சிறீலங்கா அரசானது தமிழ் மக்களின் உரிமை போரினை படைத்துறை ரீதியாக நசுக்கி விடுவதற்கு திட சங்கற்பம் பூண்டுள்ளது. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பிற்கு சிங்கள தேசத்தில் படித்த மக்கள் தொடக்கம் பாமர மக்கள் வரையிலும் பூரண ஆதரவை வழங்கி வருகின்றனர்.
வன்னி மண்ணில் நடைபெறும் கடுமையான வான்குண்டு தாக்குதல்களினாலும், எறிகணை வீச்சுக்களினாலும் சின்னம் சிறு குழந்தைகளும், பெண்களும், வயோதிபர்களும் என பெருமளவான மக்கள் சிதறுண்டு கொடுரமாக கொல்லப்பட்ட போதும், அதனை தமிழ் ஊடகங்கள் உலகிற்கு காண்பித்த போதும், உலகின் ஜனநாயகம் பேசும் நாடுகளிடம் இருந்து அதற்கு எதிராக சொற்ப நடவடிக்கைகளும் இல்லை.
குறிப்பாக இந்த கோர நிகழ்வு தென்னிலங்கையின் எந்த ஒரு மனித மனங்களையும் பாதிக்கவில்லை. மாறாக அதனை சந்தோசமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றது சிங்கள தேசம்.
வியட்னாம் போரின் போது அமெரிக்க படையினரின் குண்டு வீச்சுக்களின் அகோரங்களினால் தனது உயிரை காப்பாற்ற உடலில் உடைகள் கூட இன்றி நடுவீதியால் கதறியபடி ஓடிய சின்னஞ்சிறு பெண்குழந்தையின் கதறல் அமெரிக்காவையே உலுக்கியிருந்தது.
வியட்னாமில் அமெரிக்கா மேற்கொண்ட கொடூரமான போருக்கு எதிராக பல ஆயிரம் அமெரிக்க மக்கள் வீதிகளில் இறங்கி போராடியிருந்தனர். அந்த புகைப்படமும் உலகத்தின் விருதை பெற்று கொண்டது. ஆனால் கொடூரம் நிறைந்த சிறீலங்கா வான்படையின் குண்டு வீச்சுக்களினால் எத்தனையே சின்னஞ்சிறு குழந்தைகள் கொல்லப்பட்ட போதும் அது எந்த சிங்கள மக்களையும் பதிக்கவில்லை என்பது அவர்களின் கொடூரமான செயற்பாடுகளுக்கான ஆதராம் என்பதை தவிர எதனை கூறமுடியும்.
ஒருபுறம் சிறீலங்கா அரசு தமிழ் மக்களின் விடுதலைப்போரை இராணுவ ரீதியாக நசுக்கிவிட கங்கணம் கட்டி நிற்கையில் மறுபுறம் அனைத்துலகத்தின் முக்கிய நாடுகளும், பிராந்திய வல்லரசுகளும் அதனை ஊக்குவிப்பதுடன், அதற்கு நியாயம் கற்பிக்கவும் மறைமுகமாக முயன்று வருகின்றன.சிறீலங்கா அரசு மேற்கொண்டு வரும் கடுமையான வான் தாக்குதல்கள் மற்றும் எறிகணைத்தாக்குதல்களினால் முல்லைத்தீவு நோக்கி இ டம்பெயர்ந்துள்ள ஏறத்தாள 300,000 மக்களும் சாவின் விழிம்பில் வாழ்ந்து வருகின்றனர்.
