"இன அழிவிலிருந்து தமிழ் மக்களை காப்பாற்றுங்கள்! அவர்களுடனே வாழ்ந்து வேண்டுகின்றேன்": ஐ.நா. செயலாளருக்கு தமிழ் நா.உ. மடல்

சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் இருந்து தமிழ் மக்களை காப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஐ.நா. செயலாளர் பான் கீ மூனுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கனகரத்தினம் அனுப்பிய மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு எனது பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான சதாசிவம் கனகரத்தினம் ஆகிய நான் தங்களிடம் விடுக்கும் பணிவான வேண்டுகோள்.

வன்னியில் நடைபெற்று வரும் போர் காரணமாக மன்னார் வவுனியா, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 15 ஆயிரம் தமிழர்கள், தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து, படையினரால் ஏவப்படும் எறிகணை வான் தாக்குதலினால் விரட்டப்பட்டு, முல்லைத்தீவு மாவட்டடத்தில் உள்ள மூன்று சிறு கிராமங்களில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் சிறு கொட்டகைகள் அமைத்தும், மர நிழல்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மக்கள் உயிர் வாழ்வதற்கான எந்தவிதமாக பாதுகாப்பும் இன்றி மரண பயத்தின் மத்தியில் மிகப்பெரும் ஆபத்தான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மக்கள் வாழும் கிராமங்களை மையமாக வைத்து சிறிலங்கா படையினரின் போர் வானூர்திகள் குண்டுகளை வீசியும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியும் வருவதால் ஒவ்வொரு நாளும் 100-க்கும் அதிகமான குழந்தைகள், முதியவர்கள், மகப்பேற்றுக்குரிய பெண்கள் என்று பலரும் கொல்லப்படுவதுடன் பலர் படுகாயம் அடைந்து அவையங்களை இழந்து வருகின்றனர்.

மருந்துவமனைகள் மீதும் எறிகணை, வான் தாக்குதல்களை நிகழ்த்தி 200-க்கும் அதிகமான நோயாளார்களையும் மருத்துவ பணியாளர்களையும் கொன்று குவித்துள்ளமையால் மருத்துவமனைகள் இயக்க முடியாமல் மிகச்சிறிய பகுதியில் மக்கள் வீதியோரங்களிலும் மர நிழல்களிலும் கால்வாய்க் கரையோரங்களிலும் மிக நெருக்கடியில் வாழ்வதால் சுகாதார வசதிகள் இன்றி தொற்று நோய்கள் பரவும் அபாயத்தையும், நுளம்புத் தொல்லை, பாம்பு கடி போன்ற உயிராபத்துக்களையும், எதிர்கொள்ள வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தப் பகுதிகளில் அரச அலுவலகங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் எதுவுமே இயங்காத நிலையில் உயிர் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் நாள்தோறும் இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட இடங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் மக்களை நோக்கி வான் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள் நிகழ்த்தி கொல்லப்படும் மக்களை புதைப்பதற்கு கூட அவகாசம் இன்றி விரட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்த பேரவலங்களுக்கு மத்தியில் அவலப்படும் மக்களோடு தான் நானும் எனது குடும்பத்துடன். அல்லற்பட்டுக்கொண்டிருக்கின்றேன்.

சீறி வரும் எறிகணைக் குண்டுகளுக்கும். வான் தாக்குதலுக்கும் முன்பாக நாடாளுமன்ற உறுப்பினரின் உயிரும் அப்பாவி மக்களின் உயிரும் அற்பமானதல்லவா?...

இந்நிலை இன்னும் சில நாட்கள் நீடிக்குமாக இருந்தால் இதனை எடுத்துச்சொல்வதற்கு கூட எவருமே இருக்க மாட்டார்கள் என்ற வேதனையான உண்மையை உங்களுக்கு நான் தெரியப்படுத்தியே ஆகவேண்டியுள்ளது.

ஆகவே, உங்களுக்கு சட்டபூர்வமாக அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இதற்கான முடிவினை உடனடியாக எடுக்க வேண்டும்.

போர் நிறுத்தத்தின் பின்னரே ஏனைய விடையங்கள் தொடரப்பட வேண்டும்.

ஆகவே, அப்பாவி மக்களின் உயிர்களை காக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comments