'காகித ஓடத்தில் கலைஞர் கப்பல் விடக் கூடாது...!'

'எப்போது இலங்கைக்குப் பயணப்படுவார் பிரணாப் முகர்ஜி?' என்று ஒவ்வொரு கணமும் உலகத் தமிழர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். 'வானத்து தேவன் வந்தான் காண்' என்பது போல் இலங்கையில் இறங்கிய முகர்ஜி, ராஜபக்ஷேவுடன் பேசி ஒருவழியாக ஈழத்தமிழரின் பிரச்னைக்கு உரிய 'தெளிவான' தீர்வைக் கண்டுவிட்டு, இந்தியத் தலைநகருக்குத் திரும்பி விட்டார்!

'விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதில் எங்களுக்குத் தடையில்லை. ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் முல்லைத்தீவில் உயிருக்கு

அஞ்சி, உணவின்றித் தவிக்கிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பான புகலிடங்கள்

அதிகரிக்கப்பட வேண்டும். ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்துக்குப் பின் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 13-வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்' என்று முகமலர்ச்சியுடன் முகர்ஜி முன்மொழிந்திருக்கிறார்.

பேசும் சக்தியற்று ஊமையாகப் பிறந்த குழந்தையின் தேன் மழலையைச் செவிமடுக்க தெய்வத்திடம் வேண்டி நின்றாளாம் தாய். இறைவனின் கருணையால் இதழ் திறந்த குழந்தை, 'அம்மா! அப்பா எப்போது சாவார்? நீ என்று தாலியறுந்து நிற்பாய்?' என்று கேட்டதாம். முகர்ஜிக்கும் அந்த குழந்தைக்கும் அதிகம் வேற்றுமையில்லை.

பிரபாகரன் உட்பட அனைத்து விடுதலைப்புலிகளும் அழியவேண்டும் என்பதில் இந்திய அரசுக்கு இருக்கும் ஆர்வம் வெளிப்படையானது.

புலிகளின் அழிவுக்குப் பின் இந்தியா காண விரும்பும் அரசியல் தீர்வு எந்த வகையில் சாத்தியம் என்பதுதான் கேள்வி. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் ஈழத்தமிழரின் உரிமைப் பசிக்கு உணவாகக் கூடுமா?

இந்தியாவிலுள்ள ஒரு மாநில அரசு பெற்றிருக்கும் ஜனநாயக உரிமைகளை ஈழமக்களுக்குச் சிங்களப் பேரின வாத அரசு தர விரும்புமா?

சிங்களருக்குச் சமமான உரிமைகளையும், வாய்ப்புகளையும் இலங்கை அரசு தந்தாக வேண்டும் என்று இந்திய அரசு அதிகபட்ச அழுத்தத்தை இதய சுத்தியுடன் வெளிப்படுத்துமா?

ஏமாளித் தமிழினத்தை ஏமாற்ற அரங்கேற்றப்படும் இந்த அவல நாடகத்தில்தான் எத்தனை நடிகர்கள்!

'வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒரே இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்துதல், இலங்கையின் அரசு அலுவல் மொழியாக சிங்களம், தமிழ், ஆங்கிலம் மூன்றும் இருத்தல்' என்ற ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் உருப்படியான இரண்டு அம்சங்களும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட்டதா?

முகர்ஜிதான் விளக்கவேண்டும். விடுதலைப்புலிகள் தடையாக இருந்ததால் ஒப்பந்தம் செயல்வடிவம் பெறவில்லை என்றால், அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டதும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்படும் வாய்ப்புண்டா?

தமிழர் வாழும் இரு மாகாணங்களும் இணைக்கப்படும் என்று ராஜீவ் காந்தியை நம்பவைத்தார் ஜெயவர்த்தனே. ஆனால், இலங்கை உச்ச நீதிமன்றம் அந்த இணைப்பை ரத்துச் செய்துவிட்ட நிலையில் ராஜபக்ஷே அரசு இணைப்புக்கு எந்த விதத்தில் வழி காணும்? முகர்ஜி இதற்கு பதிலளிப்பாரா?

கிழக்கு மாகாண முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்ற பிரபாகரன் கையாண்ட வன்முறையும், கருணா இன்று மேற்கொண்டுள்ள எதிர்நிலையும், முஸ்லிம் தமிழர்களின் இதய ரணமும் வடக்கும் கிழக்கும் இணைந்து ஈழத்தமிழ் நிலம் காண்பதற்கு எதிரான சூழலை உருவாக்கிவிட்ட பின்பு...

சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தமிழரை இணைக்கவா முன்வரும்?