2006 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் திருமலையின் சம்பூர் பகுதியில் கிபீர் மிகையொலி விமானங்கள் மேற்கொண்ட வான் தாக்குதலில் இருந்து இந்த வருடத்தின் ஜனவரி மாதம் 15 ஆம் நாள் வரையிலும் சிறீலங்கா வான்படை 1345 தடவைகள் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக வான்படை மார் தட்டி வருகின்றது.இந்த தாக்குதல்களில் 1116 வான் தாக்குதல்கள் கிபீர், மிக்-27 மற்றும் எஃப்-7 ரக மிகையொலி விமானங்கள் மூலம் நடத்தப்பட்டுள்ளதுடன், 229 தாக்குதல்கள் எம்ஐ-24 மற்றும் எம்ஐ-35 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளின் மூலம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
மிகையொலி விமானங்களை பொறுத்தவரையில் வன்னியில் ஆழமான பகுதிகளுக்குள் ஊடுருவி பல நூறு கிலோ எடை கொண்ட குண்டுகளை அதிக உயரத்தில் இருந்து பரசூட்டுக்கள் மூலம் வீசிவருவது குறிப்பிடத்தக்கது.இந்த விமானங்களில் மிக்-27 ரக விமானம் ஒரு தடவையில் ஏறத்தாள 4,000 கிலோ வெடிகுண்டுகளையும், கிபீர் விமானம் 6,000 கிலோ வெடிகுண்டுகளையும், எஃப்-7 ரக விமானம் 2,000 கிலோ குண்டுகளையும் காவிச் செல்லக்கூடிவை. தாக்குதல் உலங்குவானூர்திகள் 81 மி.மீ உந்துகணைகளையும், 23மி.மீ மற்றும் 30 மி.மீ பீரங்கிகளையும் கொண்டுள்ளன. ஒவ்வொரு தடவையும் சிறீலங்கா வான்படை இரு விமானங்களை இனைந்து தாக்குதல்களை மேற்கொள்வதுடன், சில சந்தர்ப்பங்களில் நான்கு அல்லது ஆறு விமானங்களும் தாக்குதல்களை நடத்தியதுண்டு. எனவே இந்த தாக்குதல்களில் வன்னி மண்ணில் வாழும் அப்பாவி மக்களின் மீது அதிக உயரத்தில் இருந்து கொட்டப்பட்ட வெடிகுண்டுகளின் எடையை நீங்கள் கணிப்பிட்டு பார்த்தால் அதன் தாக்கமும் கெடூரமும் புரியும்.
வன்னியில் வாழ்ந்துவரும் 300,000 இற்கு மேற்பட்ட மக்களின் இழப்புக்களையும் பொருட்படுத்தாது சிறீலங்கா அரசு பல ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வன்னி மண்ணின் மீது வீசிய போதும் விடுதலைப்புலிகள் அங்கு வாழும் மக்களுக்கு கற்றுக்கொடுத்த வான்தாக்குதலில் இருந்து தப்பும் பாதுகாப்பு உத்திகளே அவர்களை பெரும் அழிவுகளில் இருந்து பாதுகாத்து வருகின்றது.பாடசாலைகளும், வைத்தியசாலைகளும் கூட பதுங்குகுழிகளின் பாதுகாப்புக்களை நம்பியே அங்கு இயங்கி வந்தன, வருகின்றன. ஆனால் தற்போது இந்த மக்கள் ஒரு குறுகிய பிரதேசத்திற்குள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் சிறீலங்கா அரசு பெருமளவான ஆயுத வளங்களுடன் அங்கு தாக்குதலுக்கு தயாராகி வருவதுடன், செறிவான எறிகணை வீச்சுக்களையும், வான்குண்டு தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றது.மருத்துவ வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்துவரும் இந்த மக்களை அரசின் இந்த பாரிய குண்டு வீச்சுக்கள் கடுமையாக பாதித்து வருகின்றது.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரையிலும் அங்கு நடைபெற்ற தாக்குதல்களில் 77 க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், 260 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். அவர்களில் பலர் சிறுவர்களும் குழந்தைகளும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் கடந்த செவ்வாய்கிழமை சுதந்திரபுரம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதல்களில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 51 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.பெருமளவில் காயமடையும் மக்களை பராமரிக்கும் வைத்தியசாலை வசதிகள் அங்கு இல்லை. இந்த நிலையில் காயமடையும் மக்கள் வீடுகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட படுக்கைகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வருவதும் வேதனையானது.
