இலங்கையில் அதிகளவான தமிழ் இளைஞர்கள் கொல்லப்படுகின்றனர்: அமெரிக்கா கவலை

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றன. அங்கு 16 வீத மக்கள் தொகையைக்கொண்ட தமிழ் மக்களில் இளைஞர்கள் அதிகளவில் கொல்லப்படுவதுடன் காணாமலும் போய் உள்ளனர் என அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ள 2008 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றன. சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் துணை இரணுவக் குழுவினரும், அரசியல் கட்சிகளாக தம்மை பதிவு செய்து கொண்டுள்ள டக்ளசின் ஈ.பி.டி.பி. மற்றும் முரளிதரனின் ரி.எம்.வி.பி. போன்ற கட்சிகளும் அதிகளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகளும் படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போர் தீவிரமடைந்ததை தொடர்ந்து சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. அரசின் இந்த மனித உரிமை மீறல்களினால் அதிகளவில் தமிழ் மக்களே பாதிப்படைந்துள்ளனர்.

இலங்கையில் 16 வீதமான மக்கள் தொகையைக்கொண்ட தமிழ் மக்களில் இளைஞர்கள் அதிகளவில் கொல்லப்படுவதுடன் காணாமலும் போய் உள்ளனர்.

அரசுடன் இணைந்து செயற்படும் குழுவினரே நீதிக்குப் புறம்பான படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அரசியல் படுகொலைகள், அரச படையினருடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுவினர்

சிறார்களை படையில் சேர்ப்பது

காணாமல் போதல்

எழுந்தமானமான கைதுகள்

தடுத்து வைத்தல்

தரமற்ற சிறைக்கூடங்கள்

கைது செய்யப்படுபவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு மறுப்பு தெரிவித்தல்

அரசின் ஊழல்

சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாகுபாடுகள்

என்பன இலங்கையில் அதிகரித்துள்ளன.

சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுவினர் பொதுமக்களுக்கு எதிரான ஆயுத தாக்குதல்கள், துன்புறுத்தல்கள், கடத்துதல், பணயக்கைதிகளாக மக்களை பிடித்தல், கப்பம் வாங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குற்றங்களில் ஈடுபட்ட காவல்துறை, இராணுவம், மற்றும் துணை இராணுவக் குழுவினரை சேர்ந்த எவரும் கடந்த வருடத்தில் தண்டிக்கப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments