இலங்கைப் பிரச்னையில் தமிழக மக்களுக்கு ஆர்வமில்லை' என்று சில அதிபுத்திசாலி அரசியல் விமர்சகர்களும் `இலங்கைப் பிரச்னையில் தமிழ்நாட்டு மக்கள் பங்குபெற விரும்பவில்லை' என்று சில காங்கிரஸ்காரர்களும் சொல்லிக்கொண்டிருக்கும் சூழலில் உண்மை நிலை என்ன? இந்தப் பிரச்னையில் தமிழக மக்களின் கருத்து என்ன என்பதை அறிய, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நமது நிருபர்கள் கருத்துக் கணிப்பு செய்தார்கள். பலவித மக்களைச் சந்தித்துப் பேசி அவர்களது கருத்துகளை அறிந்தார்கள். இலங்கைப் பிரச்னைக்காக தூத்துக்குடி இளைஞர் முத்துக்குமார் தீக்குளித்ததற்கு மறுநாள் இந்த கருத்துக்கணிப்பு நடந்தது.
``தினம் தினம் பேப்பரைப் பார்க்கும்போதும் டி.வி. செய்திகளைப் பார்க்கும்போதும் கண்ணீர் வருது. அவங்களும் நம்ம மாதிரி தமிழ்த் சாதி சனம். அவங்களுக்கு உதவாம இருக்கோமேனு வருத்தமா இருக்கு. தமிழர்னு பாக்காம, மனுஷரா பாத்தாகூட பரிதாபம் வருது. அந்த மக்களை வாழ வைக்க அரசாங்கம் எதுவுமே செய்யலியே'' - அரவக்குறிச்சி அருகே ஒரு மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடம் பேசியபோது அவர்கள் தெரிவித்த கருத்து இது.
இந்தக் கருத்து அவர்களுடையது மட்டுமல்ல, தமிழகம் முழுவதிலுமே இந்தக் கருத்துதான் மேலோங்கி இருக்கிறது. இலங்கையில் உற்றார் உறவினர்களையும் வீடுகளையும் இழந்து காட்டுக்குள்ளும் பதுங்கு குழிகளுக்குள்ளும் பரிதாப வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக தமிழக மக்கள் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. மைக் போட்டு மேடையில் சொல்லாவிட்டாலும் அடிமனதில் அந்த வேதனை இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இதைப்போல் மக்களிடமிருக்கும் இன்னொரு பொதுவான கருத்து, மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தமிழர்களைக் கைவிட்டுவிட்டது என்பது.
``மத்திய அரசு இந்தப் பிரச்னையில் உடனடியாக தீர்வு காணவேண்டும். அவர்களுக்கு அந்தக் கடமை இருக்கிறது. இங்குள்ள தமிழ் மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போட்டதால்தான் அவர்கள் ஆட்சியில் உட்கார்ந்து அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களிடம் வாங்கிய ஓட்டுக்கு நன்றிக்கடனாக இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு முயன்றிருக்கவேண்டும். அந்தக் கடமையிலிருந்து மத்திய அரசு தவறிவிட்டது'' என்று சொல்கிறார் வேல்குமார் என்ற கோவை இளைஞர்.
``இலங்கையில் விடுதலைப்புலிகளை அழிக்கிறேன் என்று அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்கிறார்கள். அதைத் தடுக்க இந்திய அரசு தவறிவிட்டது. மாநில தி.மு.க. அரசும் மத்திய அரசை கட்டாயப்படுத்தவில்லை. ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டுவிட்டார் என்பதற்காக, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படலாமா?'' என்றுஆவேசத்துடன் கேட்கிறார், திருச்சியைச் சேர்ந்த தியாகராஜன் என்ற விவசாயி.
இலங்கைப் பிரச்னை பல தரப்பு மக்களையும் மனதளவில் பாதித்திருக்கிறது. படித்தவர்கள், படிக்காதவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் என எல்லா பிரிவினருமே இலங்கைத் தமிழர் பிரச்னையை அறிந்து வைத்திருக்கிறார்கள். இந்தப் பிரச்னையில் மத்தியில் ஆளும் காங்கிரஸுக்கு மட்டுமில்லாமல் மாநிலத்தை ஆளும் தி.மு.க.வுக்கும் கெட்டபெயர்தான். `தி.மு.க. அரசு, இந்தப் பிரச்னையில் இன்னும் தீவிரமாக மத்திய அரசை வலியுறுத்தி போரை நிறுத்தியிருக்க வேண்டும்'' என்று நம்மிடம் பேசிய பொதுமக்கள் பலர் சொன்னார்கள்.
இலங்கைத் தமிழர்களை இத்தனை தீவிரமாக ஆதரிக்கும் தமிழக மக்கள், அதே தீவிரத்துடன் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறார்களா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற மாவட்டங்களில் விடுதலைப்புலிகளுக்கு அத்தனை ஆதரவு இல்லை. கோவை, மதுரை மாவட்டங்களில் விடுதலைப் புலிகளின் வீரத்தை மக்கள் புகழ்ந்து பேசுகிறார்கள். விடுதலைப்புலிகள் மீது பரிவு இருக்கிறது. தமிழர்களுக்காக போராடுகிறார்கள் என்ற பாசம் இருக்கிறது. ஆனால் ராஜீவ் படுகொலையைச் செய்தவர்கள் என்ற பயமும் மக்களிடம்இருக்கிறது.