இந்த கொடூரங்களை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன், உலகின் ஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒன்றுபட்டு வருகையில் அதிக தமிழ் மக்களை கொண்ட தமிழகத்தின் பங்களிப்புக்கள் காத்திரமான செயல்திறனை ஆற்ற முடியும்.300,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் சாவின் விழிம்பில் தவிக்கும் போது அவர்களை காப்பாற்றுமாறு தமிழகத்தின் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திரு தொல் திருமணவாளன் சாகும்வரை உண்ணா நோம்பினை கடைப்பிடித்து வந்ததும், தமிழகம் எங்கும் பல அரசியல் கட்சிகளும், பல அமைப்புக்களும் பேராட்டங்களை நடத்திவருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவற்றை எல்லாம் புறம் தள்ளி சிறீலங்காவுக்கு சென்ற இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் சிறீலங்காவின் கொடூரமான போருக்கு தமது அதரவுகளை தெரிவித்ததுடன், அங்கு மகிந்தவுடன் பொருளாதார மேம்பாடுகள் தொடர்பாக பேச்சுக்களை நடத்திவிட்டு திரும்பியது, ஒட்டுமொத்த உலகத்தமிழ் மக்களின் முகத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு காறி உமிழ்ந்துள்ளதாகவே கொள்ளமுடியும். போரை நிறுத்தும் படி தமிழகம் மேற்கொண்டுவரும் போராட்டங்களை கருத்தில் எடுக்காத இந்திய மத்தியஅரசு அதற்கு எதிர்மறையாக செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது போரை நிறுத்தும்படி தமிழகம் போராடும் போது சிறீலங்கா சென்று போருக்கு ஆதரவுகளை தெரிவித்துவிட்டு வருகின்றது இந்திய மத்திய அரசு.தமிழ் மக்களின் அழிவை துரிதப்படுத்த துடிக்கும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசிற்கு உலகத்தின் ஒட்டு மொத்த தமிழ் மக்களும் கூறப்போகும் பதில் என்ன? தமிழ் மக்களிற்கு எதிராக ஒருங்கிணையும் உலகத்தின் மறு முகம் இவ்வாறு இருக்கையில் வன்னி களமுனையில் மோதல்களும் இராணுவத்தின் நகர்வுகளும் தொடர்கின்றன.
03 படையணிகளின் துணையுடன், 08 படையணிகளை நேரடியாக இறக்கி முல்லைத்தீவில் பெரும் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் வன்னி களமுனையின் பின்புலங்களில் அதிகளவு ஆயுதங்களை குவித்து வருகின்றது சிறீலங்கா இராணுவம். தற்பேதைய படை நடவடிக்கையில் 53, 55, 57, 58, 59 ஆகிய டிவிசன்களும், நடவடிக்கை படையணி (TASK FORCE) 2, 3, 4 என்பனவும் முல்லைத்தீவு நோக்கிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இவை தவிர நடவடிக்கை படையணி 5 மற்றும் 6 என்பனவும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முழுமையான டிவிசன் படையணிகளுக்கும் நடவடிக்கை படையணிகளுக்கும் இடையில் சில வேறுபாடுகள் உண்டு. டிவிசன் படையணி இராணுவத்தில் நிலையாக உள்ள படையணியாகும், அனால் நடவடிக்கை படையணி குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்படுவது. மேலும் ஒரு முழுமையான டிவிசன் 3 தொடக்கம் 5 பிரிகேட்டுக்களை கொண்டது ஆனால் நடவடிக்கை படையணிகள் ஒன்று அல்லது இரண்டு பிரிகேட்டுக்களை உடையதாக அல்லது சில பற்றலியன் படையினரை கொண்டதாகவே இருப்பதுண்டு. சுருக்கமாக கூறினால் டிவிசன் படையணியை விட நடவடிக்கை படையணியில் படையினாரின் எண்ணிக்கை மிகவும் குறைவானது.எனினும் பெரிய டிவிசன் படையணிகளை விட குறைந்த எண்ணிக்கைகள் கொண்ட நடவடிக்கை படையணிகள் பல உருவாக்கப்படும் போது அவற்றின் கட்டளை மையங்களையும், நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பது இலகுவானது. படையணிகளில் உள்ள இந்த வேறுபாடுகள் தான் இராணுவம் 10 இற்கு மேற்பட்ட டிவிசன்களை தாக்குதலுக்காக திரட்டிய போதும் அவர்களால் 50,000 படையினரையே திரட்ட முடிந்துள்ளது.
