கிளிநொச்சி: அயரா விடுதலைப் போரில் ஓர் அரைப்புள்ளி



மரகதத் தீவாம் இலங்கையில் பொங்கிச் சிவந்த தங்கத் தமிழீழத்தின் வைரப் பொட்டு கிளிநொச்சி. வட தமிழீழ உழவர் பெருங்குடியின் வணிக மையமாகத் திகழ்ந்த கிளிநொச்சி பிற்காலத்தில் விடுதலைப் போரின் உலைக்களமாகவும், அண்மை ஆண்டுகளில் பன்னாட்டு உறவுப் புள்ளியாகவும் வரலாற்று முத்திரை பதித்தது. புகழோங்கிய கிளிநொச்சியைப் புழுதிக் காடாக்கி வெற்றி கொண்டாடும் சிங்கள வெறித்தனத்துக்கு அதுவே ஒருநாள் புதைகுழியாக மாறும் என்பது உலகத் தமிழரின் உள்ளத்துப் பெருவேட்கை.

ஈழப் போரின் முதற்கட்டத்திலேயே யாழ் குடா நாடு தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டு விட்டது. அதேபோது கிளிநொச்சி மாவட்டத்தில் நகரம் தவிர்த்த பெரும் பகுதி புலிகளின் கட்டுப் பாட்டுக்குள் வந்து விட்டது. கிளிநொச்சியின் போரியல் முக்கியத்துவத்தை உணர்ந்த சிங்களப் படைத் தலைவர் டென்சில் கொப்பேகடுவா அந்நகரத்திலேயே தங்கியிருந்து விடுதலைப் போராளிகளை அடக்கியொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

கிளிநொச்சி நகரத்தை மீட்பதற்கான புலிகளின் முதல் போர் நடவடிக்கை 1985இல் இராணுவக் காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட ஊர்தித் தாக்குதலாகும். 1987இல் ஈழத்தின் மீது படையெடுத்த இந்திய இராணுவம் அமைதிப் படை கிளிநொச்சியைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது. 1990இல் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியவுடன் புலிப்படை கிளிநொச்சியை வளைத்து முற்றுகையிட்டு சிங்களப் படையை முறியடித்தது. ஆனையிறவிலிருந்து மீட்பு நடவடிக்கை எடுத்து கிளிநொச்சியிலிருந்து இராணுவத்தினர் தப்பிச் சென்றனர். இதற்காக நடந்த கடும்போரில் நகரம் மீண்டும் அழிவுகளைச் சந்தித்தது. ஆனையிறவுக்குத் தெற்கே கிளிநொச்சி மாவட்டம் முழுவதும் புலிப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.

மீண்டும் புத்துயிர் பெற்று எழுந்த கிளிநொச்சி நகரம் வன்னியின் வணிக மையமாக வளரலாயிற்று. மூன்றாம் கட்ட ஈழப் போர் தொடங்கி யாழ் குடா கைவிட்டுப் போன பின், 1996இல் முல்லைத் தீவுப் படைமுகாமைப் புலிகள் வெற்றிகரமாக மீட்டார்கள். அன்றைய சந்திரிகா அரசு ‘சத்ஜெய’ (உண்மை வெற்றி) 01, 02, 03 என்று மூன்று பெரும் படை நடவடிக்கைகளை எடுத்து 70 நாள் போரில் கிளிநொச்சி நகரத்தையும், அதன் தெற்கே கிளிநொச்சி இந்துக் கல்லூரி வரைக்கும் ஏ-9 சாலையையும் கைப்பற்றியது.

பாதைத் திறப்பு பகற்கனவு

1997ஆம் ஆண்டு கடற்புலிகளின் தாக்குதல்கள் பெருகி, யாழ்ப்பாணத்திற்குக் கடல்வழிப் போக்குவரத்து கடினமான போது, தரை வழிப் பாதையைத் திறக்க வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டது. அந்த ஆண்டு மே 13ஆம் நாள் சந்திரிகா அரசு ‘ஜெயசிக்குறு’ (வெற்றி உறுதி) என்ற பெயரில் பாதைத் திறப்பு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கிற்று. வவுனியாவிலிருந்து ஏ-9 சாலை வழியாக கிளிநொச்சி நோக்கி முன்னேறியது சிங்களப் படை. எதிர்த்துத் தாக்கி இழப்புகளை உண்டு பண்ணியவாறு பையப்பையப் பின்வாங்கினார்கள் புலிகள். மாங்குளம் வரை முன்சென்ற படையினரும் கிளிநொச்சியில் தரித்து நின்றவர்களும் கைகுலுக்க அணியமான போது புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்தி அம்முயற்சியை முறியடித்தார்கள். சந்திரிகாவின் பாதைத் திறப்பு வெறும் பகற்கனவாய் முடிந்து போயிற்று.

