பாதுகாப்பு பகுதிகளுக்கு வருகின்றவர்கள் படையினரால் வடிகட்டப்படுகின்றனர் பலர் காணாமல் போயுள்ளனர் - செல்வம் அடைக்கலநாதன்

பாதுகாப்பான பிரதேசங்களுக்கு வருகின்றவர்கள் படையினரால் வடிகட்டப்படுகின்றனர். பலர் காணாமல் போயுள்ளனர். பலர் சித்திரவதைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது, வன்னியை நோக்கிய படை நகர்வுகளும் உறவுகளின் அல்லல்பாடுகளும் நிலமீட்பின் கொண்டாட்டங்கள் இங்கும் இந்த நேரத்திலேயே பேசுவதையிட்டு கவலையடைகின்றேன்.

மனித நேயம் என்பதற்கு அர்த்தமே இல்லை, குறுகிய நிலப் பரப்பிற்குள் மூன்றரை இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்ட இடத்தின் மீதே அதுவும் அவர்களின் தலையின் மீதே குண்டுகள் விழுகின்றன.

விருந்தோம்பலின் பரம்பரை இன்று கஞ்சிக்காக சிரட்டையை ஏந்தி நிற்கின்றது. ஐக்கிய இலங்கைக்குள் வாழும் தமிழ் இனம் அல்லல்பட்டு கொண்டிருக்கின்றது. சோமாலியாவிற்கு பிறகு இங்கே இந்த நிலைமை இருக்கின்றது.

காயங்கள், சிறு காயங்கள் அல்லது கைகள், கால்கள் துண்டாடப்பட வேண்டும். விறைப்பு ஊசி போடப்படாமல் கைகளும் கால்களும் வெட்டப்படுகின்றன. கொடுமையிலும் கொடுமை நடக்கிறது.

காயமடைந்தவர்களுடன் வருபவர்கள் அகதி முகாமிற்கு கொண்டு செல்லப்படுகின்றனர். பாதுகாப்பு பிரதேசங்களுக்கு வருகின்ற உறவுகள் வடிகட்டப்படுகின்றனர். பலர் காணாமல் போவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன. காணாமல் போயுள்ளனர்.

அகதி முகாம்கள் இன்னும் 10 வருடங்களுக்கு நீடிக்கும் சிலாவத்துறையில் என்ன நடக்கின்றதோ அதே நிலைமைதான் ஏற்படும். விசாரணைகளின் பெயரில் சித்திரவதை, வந்தால் காணாமல் போதல், 10 வருடங்களுக்கு அகதி வாழ்க்கை என்றால் எவ்வாறு அவர்கள் உங்கள் அரவணைப்பின் கீழ் வருவார்கள்.

சர்வதேச கண்காணிப்பு வேண்டும். ஐ.நா. அதற்கு உறுதி வழங்கினால் மட்டுமே அவர்கள் வருவார்கள். யாருமே பேச முடியாத நிலையில் மக்கள் அடக்கப்படுகின்றனர். இதுவா ஜனநாயகம், சுதந்திரம், வன்முறை, அடக்குமுறை தொடருமாயின் எப்படி வருவார்கள். வசதியாக வாழ்ந்த மீனவர்கள், விவசாயிகள் இன்று வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். விடுவிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.


Comments