மேலும் முகமாலை பகுதியில் இருந்து ஆனையிறவுக்கு நகர்ந்த 55 ஆவது படையணியின் 1 ஆவது பிரிகேட் லெப். கேணல் வசந்தா அப்று தலைமையில் கடந்த வாரம் தளையடி ஊடாக கட்டைக்காட்டை அடைந்து பின்னர் சுண்டிக்குளம் பகுதிக்கு நகர்ந்துள்ளது. இந்த நிலையில் ஆனையிறவில் நிலைகொண்டிருந்த 53 ஆவது சிறப்பு படையணியின் பெரும்பாலான படையணிகள் மாங்குளம் மற்றும் அம்பகாமம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. 53 ஆவது படையணியினர் அம்பகாமம் பகுதிக்கு நகர்த்தப்பட்டதை இராணுவத்தரப்பு இரகசியமாக வைத்திருந்த போதும் விஜயபா றெஜிமென்டை சேர்ந்த அதிகாரி ஒருவரின் மூலம் இந்த தகவல் வெளியில் கசிந்துள்ளது. மேலும் மிருசுவில் பகுதியில் நிலைகொண்டிருந்த கவசத்தாக்குதல் படையணியும் முல்லைத்தீவு பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. இதனை லெப். கேணல் லாலந்தா கமகே வழிவடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளை பொறுத்தவரையிலும் 53 மற்றும் 55 ஆவது படையணிகளையும் வன்னிக்கு நோக்கி வரவளைப்பதில் குறியாக இருக்கின்றனர். அதாவது சிறீலங்கா இராணுவத்தின் முழு இராணுவ வளங்களையும் ஒரு குறுகிய களமுனைக்குள் கொண்டுவருவதே அவர்களின் உத்தி. ஏனெனில் குறுகிய களமுனைகளில் ஏற்படப்போகும் உக்கிர மோதல்களில் அழிவுகள் அதிகம்.இதனிடையே தரையில் முல்லைத்தீவை சுற்றி வியூகம் அமைத்துள்ள படைத்தரப்பு கடலிலும் சுண்டிக்குளத்தில் இருந்து முல்லைத்தீவு வரையிலும் 25 மேற்பட்ட கடற்படை கப்பல்களையும், படகுகளையும் நிறுத்தியுள்ளது. இந்த படகு தொகுதியில் அதிகவேக டோராப்படகுகள், ஆழ்கடல் ரோந்து கப்பல்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், சிறப்பு கடற் தாக்குதல் பிரிவு (SPECIAL BOAT SQARDRON), விரைவு நடவடிக்கை பிரிவு (RAPID ACTION SQUARDON) போன்ற கடற்படை அணிகளும் அங்கு நகர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் டி கே பி திஸ்ஸநாயக்கா தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவின் கடற்படை வரலாற்றில் இது மிகப்பெரும் சுற்றிவழைப்பாகும் எனவும் இதற்கு வடபிராந்திய மற்றும் கிழக்கு பிராந்திய கடற்படை வளங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.எனினும் கடற்படையினாரின் இந்த வியூகத்தின் மீது கடற்புலிகள் திங்கட்கிழமை (19) மேற்கொண்ட தாக்குதலில் ஒரு டோரா படகு மூழ்கடிக்கப்பட்டதுடன், அதில் இருந்த 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் நான்கு தாக்குதல் படகுகளை தாம் எதிர்கொண்டதாகவும், அதனை தொடர்ந்து நடைபெற்ற மோதல்களில் தமது அதிவேக தாக்குதல் படகு ஒன்று கடுமையாக சேதமடைந்ததாகவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் வெடிமருந்து நிரப்பப்பட்ட விடுதலைப்புலிகளின் தாக்குதல் படகு டோரா படகிற்கு அருகில் வெடித்ததை படைத்தரப்பு ஒத்துக்கொண்டுள்ளது.
தற்போதைய போரில் சிறீலங்கா அரச தரப்பு தமது தரப்பில் ஏற்படும் இழப்புக்கள் தொடர்பான தகவல்களை பெருமளவில் இருட்டடிப்பு செய்து வருவகின்றது. உதாரணமாக கிழக்கில் நடைபெறும் மோதல்களில் கணிசமான அளவு படையினர் கொல்லப்பட்டு வருகின்ற போதும் அரசு அது தொடர்பாக தகவல்கள் எதனையும் வெளியிடுவதில்லை. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை (16) ஏ-9 பாதையின் இரணைமடு பகுதிக்கு கிழக்காக 6 கி.மீ தொலைவில் உள்ள தர்மபுரம் பகுதிக்கு நகர்ந்த 57-1 மற்றும் 57-2 ஆவது பிரிகேட்டுக்களை சேர்ந்த இராணுவத்தினருக்கு எதிராக விடுதலைப்புலிகளின் அணிகள் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளன. இதன் போது 51 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 150 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், படை சிப்பாயின் சடலம் உட்பட பெருமளவான ஆயுதங்களையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு 57 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் சிறப்பு கொமோண்டே படையினரை பயன்படுத்திய போதும் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் இந்த அணிகள் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன. இந்த நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலானது படைத்தரப்புக்கு மற்றுமொரு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. அதாவது கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் இரணைமடு பகுதியில் மேற்கொண்ட தாக்குதலின் போது ரீ-55 ரக டாங்கியை பயன்படுத்தியிருந்த விடுதலைப்புலிகள் தற்போது ரீ-86 ரக கவசத்தாக்குதல் வாகனத்தை பயன்படுத்தியுள்ளனர். இந்த வாகனமானது துருப்புக்காவியாகவும் பயன்படுத்தப்பட முடியும் (8 பேர் பயணம் செய்ய முடியும்).
