கருணாநிதியை வற்புறுத்தும் திருமா!

''காங்கிரஸ் இல்லாத அணியை ஏற்படுத்த வேண்டும்..

''ராமதாஸ், வைகோ, தா.பாண்டியன், திருமாவளவன் என பலரும் பெற்றெடுத்திருக்கும் புது அமைப்பு - 'இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்'! தி.மு.க. எதிர்ப்பு அணி என்று அறிவிக்காத குறையாகவே இது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் திருமாவளவன் மட்டும் தி.மு.க. கூட்டணியில் இருக்க, அவர் மீது கருணாநிதி கடும் கோபம் கொண்டிருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் சொல்கின்றன. இதற்கு ஆதாரமாக, 'மருத்துவமனைக்குச் சென்ற திருமாவிடம் முகம் கொடுத்துப் பேசாமல் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார் கலைஞர்' என்று சிறுத்தைகளே சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலை யில், 'காங்கிரஸின் கொள்கை பரப்பு இயக்கமாகவே மாறி விட்ட தி.மு.க-வோடு கூட்டணியை முறித்துக்கொள்வது நல்லது' என்று திருமாவை அவருடைய வட்டாரங்கள் நெருக்கத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. 'அவசரப்பட்டு சிறுத்தைகளையும் இழந்துவிடக் கூடாது' என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் என்றும், அவரே திருமாவைத் தேடி வந்து பேசிவிட்டுப் போனதாகவும்கூட சொல்லப்படுகிறது.

இவ்வளவு யூகங்கள் றெக்கை கட்டிப் பறக்கும் நிலையில், 'தி.மு.க. கூட்டணியில் சிறுத்தைகள் நிலைக்குமா?' என்ற கேள்வியோடு திருமாவை சந்தித்தோம்.

''காங்கிரஸைத் தமிழகத்திலிருந்து முற்றாக அழித்துவிட வேண்டும் என்று நாங்கள்

எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! காங்கிரஸை விமர்சிக்காமல், தனிமைப்படுத்தாமல் இந்திய அரசின் ஈழத் துரோகப் போக்கைக் கட்டுப்படுத்த முடியாது. காங்கிரஸ் எதிர்ப்பை பலமுறை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் நான், இங்கே கலைஞருக்கும் சில கேள்விகளை எழுப்ப ஆசைப்படுகிறேன் - ஒரு இயக்கத்தின் தலைவராக அல்ல, ஒரு தமிழனாக!

தனிப்பட்ட முறையில் ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் உண்மையான அக்கறையோடு கலைஞர் இருக்கிறார் என்பதை நான் மறுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் மிகத் தீவிரமான முடிவை எடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அந்த முயற்சிகள் எல்லாமே முறியடிக்கப்பட்டு வருவதாக உணர்கிறேன். அனைத்து எம்.பி-க்களும் பதவி விலகுவது என்ற முடிவும், 'ஆட்சியை மட்டுமல்ல... உயிரை இழக்கவும் தயார்' என்ற அறிவிப்பும், அண்மையில் சட்டமன்றத்தில் 'இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள்' என்ற தீர்மானமும் நமக்குச் சொல்வதென்ன? ஈழத் தமிழர்களுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என்கிற முதல்வரின் மனநிலையைத்தானே?

என்னைப் போன்ற தமிழ் உணர்வாளர்கள் அவரை நேரில் சந்திக்கும்போது, 'மத்திய அரசிடம் எவ்வளவோ சொல்லியாகிவிட்டது. எதற்கும் பதில் இல்லை. நான் உண்ணாவிரதம் இருப்பது மட்டும்தான் மிச்சம். அதற்கும் தயாராக இருக்கிறேன்' என்று அவர் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதைத்தான் காட்டுகிறது. ஆனால், அவர் எடுக்கும் முடிவுகள் எல்லாமே அவருக்கு எதிரான முடிவுகளாகவே போய்விடுகிறது. அவற்றுக்குக் கலைஞர் காரணமா என்றால், இல்லை என்பதுதான் என் பதில். அப்படியானால், கலைஞரைக் கட்டுப்படுத்தி, அவருடைய வேகத்துக்குத் தடைபோடும் சக்தி எது? டெல்லியிலிருந்து கிளம்பும் சக்தியா? அல்லது, அவருக்குப் பக்கத்தில் அவ்வப்போது தென்படும் காங்கிரஸ் தலைவர் களா? இதற்கு கலைஞர் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட் டிருக்கிறது. ஒவ்வொரு தமிழனும் அவரிடம் இந்த பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். அவர் சொல்லும் பதிலில்தான் கூட்டணிக்குள் சிறுத்தைகள் தொடர முடியுமா... இல்லையா என்பதைத் தெளிவாக்கும்.

'இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்' அ.தி.மு.க. அணி சார்புடைய ஒரு இயக்கம் என்ற கருத்து நிலவுவது உண்மைதான். தி.மு.க. எதிர்ப்பு நிலைப்பாடுகளைக் கொண்ட கட்சிகளான ம.தி.மு.க., கம்யூனிஸ்ட், நெடு மாறன் இயக்கம் தவிர, தி.மு.க. அணியில் இல்லாத பா.ம.க-வும் அந்த இயக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது. தி.மு.க-வுக்கு எதிரான இயக்கம் இது என்றுதான் மக்கள் நம்புகிறார்கள். இப்படி ஒரு இயக்கத்தில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்துக்கொண்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகளும் இடம் பெற்றிருப்பதால், நாங்களும் தி.மு.க. எதிர்ப்பு நிலையை மேற்கொண்டு அ.தி.மு.க. அணி பக்கம் சாய்ந்து விட்டோம் என்று கருதிவிடவும் இடமுண்டு.

உண்மையில், தேர்தல் அணி சேர்க்கை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் யாரும் பேசவில்லை; பேச மாட்டோம். விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸோடு இணைந்து செயல்பட முடியாது என்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கும் அதே நேரத்தில், தி.மு.க-வோடு இணங்கிச் செயல்படுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று நம்புகிறோம். காங்கிரஸின் நெருக்கடியால் தி.மு.க. அணியிலிருந்து நாங்கள் வெளியேற்றப்பட்டாலும் கவலையில்லை. எங்கள் தனித்தன்மையை இழக்காமல் தேர்தலை சந்திப்போம். இனமான உனர்வுள்ள தமிழர்கள் எங்களைக் கைவிட மாட்டார்கள்!''

''காங்கிரஸோடுதான் தி.மு.க. கூட்டணி தொடருமானால், உங்கள் நிலைப்பாடு என்ன?''

''1965-ம் ஆண்டு காங்கிரசுக்கு எதிராக தமிழகத்தில் பதினோரு நாட்களில் அறுபத்து மூன்று பேர் உயிரிழந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மலர்ந்ததுதான் தி.மு.க. ஆட்சி. இன்று அந்த ஆட்சி நடந்துகொண்டிருப்பதும் அன்று விழுந்த விதையால்தான்தான். 65-ல் காங்கிரசுக்கு எதிராக எவ்வாறு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு அலை இருந்ததோ... அதைவிடப் பன்மடங்கு வெறுப்பும், எதிர்ப்பும் தற்போது நிலவுகிறது. ஒற்றை உயிரைக் காரணம் காட்டி, பல லட்சம் உயிர்களை பலியாக்குவதற்கு முழுக் காரணமும் பொறுப்பும் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் ஆட்சியும்தான் என்பதை தமிழ் இனம் அறிந்துள்ளது. காங்கிரஸ் அல்லாத ஒரு அணியை தி.மு.க. தலைமையில் உருவாக்குவது அவசியம். ஈழத்தமிழ் இனம் அழிவதற்குள், அப்படியரு கொள்கை உறுதிமிக்க அணியைத் தேர்தல் அணியாகக் கட்டமைக்க கலைஞர் முன்வர வேண்டும். அந்த வரலாற்றுக் கடமையை அவர் இன்னும் தட்டிக் கழித்துக்கொண்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல!''

''பிரபாகரனை 'சர்வாதிகாரி' என தி.மு.க. செயற்குழுவில் கருணாநிதி சொன்னது சரிதானா?''

''கலைஞர் எப்போதுமே புலிகளை ஆதரித்தது இல்லை. ஆனால், அவரைப் புலி ஆதரவாளர் என்று அ.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள் சித்திரித்து அவருடையஆட்சியைக் கலைத்திருக்கிறார்கள். கலைஞரின் புலி ஆதரவுத் தோற்றத் தால் அவருக்கு வீண் பழியும், பாதிப்புகளும் வந்து சேர்ந்திருக்கின்றன. அதிலிருந்து தற்காத்துக்கொள்ளவே செயற்குழுவில் பேசியிருக்கிறார். அதுபோன்ற கருத்துகளைத் தொடர்ந்து சொல்லிவருகிறார்.

பிரபாகரன் முன்பொரு முறை அளித்த ஒரு பேட்டியில், தன்னை சர்வாதிகாரி என்று சொல்லிக்கொண்டதையும் கலைஞர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அந்தப் பேட்டி 1986-ம் வருடம் வெளிவந்த பேட்டி. அந்தக் காலகட்டங்களில் இருந்த புலிகளின் கட்டமைப்பைப் பார்க்கவேண்டும். அந்த சமயத்தில், 'புரட்சிகரமான மாற்றங்களைத் தக்க வைத்துக்கொள்ளவும் நிலைப்படுத்தவும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவை' என்று பிரபாகரன் சொல்லியிருந்தார். பிரபாகரன் சொன்ன இந்த வார்த்தைகள், லெனின் சொன்ன வார்த்தைகள்தான். ஆனால், ஹிட்லருக்கு இணையான - ராஜபக்ஷேவைப் போன்ற - இனவெறியும் அதிகார வெறியும்கொண்ட அடக்குமுறை சர்வாதிகாரம் என்ற பொருளில் அதை பிரபாகரன் சொல்லவில்லை. அடிப் படையில் பிரபாகரன் புரட்சிகர ஜனநாயகச் சிந்தனை யாளர், மார்க்சியவாதி. கலைஞர் வர்ணித்ததுபோல சர்வாதி காரி இல்லை!''

- எஸ்.சரவணகுமார்
படம்: வி.செந்தில்குமார்

Comments