பெப்ரவரி 10 அன்று CanadianHART இனைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் இலங்கைத் தீவில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை தொடர்பான விழிப்புணர்வினை பல்வேறு பல்கலைக்கழகங்களிடையேயும் ஏற்படுத்தும் வகையில் 'இனப்படுகொலையை நிறுத்துவதற்கான பயணம்' ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.300 000 இற்கு மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்களினைப் பிரதிநிதித்துவம் செய்யும் கனடிய மாணவர் கூட்டமைப்பு (CFS) மற்றும் சமாதானத்திற்கான கனடிய ஒன்றியம் (CPA)ஆகியவை ஆதரவு வழங்கும் இவ் இனப்படுகொலையை நிறுத்துவதற்கான பயணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தகவற் பரிமாற்ற நிகழ்வில் 50 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
CanadianHART இனது 'இனப்படுகொலையை நிறுத்துவதற்கான பயணம்' பெப்ரவரி 9, 2009 இல் ஆரம்பித்து இம்மாத இறுதிவரை முன்னெடுக்கப்படுகிறது. இதன் முதற்பகுதியில் கல்ஃப் (பெப்ரவரி 10), வாட்டர்லூ (பெப்ரவரி 11), லண்டன் (பெப்ரவரி 12) மற்றும் வின்ட்சர் (பெப்ரவரி 13) ஆகிய இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபடும் இப்பயணம் தனது இரண்டாவது பகுதியினை பெப்ரவரி 23,2009 அன்று ஆரம்பிக்கின்றது.
ஒன்ராரியே மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள கல்ஃப் பல்கலைக்கழகத்தைச் சென்றடைந்த இப் பயணக்குழு மாணவர்கள் அங்கு பல்வேறு அமைப்புக்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். மத்திய மாணவர் ஒன்றியம் (CSA), ஒன்ராரியோ பொதுமக்கள் விருப்பு ஆய்வுக் குழு (OPIRG-Guelph), கனடிய பொது ஊழியர்கள் ஒன்றியம் (CUPE 3913) மற்றும் கல்ஃப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் ஆகியன அவ்வமைப்புக்களாகும். பயணக்குழுவினர் 800 இற்கு மேற்பட்ட கைநூல்களை அங்கு விநியோகித்திருந்ததுடன் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தகவற் பரிமாற்ற நிகழ்விற்கும் அழைப்புக்களை விடுத்திருந்தனர். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தகவற்பரிமாற்ற நிகழ்வினை பல்கலைக்கழக ஊடகங்கள் பதிவுசெய்திருந்தன.
CanadianHart இன் மக்கள் தொடர்பாளரும் இப் பிரச்சாரப்பயணத்தை முன்னெடுப்பவருமான நிசாந்தன் விஜயராஜா கருத்து தெரிவிக்கையில், 'கடந்த ஒரு மாத காலமாக கனடிய தமிழ் மக்கள் சிறிலங்காவினால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் மனிதச்சங்கிலி, பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தல், சமாதானம் வேண்டிப் பிரார்த்தனை, உண்ணாவிரதப் போராட்டம், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எதுவாயினும், தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முடியாதவாறு சிறிலங்கா அரசு இனப்படுகொலையைத் தொடர்கிறது. இந்த பிரச்சாரப்பயணத்தின் மூலம் கனடிய மக்களைத் தட்டி எழுப்புவதன் மூலமாக சிறிலங்காவில் தொடர்ந்து நடைபெறும் இனப்படுகொலையை நிறுத்த முடியும் என நம்புகிறோம்" என்றார்.
Comments