குறைந்தபட்சம் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தனித்தனியாக தமிழ்நாடு போன்று ஜனநாயக உரிமைகளுடன் ஆட்சி நடக்கவாவது உத்தரவாதம் உண்டா?

மன்மோகன் சிங் அரசு அந்த அளவேனும் ராஜபக்ஷே மீது நிர்ப்பந்தம் செலுத்துமா?

சத்தியமாகச் செலுத்தாது! அதற்கு அரசியல் காரணங்கள் உண்டு.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு ஜெயவர்த்தனேவுக்கு ராஜீவ் காந்தி வரைந்த கடிதத்தில், 'திரிகோணமலை அல்லது இலங்கையின் மற்ற துறைமுகங் களும் எந்த நாட்டின் ராணுவப் பயன்பாட்டுக்கும் இடம்கொடுக்காத வண்ணம் இருக்க வேண்டும் என இந்தியா விரும்பியது. எனவே, அதைப் பராமரிக்கவும், திரிகோணமலை எண்ணெய் கிடங்குப் பண்ணையை மீட்டு இந்தியா-இலங்கைக்கிடையே கூட்டு முயற்சியில் செயல் படுத்தவும், வெளிநாட்டு ஒலிபரப்பு அமைப்புகளுடன் இலங்கை அரசு மேற்கொண்ட ஒப்பந்தங்கள் மூலம் ஒலிபரப்பு பொதுமக்களுக்கு மட்டும் பயன்படும்படியும், ராணுவ மற்றும் உளவு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படாமல் பார்த்துக்கொள்ளவும்' என இந்தியாவின் நலன் கருதி வேண்டுகோள் வைத்தார்.

அதற்குக் கைம்மாறாக 'தீவிரவாத நடவடிக்கைகள், பிரிவினை வாதத்தை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபடக்கூடிய இலங்கைப் பிரஜைகளை நாடு கடத்தவும், இலங்கையின் பாதுகாப்புப் படைகளுக்குப் பயிற்சி வசதிகள் மற்றும் ராணுவ உதவி செய்யவும்' ராஜீவ் உறுதி வழங்கினார். ராஜீவ் காந்தி வகுத்த வழித் தடத்திலிருந்து மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் மாறிப் பயணம் செய்யாது.

இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் இலங்கையின் உறவு எந்த நிலையிலும் பழுதுபடாமல் பராமரிக்கப்பட வேண்டும் என்று கருதும் மத்திய அரசு, 'இந்தியர்' நலன் காக்க(!) ஈழத்தமிழரை பலியிடுகிறது என்பதுதான் மறுக்கமுடியாத கசப்பான உண்மை. ஒற்றுமைக்கு ஒருபோதும் அர்த்தம் அறியாத தமிழினத்தைப் புறக்கணிப்பதனால், எந்தத் தலைவலியும் தங்களுக்கு வந்துசேராது என்பதை மன்மோகன் சிங்கும், முகர்ஜியும் பூரணமாகப் புரிந்துவைத்துள்ளனர்.

'தமிழ் ஈழம் என்ற நம் குறிக் கோளை அடைய எம்மிடையே ஒற்றுமையை வளர்ப்பதோடு, எமது கொள்கைகளை நாம் என்றும் கடைப்பிடிக்க வேண்டும். எமது பாரம்பரியத்தை நினைவு கூர்வதோடு, எமது தனித்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டுமானால், ஒரு பலமுள்ள சமுதாயமாக எம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்' என்று 1923-ல் நடந்த 'இலங்கைத் தமிழர் லீக்' கூட்டத்தில் பொன்.அருணாசலம் குறிப்பிட்டார். என்றாவது இலங்கைத் தமிழர் ஒன்றாக நின்றதுண்டா?

ஆயுதங்களைக் கையிலெடுத்த ஈழ இளைஞர்களாவது ஒரே பாசறையில் நின்று போர்க்குரல் கொடுத்ததுண்டா?

இலங்கையின் மக்கள்தொகை 1931-ம் ஆண்டின் கணக் கெடுப்பின்படி 64 சதவிகிதம் சிங்களர்; 12 சதவிகிதம் இலங்கைத் தமிழர்; 13 சதவிகிதம் இந்தியத் தமிழர்; 10 சதவிகிதம் முஸ்லிம்கள். கரையோரச் சிங்களரின் ஆதிக்கத்தை முதலில் எதிர்த்த கண்டிச் சிங்களர், தமிழரின் ஆதிக்கத்தைத் தகர்க்க ஒன்று பட்டனர். சிங்களப் பேரினவாதம் அவர்களுடைய வேற்றுமைகளின் வேரறுத்தது. ஆனால், யாழ்ப்பாணத் தமிழர்கள் சாதியுணர்வில் ஊறித் திளைத்து...