ஓயாத அலைகள்

1998 செப்டம்பரில் ‘ஓயாத அலைகள் - 2’ என்ற பெயரில் புலிகள் கிளிநொச்சியின் மீது மேற்கொண்ட சூறாவளித் தாக்குதல் படையியல் வல்லுநர்களையே வியப்பில் ஆழ்த்திய ஒன்று. 70 நாள் போரில் இழந்த பகுதியை வெறும் 39 மணி நேரத் தாக்குதலில் புலிப்படை மீட்டெடுத்தது. 1998 செப்டெம்பர் 26 - ஈகச் சுடர் தீலிபனின் பதினோராவது நினைவு நாள் - நள்ளிரவு கடந்து தொடங்கிய போர் நடவடிக்கை மறுநாள் 27 முழுக்க நடந்து 28 மாலைக்குள் வெற்றிகரமாக நிறைவுற்றது. இந்தப் போரில் 398 போராளிகள் வீரச் சாவடைந்தார்கள். 1,250 சிங்களப் படையினர் செத்து மடிந்தனர். மீட்டெடுத்த கிளிநொச்சியில் மாலதி படையணித் தலைவி விதூசா புலிக்கொடி ஏற்ற, தளபதி தீபன் கொடி வணக்கம் செய்ய, தமிழீழ விடுதலைப் போர் வரலாற்றில் ஒரு புகழேடு சேர்ந்து கொண்டது.

1985க்கும் 1998 செப்டெம்பருக்கும் இடைப் பட்ட காலத்தில் அவ்வப்போது நிகழ்ந்த கடுஞ்சமர் களால் மண்மேடாகிக் கிடந்த கிளிநொச்சியை மீட்டெழுப்பிப் புத்துயிரூட்டும் கடமை புலிகளைச் சார்ந்தது. ஆனால் அது இன்னமும் சிங்கள இராணுவத்தின் தாக்குதல் வளையத்துக் குள்ளேதான் இருந்தது. அருகிலிருந்த ஆனை யிறவுக் கூட்டுப் படைத் தளத்தி லிருந்து ஆபத்து எந்நேரமும் காத்திருந்தது.

1999 நவம்பரில் விடுதலைப் புலிகள் மேற் கொண்ட ‘ஓயாத அலைகள் - 3’ நடவடிக்கையில் வன்னிப் பெருநிலப்பரப்பு விடுவிக்கப்பட்டதோடு, ஆனை யிறவுக் கூட்டுப் படைத் தளமும் வீழ்ந்தது. இதனால் கிளிநொச்சி மாவட்டத்தின் முழுப் பரப்பும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. இரணைமடுச் சந்தியிலிருந்து முகமாலை வரைக்கும் புலிப்படையின் ஆட்சிப் புலம் விரிந்து கிடந்தது. போரின் கொடுநகங்களால் கிழிக்கப்பட்டுக் கோரமாய் காயமுற்று வடுவேறிக் கிடந்த கிளிநொச்சியின் முகம் இப்போது நலம் பெற்று வளம் பெற்றுப் பொலிவுறத் தொடங்கியது. வன்னிக்கான ஆட்சி மையமாக வும் விடுதலைப் புலிகளின் தலைமையகமாகவும் வளர்ந்தது கிளிநொச்சி.

