தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழீழத்திலிருந்து தன்மானத் தமிழன் எழுதும் கடிதம்

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழீழத்திலிருந்து தன்மானத் தமிழன் "தமிழீழம் பணியாது" என்ற தலைப்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

தமிழீழம் பணியாது

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழீழத்திலிருந்து தன்மானத் தமிழன் எழுதுவது

வணக்கம்

தமிழீழத் தமிழரான நாங்கள் தாயகத்தில் படும் துயரம் சொல்லில் அடங்காதவை. என்பதை நீங்கள் அறியாதவை அல்ல. எமது துயரம் முழுஉலகமும் அறியும் எனினும் நாங்கள் தன்மானத்துடன் வாழ விரும்புகின்றோம் என்பதை நான் உங்களுக்கு தாழ்மையுடன் அறியத் தருகின்றேன்.

"மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததென்பர்" இம்மொழி எமக்கு சாலவும் பொருந்தும். ஏனெனில் கடந்த சில தினங்களுக்கு முன் நீங்கள் தெரிவித்த கருத்தாகும். தமிழீழ தேசிய தலைவரையும் தளபதிகளையும் நீங்கள் விமர்சித்த விதம் எமக்குப் பலத்த ஏமாற்றத்தையும் வேதனையையும் தந்தது. தமிழீழ தேசிய தலைவரை சர்வாதிகாரி என நீங்கள் குறிப்பிட்டது தமிழீழத் தமிழரான எம்மை மிகவும் ஏமாற்றமடையச் செய்துவிட்டது. தமிழினப் படுகொலை செய்யும் மஹிந்த ராஜபக்ச உங்களுக்கு சர்வாதிகாரியாகத் தெரியவில்லையா?

நான் உங்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். எமது இன விடிவுக்காய் போராடும் புலிவீரர்களும் தமிழர்கள் என்பதை மறவாதீர்கள். அவர்கள் வேறு எவருக்காகவும் போராடவில்லை. எமக்காகவும் எமது சுதந்திரத்திற்காகவுமே போராடுகிறார்கள். அவர்கள் வேறு நாம வேறு என்ற எண்ணத்திற்கே இடமில்லை. ஆயிரமாயிரம் வேங்கைகள் உயிர்த்தியாகம் செய்தது எமது இன விடுதலை மூச்சுக்காகவேயன்றி எந்தவொரு தனிநபருடைய சுயநல அரசியலுக்காகவோ அல்லது சுயநலத்திற்காகவோ அல்ல. இப்படிப்பட்ட மாவீரச் செல்வங்களை இழிவுபடுத்தி எவர் பேசினாலும் பேசுபவர்கள்தான் இழிவானவர்களும் இழிகுலத்தைச் சேர்ந்தவர்களுமேயன்றி வேறெவருமல்லர். இவ்வகையான பேச்சுக்கள் கண்டிக்கத்தக்கதும் அருவருக்கத்தக்கதுமாகும்.

தயவுசெய்து தமிழீழ விடுதலைப்புலிகளை இவ்வாறு மானபங்கப்படுத்துவதை தவிர்க்கவும். இல்லாவிடில் எதிர்காலத்தில் தமிழர்களின் காவல் தெய்வம் என கூறிக்கொள்ளும் உங்களை உலகத் தமிழர்கள் தூற்றுவதை எவராலும் தவிர்க்க முடியாது.

ஒன்றை நினைவில் வைத்திருங்கள் சிங்களத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தகுந்த பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை.

நன்றி

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்


Comments