ஈழம் - நோம் சாம்ஸ்கிக்கு நம் பதில்

இலங்கையில் நடக்கும் போர் பற்றி நோம் சோம்ஸ்கி கூறியவற்றுக்கு பதில்

நண்பர்கள் யாவர்க்கும்

ஈழப்போரில் தமிழ்மக்கள் அனுபவித்துவரும் சொல்லொணாத் துயர் நம் ஒவ்வொருவரையும் மனத்தின் அடியாழத்தில் தாக்கியிருக்கிறது.

உலகில் எங்கு தேசிய இனங்கள், வறிய நாடுகள் தங்கள் உரிமைக்குரலை எழுப்பி அதற்காக ஒடுக்கப்பட்டாலும் வல்லரசுகள் சாமானிய மக்கள் மீது தாக்குதல் நடத்தினாலும் அதைக் கண்டித்துக் குரல் எழுப்பும் வரிசையில் இன்று முக்கியமானவர் நோம் சாம்ஸ்கி. தவிர, உலகின் பெயர்பெற்ற மொழியியல்-அறிஞர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் வரிசையில் இருப்பவர்.

சாம்ஸ்கி, உலகின் பல்வேறு மக்கள் போராட்டங்களை ஆதரித்து எழுதுபவர், அமேரிக்க அரசின் வெளியுறவுக்கொள்கையைத் தொடர்ந்து விமர்சித்து வருபவர். செயல்பாட்டுக்கு அஞ்சாத அறிவுஜீ்வி. கிழக்குத் திமூர் தொடங்கி காஸாப்பகுதி வரை தொடர்ந்து போராட்டங்களைக் கவனித்து, தம்முடைய கருத்துகளை அறிவுலகம் முன்பு வைத்து, அரசுகளின் கொள்கைகளை அம்பலப்படுத்தி அவற்றை மாற்ற முனைபவர்.

இவர், இலங்கையிலிருந்து வெளிவரும் ஸ்ரீலங்கா கார்டியன் பத்திரிகைக்குத் தொலைபேசிவழி பேட்டியளித்திருக்கிறார். அந்தப்பேட்டி கண்ட எரிக் பெய்லி என்பவர், சாதுர்யமாக, தம்முடைய இனவாதச்சார்புக்கு சாம்ஸ்கியைப் பயன்படுத்த முனைந்திருக்கிறார். சாம்ஸ்கியின் பதில்களை வாசிக்கும்போது அவர் இதை முழுமையாக உணர்ந்திருப்பதாகக் கூற முடியவில்லை!

சாம்ஸ்கியின் பேட்டியை கீழ்க்கண்ட இணைய தளங்களில் வாசிக்கலாம்:

Z-net
Sri Lanka Guardian
Countercurrents


பேட்டிகண்டவரின் நோக்கத்தை சாம்ஸ்கிக்கு அறிவுறுத்தவும் இலங்கைப்போர் தொடர்பாக ஈழத்தில் நடக்கும் உண்மை நிலைகளை அவர் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் நோக்கத்தோடும் வந்திருக்கிறது நம் பதில். திணை இசை சமிக்ஞையில் நடந்த உரையாடலை ஒட்டிப் பலரின் கூட்டுமுயற்சியில் உருவாகியிருப்பது இந்த பதில்:

Response to Professor Noam Chomsky on his recent comments on the ongoing war in Sri Lanka

சாம்ஸ்கி, தமிழுக்கு அந்நியர் அல்லர். புதிய கண்டுபிடிப்புகளைச் செய்த மொழியியல்-அறிஞர் என்ற நிலையில் தமிழறிந்த மாணவர்களைப் பெற்றவர். மறைந்த தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரின் மாணவர்கள் மேற்படிப்புக்காக சாம்ஸ்கியிடம் சென்று மொழியியல் கற்றிருக்கின்றனர். ஆக, சாம்ஸ்கி, தமிழின் நீண்ட மொழியியல்-மரபு பற்றி அறிந்தவர். தவிர, அமெரிக்க அரசின் போர்வெறியைக் கண்டிக்கும் சாம்ஸ்கியின் பேட்டிகள், கட்டுரைகள்
தமிழாக்கம் செய்யப்பெற்றிருக்கின்றன. சாம்ஸ்கி, இந்தியாவுக்கு அந்நியரல்லர். அமெரிக்க ராணுவம் தலைமைதாங்கி நடத்திய போரைக் கண்டித்து சென்னையில் உரையாற்றியிருப்பவர்... இந்த நிலையில், ஈழம் பற்றிய பல்வேறு பரிமாணங்களை அவர் கவனத்துக்குக் கொண்டுசெல்வதற்கான சிறு முயற்சியாக உருவானதே இந்த பதில்.