இராணுவச் சமநிலை

சிங்களப் படையின் ‘தீச்சுவாலை’ நடவடிக்கையை முறியடித்துப் புலிகள் நிலைநிறுத்திய இராணுவச் சமநிலைதான் இருதரப்புகளுக்கு மிடையே போர்நிறுத்தம் ஏற்பட வழிவகுத்தது. 2002 தொடங்கி பன்னாட்டு அரசுறவாளர்களும் தூதுவர்களும், அரசியல் தலைவர்களும் கிளி நொச்சிக்கு வருகை புரிவது வழக்கமாயிற்று. இலங்கைத் தீவு மெய்ந் நடப்பில் இரு தலைநகரங் களைக் கொண்ட இரு தேசங்களாக இயங்குவதை உலகம் கண்டது. சிங்கள தேசத்துக்குக் கொழும்பு போல் ஈழத் தமிழ்த் தேசத்துக்குக் கிளிநொச்சி என்ற நிலை ஏற்பட்டது. பன்னாட்டவரும் கிளிநொச்சி யில் புலிப்படைத் தலைவர்களைச் சந்தித்து அமைதிப் பேச்சு நடத்தினர். அமைதி முயற்சி களுக்கென்றே அந்நகரில் அமைதிச் செயலகமும் ஏற்படுத்தப்பட்டது.

சோல்கீம் வியப்பு

சிதிலங்களிலிருந்து உயிர்த்தெழுந்து கிளிநொச்சி கண்ட வளர்ச்சி அந்நகருக்கு வருகை புரிந்த பன்னாட்டவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அமைதிக் காலத்தில் வன்னிப் பரப்பெங்கிலும் அதன் மையமாகக் கிளிநொச்சியிலும் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் போர்ப் புலிகளின் ஆக்கத் திறனுக்குச் சான்று பகர்ந்தன. நார்வேயிலிருந்து அமைதித் தூதராக வந்த எரிக் சோல்கீம் சொன்னார் :

“இரண்டாம் உலகப் போரின் அழிவிலிருந்து மீண்டெழ அய்ரோப்பாவுக்கு நீண்ட காலமாயிற்று. ஆனால் குறுகிய சில மாத காலத்திற்குள்ளேயே வன்னி கண்டுள்ள எழுச்சி என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.”

அமைதிக் காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பன்னாட்டு ஊடகர்களைச் சந்தித்ததும் கிளிநொச்சியில்தான். அவரும் அன்றன் பாலசிங்கமும் செய்தியாளர்களின் வினாக்களுக்கு விடையளித்ததை உலகமே கண்டு கேட்டது. (அப்போது செயலலிதா இங்கே வயிறெரிந்து கத்தியது ஒரு துணைக்கதை.)

தமிழ்ச்செல்வன் படுகொலை

வன்னித்தாயின் வயிற்றில் தமிழீழக் கரு அமைதியாக வளர்ந்து வருவதைக் கண்டு சிங்களம் துணுக்குற்றது. இந்தக் கருவை அழிக்க இராசபட்சரின் அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறைப் போராட்டத்தில் கிளிநொச்சி தனியிலக்கு ஆயிற்று. அமைதிச் செயலகத்தின் மீது குண்டுவீசி சு.ப. தமிழ்ச்செல்வனைக் கொன்ற செயல் சிங்களப் பேரினவாதத்தின் கொலை நோக்கை வெளிப்படுத்திற்று. போர் நிறுத்த உடன்பாட்டைக் கைவிடுவதாக இராசபட்சர் அரசு வெளிப்படையாக அறிவித்ததி லிருந்து சிங்களப் போர் நடவடிக்கை முழுவதும் கிளிநொச்சியை முதன்மை இலக்காகக் கொண்டே நகர்ந்தது. தளபதிகள் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், பிரிகேடியர் சவீந்திர சில்வா ஆகியோரின் வழிநடத்தலில் சிங்களப் படையணிகள் நகர, வான்படை ஓயாத குண்டுவீச்சின் மூலம் வழியமைத்துக் கொடுத்தது.

சிங்களத்துக்குப் பேரிழப்பு

வன்னிப் பெருநிலத்தை 74 மணி நேரத்திற்குள் மீட்பதாகச் சொல்லித்தான் 2008 செப்டெம்பரில் கிளிநொச்சி நோக்கி சிங்களப் படையெடுப்பு தொடங்கியது. ஆனால் புலிப்படை வழிநெடுகிலும் தடுத்துத் தடுத்துப் போரிட்டுப் பேரிழப்புகளை உண்டு பண்ணிச் சிறும (குறைந்த பட்ச) இழப்புகளோடு மெல்ல மெல்லவே பின்வாங்கிற்று. கடந்த ஓராண்டு காலத்தில் சிங்களப் படை ஏழாயிரத்துக்கு மேற்பட்ட ஆட்களை இழந்துள்ளது. கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் காயமடைந்துள்ளனர். பல்லாயிரம் பேர் படையை விட்டு ஓடிப் போய் விட்டனர். சிங்களப் படையின் போர் முயற்சிக்கு அமெரிக்கா, சீனம், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட அரசுகளின் படைக்கல உதவியும் பயிற்சித் துணையும் வழிகாட்டலும் இருந்தன.

