி, பிறகு இந்திய அயல் உளவு அமைப்பான ‘ரா’ விமானம் பறந்ததால் ஏற்பட்ட சர்ச்சை ஆகியவற்றால் எழுந்த அந்த சந்தேகம், சிவ் சங்கர் மேனனின் பயணத்தாலும், பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளாலும் பலப்பட்டது.
|
போர் நிறுத்தம் பற்றிப் பேசியிருப்பார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயலுறவு அமைச்சகமும், பிரணாப் முகர்ஜியும் விடுத்த அறிக்கைகள் உலகத் தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது மட்டுமின்றி, தமிழனைத் தாண்டி சிறிலங்க அரசுடன் ‘ஒரு நல்லுறவை’ இந்திய அரசு கொண்டுள்ளதும், தமிழர்கள் பிரச்சனையில் சிறிலங்க அரசு வகுத்துள்ள ‘திட்டத்தை’ எவ்வித எதிர்ப்புமின்றி இந்திய அரசு ஏற்றுக்கொண்டு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளதும் தெரிந்ததும் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பு உருவானது.
அதற்கு வடிகாலாகவே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவை நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு கிடைத்த பரவலான ஆதரவாகும். புதன்கிழமை நடந்த வேலை நிறுத்தம் மத்திய அரசிற்கு மட்டுமின்றி, தமிழக அரசிற்கும் ஒரு தெளிவான செய்தியைத் தந்துள்ளது. அது, நாளும் கொல்லப்படும் ஈழத் தமிழர்களின் நலன் காக்க எல்லா அரசியல் வேறுபாடுகளையும் தாண்டி தமிழர்கள் ஒன்றிணைவோம் என்பதே.
|
இதுவரை அரசியல் தலைமைகளைச் சார்ந்தே தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்திய தமிழக மக்கள், அந்தத் தலைமைகளின் ஒத்துழைப்பு இல்லாத நிலையிலும், உணர்வு ரீதியாக ஒன்றிணைந்த நின்றது, இதற்குமேல் அரசியல் ரீதியான ஒரு மாற்றத்திற்கு முதல் திறவாகவே தெரிகிறது.
தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் பிரச்சனை பல காலகட்டங்களில் பலமாக எதிரொலித்தாலும், அது என்றைக்குமே அரசியல் பிரச்சனையாக - அதாவது தேர்தல் பிரச்சனையாக - ஆக்கப்பட்டதில்லை. தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் யாவும், அது மக்களவைத் தேர்தலாகட்டும், மாநிலங்களவைத் தேர்தலாகட்டும், தமிழ்நாட்டின் பிரச்சனை மற்றும் கொள்கை ரீதியான அடிப்படைகளில்தான் நடந்துள்ளது.
ஈழத் தமிழரின் நலம் இதுநாள்வரை புறக்கணிக்கப்பட்டதற்குக் கூட இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுவதுண்டு.
ஆனால் இம்முறை, தாங்கள் சார்ந்த கூட்டணியை விட்டு விலகி தமிழின உணர்வு ரீதியாக - தமிழக மக்களின் எண்ணங்களை எதிரொலிக்கும் விதமாக - தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்தது இதுவே முதல் முறை. அவ்வாறு ஒன்றிணைந்து நடத்திய மக்கள் இயக்கம், ஆளும் கட்சியின் கடும் எதிர் வேலைகளுக்கு இடையிலும், முக்கிய எதிர்க்கட்சியின் பங்கேற்பு இல்லாத நிலையிலும், பெரும் வெற்றி பெற்றுள்ளதென்றால், தமிழின உணர்வு தமிழ்நாட்டு மக்களின் அரசியல் சிந்தனைப் போக்கையும் மாற்றியுள்ளது என்பதேயே காட்டுகிறது.
|
ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இதுவரை கடைபிடிக்கப்பட்ட சாத்வீக வழிமுறைகள் எதுவும் எந்தப் பலனும் அளிக்காத நிலையில், அதனை அரசியலாக்குவதே அவர்களைக் காப்பாற்றுவதற்கும், அவர்களின் விடுதலையை உறுதிப்படுவதற்கும் உரிய பலத்தை தமிழர்களுக்கு அளிக்கும்.
இதில் மற்றொரு முக்கிய பிரச்சனையும் அடங்கியுள்ளது. அதுவே தமிழ்நாட்டின் மீனவர்களின் பாதுகாப்பு. ‘இதற்குமேல் மீனவர்கள் மீது தாக்குதல் நடக்காது, சிறிலங்க கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மாட்டார்கள்’ என்று பிரணாப் முகர்ஜியும், பசில் ராஜபக்சவும் விடுத்த கூட்டறிக்கையில் மட்டுமின்றி, அதிபர் ராஜபக்ச அளித்த உறுதி மொழியும் காற்றில் பறந்துவிட்டது. எனவே சிங்கள கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டுமென்றால் கச்சத் தீவு தமிழர் கைக்கு வந்தாக வேண்டும். இதனை நடைமுறைப்படுத்த ஒரே வழி, ஈழப் பிரச்சனையுடன் தமிழக மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய உரிமை மீட்பையும் இணைத்துப் பார்ப்பதே ஒரே வழியாகும்.
ஆக, ஈழத் தமிழர் பாதுகாப்பு, அவர்களின் சுதந்திர வாழ்வு ஆகியவற்றை உறுதி செய்யவும், அதோடு தமிழக மீனவர்களை காப்பாற்றவும், அவர்களின் மீன்பிடி உரிமையை மீண்டும் நிலைநிறுத்தவும் ஒரே வழி: இவ்விரு பிரச்சனைகளையும் தேர்தல் அரசியல் ஆக்குவதே.
|
இப்படிப்பட்ட அரசியல் வழியே, தமிழர்களின் உரிமையையும், சுதந்திரத்தையும் தங்களின் அரசியலிற்காக அந்நாட்டிற்கு பேரமாக்கும் காங்கிரஸைப் போன்ற கட்சிகளை ஒழித்துக் கட்ட உதவும்.
Comments