கிளர்ச்சியுற்று எழுந்துள்ள தமிழகத்தின் இளம் சமூகம். கிழட்டு நரியின் எத்தனம் பயன் தருமா?


ஈழத் தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றக் கோரித் தமிழகத்தில் ஏற்பட்டுவரும் கிளர்ச்சியும், எழுச்சியும் நாம் இப்பத்தியில் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி மாநிலத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்துக் கும், இந்திய மத்திய அரசுக்கும் பெரும் தலையிடியாக மாறிவருகின்றமை வெளிப்படையாகத் தோற்றுகின்றது.

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் தினசரி படுகொலை செய்யப் படும் சிவிலியன்களின் எண்ணிக்கை டசின் கணக்கைத் தாண்டி நூறுகளை எட்டும் நிலைமை. அதுபோலக் காயமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது.

சிந்தப்படும் இரத்தம் தமிழ் உதிரம் என்பதாலோ என் னவோ தென்னிலங்கையில் இவ்விடயம் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளப்படுவதாகவே தெரியவில்லை.
அரசுத் தரப்புக் குற்றம் சாட்டுவது போல புலிகள் இந்த சிவிலியன்களை மனித கேடயங்களாக மறித்து வைத்திருப் பதால்தான் இந்த அனர்த்தம் நேருகின்றதா, அல்லது

புலிகளும் ஏனைய தமிழ் தரப்புகளும் சுட்டிக்காட்டுவது போல சிவிலியன் குடியிருப்புகள் மீது அரசுப் படைகள் கண்,மண் தெரியாமல் கண்மூடித்தனமாக நடத்தும் குரூரத் தாக்குதல் காரணமாக இந்தப் பேரவலம் இடம் பெறுகின்றதா என்பது சர்ச்சைக்குரிய விடயம்தான்.

ஆனால், சிவிலியன் உயிரிழப்புகளும், படுகாயங்களும் பெரிய எண்ணிக்கையில் அதிர்ச்சி தரும் கணக்கில் கொடூரமாக அதிகரித்துள்ளன என்பது மட்டும் யதார்த் தம்.

அதனைத் தென்னிலங்கை மூடி மறைப்பது அல்லது அது குறித்து அலட்டிக் கொள்ளாமல் பெரும் இராணுவ வெற்றிகளை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது, இந்த யுத்தத்தில் நேரடியாகவும், மோசமாகவும் பாதிக்கப்படும் சிறுபான்மையினரான தமிழர்களின் மனதை நெருடி, காயப்படுத்தி, ரணகள மாக்கும் விவகாரமாகும்.

இந்த யுத்தத்தின் பின்னராவது, தமிழருக்கு நீதி நியா யம் செய்யும் உண்மையான எண்ணம் தென்னிலங் கைக்கு இருக்குமானால், இந்த யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு, அடக்கி, முடுக்கப்படும் தமிழினத்தின் பால் அதற்குப் பரிதாபமும், பச்சாதாபமும், தமிழினத்தை அரவணைக்கும் பற்றும் பிறக்க வேண்டும். ஆனால் யதார்த்தத்தில் நிலைமை அதுவல்ல என்பதே வெளிப்படை.

யுத்த வெற்றிகளைத் தமிழர்களின் வர்த்தக நிலையங்களின் முன்னால் ஆர்ப்பாட்டமாக வெடி கொளுத் திப்போட்டு, எதிரி நாட்டை மண்கவ்வ வைத்து ஆக் கிரமித்த புளங்காகிதத்தோடு கொண்டாடும் போக்கே தென்னிலங்கையில் காணப்படுகின்றது.

இந்த வெற்றியின் பின்புலத்தில் சிங்களத்தின் அடக்குமுறை ஆண வத் திமிர் பீறிட்டு வெளிப்படுவதை நோக்கும் போது, இந்த இராணுவச் சமரின் முடிவு தமிழர்களின் அடிமைப் பட்டயத்தில் நிரந்தரக் குறியைப் பொறிக்கப் போகின் றது என்ற அச்சம் தமிழர்களுக்கு ஏற்படுகின்றது. இத்தகைய பேரச்சத்தின் விளைவே, தமிழகத்திலும் ஈழத் தமிழர் தொடர்பான இத்துணை கிளர்ச்சிக்குக் கார ணமாகும்

பொதுவாகத் தமிழகத்தில் அரசியல் சார்ந்த போக் கைத் தீர்மானிக்கின்ற அரசியல் தலைமைகள், அரசியல் வாதிகள், அவர்களோடு நெருங்கிய கட்சிக் கட்டமைப் புகள் போன்ற தரப்புகளின் பிடியிலிருந்து ஈழத் தமிழர் விவகாரத்தை வழிநடத்தும் அல்லது கையாண்டு தீர்மானிக்கும் பொறுப்பு, மெல்ல மெல்ல, தமிழக இளம் சமுதாயத்திடம் குறிப்பாக மாணவ சமூகத்திடம் கைமாறி வருவது நோக்கற்பாலது.

தமிழ்நாட்டில் கட்சிச் சாயங்கள், சார்பு நிலைகள், கருத் துப் போக்குகள், கொள்கை நிலைப்பாடுகள் போன்ற வற்றைக் கடந்து இளம் சமுதாயம் இப்பிரச்சினையை ஒட்டி "கெம்பி" எழுந்திருப்பதால் நிச்சயம் இந்த விடயம் மாநில, மத்திய அரசுகளுக்கு நெருக்கடியைத் தரப்போகின்றது என்பதும் துலாம்பரம்.

ஈழத் தமிழரைக் காப்பாற்றக் கோரி இலங்கையில் விரைந்து யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி கட்சிகளும், அவை சார்ந்த கூட்டமைப்புகளும் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணிகள், பொதுக் கூட்டங்களுக்கு அப்பால் மாணவர்கள் குறிப்பாகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் இளநிலை மாணவர் கள் ஒன்று திரண்டு நடத்தும் உண்ணாவிரதங்கள், வகுப்பு பகிஷ்கரிப்புகள், மௌனப் போராட்டங்கள் போன்றவைதான் மாநில அரசைப் பெரும் பீதிக்குள்ளாக்கியிருக்கின்றன.

மாணவர் சமூகத்தின் எழுச்சி எத்தகைய நெருக்கடிகளையும், விளைவுகளையும் தரக்கூடியது என்பது தமிழக அரசியலில் "பழமும் தின்று கொட்டையும் போட்ட" முதிர்ந்த அரசியல் சாணக்கியரான தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நன்கு தெரியும்; புரியும்.

அதுதான் நேரத்துடன் உஷாராகி, கல்லூரிகள், பள்ளிகளை மூடவும், விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பவும் விரைந்து நடவடிக்கை எடுத்தார் கலைஞர் கருணாநிதி.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பெருக்கெடுக்கும் இளம் சமூகத்தின் உணர்ச்சி வெள்ளத்தை, அணை போட்டு மறைக்கும் தமிழகமுதல்வரின் எத்தனம் பயன்தருமா?

அல்லது

அடித்துப் பீறிட்டு, கரைபுரண்டு ஓடிவரும் அந்த உணர்ச்சி வெள்ளத்தில் கலைஞரின்அரசியல் எதிர்காலமும் அடிபட்டுப் போகுமா?

காலம்தான் பதில் கூறும். ஆனால் அதற்கும் நீண்ட காலம் பிடிக்கப் போவதில்லை என்பதும் உண்மை.


Comments