சிங்களப் படை பாரிய இழப்புகளைச் சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் சென்ற திசம்பர் 15ஆம் நாள் ஏழு நாடுகளின் படைத் துறை அறிவுரைஞர்கள் வன்னிக் கள முனைக்கே நேரில் சென்று சிங்களப் படைக்கு அறிவுரைகள் வழங்கிய செய்தி படங்களுடன் வந்துள்ளது. பிரிட்டன், சப்பான், வங்காளதேசம், மாலத் தீவுகள் ஆகிய நாடுகளின் படைத்துறை அதிகாரிகளோடு இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகளும் சேர்ந்து சென்று சிங்களப் படைக்குப் போர் குறித்து அறிவுரைகள் வழங்கியுள்ளனர். சிங்கள அரசே இச்செய்தியை வெளியிட்டதிலிருந்து இந்நாடுகள், குறிப்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து ஊக்கமும் அறிவுரையும் உதவியும் வழங்குவதற்கு அது அளிக்கும் முக்கியத்துவம் தெரிகிறது.

இந்தியா, பாகிஸ்தான் உதவி

பாகிஸ்தான் அரசானது பயங்கரவாதத்தைத் தீனி போட்டு வளர்த்து இந்தியா மீது ஏவி விடுவதாக ஓயாமல் குற்றஞ்சாட்டும் இந்திய அரசு தமிழர் களைக் கருவறுக்கும் சிங்கள அரசப் பயங்கரவாதத் துக்கு ஆதரவாகப் பாகிஸ்தானுடன் கைகோக்கவும் வெட்கப்படவில்லை. சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுப்பதில் சீன, பாகிஸ்தான் அரசுகளோடு இந்திய அரசும் போட்டியிடுகிறது. இந்தப் போட்டி யில் பலியாகிக் கொண்டிருக்கிறது தமிழினம்.

பல அயலரசுகளின் பின்வலுவோடு, குறிப்பாக இந்திய வல்லரசின் அனைத்து வகை ஆதரவோடும் சமர் புரிந்த சிங்களப் படைக்கு முகங்கொடுத்து ஒவ்வொரு கட்டத்திலும் பகைவர்க்குப் பெரும (அதிகபட்ச) இழப்புகளை ஏற்படுத்தி, அவர்தம் முன்னணிப் படைப்பிரிவுகளைச் சிதைத்துப் படிப்படியான தந்திரவுத்திப் பின்வாங்கல்களை மேற்கொண்ட புலிகள் இயக்கம் இறுதிக் கட்டத்தில் எதிர்ப்பைக் கைவிட்டுச் சட்டென்று பின்வாங்கியது போல் தெரிகிறது. 2008 திசம்பர் 31ஆம் நாள் பரந்தன் பெரிய எதிர்ப்பின்றி வீழ்ந்தது. சிங்களப் படையே இது இவ்வளவு எளிதாய் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. சனவரி 2ஆம் நாள் இராணுவம் வான் குண்டுவீச்சின் காப்புடன் கிளிநொச்சிக்குள் நுழைந்த போது அங்கே புலி வீரர் களும் இல்லை, பொதுமக்களும் இல்லை. இடிபாடுகளுக்கு நடுவில் சுற்றித் திரிந்த நாய்களும் பூனைகளுமே சிங்களப் படையை வரவேற்றன. ஒன்றரை இலட்சம் மக்களோடு உயிர்த் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருந்த கிளி நொச்சியை அல்ல, ஆளற்ற ஒரு பேய் நகரத்தைத் தான் சிங்களம் பிடித்துள்ளது. இதற்குத்தான் இராசபட்சக் கூட்டம் இத்துணை ஆரவாரம் செய்து கொண்டிருக்கிறது.

பின்வாங்கியது ஏன்?

