மூங்கிலாறு பகுதியில் நடந்த கொடூர எறிகணைத் தாக்குதலில், உடல் கருகி இறந்த தமிழர்களின் சடலங்கள், இணையத் தளங்களில்
வெளியாகியிருந்தன.
நாசி காலத்து இன அழிப்பு நிகழ்வுகளை இவை நினைவூட்டுகின்றன. உடல் சிதறிக் கிடந்த பிணக் குவியலை ஒரு சிறுவன் ஒதுங்கி நின்று பார்வையிடுகிறான். தலை துண்டிக்கப்பட்டு, கீழ்ப்பகுதி முற்றாக கருகிய நிலையில் காணப்பட்ட பெண்ணொருத்தியின் கையில், கேதாரி அம்மன் விரதத்திற்கு கட்டப்பட்ட கௌரி காப்பு எரியாமல் கிடந்தது.
அப்பெண்ணைஅம்மனும் காப்பாற்றவில்லை. உலக நாடுகளின் சந்நிதானம் ஐ.நா
சபையும் காக்கவில்லை.கடந்தமாதம் 21ஆம் திகதி அரசு அறிவித்த பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் தினமும் நூற்றுக்கணக்கானோர் எறிகணை வீச்சுக்களால் கொல்லப்படுகின்றனர். புதிய சூனியப் பிரதேசங்களையும் அரசாங்கம் அறிவிக்கின்றது.
பாதுகாப்பு வலயத்திற்கும், கொலைக்களத்திற்குமிடையே நூலளவு இடைவெளியும் இல்லை என்பதே வன்னி மக்களின் கருத்து.இனப்படுகொலை நிகழ்த்தப்படுவதாக ஆயிரம் சான்றுகளை ஒப்படைத்தாலும், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனிற்கு அவை போதாதாம். பாதுகாப்புச் சபையில் அது குறித்து விவாதிப்பதற்கான நல்ல காலம் இன்னமும் கனிந்து வரவில்லை யென்ற வியாக்கியானம் வேறு கூறுகிறார்.
வவுனியாவிற்கு இடம்பெயரும் மக்களை, ஐ.நா.வின் மேற்பார்வையில் பராமரிக்க வேண்டுமென இப்போது கூறும் பான் கீ மூன் அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்தினை முன்பே பராமரிக்க முன்வந்திருந்தால், 5000க்கு மேற்பட்ட மக்களின் அழிவுகளை தடுத்திருக்கலாம்.
192 நாடுகளை உறுப்பினராகக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை என்கிற அதியுயர் பேரவையால், இலங்கை அரசிற்கெதிராக சிறு துரும்பைக் கூட அசைக்க இயலாதென்பதே உண்மை.
சரியானவற்றையும் நிராகரிக்கும் வீட்டோ அதிகாரம் கொண்ட பஞ்ச பாண்டவர்களை மீறி பான் கீ மூனால் எதுவுமே செய்ய முடியாது. தற்காலிக உறுப்புரிமையை கொண்ட மெக்சிகோ நாட்டினால் கிளப்பப்பட்ட இலங்கை விவகாரத்தை, ரஷ்யாவும் பிரித்தானியாவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டன.
விடாக்கண்டன் மெக்ஸிக்கோ, மறுபடியும் இவ்விவகாரத்தை பாதுகாப்புச் சபையில் விவாதிக்க முயற்சிப்பதாக தெரியவருகிறது.ஆயினும் பல்வேறு தளங்களில் கொண்டு செல்லப்படும் தமிழ்த்தேசிய விடுதலைப்
போராட்டமானது, சர்வதேசத்தின் மீதுள்ள சிறிதளவு நம்பிக்கையிலேயே அசைந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்தும், தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளை கண்டும் காணாதது போல் சர்வதேசம் செயற்பட்டால், பின் விளைவுகள் மிக மோசமான தளத்தினை நோக்கிச் சென்றுவிடும் வாய்ப்புண்டு.
