சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் இல்லாத அளவிற்கு மத்திய காவல் படையினர் உள்புகுந்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உட்பட அனைவரையும் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். ஏராளமான வழக்கறிஞர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். பத்திரிகையாளர்களையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை.
வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர்களுக்குச் சொந்தமான கார்கள், இரு சக்கர வாகனங்கள் காவல் துறையினரால் அடித்து நொறுக்கப்பட்டும் எரித்தும் சேதமாக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் காவல் துறை வெறித்தாண்டவம் ஆடியிருக்கிறது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் மத்திய காவல் படையை வரவழைத்து வழக்கறிஞர்களைத் தாக்கியதற்கான முழுப் பொறுப்பையும் தமிழகத் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறைத் தலைவர் ஆகியோர்தான் ஏற்க வேண்டும். இவர்கள் அனைவரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிகழ்ச்சி குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்.
வழக்கறிஞர்கள் மீது போடப்பட்டுள்ள பொய்யான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். தமிழக முதல்வரின் ஆணையின் பேரிலேயே அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்கள் என்பது உறுதி.
கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகமெங்கும் இடை விடாமல் போராடி வரும் வழக்கறிஞர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவிவிடுவதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானப் போராட்டத்தையே ஒடுக்கிவிட முடியும் என முதலமைச்சர் கருதுவாரானால் அது தவறு. உயர் நீதிமன்றத்தில் காவல்துறை மூட்டிய தீ தமிழகமெங்கும் பரவும் என எச்சரிக்கிறேன்.
Comments