கிளிநொச்சியிலிருந்து புலிகள் சட்டென்று விலகிக் கொண்டு சிங்களப் படைக்கு வழி விட்டது ஏன்? இந்தக் கேள்விக்கு அரசியல் - படையியல் ஆய்வாளர்கள் விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள். சிங்களப் படையின் பெரும்படியான, விடாப் பிடியான தாக்குதல், வான் குண்டுவீச்சினால் விடுதலைப் படைகளுக்கும் மக்களுக்கும் ஏற்படக் கூடிய பேரழிவைக் கருதித்தான் புலிகள் தந்திரவுத்தியாகப் பின் வாங்கியிருக்க வேண்டும் என்பது ஒரு கருத்து. இதே போன்ற வேறு சில நேர்வுகளிலும் புலிகளின் தந்திரவுத்தி இதுவாகவே இருந்துள்ளது என்கின்ற னர். சான்றாக 1996இல் யாழ்ப்பாண வெளி யேற்றத்தை எடுத்துக் காட்டுகின்றனர்.

கிளிநொச்சி, முல்லைத் தீவு இரண்டையும் சிங்களப் படை குறிவைத்த நிலையில், போரியல் நோக்கில் முல்லைத் தீவைத் தக்க வைத்துக் கொள்வதே முக்கியம் எனக் கருதி கிளிநொச்சியை விட்டுக் கொடுத்திருப்பார்கள் என்பது மற்றொரு பார்வை. புலிகள் தங்கள் படையணிகள் அனைத்தையும் முல்லைத் தீவில் குவித்து வைத்துக் கொண்டு சிங்களத்தோடு இறுதிப் போருக்கு அணியமாகக் கூடும் என்கின்றனர். சிங்களப் படைக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுடன் ஒப்பிடுகையில் புலிப்படைக்கு ஆள்வகையிலோ ஆயுத வகையிலோ இதுவரை பெரிய சேதம் ஏற்பட்டு விடவில்லை என்று சுட்டிக் காட்டுகின்றனர்.

கிளிநொச்சியைப் போலவே முல்லைத் தீவையும் காலப்போக்கில் புலிகள் கைவிட எண்ணி மெல்லமெல்லப் பின்வாங்கி மரபுவழிப் போர் முறையிலிருந்து கரந்தடிப் போர் முறைக்கு மாறிவிடக் கூடும் என்ற கருத்தும் உள்ளது. இந்த முறையில் இந்தியப் படையை முறியடித்தது போலவே சிங்களப் படையையும் முறியடித்து படையியல் - அரசியல் வெற்றி நோக்கி முன்னேற லாம் என்கின்றனர். புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கி யிருப்பதாகச் சொல்வதைக் காட்டிலும் அவர்கள் கிளிநொச்சியை முன்னகர்த்தி வைத்துள்ளார்கள் என்று சொல்வதே பொருத்தமாய் இருக்கும் என்றுகூட ஓர் ஆய்வாளர் எழுதியிருக்கிறார்.

இந்த ஊகங்களில் எது சரி? எது தவறு? என்று நம்மால் இப்போது சொல்ல முடியாது. இவையல்லாத வேறு பல வாய்ப்புகளும் இருக்கலாம். நம்மைப் பொறுத்த வரை அய்யத்துக் கிடமற்ற சில உண்மைகளைக் கருத்தில் கொள்வோம்.

சோர்வும் கவலையும்

சிங்களம் இன்று கிளிநொச்சி, நாளை கிளிநொச்சி என்று போர்க் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த நிலையில், உலகத் தமிழர்களுக்கு கிளிநொச்சி வீழக் கூடாது என்பது விருப்பமாகவும் வீழாது என்பது நம்பிக்கையாகவும் இருந்தது. இந்த விருப்பமும் நம்பிக்கையும் ஈடேறாமற் போனது. சோர்வையும் கவலையையும் ஏற்படுத்தி யிருப்பது உண்மை. புலிகள் கிளிநொச்சியைத் தக்க வைத்துக் கொண் டிருந்தால் மகிழ்ந்திருப் போம், விட்டு விட்டதால் வருந்துகிறோம் என்ற அளவில் இது பின்னடைவுதான், அய்ய மில்லை! கிளிநொச்சி இதற்கு முன்பும் பறிபோய் மீண்டுள்ளது என்ற ஆறுதல் இருப் பினும், இம்முறை வலி பெரிது, மிகப்பெரிது.