வல்லாதிக்க சக்திகளின் பிராந்திய நலனிற்கேற்றவாறு, மேற்குலகின் ஆதிக்கம் கொண்ட ஐ.நா. சபையும் செயற்படுவதாகக் கருதலாம்.இந்தியாவைத் தவிர்த்து, ஏனைய உலக நாடுகள் விடுத்த "போர் நிறுத்த' கோரிக்கையை இல
ங்கை அரசு அடியோடு நிராகரிக்கிறது.
சமாதானத் தீர்விற்கான அனுசரணைப் பணியை ஏற்றுக் கொள்வதாக கிழக்குத் திமோர் அதிபர் ஜோசே ராமொஸ் ஹொர்டா விடுத்த வேண்டுகோளையும் இலங்கை அரசாங்கம் புறந்தள்ளியுள்ளது.
பிரித்தானிய பிரதம மந்திரி கோடன் பிறவுண் அனுப்பவிருந்த விஷேட பிரதிநிதி டேஸ்பிறவுணையும் , இலங்கை அரசாங்கம் உள்நாட்டு விவகாரத்தில் பிரிட்டன் தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டி நிராகரித்துள்ளது.ஆனாலும், சர்வதேசத்தின் சமாதானக் கோரிக்கைகளை அடியோடு ஏற்றுக் கொள்ள மறுக்கும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினைப் புரிந்து கொள்வது கடினமானதல்ல.
இவர்களுக்கிடையே நிலவும் பிராந்திய நலன் சார்ந்த முரண்பாடுகளே, இக் கையறு நிலையை உருவாக்கியுள்ளதெனக் கணிப்பிடலாம்.சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் அனுசரணையும், பக்கபலமும் இருக்கும் வரை இலங்கை அரசாங்கத்தின் இராணுவ முனைப்பினை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.
புலிகள் அழிவதால், இனப்பிரச்சினை தீர்க்கப்படுமென்கிற தவறான கற்பிதங்களை, ஏனைய நாடுகள் தவிர்க்கும் வரை, மோதல்கள் நீடித்தபடியே இருக்கும்.,
தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் ஆதார சக்தியாகவும், ஆணிவேராகவும் திகழும் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டால் மாற்றுத் தீர்வுச் சிந்தனைத் தளமொன்று உருவாக்கும் வாய்ப்பு உண்டென இவர்கள் நம்புகிறார்கள்.
இலங்கை பிளவடையாமல் ஒற்றையாட்சியின் கீழ் நீடிக்க வேண்டுமாயின், விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் சிதைவுபட வேண்டுமென்பதை சகல பிராந்திய வல்லாதிக்க நலன் விரும்பிகளும் ஏற்றுக் கொள்கிறார்கள். அங்கு பொது மக்களின் இழப்பு குறித்து அதிகம் அலட்டிக் கொண்டால் இவர்களின் மூலோபாயக் கருத்துருவம் சிதைக்கப்படும் ஆபத்து உருவாகுமென்று, இவ்வல்லாதிக்கச் சக்திகள் எடைபோடுகின்றன.
ஆகவே புலிகளின் கரங்களில் ஆயுதம் இருப்பதால்தான் மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று தெரிவித்து அடிப்படைப் பிரச்சினையை திசை திருப்ப முயல்கிறார்கள் இந்த வல்லரசாளர்கள்.
சமாதானம் பேசிய அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்மும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேலும் புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டுமென அறைகூவல் விடும் பின்னணியில் மேற்கூறிய விடயங்களைப் புரிந்து கொள்ளலாம்.
பிரிக்கப்படாத இலங்கைக்குள் அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய எல்லை நிர்ணயத்துடனான ஓர் அரசியல் தீர்வு முன்வைப்பிற்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைக்குமென்று கூறும் இந்திய ஜனாதிபதி 1987 இல் இந்தியா செய்த ஒப்பந்தத்தில் அனைத்து சமூகங்களின் கருத்துக்கள் பெறப்படவில்லையென்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போடுவதன் ஊடாக நல்லெண்ண சமிக்ஞையொன்றினை சிங்கள தேசத்திற்கு வழங்கலாமென அறிவுரை வேறு கூறுகிறார் பிரதீபா பட்டேல்.
