இந்தியத் துணைக்கண்டத்திலேயே தேசிய இனவுணர்வில் முன்னுக்கு நின்றது நம் தமிழ்த் தேசம் - காசுமீரத்துக்கு அடுத்தபடி என்று வேண்டுமானால் சொல்லலாம்.
1965ஆம் ஆண்டின் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் என்பது ஒரு தமிழ்த் தேசிய எழுச்சியே. இந்த எழுச்சியின் அலைவிளிம்பில் ஏறிச் சென்றுதான் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தின் மாநில ஆட்சியைக் கைப்பற்றிக் காங்கிரஸ் ஏகபோகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
மாநில ஆட்சி என்பது அதிகாரமில்லாத அதிகாரம். பதவிக் கட்டிலில் படுத்துத் தூங்கிய தி.மு.க. அதன்பின் விழிக்கவே இல்லை. 1967 முதல் வடிந்து வற்றிய தமிழ்த் தேசிய எழுச்சி 1980களில் தமிழீழ மக்களின் விடுதலைப் போர்த் தாக்கத்தால் புத்துயிர் பெற்றது. அது வளர்ந்து செல்வதைத் தடுக்கும் பொருட்டுத் தமிழீழ மக்கள் போராட்டத்தை அடுத்தும் எதிர்த்தும் கெடுக்கப் பார்ப்பனியம் சூழ்ச்சி செய்து அதில் பெருமளவு வெற்றியும் கண்டது.
இராசீவ் காந்தியின் இந்திய வல்லாதிக்க அரசியலும், அதன் நீட்சியான இராணுவப் படையெடுப்பும் தமிழீழ மக்களுக்கு இழைத்த கொடுமைகளை மறைத்து விட்ட கட்சிகளும் ஊடகங்களும்... அவரது கொலையைச் சாக்கிட்டுத் தமிழக மக்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திசை திருப்புவதில் பெருமளவு வெற்றி கண்டன. கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாகக் கடுமையான நெருக்கடி களுக்கிடையே தமிழீழ ஆதரவுச் சுடரை அணையாமல் காத்து வந்தவை தமிழகத்தின் தமிழ்த் தேசிய ஆற்றல்களே. இதற்காக நாம் பெருமிதம் கொள்ளலாம்.
தமிழீழ ஆதரவுக் கட்சிகளாக அறியப்பட்டுள்ள மற்றக் கட்சிகளைப் பொறுத்த வரை அவ்வப்போது தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பதை நாமும் மதிக்கிறோம். ஆனால் இவை தம் தமிழீழ ஆதரவைத் தேர்தல் - கூட்டணி அரசியலுக்கு உட்படுத்தியே வந்துள்ளன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்திய அரசு அறிந்தேற்க (அங்கீகரிக்க) வேண்டும், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பன போன்ற தெளிவான கோரிக்கைகளை இந்தக் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்துவதும் இல்லை.
இந்தப் பின்னணியில்தான் கடந்த ஓராண்டு காலமாக இராசபட்சர் தலைமையிலான சிங்களப் பேரினவாத அரசு போர் நிறுத்தத்தைக் கைவிட்டுத் தமிழீழ மக்கள் மீது தொடுத்துள்ள கொடும்போர் தமிழகத்தில் ஓர் எதிர்வினையைத் தோற்றுவித் துள்ளது. குறிப்பாகக் கடந்த நான்கைந்து மாத காலமாகத் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி தோன்றி யுள்ளது. அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், கட்சி சாராக் குடியியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் - வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், தகவல் - தொழில்நுட்பர்கள், திரைக் கலைஞர்கள் - தமிழீழ மக்களைக் காக்கக் குரல் கொடுத்து வருகின்றனர்.
2008 அக்டோபர் 14இல் தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானங்கள் பற்றி நாம் முன்பே எழுதியுள்ளோம். அடுத்தடுத்து மனிதச் சங்கிலி, சட்டப் பேரவைத் தீர்மானம், தில்லிக்குத் தூது... என்று பல்வேறு வகையிலும் தமிழக மக்களின் உணர்வுகள் தில்லிக்கு உணர்த்தப்பட்டுள்ளன. ஆனால் தில்லிப் பேரரசு இந்த உணர்வுகளைத் துச்சமாக மதித்துச் செயல்பட்டு வருகிறது.