ஒப்பளவில் நீண்ட அமைதிக் காலத்தில் (2002-07) புலிகள் வலுக்குன்றி விடவில்லை என்றாலும், சிங்கள இராணுவம் ஆள் வகையிலும் ஆயுத வகையிலும் பயிற்சி வகையிலும் வலுக்கூடியிருப்பது தெரிகிறது. இந்தியா உள்ளிட்ட அயல்நாடுகளிடமிருந்து கிடைத்த உதவிக்கு இதில் முகாமைப் பங்கு உண்டு. புலிகளுக்கு இவ்வாறான உதவி ஏதும் கிடைக்கவில்லை. வல்லரசுகளான பல நாடுகளில் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்யப்பட்டுள்ள நிலையில் புலிகளுக்கு வெளியுதவியின் கதவு சாத்தப்பட்டு விட்டது. உலகளாவிய தமிழ்ச் சிதறலின் உதவியைப் பெறுவதற்கும் பெரிய இடர்கள் உள்ளன.

தோல்விகள் வழியாக

போர், தோல்வி, மீண்டும் போர், மீண்டும் தோல்வி, மீண்டும் மீண்டும் போர், மீண்டும் மீண்டும் தோல்வி... இறுதி வெற்றி கிட்டும் வரை! இதுவே விடுதலைக்கான நீண்ட போரின் பாதை. எனவே கிளிநொச்சியோடு எல்லாம் முடிந்தது என்று பகைவன் நினைத்தாலும் நாம் நினைத் தாலும் அது சரியில்லை. களங்களைத் தோற்றுப் போரை வெல்லுதல் - வெற்றிகரமான பல விடுதலைப் படைகள் இந்த இலக்கணத்தை நிறுவிக் காட்டியுள்ளன. முப்பதாண்டு காலப் போராட்ட அனுபவம் கொண்ட புலிகள் வெற்றிகளிலிருந்து ஊக்கமும் தோல்விகளிலிருந்து பாடமும் பெற்றுத் தமிழீழத் தாயகத்தை மீட்டெடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

அரசியல் எதிரடிப்பு

விடுதலை அரசியலின் நீட்சியே விடுதலைப் போர். அரசியல் என்பது குருதி சிந்தாப் போர். போர் என்பது குருதி சிந்தும் அரசியல். அரசியல் வெற்றிகளே படையியல் வெற்றிகளுக்கு அடித்தளமாகின்றன. மீண்டும் படையியல் வெற்றிகள் அரசியல் வெற்றிகளுக்கு வழியமைக் கின்றன. அரசியலை விடுத்த போர் என்பது இராணுவவாதமாகிறது. படையியல் பின்னடைவுகள் அரசியல் பின்னடைவுகளுக்குக் காரணமாகலாம். ஆனால் அரசியலுக்கும் படையியலுக்கும் ஒரு நேர்கோட்டுத் தொடர்பு இருப்பதாக இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. போர்க்களப் பின்னடைவு களைச் சரியாகக் கை யாளும் போது அரசியல் வகையில் இழப்புகளைக் கட்டுப்படுத்துவதோடு, ஆதாயங்கள் பெறவும் இயலும்.
கிளிநொச்சிப் போர்க் களப் பின்னடைவின் உட னடி அரசியல் எதிரடிப்பு :

உலகத் தமிழர்களி டையே சோர்வும் நம்பிக்கைக் குறைவும்; சிங்கள வர்களிடையே ஊக்கமும் நம்பிக்கையும்; கிளி நொச்சியை இழக்காதிருந்தால் விளைவு நேர் மாறானதாக இருந்திருக்கும். ஆனால் இந்த உட னடிப் பாதிப்புகளிலிருந்து மீண்டு வந்து பார்க்கை யில் நீண்ட காலக் கண்ணோட்டத்தில் அரசியல் ஆதாயங்கள் விளைந்திருப்பதை உணரலாம்.

ஆதாயங்கள்

1. ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, தமிழகத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் கூட சிங்கள அரசிடம் மாறாப் பகை கொண்டு விட்டனர். உணர்வுள்ள தமிழர் எவரும் சிங்கள அரசுடன் இணக்கம் என்பதை இனி எண்ணியும் பார்க்க மாட்டார்.

