இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் தற்காலிக முகாம்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ் அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்புக்கு சென்றுள்ள ஜோன் ஹோல்ம்ஸ் இன்று சனிக்கிழமை பிற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களை சந்தித்து வன்னிப்பெரு நிலப்பரப்பின் தற்போதைய நிலைமைகள் குறித்து கேட்டு அறிந்து கொண்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
சுமார் ஒரு மணித்தியாலமாக நடைபெற்ற இச்சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்றக் குழுவின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜோன் ஹோல்ம்சுடன் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்புக்கான வதிவிட பிரதி நிதி நீலபுகுனேயும் கலந்து கொண்டார்.
இச்சந்திப்பில் ஜோன் ஹோல்ம்சுக்கு எடுத்துக் கூறிய விடயங்கள் தொடர்பாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கையில், "கடந்த இரண்டு மாதங்களில் 2 ஆயிரத்து 500 தமிழர்கள் வன்னிப்பெரு நிலப்பரப்பில் படையினரின் எறிகனை, பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். 5 ஆயிரம் தமிழர்கள் பாடுகாயமடைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக மட்டும் ஒவ்வொரு நாளும் 100 வரையான மக்கள் கொல்லப்பட்டும் 200 முதல் 250 வரையிலானோர் காயமடைந்தும் வருகின்றனர்.
கொல்லப்பட்ட மக்களினதும் காயமடைந்த மக்களினதும் தொகை இன்னும் அதிகமாக இருக்கலாம் இது குறித்த மதிப்பீடுகளை மனித உரிமை அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் எதுவும் இல்லை. மருத்து அதிகாரிகளும் கொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அங்கிருந்து அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஒரு இன அழிப்பு போர் இங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களிலேயே மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். திருகோணமலை, வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெர்ந்து வவுனியாவுக்கு வந்து அரசாங்கம் அமைத்துள்ள முகாம்களில் தங்கியுள்ள மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பெரும் கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.
இந்த முகாம்களில் தங்கியுள்ள இளைஞர்கள், பெண்கள் பலர் காணமல் போய் உள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாகவும் எம்மிடம் முறைப்பாடுகள் வந்துள்ளன.
எனவேதான் இந்த திட்டமிடப்பட்ட இன அழிப்புப் போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும். முகாம்கள் அனைத்தையும் ஐக்கிய நாடுகள் பராமரிக்க வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் போர் காரணமாக யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசங்களில் இருந்து இரண்டு லட்சம் மக்கள் இடம்பெயர்ந்த மக்கள் வெளியேறியிருந்தனர். அவர்கள் இன்னமும் மீளக் குடியமர்த்தப்படவில்லை.
மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என சிறிலங்கா உயர்நீதிமன்றம் கூட தீர்ப்பளித்தும் இன்னமும் மக்கள் மீளக் குடியமர்த்தப்படவில்லை. மாறாக இந்த பிரதேசங்களில் படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்றுதான் வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்தும் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரியவில்லை. அங்கு பாரிய படை முகாம்களை அமைத்து தமிழர்களின் வாழ்விடங்களை நாசம் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது என எடுத்துக் கூறியதாக தெரிவித்தனர்.
அதேவேளை, கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த ஜோன் ஹோல்ம்ஸ் இந்த விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு எடுத்துக்கூறுவதாகவும் மக்களின் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் உறுதியளித்ததாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.
Comments