தமிழீழ தமிழர்களை காப்பாற்றுங்கள், தீயில் வெந்து உயிர் தருகின்றோம் பாயில் சாய்ந்தது போதும் பாரில் போர் செய்து வெல்லுங்கள்

உலகமே ஈழத் தமிழரின் உயிரைக் காப்பாற்று! ஈழத் தமிழனின் நிரந்தரப் பாதுகாப்பை உறுதிசெய்! என்ற வேண்டுகோளை முன்வைத்து உயிரைக் கொடுத்துத் தமிழினம் போராடுகின்றது. பலவழிகளிலும் போராடிய தமிழர் உயிர்வாழ முடியாமல் உலகம் முழுவதும் சிதறி வாழும் தமிழர் இன்று இறுதியாகப் போராடுகின்றனர்.

தமிழீழத்திலே உயிர்களை ஈகம் செய்து போராடும் தமிழனின் நிலைமை உணர்ந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழரும் தமிழ்நாட்டில் வாழும் தமிழரும் புத்தெழுச்சியுடன் போராடி வருகின்றனர். இதில் ஈழத் தமிழரின் உயிர்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்காக தீக்குளிக்கின்றனர் என்றால் உலகம் தமிழரை இன்னும் என்ன நினைத்துக் கொண்டுள்ளது?

தீக்குளிப்பதென்றால் என்ன வெல்லம் சாப்பிடுவது போன்றதா? நாளாந்தம் சமைத்துண்ணும் மனிதர்களுக்கு தீயென்றால் என்ன செய்யும் என்பது தெரியாத விடயமா?

சுட்டெரிக்கும் தீயில் வெந்து கருகி உயிரைக் கொடுத்து உலகின் உறங்கியுள்ள கண்களைத் திறக்குமாறு வேண்டுகின்றனர் என்றால் அது சாதாரணமான விடயமா? எனவே இந்த விடயத்தை உலகம் நிச்சயமாகச் செவிமடுத்தே ஆக வேண்டும்.

ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டம் வெல்லப்பட வேண்டும் என்பதற்காகவும் அவர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் முதல்முதலாக தமிழ் நாட்டில் இஸ்லாமியத் தமிழர் ஒருவர் தீக்குளித்து உயிர் துறந்தார்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கொழுவ நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் பத்து வருடங்களின் முன்பாகச் சென்னைக்கு வந்து வாழ்ந்து வந்தவர். இவர் ஒரு ஊடகவியலாளர். ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டம் பற்றியும் அரசியல் ரீதியான அறிவும் கொண்டவர். எதுவுமே இல்லாத மன உந்தலில் அவரின் உயிரை மாய்த்துக் கொள்ளவில்லை. உருக்கமாகவும் அறிவு பூர்வமாகவும் மடலொன்றை வரைந்துள்ளார். அதனை உலகத் தமிழ்ச் சமூகமுமே உற்று நோக்க வேண்டும். இது போன்ற செயல்களைச் சாதாரண மனிதர்களால் செய்து விட முடியாது. சிந்தனைப் பரப்பில் ஆற அமர இருந்து அலசி ஆராய்ந்து தான் இப்படியான தியாகத்தையும் விடுதலை பற்றிய தெளிவையும் செய்து சரித்திரத்தில் அழியாத் தடமிட முடியும்.

உயிர் பிரிவதற்கு முன்னர் முத்துக்குமாருடன்; அவரிற்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் பேசியுள்ளார். அதன் போது, ‘நீ நல்ல அறிவாளியாக இருக்கின்றாய் ஏன் இந்த வேலையைச் செய்தாய்?” என்று கேட்ட போது ‘தமிழீழத்தில் பல அறிவாளிகளைக் காப்பாற்றுவதற்காகத் தான் இப்படி எனது உயிரைக் கொடுக்கத் துணிந்தேன்” என்று கூறியதைக் கேட்கையில் மெய்சிலிர்க்கின்றது.

முத்துக்குமாரின் உடலத்திற்கு முன் நின்று அவரின் தந்தையார் ‘எனது மகனைப் பிரிந்தது துயரம் தான். ஆனால், ஒரு இனத்தைக் காப்பாற்ற வேண்டுமென உயிரைக் கொடுத்ததை நினைக்கையில் பெருமையாக இருக்கின்றது” எனக் கூறியுள்ளார்.