2. இந்திய அரசின் வஞ்சகம் அறவே தோலுரிந்து கிடக்கிறது. தமிழீழ மக்களும் தமிழக மக்களும் இந்திய வல்லாதிக்கத்தின் கொடிய உள்ளுருவைக் காணும் வாய்ப்பை கிளிநொச்சி வழங்கியுள்ளது.

3. தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகளும் மாபெரும் தலைவர்களும், தமிழினத்தின் உயிர்வாழ்வைக் காட்டிலும் அதிகாரப் பதவிகளையே பெரிதாக மதித்ததை கிளிநொச்சி காட்டிக் கொடுத்து விட்டது.

மரபுவழியும் கரந்தடியும்

இறுதியாக, கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டிருப்பது தோல்வி என்றால் இந்தத் தோல்வி போரின் ஒரு வடிவத்தில்தானே தவிர போரிலேயே அன்று. மரபுவழிப் போர்முறை என்பது ஒரு போர் வடிவமே. கரந்தடிப் போர்முறை (கெரில்லாப் போர்) என்ற வடிவத்தில்தான் ஆயுதப் போராட்டம் தொடங் கியது என்பதையும், இப்போதும் மரபுவழிப் போர்முறைக்கு இணையாகவும் துணையாகவும் கரந்தடிப் போரும் நடத்தப்படுகிறது என்பதையும், எப்போது வேண்டுமானாலும் முழுமையாகவே கரந்தடிப் போர் முறைக்கு மீள முடியும் என்பதையும் மறக்கலாகாது.

மரபு வழிப் போர் முறையில் அரசுப் படைகளின் கை ஓங்கி நிற்பது இயல்பே. கரந்தடிப் போர் முறையில் நிலைமை நேர்மாறானது. மரபு வழிப் போர்முறை சற்றொப்ப சம வலிமை யும் சமவாய்ப்பும் உள்ள இரு படைகளுக்கிடையே நடைபெற வேண்டியது. படையாட்களின் தொகை, படைக்கலன்கள் என்ற இரு வகையிலுமே அரசுப் படை விடுதலைப் படையைப் போல் பல மடங்கு வலிமை கொண்டதாக இருக்க, விடுதலை ஆற்றல்கள் தமக்கு மக்கள் தரும் முனைப்பு மிக்க ஆதரவு, ஒத்துழைப்பு, பங்கேற்பு இவற்றைக் கொண்டும், அளப்பரிய வீரம், ஈகம் கொண்டும் தம் வலிமைக் குறைவை ஈடு செய்து கொண்டு போரிட வேண்டியிருக்கும். வலிமை இடைவெளி எவ்விதத்தும் ஈடு செய்ய முடியாத அளவுக்கு விரிந்து விடும் போது, கரந்தடிப் போர் முறைக்குத் திரும்புவது தவிர வேறு வழியில்லை.

வரலாற்றுச் சாதனை

சிங்களப் படைக்கு ஆள் தரும் சிங்களச் சமூகம் இலங்கைத் தீவில் பெரும்பான்மை, தமிழ்ச் சமூகம் சிறுபான்மைதான். அதிலும் ஏறத்தாழ கால் பங்கினர் - பத்து இலட்சத்துக்கு மேற்பட்டோர் - போரினால் சிதறுண்டு புலம் பெயர்ந்து புவிப் பரப்பெங்கும் இரைந்து கிடக்கின்றனர். கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேர் உள்நாட்டிலேயே ஏதிலிகளாக அலைக்கழிந்து கிடக்கின்றனர். யாழ்ப்பாணம் மாவட்டமே சிங்களப் படைகளால் ஒரு திறந்தவெளிச் சிறையாக்கப்பட்டுள்ளது. இத்தனைத் தடைகளையும் மீறி ஒரு மரபு வழி இராணுவத்தைக் கட்டி முப்படைகளாக விரிவு படுத்தியது பிரபாகரனின் வரலாற்றுச் சாதனை எனலாம். பல களங்களில் மரபுவழிப் போர் முறை யில் புலிப்படை வியத்தகு வெற்றிகளும் கண்டுள்ளது.