படைக்கலன்கள், படைப் பயிற்சி, போரியல் அறிவுரை, படைத் துறையினரின் நேரடிப் பங்கேற்பு, உளவுத் துணை, நிதியுதவி என்று சிங்கள அரசின் போர் முயற்சிக்கு எல்லா வகையிலும் இந்திய அரசு உடந்தையாக இருந்து வருவதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஒரு பக்கம் பாகிஸ்தானுடன் போர் முழக்கம் செய்து கொண்டே, மறு பக்கம் சிங்களப் படைக்கு உதவுவதில் பாகிஸ்தானுடன் இந்தியாவும் கூட்டாகச் செயல்பட்டு வருவது அண்மையில் அம்பலமாகியுள்ளது.
இந்திய அரசின் இந்தத் தமிழர்ப் பகைப் போக்கில் ஒருசில அதிகாரிகள் மற்றவர்களைக் காட்டிலும் முனைப்பாக இருக்கலாம். ஆனால் இந்த அதிகாரிகளே எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்று சொல்லி ஆளும் காங்கிரசையும், திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளையும் காப்பாற்றும் முயற்சியை ஏற்பதற்கில்லை. ஆளும் கட்சி அல்லது கூட்டணி எதுவானாலும் இந்திய அரசு அடிப்படையில் தமிழீழத்துக்கும் தமிழர் களுக்கும் எதிராகச் செயல்பட்டு வருவதே வரலாறு.
தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி முதலில் போர்நிறுத்தம், ஆயுத உதவி நிறுத்தம் ஆகிய கோரிக்கைகளை எழுப்பினார். பிறகு போர்நிறுத்தத்தை மட்டும் கேட்கலானார். அனைத்துக் கட்சியினருடன் தில்லி சென்று தலைமையமைச்சரைச் சந்தித்த பின் "பிரணாபை கொழும்புக்கு அனுப்புங்கள்' என்று கெஞ்சும் நிலைக்குப் போய்விட்டார். பிரணாப் கொழும்பு சென்றாலும் போரை நிறுத்தச் சொல்வாரா? அல்லது தொடர்ந்து நடத்தச் சொல்வாரா? என்று கேட்கக் கூட கருணாநிதி அணியமில்லை.
அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்ற அச்சுறுத்தலிலிருந்து திமுக பின்னடித்துவிட்டது. சரி, மற்றக் கட்சிகளாவது அந்த அச்சுறுத்தலைச் செயலாக்கியிருந்தால், அதாவது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்திருந்தால், தில்லிக்கு ஒரு நெருக்குதலை ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் எந்தக் கட்சியும் அப்படிச் செய்யவில்லை. ஏன் என்பதற்கு இதுவரை பொருத்தமான விளக்கமும் இல்லை. திமுக பொதுக்குழுவே பிரணாபைக் கொழும்புக்கு அனுப்பும்படி கோரிக்கைத் தீர்மானம் இயற்றும் பரிதாப நிலை ஏற்பட்டது. சென்னை வந்த மன்மோகன் சிங் பிரணாபை விரைவில் கொழும்புக்கு அனுப்புவதாக மீண்டும் உறுதியளித்துள்ளார். பிரணாபை அப்படியெல் லாம் நினைத்த போது கொழும்புக்கு அனுப்ப முடியாது என அமைச்சர் டி.ஆர். பாலுவே பொதுக்குழுவின் கன்னத்தில் அறை விட்டாற் போல் விடை சொல்லியிருக்கிறார்.
ஈழத் தமிழ் மக்களுக்காகத் தில்லியிடம் ஒரு துரும்பைக் கூடக் கிள்ள முடியாத கருணாநிதி சகோதரக் கொலை பற்றியெல்லாம் பேசித் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பழித்தார். இந்தத் தூற்றலின் உச்சமாக மாவீரர் துயிலும் இல்லங்களையே கேலி செய்து தமிழீழ மக்களுக் காக இன்னுயிர் தந்தவர்களின் புனித நினைவையே கொச்சைப்படுத்தினார். இதை யெல்லாம் பொறுத்துக் கொண்டால், கலைஞர் ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடக்கச் செய்வார் என்று நம்பியிருந்தவர்கள் இலவு காத்த கிளி ஆனார்கள்.