சோவியத்தின் டீஆP-1 கவசத்தாக்குதல் வாகனத்தின் பிரதி வடிவமான இந்த வாகனம் சீனா நாட்டு தயாரிப்பாகும்.45 கி.மீ வேகத்தை சராசரியாக கொண்டதுடன், 73 மி.மீ பீரங்கியுடன் , 12.7 மி.மீ கனரக இயந்திரதுப்பாக்கியும் அதன் பிரதான ஆயுதமாகும். இவை தவிர டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும் இதில் இருந்து ஏவமுடியும். விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் இதுவரை காலமும் பீரங்கி மற்றும் மோட்டார் படையணிகளின் வளாச்சியில் இராணுவத்தின் தாக்குதலுக்கு நிகரான வளாச்சியை கண்டிருந்ததுடன் அது படைத்தரப்புக்கு பாரிய பின்னடைவுகளை கொடுத்ததுடன், களமுனை மாற்றங்களையும் ஏற்படுத்தியிருந்தது.தற்போது இராணுவத்தின் கவசத்தாக்குதல் படையணி பயன்படுத்தும் டாங்கிகளையும், கவசத்தாக்குதல் வாகனங்களையும் ஒத்த கனரக வாகனங்களை விடுதலைப்புலிகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது இராணுவத்திற்கு பாரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தற்போது விடுதலைப்புலிகள் பயன்படுத்திய வாகனம் படையினாரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதா? எப்போது கைப்பற்றப்பட்டது போன்ற தகவல்களை விடுதலைப்புலிகள் முன்னர் வெளியிட்டிருக்கவில்லை. எனினும் ஓயாதஅலைகள்-02, ஓயாத அலைகள்-03 நடவடிக்கை மற்றும் ஆனையிறவு மீட்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் விடுதலைப்புலிகள் பெருமளவான கசவத்தாக்குதல் வாகனங்களையும் டாங்கிகளையும் கைப்பற்றியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.விடுதலைப்புலிகள் வசம் மூன்று ரீ-55 ரக டாங்கிகளும், ஒரு டசினுக்கு மேற்பட்ட கவசத்தாக்குதல் வாகனங்களும், கணிசமான அளவு பவல், யூனிகோன் போன்ற கவச வாகனங்களும் இருப்பதாக படைத்தரப்பு தற்போது தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சமரை பொறுத்தவரையில் விடுதலைப்புலிகளும், முல்லைத்தீவில் செறிவாக்கப்பட்டுள்ள இராணுவ அணிகளும் மிகவும் நெருக்கமாக நின்று சமரிடப்போகின்றன. இந்த சமரில் சிறீலங்கா வான்படை அதிக உதவிகளை வழங்கமுடியாது போகலாம் ஏனெனில் அது இராணுவத்திற்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் ஆனால் விடுதலைப்புலிகளின் கனரக வாகனங்களும், பீரங்கிகளும் இந்த சமரில் முக்கிய பங்குவகிக்கலாம். ஸ்ராலின்கிராட் சமரின் போது ரஸ்சிய படைகள் கைகொண்ட உத்திகளும் இவை தான். அதாவது ஸ்ராலின்கிராட்டை ஆக்கிரமித்து நின்ற ஜேர்மனிய படையணிகளுக்கு அண்மையாக தமது படையணிகளை நகர்த்திய ரஸ்சிய தளபதிகள் மிக அருகாமையில் நின்று தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருந்தனர். அன்று வான்படையின் பலத்தில் உயர்வாக இருந்த ஜேர்மனிய வான்படையினால் இந்த மோதல்களில் அதிக பங்களிப்புக்களை வழங்க முடியவில்லை என்பதும் அந்த சமரின் வெற்றிக்கான காரணிகளில் ஒன்று. குறுகிய நிலப்பரப்பில் செறிவாக்கப்பட்ட படையணிகள் மோதலுக்கு தயாராகி வருவதனால் வன்னி களமுனையின் எதிர்கால மோதல்கள் நீண்டகால நோக்கில் பல திருப்பங்கள் நிறைந்ததாகவே இருக்கப்போகின்றன.
- அருஷ்-
Comments