திருத்த முடியாத தி.மு.கவின் போக்கு


முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சிக்குண்டு, யுத்தப் பேரழிவை எதிர்கொண்டு, அவலப்படும் பல லட்சம் சிவிலியன்கள் தொடர்பான விடயத்தில் தமிழகத்தில் கிளர்ந்தெழுந்திருக்கும் உணர்வெழுச்சியை மழுங்கடிக்கும் விதத்தில் தமிழகத்தின் ஆளும் தி.மு.க. அரசு நடந்து கொள்வது உலகம் வாழ் தமிழர்களைப் பெரும் வேதனைக்குள் ஆழ்த்தியிருக்கின்றது.

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும், வேதனைகளையும் பொறுக்க இயலாது தாங்க முடியாது முத்துக்குமரன் என்ற இளைஞன் தனக்குத் தானே தீ மூட்டி, நெருப்பில் வெந்து செத்திருக்கிறான்.

கவிஞர் புதுவை இரத்தினதுரை குறிப்பிடுகின்றமை போல முத்துக்குமரன் எரிந்தவன் அல்லன். விரிந்தவன். அவன் ஈழத் தமிழர் குறித்து தன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தான். அந்த சோதிப் பெரு வெளிச்சம் ஈழத் தமிழருக்கு நிச்சயம் சக்தி தரும். நெருப்பில் எரியும் தேசத்தை எண்ணி நெருப்பில் எரிந்தவன் அவன்.

அக்கினியில் வெந்து தன்னுயிரைத் தியாகம் செய்ய முன்னர் தான் எழுதிய கடித வடிவ அறிக்கையிலே ஈழத் தமிழர்களின் இன்றைய அவல நிலையைப் போக்கு வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் வரிசையிலே தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி யையும் தியாகி முத்துக்குமரன் வெளிப்படையாகவே அடையாளம் காட்டியிருந்தான்.

அவன் குறிப்பிட்டமை போல ஈழத் தமிழர்களுக்காகத் தமிழகம் கொந்தளிக்கும் இந்தச் சமயத்தில் மக்களின் கோபத்தை எதிர்கொள்ளப் பயந்து தமிழக முதல்வர் வைத்தியசாலையில் போய் ஒளிந்து கொண்டிருக்கின்றார் என்பது உண்மையோ எனத் தெரியவில்லை.

ஆனால், தமிழக முதல்வர் வைத்தியசாலையில் படுத்திருப்பதால், அவரது இடத்துக்கு சட்டசபையில் மூத்த தலைவராகச் செயற்படும் தமிழக நிதி அமைச் சரும், தி.மு.க.பொதுச் சாயலாளருமான அன்பழகன் இவ் விடயங்களைக் கையாளும் முறைமை

முத்துக்கு மரன் போன்ற தியாகிகளின் உயிர் ஈகத்துக்குப் பின்னரும் கூட அதையொட்டி தமிழகத்தில் கிளர்ந்திருக்கும் பேரெழுச்சியின் பின்னரும் கூட

இலங்கை விடயத்தில் தி.மு.க. திருந்தவேயில்லை,

திருந்தவேமாட்டாது என் பதைத் திட்ட வட்டமாகத் தெளிவுபடுத்துகின்றது.

வன்னியில் சிக்கியுள்ள தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு 48 மணிநேரத்துக்குள் வெளியேறு வதற்குபாதுகாப்பான வசதிகளும், ஒழுங்குகளும் செய்து கொடுக்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி அறிவித்தும்
அதைத் தம்பாட்டில் இரண்டு நாள் யுத்த நிறுத்தம் என்று சட்ட சபையில் அர்த்தம் பண்ணுகின்றார் அன்பழகன்.

ஆனால் இலங்கை அரசோ இது யுத்த நிறுத்த அல்லது மோதல் நிறுத்த அறிவிப்போ அல்ல என்பதைத் திட்டவட்டமாகவும் உறுதியாகவும் தெளிவுபடுத்தி விட்டது.

"யுத்த நிறுத்தம் செய்தால் புலிகள் அதைப் பயன்படுத்தி மீள ஒன்றுபட்டு விடுவார்கள். அதனால் யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. புலிகளின் பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருவதற்கு பாதுகாப்பான பாதை ஒழுங்கு செய்து கொடுக்கப்படும் என்று மட்டுமே இலங்கை அரசு அறிவித்துள்ளது'என்று இலங்கையின் மூத்த அமைச்சர் ஒருவரே நிலைமையைத் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

ஆகவே இது அமைச்சர் அன்பழகன் தமிழக சட்ட சபையில் அறிவித்தமை போன்று யுத்த நிறுத்தமே அல்ல.

எனவே அப்படி இல்லாத யுத்த நிறுத்தம் குறித்துப் புலிகள் பிரதிபலிப்புக் காட்டாதமை குறித்து வெள்ளியன்று காலை சட்டசபையில் அன்பழகன் தெரிவித்த விசனப்போக்கு அர்த்தமற்றது.

அத்தகைய யுத்தநிறுத்தமோ, அல்லது சிவிலியன்களுக்கான பாதை வசதி பற்றிய அறிவிப்போ இலங்கை ஜனாதிபதியால் வியாழன் மாலை கொழும்பில் உள்ள ஊடகங்களுக்கு வெளியிடப் பட்டதே தவிர, உரிய தரப்புகள் ஏதேனும் ஊடாக புலிகளின் பக்கத்துக்கு அறிவிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.

மிகக் குறுகிய பிரதேசத்துக்குள் பொதுமக்களுடன் சேர்ந்து புலிகளும் சிக்குண்டுள்ள நிலையில்

இலங்கை ஜனாதிபதி அறிவித்த 48 மணி நேரக் காலக்கெடு எப்போது ஆரம்பித்து, எப்போது முடிகின்றது என்பது கூடத் தெளிவில்லாத நிலையில் முதல் நாள் இரவு இலங்கை ஜனாதிபதி விடுத்த அறிவிப்பு வன்னிக் காட்டில் யுத்த நெருக்குதலில் சிக்குண்டுள்ள புலிகளுக்கு கிட்டியதா என்பது கூடத் தெரியாத நிலையில் அந்த அறிவிப்புக்குப் புலிகள் உரிய பிரதிபலிப்பைக் காட்டவில்லை என்று குறிப்பிட்டு, அடுத்த நாள் காலையில் சட்டசபையில் அமைச்சர் அன்பழகன் விழுந்தடித்து விசனம் தெரிவித்தமை அர்த்தமற்றது.

கலைஞர் கருணாநிதியும் அவரது தி.மு.க.அரசும் ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான விடயத்தில் விட்டேத்தியாகவே நடக்கும் நிலை நீடிக்கின்றது என்பது இப்படி அமைச்சர் அன்பழகன் விழுந்தடித்து விசனம் தெரிவித்ததன் மூலம் மீண்டும் ஒரு தடவை உறுதியாகி யிருக்கின்றது.

அவ்வளவே.
இவர்கள் திருந்த மாட்டார்கள். திருந்துவர் என்று எதிர்பார்ப்பதிலும் அர்த்தம் இல்லை.


Comments