ஈழம் குறித்து நமக்குள் பல்வேறு அரசியல்-மாறுபாடுகள், முரண்பாடுகள் இருக்கலாம். அவை அப்படியே இருக்கட்டும். ஆனால் ஈழம் பற்றி உருவாக்கப்படும் கருத்துப்பரவலில், அதன் இன்றைய உண்மை நிலவரத்தை உலகுக்குச் சொல்வதில், நாம் அனைவர்க்கும் குறைந்தபட்சப் பொறுப்புண்டு. அந்தப்பொறுப்பின் அடிப்படையில் வந்திருக்கும் இந்தப்பதில் - இதோ உங்கள் பார்வைக்கும். ஆங்கிலத்தில் உள்ள இந்தப்பதிலுக்கு, இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் இணையத்தில் எழுதும் நண்பர்கள் என உங்கள் அனைவரிடமும் கையெழுத்து பெற்று நம்முடைய கூட்டுக்குரலாக வைப்பதே நம் நோக்கம். விரைவில் சாம்ஸ்கியின் பேட்டி, பதில் இரண்டும் தமிழாக்கம் செய்யப்பட்டுவிடும்.

நீங்கள் உடன் செய்யவேண்டியவை:

1. ஒரேஒரு மின்-அஞ்சல் எழுத வேண்டும். அவ்வளவுதான். அதன் subject பகுதியில் I agree with this response என SUBJECT என எழுதி, response2chomsky@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

2. மின்-அஞ்சலில் உங்களைப்பற்றி - துறை, பணியாற்றும் களம் (அதாவது எழுத்தாளர், அரசியல் களப்பணியாளர் என்பது போல) - ஒரு சிறுகுறிப்பையும் எழுதுங்கள். இது அறிக்கையை அதிகக்கவனம் பெறச்செய்யும்.

2. சாம்ஸ்கி-யின் பேட்டியை, அதற்கான பதிலை முழுமையாக வாசித்த பின் உங்கள் ஒப்புதலை அனுப்புங்கள்.

3. வாய்ப்புள்ள நண்பர்கள் தங்களுக்கு அறிமுகமான பிற நண்பர்கள் மற்றும் ஈழப்பிரச்னையில் அக்கறை உள்ளவர்களிடம் இந்த நிலைப்பாட்டை விளக்கி ஒரே அச்சுப்பிரதியில் கையெழுத்து பெற்று, கையெழுத்திடும் நண்பர்கள் பற்றிய சிறுகுறிப்புடன்,
அதனை ஸ்கான் செய்து அனுப்பி வையுங்கள்.

4. வரும் திங்கள் 23 பிப்ரவரி, நேரம் 0630 GMT or 1230 IST or 0100 US Eastern Standard Time-க்குள் நீங்கள் உங்கள் கையெழுத்து மின்-அஞ்சலும் நண்பர்களிடம் கையெழுத்துப் பெற்ற அச்சுப்பிரதியின் ஸ்கேன் செய்யப்பட்ட பக்கமும் அனுப்பிவையுங்கள்.

இவற்றைத் தொகுத்து சாம்ஸ்கிக்கு அனுப்பிவைத்துவிட்டு உங்களுக்கும் நண்பர்கள் தெரியப்படுத்துவார்கள்.

response2chomsky@gmail.com -க்காக
நாகார்ஜுனன்

இதே அறிக்கையை ஜமாலன், பெருந்தேவி ஆகியோரின் வலைப்பக்கத்திலும் வாசிக்கலாம்.


Comments