ஈழத் தமிழர்களுக்காக உயிர்நீத்த தி.மு.க. தொண்டருக்கு வைகோ வணக்கம்

ஈழத் தமிழர்களுக்காக உயிர்நீத்த திராவிட முன்னேற்ற கழகத் தொண்டர் அமரேசனுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வணக்கம் செலுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கைத் தீவில் மனித குலத்தின் மனச்சாட்சியை உலுக்குகின்ற கொடிய தமிழினப் படுகொலையை சிங்கள அரசு நடத்துவதால் தாய் தமிழகத்தின் மக்களின் உள்ளம் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றது.

சொந்த சகோதர, சகோதரிகள் துன்பத்தில் சாவதை எண்ணியும் அதனை தடுப்பதற்கு இந்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத துரோகத்தை குறித்து உள்ளம் துடித்தும், தங்கள் உயிரை எரித்துக் கொண்டாலாவது தமிழர்களைக் காக்க வழி பிறக்காதா? என்ற ஏக்கத்தோடு தமிழ்நாட்டில் முத்துகுமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன், தீக்குளித்து மடிந்தனர்.

அதே உன்னதமான தியாக உணர்வுடன் தலைநகர் சென்னையில் தி.மு.க.வைச் சார்ந்த சிவப்பிரகாசம் என்ற அண்ணாவின் தம்பி தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்துள்ளார்.

ஈழத் தமிழர்களைக் காக்க தன் உயிரையும், உடலையும் நெருப்புக்கு தாரை வார்த்த அந்த உத்தமரின் தியாகம் பூசிக்கத்தக்கது. வாழ்ந்து போராடுவோம், உயிர்களை அழித்துக் கொள்ளாதீர்கள், தீக்குளிக்காதீர்கள் என்று தமிழர்களை மன்றாடி வேண்டுகிறேன்.

ஈழத் தமிழர்களுக்காக தன் இன்னுயிரைத் தந்த, அந்த உத்தமனின் உடலுக்கு மலர்வணக்கம் செய்ய என் உள்ளமும், கரங்களும் துடித்தாலும்கூட நான் கேள்விப்படும் ஆதாரபூர்வமான செய்திகளால், உன்னதமும் அர்ப்பணிப்பும் நிறைந்த சிவப்பிரகாசத்தின் இறுதி சடங்குகளுக்கு என்னால் சிறு குந்தகமும் ஏற்பட்டது என்ற வீண் பழிச்சொல்லுக்கு இடம் தரவேண்டாம் என்று கருதியே நான் நேரில் சென்று அந்தத் தியாகச் செம்மலுக்கு வணக்கம் செலுத்த இயலவில்லை.

தன் மனைவி - மக்கள், குடும்பத்தினரை, உற்ற தோழர்களை கண்ணீரில் கதற விட்டு நெருப்பில் துடிதுடித்து மாண்ட வீரத்தியாகி சிவப்பிரகாசத்திற்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.

துயரத்தில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும் என் கண்ணீர் வணக்கத்தினை செலுத்துகின்றேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments