வன்னிப் பகுதி வாழ் மக்களுக்கான உணவு விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. நாளாந்தம் அழிந்துகொண்டிருக்கும் அழிக்கப்படும் தமிழ் உறவுகளை முற்றாக அழிக்கச்செய்வதற்கான முன்ணோட்டமா இது என்று கேட்கத் தோன்றுகிறது.
வன்னிக்கு உணவுப் பொருள்களை எடுத்துச் செல்வதில் அரசாங்கத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான உலகஉணவுத் திட்டத்திற்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து எடுத்துச்செல்லப்படும் உணவுப் பொருள்களை எங்கு வைத்து விநியோகிப்பது என்பதனை ஐ.நாவின் உலக உணவுத் திட்டம் தெரிவிக்கத் தவறியதாலேயே வன்னியில் உணவு விநியோகத்தை இடைநிறுத்த நேர்ந்துள்ளதாக அரச தரப்பில் ஒருபுறம் காரணம் காட்டப்படுகிறது. வன்னி மக்களுக்கு உணவு விநியோகம் மேற்கொள்ள தமக்கு வெறுமனே நான்கு மணிநேரம் மட்டுமே தேவை என்று உலக உணவுத்திட்ட அதிகாரிகள் தரப்பில் மறுபுறத்தில் கூறப்படுகிறது.
இந்த இரண்டு நிலைப்பாடுகளையும் நோக்கினால் குறை அல்லது இயலாமையாரிடம் உண்டு என்பதனைத் திட்டவட்டமாகக் கூறமுடியாதவிரல் சுட்டிக் காட்டமுடியாத ஒரு குழப்பமும் மயக்கமும் எவருக்கும் உண்டாகும்.
முல்லைத்தீவில் உள்ள குழப்பகரமான நிலை காரணமாகவும் உணவுப் பொருள்களை விநியோகிப்ப தற்காக, தொடரணியை எடுத்துச் செல்வதற்குப் பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமையினாலும் இந்த நிலை உருவாகிவிட்டதாக காட்டுவதற்கு அரச தரப்பு முயல்கிறது.
அதாவது நியாயப்படுத்த முயல்கிறது!
பாதுகாப்புப் படையினரும் விடுதலைப் புலிகளும் இப்போது மிக நெருக்கமாக நின்று கடும் மோதலில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் மனிதாபிமானத் தொடரணியை அதாவது உணவுப் பொருள்களை எடுத்துச்செல்லும் வாகனங்களை உரிய விநியோக இடத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்லமுடியும் என்பது எமக்குத் தெரியவில்லை என்றும் அரசு கூறுகிறது.
பாதுகாப்புக் குறித்த எந்த உத்தரவாதமும் இல்லை. அதனால் நிலைமை சீராகும் வரை உணவு விநியோகத் தொடரணியை இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளோம் என்றும் வெகு "சிம்பிளாக" தனது முடிவை வெளிப்படுத்தி இருக்கிறது அரசு.
கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது போன்று, உணவு விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடங்கலை நீக்கக்கூடிய மருந்து அரசாங்கத்தின் கைகளிலேயே இருக்கும்போது இப்படிக் கூறுவது எந்த விதத்தில் பொருந்தும்?
விடுதலைப் புலிகளை குறுகிய நிலப்பரப்பில் முடக்கிவிட்டோம். சொற்ப எண்ணிக்கையிலான பேரே எஞ்சியிருக்கின்றனர் என்று கூறிக்கொண்டே போரைத் தீவிரப்படுத்தி இருப்பது அரசதரப்புத்தான். நாளாந்தம் படைத்தரப்பு வெளியிடும் மோதல் தொடர்பான அறிக்கைகள் அதனையே உணர்த்துகின்றன.
வன்னிவாழ் தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல், அவர்களை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகச் சித்திரித்து நாளாந்தம் அகோரமான ஷெல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களோடு விமானக் குண்டு வீச்சுக்களும் நடத்தப்பட்டு நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்.
வன்னி மக்களை அழிப்பதில் காட்டப்படும் வேகம், அவர்களைக் காப்பாற்றுவதில் இல்லை. நொண்டிச் சாட்டுக்களைக் காட்டி அதனை மேலும் தீவிரமாக்குவதில் அரசு நாட்டம் கொண்டுள்ளதோ என்ற சந்தேகம் எவருக்கும் எழும்!
மனம் உண்டானால் இடமுண்டு. வன்னி மக்கள் பட்டினியால் செத்துமடியும் பாவம் தன்னைச் சேரக்கூடாது என்று அரசாங்கம் நினைத்தால், மனிதாபிமான உணர்வு மேலெழுந்தால், உணவுப் பொருள் தொடரணியை உரிய இடத்துக்கு எடுத்துச்செல்வது ஒன்றும் இயலாத காரியமாக அமையாது.
உணவு விநியோகத் தொடரணியை எடுத்துச் செல்லத் தமக்கு நான்கு மணித்தியாலங்கள் போதும் என்று உலக உணவுத் திட்ட அதிகாரிகளும் கூறுகின்றார்கள்.
அந்த நான்கு மணிநேரத்துக்கு மோதல் தவிர்ப்பு ஒன்றை அறிவித்து உலக உணவுத் திட்டம், செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு ஆகியவற்றின் ஊடாக விடுதலைப் புலிகளின் சம்மதத்தையும் பெற்று மக்களையும் பட்டினிச் சாவில் இருந்து காப்பாற்றும் வழியுண்டு; காப்பாற்றலாம்.
இத்தகைய ஒரு மனிதநேய முயற்சியில் ஈடுபடாமல், உணவு விநியோகத் தொடரணியை நிறுத்தி வைத்திருப்பது எந்த வகையிலும் ஏற்புடையதாகாது.
வன்னி மக்களைப் பட்டினி போட்டு சாகடித்ததாக, அழித்ததாக அவப்பெயர் வாங்கக்கூடாது என்று உண்மையிலேயே அரசு எண்ணுமேயானால், இது பெரும் கடினமான பிரச்சினைக்குரிய விவகாரமே அல்ல. இது குறித்து அரசு விரைந்து முடிவுசெய்து செயலாற்ற வேண்டும்.செயலில் இறங்குமா, என்ன?
Comments