புலிகளை ஒரு சில களங்களில் மரபுவழிப் போர் முறையையும் வேறு சிலவற்றில் கரந்தடிப் போர் முறையையும் மேற்கொள்வது புதிய செய்தியல்ல. கிளிநொச்சியை இழந்ததால் மரபுவழிப் போர் முறையின் எல்லை சுருங்கும் என்றால் கரந்தடிப் போர் முறையின் எல்லை விரிவடையும் என்று பொருள். இந்திய அமைதி காப்புப் படையின் வன்படையெடுப்பின் போது ஏற்பட்டது போல், நிலப்பரப்பை அறவே இழந்து முழுக்கக் கரந்தடிப் போருக்கு மாற வேண்டிய நிலையும் வரலாம். எல்லாவற்றையும் இப்போதே முன்னறிந்து சொல்ல இயலாது. கிளிநொச்சியோடு எல்லாம் முடித்து விடவும் இல்லை, முடிவு தொடங்கி விடவும் இல்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
போர்முறைகள் ஒரு புறமிருக்க, பாலத்தீனத்தின் ‘இண்டிஃபாடா’ போன்ற போர்க்குணம் வாய்ந்த மக்கள் போராட்டங்கள் வெடித்தெழுந்து விடுதலைப் போரில் மென்மேலும் முகாமையான பங்கு வகிக்கும் நிலை ஏற்படலாம்.

தமிழகப் பின்தளம்

தமிழீழ விடுதலைக்கான போராட்டக் களம் கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் மட்டும் இல்லை, அது உலகெங்கும் பரவிக் கிடக்கிறது. இந்த வகையில் தமிழீழத்துக்கு அடுத்தபடி முக்கிய மான களம் இந்தத் தமிழ்நாடுதான். கிளிநொச்சி யில் சிங்களத்தின் ஆசை நிறைவேறியதற்கு இந்தியாவின் பங்களிப்பு எப்படி உதவியது என்பதை மறக்க வேண்டாம். இந்திய - சிங்களக் கூட்டை முறிக்க நம்மால் முடியாமற் போனது. இந்த வகையில் கிளிநொச்சிப் பின்னடைவுக்கு நாமும் பொறுப்பாகிறோம்.

ஒவ்வொரு விடுதலைப் போரையும் ஒரு பின்தளம் எளிதாக்கித் தருகிறது. சீன விடுதலைப் போருக்கு சோவியத்து ஒன்றியமும், கொரிய, வியத் நாம் விடுதலைப் போர்களுக்குச் செஞ்சீனமும் பின்தளங்களாய் விளங்கின. இன்றளவும் பாலத் தீன விடுதலைப் போருக்கு அரபு நாடுகள் பின்தள மாகப் பயன்படக் காண்கிறோம். தமிழீழ விடுதலைப் போருக்குப் பின்தளம் தமிழகத்தை விட்டால் வேறு ஏது? படையியல் நோக்கில் இல்லா விட்டாலும், அரசியல் நோக்கிலாவது தமிழகத்தைத் தமிழீழ விடுதலைப் போராட்டத் தின் பின்தளமாக்குவதற்கு நாம் போராட வேண்டும். கிளிநொச்சி இழப்பையொட்டி இந்தியா தமிழ் மக்களிடமிருந்து பெருமளவு அயன்மைப் பட்டுள்ள இன்றைய சூழலை இதற்கான வாய்ப்பாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மனப்பால்

கிளிநொச்சியைத் தமிழீழ விடுதலைப் போரின் முற்றுப்புள்ளி என அங்கும் இங்கும் மனப்பால் குடிப்பவர்கள் ஏமாந்து போவார்கள். அயரா விடு தலைப் போரில் அது வெறும் அரைப்புள்ளிதான் என்பதைக் காலம் பதிவு செய்யும். தமிழீழ மக்களின் விடுதலைப் போர் தொடரும் - பிரபா கரன் சொன்னபடி - சிங்களம் களைத்துப் போகும் வரை!

சிங்களம் களைத்துப் போனால் போதாது, இந்தியமும் களைத்துப் போனால்தான் ஈழக் கனவு நனவாகும் என்பதைத் தமிழகத் தமிழர்கள் உணர வேண்டும். உலகில் தமிழனுக்கு முதல் நாடு அமைய நமது போராட்டமும் தொடரும் - கிளிநொச்சியின் வெளிச்சத்தில்!

-தியாகு-


Comments