சரி, இலங்கைப் பிரச்னை வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்விக்கு, `ஆம்' என்றே பெருவாரியான மக்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தேர்தலுக்குள் இலங்கையில் ஒரு நல்ல அமைதி முடிவு ஏற்பட்டு, தமிழர்கள் சிறப்பாக வாழ வழி ஏற்பட்டுவிட்டால் இலங்கைப் பிரச்னை தேர்தலில் எதிரொலிக்காது.
ஆனால், இப்போதுள்ள சூழலில் தேர்தல் வந்தால் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்சரிவையே உண்டு பண்ணும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
``ராஜீவ்காந்தியின் மரணத்துக்காக காங்கிரஸ் அப்பாவித் தமிழர்களைப் பழிவாங்குகிறது. நாற்பது எம்.பி.க்களை காங்கிரஸ் கூட்டணிக்கு வழங்கி காங்கிரஸுக்கு அதிகாரத்தைக் கொடுத்துவிட்டோம். ஆனால், அவர்கள் தமிழர்களுக்கு உதவவில்லை. அவர்களுக்கு தேர்தலில் எப்படி உதவுவோம்?'' என்று கேட்கிறார் இந்திரன் என்ற நெல்லை மாவட்ட விவசாயி.
``இந்திராகாந்தியை சுட்டுக்கொன்றவர்கள் சீக்கியர்கள். அதற்காக சீக்கியர்களை காங்கிரஸ் புறக்கணிக்கிறதா? நம் பிரதமரே ஒரு சீக்கியர்தான். பங்களாதேஷ் பிரச்னையில் தலையிட்டு பங்களாதேஷ் மக்களுக்கு தனிநாடு வாங்கிக்கொடுத்த இந்தியா இப்போது தயங்குவதேன்?'' என்று கேட்கிறார் சென்னையைச் சேர்ந்த சரவணன் என்றஇளைஞர்.
இப்படி மக்களிடம் நிறைய கேள்விகள், கோபங்கள், வருத்தங்கள் இருக்கின்றன.
இந்த தமிழக கருத்துக்கணிப்பின்மூலம் ஒரு பெரிய உண்மை தெளிவாய் தெரிகிறது. தமிழக மக்கள் இலங்கைத் தமிழர்களின் பிரச்னையைத் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கவில்லை. அடி மனதில் மிகுந்த பரிவுடனும் வருத்தத்துடனும் அரசியல் தலைவர்கள் மீது கோபத்துடனும் இருக்கிறார்கள். தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது தங்கள் எண்ணங்களை தீர்க்கமான முறையில் வெளிப்படுத்துவார்கள் என்றே தோன்றுகிறது..
- ஆனந்த் செல்லையா, சிந்துகுமார், வீரகேரளம் சரவணன், அரண்மனை சுப்பு, டி.ஜோசப், இரா.கார்த்திகேயன், அரவிந்த்.
``காலையில் ஒரு கூட்டணி, மாலையில் ஒரு கூட்டணி, கொள்கைகளில் முரண்பாடு, எம்.பி.க்கள் ராஜினாமா, ஆட்சியை இழக்கத் தயார் என, இலங்கைத் தமிழர்களின் ரத்தத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் தமிழக அரசியல்வாதிகள்.''
செய்யது மசூது, நெல்லை. ``அரசியலுக்கும் கூட்டணிக்கும் அப்பாற்பட்டு அப்பாவித் தமிழர்களைப் பாதுகாக்கும் ஒரே நோக்கம் தமிழகத்தில் இல்லாமல் போனது வருத்தம். தமிழர்கள் அனைவரும் தமிழ் உணர்வோடு கைகோக்க வேண்டும். மத்திய அரசை உண்மையாகவே வலியுறுத்தவேண்டும்.''
ஜோதி, மதுரை. ``இலங்கையில் அவதிப்படும் மக்கள் இந்திக்காரர்களாகவோ, கன்னடமோ, தெலுங்காகவோ இருந்திருந்தால், மத்திய அரசின் நடவடிக்கைகளே வேறு மாதிரி இருந்திருக்கும். தமிழர்களின் பிரச்னை என்பதால் மெத்தனமாகஇருக்கிறார்கள்.'' திவாகர், சென்னை. ``இந்தியா தலையிடணும். இது அப்பாவித் தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்னை. இதில் அரசியல் வித்தியாசங்களைப் பார்க்கக் கூடாது. ராஜபக்ஷே மனித உரிமைகளை மீறுகிறார். அதை அனுமதிக்கக் கூடாது.'' ரமேஷ், திருச்சி. தமிழர்களின் வாழ்வுரிமை பாதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த நாடு அடுத்த நாடு என்று சொல்லி உதவாமலிருந்தால், தமிழ் மக்கள் காங்கிரஸ்காரர்களை மன்னிக்கமாட்டார்கள்.'' லோகு, கரூர். ``இலங்கைப் பிரச்னையில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு முழுமையான அக்கறையுடன் நடந்துகொள்ளவில்லை.'' ஜோஸ்ராஜ், நாகர்கோவில். ``போர் என்ற பெயரில் தமிழர்களைக் கொன்று குவிப்பது அராஜகத்தின் உச்சகட்டம். ஆட்சியிலிருந்து ராஜினாமா செய்து போராடினால்தான் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற முடியும்.''
ஜீவலட்சுமி, கோவை. மத்திய அரசு அப்பாவித் தமிழர்களைக் காக்க முயன்றதா?
இலங்கைப் பிரச்னை பாராளுமன்றத் தேர்தலில் வெளிப்படுமா?
ஆம் இல்லை
4% 96% 68% 32% |
Comments