ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் அறிவுரை கூறுவதாக, கருத்துக் கூறுவதாக நினைத்துக்கொண்டு பலரும் அவரவர் பாணியில் இஷ்டத்துக்குக் கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டுரிமைக்காகப் போராடும் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பயங்கர வாதிகளாகச் சித்திரிப்பது சிறுபிள்ளைத்தன மானதாகும்.
(1) இரு தரப்பாரும் போரை நிறுத்தவேண்டும் என்று இதோபதேசம் செய்து வருகிறார்கள்.
போராளிகள் அங்கு போராடுவது அவர்களின் மக்களைக் காப்பாற்றுவதற்காக. அந்த மக்களும் தங்களின் வாழ்வுரிமைக்காக, மானவாழ்வுக்காக உயிரைத் துச்சமாகக் கருதி 24 மணிநேரமும் களத்தில் நிற்பவர்கள் போராளிகள்தான் என்ற உண்மையில் உண்மையாகவே இருக்கிறார்கள். உறுதியாகவும் உள்ளனர்.
ஈழத் தமிழர்கள் தங்களுக்காகப் போராடும் போராளிகளின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாலும், நல்லெண்ணத்தாலும், உண்மையிலே போராளிகள் போராடி வருவதாலும், விடுதலைப்புலிகளையும், ஈழத்தமிழ் மக்களையும் பிரிக்கவே முடியாது என்ற உண்மையான கண்ணோட்டத்தைப் புரிந்து கொண்டால், விடுதலைப்புலிகள்மீது பழி சுமத்துவது அபாண்டமே என்பதைப் புரிந்துகொள்வர்.
(2) போரை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை என்றும், அரசியல் தீர்வு காணப்படும் என்றும் கதைக்கின்றனர்.
நோர்வேயின் முயற்சியால் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் நின்றிருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை முதலில் மீறியவர்கள் யார்? தன்னிச்சையாக இலங்கை அரசுதானே போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பின் வாங்கியது? இந்த நிலையில், விடுதலைப்புலிகளையும், சிங்கள அரசையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது குற்றமேயாகும்.
(3) விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தால்தான் பேச்சுவார்த்தை என்பதும் முன்வைக்கப்படுகிறது.
ஏதோ விடுதலைப்புலிகள் போர் வெறிகொண்டு சிங்கள இராணுவப் படையைத் தாக்குவதாக நினைத்துக்கொண்டு இதுபோன்ற நிபந்தனையை முன்வைக்கின்றன.
உண்மை என்னவென்றால், இலங்கையில் தமிழர்கள் எடுத்த எடுப்பிலேயே எந்த ஆயுதத்தையும் தூக்கிக்கொண்டு முன்வரவில்லை.
ஈழத் தந்தை என்று மதிக்கப்பட்ட செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட அறவழிப் போராட்டத்தை அலட்சியப்படுத்தியோடு அல்லாமல், அந்த அகிம்சைவாதிகளை அரசின் அதிகாரபலம் கொண்டு அடித்துத் துவைத்தனர் என்ற அரிச்சுவடி தெரியாதவர்கள்தான் தன் மனம் போன போக்கில் விடுதலைப்புலிகளால் தான் பிரச்சினை என்று பொறுப்பற்ற முறையில் கருத்துகளைக் கூறிக்கொண்டு திரிகின்றனர்.
(4) தமிழுக்கு ஆட்சி மொழித் தகுதி பறிக்கப்பட்டதிலிருந்து தமிழ் மாணவ, மாணவிகளுக்குக் கல்வியில் பாரபட்சம் காட்டியதுவரை எடுத்துச் சொன்னால், அது ஒரு பெரிய தொகுதியாகவே நீட்சி அடையும்.
ஈழத் தமிழ்த் தலைவர்கள் சாத்வீகப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் உலகப் புகழ்பெற்ற தமிழ் நூலகம் சிங்கள வெறியர்களால் கொளுத்தப்பட்டு சாம்பலாக்கப்பட்டது என்கிற விபரம் எல்லாம் தெரியாமல், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற முறையில், வெறுப்பு நஞ்சைக் கக்கும் வகையில் வஞ்சகமாகப் பேசுகின்றனர். எழுதியும் வருகின்றனர்.
தமிழர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்ட நிலையிலும், சிறையில் இருக்கும் தமிழர்களுக்குக் கூடப் பாதுகாப்பு இல்லை என்ற கொடுமையான சந்தர்ப்பத்திலும், தமிழ்ப் பெண்கள், மானம், மரியாதையோடு வாழ முடியாது, சிங்கள வெறித்தனத்தின் உடல் பசிக்கு தமிழ்ப் பெண்களின் உடல் இரையாக்கப்படுகிறது என்ற கொடுமையான காலகட்டத்தில்தான் அங்கே போராளிகள் உருவாகவேண்டிய நிலையும், ஆயுதங்களைத் தூக்கவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது என்பதை மறந்துவிட்டு, நாட்டுரிமைக்காகப் போராடும் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பது சிறுபிள்ளைத்தனமானதாகும்.
இந்தப் பிரச்சினையில் பார்ப்பனர்களும், ஜெயலலிதாக்களும், காங்கிரஸ்காரர்களும், குறிப்பிட்ட இடதுசாரிகளும் போராளிகள்மீது அபாண்டம் பேசுவது கண்டிக்கத் தக்கதாகும்.
Comments