ஆற்காடு, சேலம், தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லைப் பகுதிகளிலிருந்து தோட்டத் தொழிலாளர்களாகப் பிழைக்கச் சென்ற பள்ளர், பறையர், இருளர், குறவர், நாடார், சக்கிலியர் போன்றோரைத் தோட்டக்காரன், கூலி, புதிய தமிழர் என்று பெயர் சூட்டிப் புறக்கணித்தனர். ஒரு தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமையான வாக்குரிமை பறிக்கப்பட்டு, சமூகநீதி மறுக்கப்பட்டபோது மௌனப் பார்வையாளர்களாக யாழ்ப்பாணத் தமிழர் வேடிக்கை பார்த்தனர் என்பதுதான் வேதனைக்குரிய வரலாறு.

ஒரு சிங்கள கிறிஸ்துவன், சிங்கள பௌத்தனாக முடியும். ஆனால், ஒரு தாழ்த்தப்பட்ட மலையகத் தமிழன் யாழ்ப்பாண உயர்சாதித் தமிழருடன் ஒன்றிணைய முடியவில்லையே!

அன்று ஒன்றுபடாத இலங்கைத் தமிழரின் உரிமை களைக் காக்க... இன்று நம் தமிழினத் தலைவர்களாவது தமிழகத்தில் ஒன்றுபட்டு நிற்கிறார்களா?

எத்தனை மேடைகள், எத்தனை வேடங்கள், எத்தனை கோஷங் கள்! விடுதலைப்புலிகளின் குருதியில் கூந்தல் முடிக்கத் துடிக்கும் ஜெயலலிதாவின் பக்கத்தில் நின்றபடி 'புரட்சிப் புயல்' வைகோ, பிரபாகரனுக்காக உலகத் தமிழரிடையே உரத்த குரலில் ஈழவிடுதலை கீதம் இசைக்கிறார்.

அவருக்குக் கலைஞரின் நிழல் மீதும் நீங்காப் பகை. எதிரிக்கு எதிரி நண்பன்.

அதனால் ஜெயலலிதாவும் வைகோவும் அரசியல் உலகத்தின் அதிசய நண்பர்களாகிவிட்டனர்.

நம் அரசியல் தலைவர்களுக்கு நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை; நிரந்தர சுயநலம்தான் உண்டு. வைகோவின் வசம் இரண்டு முகமூடிகள் இருக்கின்றன. அரசியல் ஆதாயத்துக்காக உள்ளூர் முகமூடி ஒன்று; ஈழத்தமிழருக்காக உலக முகமூடி மற்றொன்று.

முகமூடிகளை மாற்றி மாற்றி அணிவதில் மருத்துவர் ராமதாஸ§க்கு மாற்று காண்பதரிது. அவர் நலனுக்கு அவசியப்படும்போதெல்லாம் அணி மாறுவார்.

கலைஞரும், ஜெயலலிதாவும் பகை மறந்து போட்டிபோட்டு அவரை அரவணைக்கும் வரை அவருடைய காட்டில் அடைமழை. எப்போது டாக்டர் எந்த வியூகம் வகுப்பார் என்பது வாக்களித்தே நோயாளிகளாகிவிட்ட அப்பாவித் தமிழர் அறியாத ரகசியம்.

ஈழத்தமிழர் உரிமைக்காக அன்றாடம் குரல் கொடுப்பவர் மருத்துவர் ஒருவர்தான். மன்மோகன் சிங்குக்கு ஒருநாள் கண்டனக் கடிதம் எழுதுவார். சோனியா காந்திக்கு மறுநாள் தன் வருத்தத்தைக் கடிதத்தில் தெரிவிப்பார். கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கலைஞரிடம் முறையிடுவார். மத்திய அரசுக்கு எதிராக அறிக்கைப் போர் நடத்துவார். ஆனால், மறந்தும் தன் மகன் அன்புமணியை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவேண்டுமென்று வற்புறுத்தமாட்டார்.

ஈழத்தமிழர் நலன் காக்க மறந்துவிட்ட காங்கிரஸ் தலைமையில் தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தேவை என்பார். மத்திய அரசின் ஆயுள் முடிந்ததும், மகனுடைய அமைச்சர் பதவி காலா வதியானதும் ஈழப்பிரச்னையில் காங்கிரஸ் துரோகம் இழைத்துவிட்டதாகப் பழிதூற்றிவிட்டு 'அன்புச் சகோதரி' ஜெயலலிதா கூட்டணியில் மருத்துவர் ராமதாஸ் சங்கமமானாலும் தமிழர்கள் அந்த ராஜதந்திரத்திலும் மயங்கியே நிற்பார்கள்.