முத்துக்குமாரின் தங்கை தமிழரசி அண்ணனின் தீக்குளிப்பிற்குப் பின்னர் துயரத்தைச் சுமந்தபடியே ‘எனது அண்ணன் எப்போதுமே தமிழ், தமிழீழம் என்றே பேசிக் கொண்டிருப்பான். அவன் சிந்தனை கடல் போல பெரியது. எதையுமே சிறிய கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டான். அவனை இழந்தது எங்களுக்குப் பெரிய இழப்பாக இருந்தாலும் தமிழர்களிற்காகத் தன் உயிரையே தியாகம் செய்ததை நினைக்கையில் ஆறுதல் அடைகின்றேன்” எனக் கூறினார்.

தமிழரசி கூறுவது போல் முத்துக்குமாரின் சிந்தனை கடல்போல் பெரியது தான். அவர் இறுதியாக எழுதி வழங்கிய மடலில், ‘களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே! விடுதலைப் புலிகளே! தாய்த் தமிழகம் உணர்வு பூர்வமாக உங்கள் பக்கம் தான் நிற்கின்றதுஇ வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகின்றது. ஆனால், என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே? ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். தமிழகத்தில் இருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம். அதுவரை புலிகளின் கரங்களைப் பலப்படுத்துங்கள். 1965 ஆம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகள் கையில் ஒப்படைத்ததால் தான். தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.”

இந்த மாதிரி அறிவு பூர்வமாக அறிக்கையிட முடிந்தவர் சாதாரண மனிதரல்ல. தமிழரையும் தாண்டி உலக சமூகம் சிந்திக்க வேண்டும். முத்துக்குமார் தமிழரின் உரிமையைக் கேட்ட போதும் குறுகிய வட்டத்துள் அவரின் சிந்தனையை மூட்டை கட்டி வைக்கவில்லை என்பதற்கு, அவரின் இறுதி மடலில் சிங்களவரின் பாதுகாப்புப் பற்றியும் அக்கறைப் பட்டுள்ளார்.

பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமாக அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழ் நாட்டிற்குள் தஞ்சம் புகுந்திருக்கும் சிங்களப் பத்திரிகையாளர்களிற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதிகளாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான கடவுச்சீட்டு குற்றச்சாட்டு நீக்கப்பட்டு அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

இது சிங்கள தேசத்தின் முகத்தில் அறைந்ததற்குச் சமன் காரணம் இப்படியான எழுத்தை சிங்களவர்கள் தமிழரிற்கு ஆதரவாகச் செய்தார்களா? அல்லது செய்வார்களா அந்த மடலில் தமிழ் மக்களை நோக்கியும் கேள்வியொன்றைக் கேட்கின்றார்.

‘இந்தியாஇ பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும் யப்பான் கூடுதலாகப் பணம் கொடுத்தும் இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றதென்றால் நீங்கள் உங்கள் மௌனத்தின் மூலமாகவும் பாரா முகத்தின் மூலமாகவும் அதே கொலையைத் தான் செய்து கொண்டிருக்கின்றீர்கள்?”

முத்துக்குமாரின் முத்தான தகவல் திரட்டு தமிழர் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்துவதுடன் தமிழர் நிதானம் தவறக் கூடாது உறுதியாகப் போராட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது.

தூத்துக்குடி ரவி
மணல்மேடு சீர்காழி ரவிச்சந்திரன் (வயது 45- காங்கிரசின் வட்டாரச் செயலாளர்)
மலேசியாவில் 27 மே 1982 பிறந்த ஈழத்தைச் சேர்ந்த ராஜா

என தீக்குளிப்புக்கள் தொடர்கின்றன.

இதன் மூலமாக நாம் புரிந்து கொள்ளக் கூடியது என்னவெனில் தங்களுடைய உயிரையே துச்சமாக மதித்து தீயில் வெந்து கருகி உயிரைக் கொடுக்கின்றனரே….. இது ஏன் செய்யப்பட்டது.?