அஇஅதிமுக தலைவி செயலலிதா தமிழினப் பகைவர். கருணாநிதியை அகற்றி விட்டு நாற் காலியைப் பிடிப்பதற்காக எதுவும் செய்யக் கூடியவர். ஈழத் தமிழர்களுக்காக அனுதாபப் படுவது போல் "சில நாள் மட்டும் நடிக்க வந்தவர்' (இவருக்காகவே இந்த வரியைப் பாடலில் சேர்த்தவர் கண்ணதாசன்) விரைவில் தன் இந்துத் துவ உள்ளுருவை வெளிப்படுத்திக் கொண்டார்.
தன் கூட்டணியில் இருப்பவர்கள் ஈழம் பற்றி மாறுபட்டுப் பேசுவதை இவர் சகித்துக் கொள்கிறார் என்பது பொய்த் தோற்றமே. ஏதோ கத்தட்டும் என்று வேடிக்கை பார்ப்பார், கடிக்க முற்பட்டால் அடித்து விரட்டி விடுவார். இந்த வகையில் இவரது அணுகுமுறையும் கருணாநிதியின் அணுகுமுறையும் ஒன்றே. சிபிஎம் கட்சி ஈழத் தமிழர்களை இந்த அளவுக்கு வெறுப்பது ஏன்? என்று பலரும் கேட்கின்றனர்.
அதன் இந்தியத் தேசிய வெறிதான் காரணம்.
இந்தியத் தேசிய நிலைப்பாட்டில் இருந்தாலும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக நிலையெடுத்து அண்மைக் காலத்தில் போராடி வருவது நன்று. ஆனால் இன்னமும் இக்கட்சியினால் தமிழீழ விடுதலைக் குறிக்கோளைத் திட்டவட்டமாக ஏற்க முடியவில்லை. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு! என்ற கோரிக்கையையும் அது எழுப்பவில்லை - இது வரை!
தமிழீழ மக்களைக் காக்க இந்தியா தலையிட வேண்டும்! என்ற கோரிக்கையின் அப்பாவித் தனத்தை அண்மைய வரலாறு வெளிப்படுத்தி விட்டது. இந்தியா ஏற்கெனவே தலையிட்டுத் தான் உள்ளது - சிங்கள அரசுக்கு ஆதரவாக!
இந்தத் தலையீட்டை நேருக்கு நேர் எதிர்க்க வேண்டும். இந்தியா தமிழர்களைப் பகைவர் களாகக் கருதிச் செயல்பட்டுக் கொண்டிருக்கை யில், "தமிழர்களாகிய நாங்களே இந்தியாவின் நண்பர்கள்' என்று இன்சொல் பேசிக் கொண்டிருப்பதால் பயனில்லை.
தமிழீழ மக்களுக்கு எதிரான சிங்கள அரசின் போருக்கு இந்தியா உதவியும் ஆதரவும் வழங்குவது என்ற நிலைபோய், இந்தியாவே சிங்களப் படைகளைக் கருவியாகக் கொண்டு இந்தப் போரை நடத்துவது என்ற நிலை வந்து விட்டதைக் கிளிநொச்சி தெளிவாகப் புலப்படுத்தி விட்டது.
இந்தியா கொடுத்த பயிற்சியைக் கொண்டு இந்தியா கொடுத்த படைக்கலன்களால் இந்தியாவின் வழிகாட்டலுடன் சிங்களப் படை தமிழ் மக்கள் மீது போர் தொடுத்துள்ளது என்பதே சாரமான உண்மை.
தமிழர்கள் தில்லியைக் கொஞ்சிக் கெஞ்சும் ("தாசா' செய்யும்) அணுமுறையைக் கைவிட வேண்டும். தில்லியை எதிர்த்துப் போராடி நெருக்குவதே சரியான அணுகுமுறை. தமிழீழத் தேசியத்தை முரணின்றி ஆதரிக்கத் தமிழ்த் தேசிய நிலைப்பாடு தேவை. எப்படியும் இந் திய வல்லாதிக்கத் தொடர்பு நிலைப்பாடாவது தேவை.