'கேப்டன்' விஜயகாந்த் தன் மகனுக்கே 'பிரபாகரன்' என்று பெயரிட்டு மகிழ்ந்தவர். ஈழம் காணும்வரை இனிப்பு உண்ணுவதில்லை என்று சபதமேற்றவர். திருமங்கலத் தீர்ப்பு அவருடைய முதல்வர் கனவை மூளியாக்கிவிட்டது. ஈழம் பற்றி வாய்திறந்தால் காங்கிரஸின் வாசற்கதவு மூடிக்கொள்ளும் என்று தெரிந்து கொண்டவர், கலைஞரை கைவிட்டு... வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தன்னோடு கூட்டணிக் குடும்பம் நடத்த காங்கிரஸ் வருமா என்று வழிமேல் விழிவைத்து நின்று கொண்டிருக்கிறார்.

தனி ஈழம் காண மறைமலை நகரில் உண்ணா நோன்பிருந்த திருமாவளவனுக்கு, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் சேர்ந்து நின்றபோது அவர் பிரபாகரனின் எதிரி என்று தெரியாமல் போய்விட்டது.

உள்ளாட்சித் தேர்தலின்போது ஜெயலலிதா நேரில் சந்திக்கவோ, தொலை பேசியில் தொடர்புகொள்ளவோ மறுத்தபோதுதான் திருமாவுக்கு 'அடங்க மறு; அத்து மீறு' என்ற புரட்சிக்குரல் நினைவுக்கு வந்து நீள்துயில் கலைந்தது.

'முதலுக்கே மோசம் வந்த பின்னர் - முயலாக ஆமையாகக் கிடத்தல் நன்றோ? -

ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்தவனைக் கைதூக்கிக் கரையேற்றும் நேரத்தில் -

கனமான பாறையன்றை அவன் தலையில் உருட்டிவிட எத்தனிக்கும் உலுத்தர்களைக் கண்டால் ஓட ஓட விரட்டத்தான் வேண்டும் -

ஆறிலும் சாவுதான் நூறிலும் சாவுதான் -

ஆனது ஆகட்டுமே - இந்த ஆட்சிதான் போகட்டுமே - மகுடமின்றி வாழ முடியாத மனிதர்களா நாம்?

- சிசுவாகப் பிறக்கும்போதே சிம்மாசனத் துடனா பிறந்தோம்? - கொற்றக்குடையா? கொள்கையா? -எது வேண்டும் எனில்... கொள்கையை விற்றுப்பிழைக்க வேறு நபர் பார் என்போம்!'

என்று கவியரங்கத் தலைமையேற்றுக் கவிதை பாடிய கலைஞர், தான் அன்று எழுதிய ஆவேசக் கவிதையை இன்று திரும்பிப் பார்ப்பாரா?

'தமிழினத் தலைவர்' என்று வைர வார்த்தைகளால் வரலாறு பதிவுசெய்ய அவருடைய வாழ்வின் மாலைப் பொழுதில் தக்க தருணம் தயாராகக் காத்திருக்கிறது. தமிழினத்தின் தன்மானம் காக்க முன்வருவாரா முத்தமிழ்க் கலைஞர்? காகித ஓடத்தில் கலைஞர் கப்பல் விடக்கூடாது!

உலகத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் உள்ளூர்த் தமிழர்கள் முதலில் ஒன்றுபடட்டும். தமிழீழம் கேட்கும் வைகோ, மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன், ஈழத்தமிழருக்காக உரிமைக்குரல் கொடுக்கும் தா.பாண்டியன், வரதராஜன் ஆகியோர் கலைஞருடன் கைகோத்து நிற்கட்டும்.

மூன்று முறை சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய பின்பும், முதல் மரியாதை தராமல் அவமரியாதை செய்த காங்கிரஸ் கூட்டணி யிலிருந்து தி.மு.க. ஆண்மையோடு விலகட்டும். மாநில அரசு கவிழ்ந்தாலும் மான உணர்வு தீயாகத் தலை நிமிரட்டும்!

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., இடதுசாரி இயக்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள் சேர்ந்து புதிய கூட்டணி அமைக்கட்டும்.

உலகத் தமிழரின் மானம் காக்க இந்தப் புதிய கூட்டணி உருவாகட்டும். இதைச் செய்யத் தவறினால்...

தமிழினம் குறித்தும், ஈழத்தமிழர் குறித்தும் இனி வாய்திறந்து பேசாமல் அவரவர் சுயலாபத்துக்கு அரசியல் நடத்தட்டும். வெறும் வார்த்தைப் பந்தலால் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர நிழல் கிடைத்துவிடாது!

நன்றி: ஜூனியர் விகடன், Feb 04, 2009



Comments