மனித நேயம், மனித உரிமை பற்றி ஓயாது பேசும் உலகின் கண்ணிற்கு ஈழத் தமிழன் படும்பாடு தெரியவில்லை. இதை வெளிப்படுத்த வேறு வழியே இல்லை என்று நினைக்கும் அளவிற்கு உலக சமூகம் தமிழரின் பாதுகாப்பைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இருந்துள்ளது. எனவே, உயிரைக் கொடுத்துப் போராடும் சமூகத்தின் நிலமையை உணர்ந்தவர்கள். உயிரை தீயில் உருக்கி ஊற்றிய பின்னரும் மௌனம் கலைக்காதது மிகுந்த வேதனை அளிக்கக் கூடியதே.

இதை விட உச்சமாக வேறு என்ன வழியில் போராட முடியும் உரிமையைக் கேட்டுப் போராடுவதற்கு தமிழரிற்கு மட்டும் உரிமை இல்லையா? உலகில் எத்தனை நாடுகள் சுதந்திரம் கேட்டுப் போராடி வென்றன அவற்றையெல்லாம் இந்த உலகம் ஏற்றுக் கொண்டது தானே? ஈழத் தமிழர் விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்று கூறிக் கொண்டே தமிழினத்தை அழிக்கும் சிங்களப் பேரினவாதிகளிற்கு அளவிற்கதிகமான நம்பிக்கையுடன் துணை போகும் இந்தியா சுதந்திரம் கேட்டுப் போராடிய நாடு தானே? ஏன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை செல்லாததாகப் பார்க்கின்றது?

நீதி, நேர்மை, உண்மை நிறைந்த போராட்டம் என்பதனால் தானே தீக்குளித்தும் போராடினார்கள்? இந்த உயிர்களை எந்த நாட்டவரும் விளையாட்டாக எண்ணி விடாதீர்கள். தனிப்பட்ட நலன் இருந்தமையால் தற்கொலை செய்து விட்டனர் என்று குறிப்பிட்ட தீக்குளித்த தியாகிகளை யாராவது கூறி விடாதீர்கள். சொந்த நலனைத் துறந்து சொந்தங்களை விட்டுவிட்டு இனத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்காக மரணிப்பது நெஞ்சைக் கனப்படுத்துகின்றது.

ஈழத் தமிழர்கள் களத்தில் போராடி உயிர்களை ஈகம் செய்தார்கள். தமிழர் படுகொலை செய்யப்பட்ட போதும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. அவற்றையும் சாதாரணமாக நோக்கி விட முடியாது. களத்தில் நடப்பதற்கும் களத்திற்கு வெளியே நடப்பதற்கும் இடையில் வேறுபாடுண்டு. இதில் களத்திற்கு வெளியே இப்படிச் சாவைத் தழுவியவர்கள்
இன்றைய காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களாக உள்ளனர்.

இந்தத் தாக்கம் தமிழரின் மனங்களை வெகுண்டெழச் செய்ய வேண்டும். சிங்களப் பேரினவாதமும் அதற்குத் துணைபோகும் வல்லாதிக்கம் கொண்ட நாடுகளும் மலைத்துப் போகும் அளவிற்கு உலகத் தமிழ்ச் சமூகம் போராட்டத்தை வேகப்படுத்தவில்லையென்றால் களத்தில் கொடுக்கப்பட்ட உயிர்களிற்கும் இன்று தீக்குளித்து உயிர்களை ஈகம் செய்தவர்களிற்கும் ஈடாக இலக்கை எட்டுவதில் கேள்வியைக் கேட்க வேண்டியது மட்டுமே தொக்கி நிற்கின்ற நிலமை ஏற்படும்.

உயிர்களை உருக்கி ஊற்றியவர்கள் உன்னதமான விடுதலையை மட்டுமே விரும்புகின்றனர் என்பதற்கு அவர்களின் இறுதி நேர பேச்சு தமிழரைத் தலைநிமிரச் செய்யும் என்பதில் குறைத்து மதிப்பிட முடியாது.

ஏமாற்ற நினைப்பவர்களிற்கு மத்தியில் எரிந்து உணர்வூட்டியவர்களை எண்ணுகையில் துயர் நெஞ்சை நெருடுகின்றது.

களத்திற்கு வெளியே உணர்வோடு போராடுங்கள். உயிரைக் கருக்கிப் போராடாதீர்கள். தீக்குளித்தவர்களை மதித்து வணங்கி வேண்டுகின்றேன்.

- கனகரவி -


Comments