ஒருசில நண்பர்கள் தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்ப தாகச் சொன்னாலும், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப் பாட்டுக்கும் வணக்கம் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறோமே தவிர இந்திய இறையாண்மையை எதிர்க்கவில்லை என்று தன்னிலை விளக்கம் தந்து கொள்கின்றனர். இவர்கள் ஒன்றைத் தெளி வாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது இந்திய இறையாண்மை என்பது தமிழ்த் தேசிய இறையாண்மையை மறுப்பது ஆகும்.
தமிழ்த் தேசியத்தின் அரசியல் சாரம் தமிழ்த் தேசிய இறையாண்மையை மீட்கப் போராடுவதே ஆகும். மேலும், இந்தியக் குடிமக்களாக இருப்ப தாலேயே இந்திய இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டக் கட்டாயம் எதுவுமில்லை. ஒரு மாற்றுக் கருத்து என்ற அளவில் கூட இந்திய இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மறுக்கத் துணியாதவர்களைத் தமிழ்த் தேசியத்தில் மெய்யான அக்கறை கொண்டவர்கள் என்று நம்புவது கடினமாய் உள்ளது.
நமது தமிழ்த் தேசியம் என்பது இந்திய இறை யாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மறு தலித்துத் தமிழக இறையாண்மையையும் தமிழ்த் தாயகத்தையும் மீட்கப் போராடுவது ஆகும். தமிழகம் தொடர்பாகவும் சரி, தமிழீழம் தொடர் பாகவும் சரி, இந்திய மயக்கம் நமக்கில்லை. தமிழீழ மக்களின் போராட்டம் - அவர்களின் சாதனைகளும் வேதனைகளும் - தமிழர்களை இந்திய மயக்கத்திலிருந்து விடுபடச் செய்து வருகின்றன.
தமிழீழ விடுதலைப் போர் சிங்களப் பேரின வாதத்துக்கு எதிரானதாக மட்டும் பார்க்கப்பட்ட நிலை மறைந்து விட்டது. அதனை இந்திய வல்லாதிக்கம் தனக்கு எதிரானதாகப் பார்க்கிறது. அமெரிக்க வல்லா திக்கமும் பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் எல்லாத் தேசிய விடுதலைப் போராட் டங்களையும் எதிர்ப்பது போலவே ஈழ விடுதலைக்கு எதிராகவும் முனைப்புக் காட்டுகிறது.
பிரிட்டன், சீனா, உருசியா போன்ற வல்லரசுகளும் சிங்களத் தின் பக்கம் நிற்கின்றன. இந்தக் கொலைகாரக் கூட்டணிக்குத் தலைமை வகிப்பது இந்தியாவேதான்.
தமிழகத்தின் இறை யாண்மையை மறுக்கும் இந்தியா தமிழீழத்தின் இறை யாண்மையையும் மறுத்து நிற்கிறது. சிங்கள இறையாண்மைக்கு எதிரான ஒவ்வொன்றையும் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகப் பார்த்து ஒடுக்க முற்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு முன் இட்லரின் பால் கொஞ்சிக் கெஞ்சும் கொள்கையை கடைப் பிடித்த மேலை வல்லரசுகளின் பட்டறிவு நமக்கோர் எச்சரிக்கை.
இட்லரின் வழித்தோன்றல் தான் இராசபட்சர். இராசபட்சரின் இராசகுரு தான் மன்மோகன் சிங். இவரை எதிர்த்து முறியடிக்கலாமே தவிர, கொஞ்சிக் கெஞ்சி எதையும் அடைய முடியாது.
இன்னமும் இந்திய மயக்கத்திலிருக்கும் தமிழர்கள் இனியாவது அதிலிருந்து விடுபட வேண்டும். இது ஈழப் போராட்டம் நமக்களித்த கொடையாக இருக்கட்டும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது...
இந்தியாவும் இப்படித்தான்.
-தியாகு-
Comments