எல்லோருடைய நோக்கமும், சிந்தனையும் ஆயுதக்களைவிலேயே மையம் கொண்டிருக்கிறது. அத்தகைய ஆயுத களைவானது, சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டினை நிரந்தரமாகத் தகர்த்து விடுமென்பதால், அக்கோரிக்கையினையே தொடர்ந்தும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.போராட்ட நியாயத் தன்மையை மறுதலிக்க பயங்கரவாத முலாம் பூசியவர்கள்தான் இந்த ஜனநாயக சிற்பிகள்.
வன்னியிலிருந்து பலாத்காரமாக இடம்பெயர வைக்கப்படும் மக்களை மூன்று ஆண்டுகள் முகாமிற்குள் முடக்க அரசு திட்டமிடுகிறது. அம் முகாம்களின் பராமரிப்பிற்கான நிதி உதவிகளை வழங்க வேண்டுமென அனைத்துலக தொண்டர் நிறுவனங்களிடம் விடுத்த வேண்டுகோளை அவை நிராகரித்துள்ளன.இம்முகாம்களை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் அரசாங்கம் நிர்வகிக்கும் என அரசாங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூதர்களுக்கு ஹிட்லர் செய்ததும், பாலஸ்தீனர்களுக்கு யூதர்கள் செய்ததும் இவ்வகையான மனிதச் சிறை முகாம்களே. அங்கு வங்கிகள் தொடக்கம் கூப்பன் கடை வரை எல்லாமே இருக்கும். நாட்டிற்குள் ஒரு சிறிய தேசம். அவ்வளவுதான். பலஸ்தீனரை கூறுபோட்டு "ஹம்லட் வகை, திறந்த வெளிச் சிறைச்சாலைகளை இஸ்ரேல் உருவாக்கியது போன்று வவுனியாவிலும் பிரதியாக்கம் தோற்றம் பெறுகிறது.
இம்முகாம்களை தமது நேரடிக் கண்காணிப்பில் கொண்டுவர ஐ.நா. முகவர் அமைப்புக்கள் முயன்றாலும், வழமைபோன்று உள்நாட்டு விவகாரங்களில் தலையை நுழைக்கும் உரிமை ஐ.நா.விற்கு கிடையாதென்கிற பதில்,
வெளிநாட்டு அமைச்சரிடமிருந்து வெளி வரலாம்.
இந்திய ஜனநாயகமும் இதனை வேடிக்கை பார்க்கும். போரை நிறுத்தும்படி ஜனாதிபதி ஊடாக கோரிக்கை விடுத்து, திரை மறைவில் நின்றவாறு யுத்தத்தை நடத்தும் இந்திய மத்திய அரசினை, தமிழக உறவுகள் அம்பலப்படுத்துகிறார்கள்.
இதை எழுதும் பொழுது சோகமான செய்தியொன்று வன்னியிலிருந்து வந்தது. தினமும் வெளிவரும் அவலச் செய்தியோடு, தமிழ்த் தேசிய ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தி எறிகணை வீச்சில், கொல்லப்பட்ட செய்தியும் சேர்ந்து வந்தது.
சகல ஊடகத் தளங்களிலும், தனது கருத்தினை ஊன்றி விதைத்த அந்த மனிதநேயமிக்க மனிதனை தமிழினம் இழந்து விட்டது. குரல்வளை நெரிக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்த சத்தியமூர்த்தியின் மானுட விடுதலைப் பங்களிப்பினைப் போற்றுவோம். உன் குரல் இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது நண்பரே.
- சி. இதயச்சந்திரன்-
-நன்றி வீரகேசரி -
Comments