அன்புக்குரிய தமிழகம் வாழ் தமிழ் பேசும் சகோதர சகோதரியருக்கு!வணக்கம். இந்து சமுத்திரத்தின் முத்தாம் இலங்கைத்தீவின் வடகிழக்கு மண்ணின் மருதமும் முல்லையும் நெய்தலும் ஒன்றிணைந்த தமிழீழ மண்ணின் ஒரு பகுதியில் உள்ள காப்பகழிக்குள் இருந்து.....
நாமே தயாரித்த குப்பி விளக்கொளியில்.........கையில் கிடைத்த காகிதத்தில்...... இந்த அஞ்சலை அஞ்சாமல் யான் வடித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், எமக்காக எமது மண்ணிற்காக இக்கணம் வரை வீரச்சாவடைந்த மானமாவீரரை நினைந்து, அந்நியனது அழிப்பில் உயிரிழந்த அப்பாவிப் பொது மக்களை எண்ணியவாறு ஒரு மடலை நான் உங்களுக்கு அவசியமாகவும் அவசரமாகவும் வரைந்தனுப்ப முயல்கிறேன்.
கடந்த ஆண்டு இறுதிவரை நாங்கள் வாழ்ந்த வர்த்தக - நிர்வாக நகரினை விட்டேகி அங்குல அங்குலமாய் நகர்ந்து நாமிங்கு வந்து நான்கு வாரங்களாகிய நிலையில் எதிர்வரும் நாட்கள் பெரும் எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் நகர்கின்றன.
வள்ளுவப் பெருந்தகையின் முந்நூற்று ஐம்பத்து நான்கு குறள்களுக்கு முந்நூறு 'குறளோவியம்' தீட்டிய கலைஞர் ஆட்சியில், உங்களில் சிலர் இந்நேரத்துக் கனவுலகில் சஞ்சரிக்க, எங்களின் கதியை எண்ணி உறங்க முடியாது பலர் தவித்துக் கொண்டுதான் இருப்பீர்கள் என்பதை அண்மைக் கால உங்களது எழுச்சி மிகு செயற்பாடுகளில் இருந்து உணர்ந்தறிந்தபடி, இங்குள்ள நாங்களோ, ஒப்பற்ற தேசியத் தலைவர் வழி நடந்து, வளமான நம் மண்ணை - தமிழீழ தேசத்தை ஆக்கிரமித்து அழித்தொழிக்க முயன்று குரல் வளையை நெரிப்பதாக நெருங்கி வந்து கொண்டிருக்கிற சிங்களப் பேரினவாத அரசின் படைகளுடன் அறுதியாகப் போரிட்டு, இறுதியாக 'வெற்றிக் கனி' பறித்திடுவதற்கான தயாரிப்பில் சலிப்பில்லாது ஈடுபட்டு இயங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.
வந்தாரை எல்லாம் வரவேற்று நலமே வாழ வைத்த வன்னி மண்ணின் மைந்தர்கள் காலமிட்ட கட்டளை ஏற்று வரலாற்று வரிகளில் முழுமையாய் இணைந்துள்ள இந்நேரத்தில் - உயிர் கொடுத்துத் தம் 'உதிரத்தால் ஓர் உயிரோவியம்' வரைந்து கொண்டிருக்கும் இந்தக் கணங்களில்........கிடைத்த பொழுதில் கண்ணயராது உங்களுக்குக் கடிதம் நானெழுதக் காரணம் ஆயிரம்.
ஆனாலும் அதையெல்லாம் எழுத விடாது வந்து வீழும் பகைவனின் எறிகணைகளுக்கிடையேயும் எரிகுண்டுகள் மற்றும் கொத்தணிக் குண்டுகளிடையேயும் ஒரு சில காரணங்களையாவது சுட்டிக்காட்டிடலாமென்று எண்ணி நம்பித் தொடர்கிறேன். ஒரு வேளை, இதுவே நாம் உங்களுக்கு எழுதும் இறுதி மடலாகவும் கடைசி வேண்டுகோளாகவும் இருக்கவும் கூடும்.
பாசத்துக்குரியவர்களே! உலைக் கூடத்திலே கொட்டப்பட்ட புழுக்களின் கூட்டமல்ல நம் மக்கள். பகை சூழும் போர்க் களத்திலே கழுத்தில் நஞ்சு மாலை அணிந்து ".......இருப்பது ஓர் உயிர் தானே! அது போகப் போவதும் ஒரு முறை தானே............" என்று கூறி, அநியாயம் செய்து நெருங்கி வரும் பகைவனின் படைகளுக்குத் தக்க பதிலடி கொடுக்கத் தயாராகி - நம் மக்கள்.........அணியணியாக.......
"அநியாயத்தை எதிர்த்து நில்லுங்கள்! வாருங்கள் அடிபடும் உங்களுக்கு நான் தலைமை வகிக்கிறேன்..." எனக் கூறி நம்மெல்லோரையும் காத்துச் செல்லும் நம் தானைத் தலைவர் தலைமையில், அவர் சுட்டும் திசையில் எங்கும் செல்வோம் - எதிலும் வெல்வோம் என்றவாறு திரள் திரளாக - நம் சகோதரர்கள்......
இந்நிலையில், ஆறாண்டுகள் முன் கைச்சாத்தாகிய 'யுத்த நிறுத்த உடன்படிக்கை'யையும் ஏறத்தாழ இரண்டாயிரத்துக்குச் சற்று மேற்பட்ட இன்று வரையான நாட்களுக்குள் நம் தாயகத்தில் நிகழ்ந்தவற்றையும் ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.
அவ்வொப்பந்தத்தில் பன்னாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் கையெழுத்திட்டு எம்மையும் சமதரப்பாக ஏற்றுக் கொண்ட சிங்கள அரச தரப்பு, எம்மை ஏமாற்றிப் பலவீனப்படுத்தி விட்டதாகக் கூறி எக்காளமிடுகிறது தற்போது. இது பற்றிப் பாராமுகமாய் - கண்டும் காணாதவார்களாய் இருக்கிறார்கள் அப்போது சாட்சியாய் இருந்தவர்கள் என்பது, கசப்பானதொரு உண்மையல்லவா?
அன்பானவர்களே! கடந்த அறுபது ஆண்டுகளில் நம் தேசம் காணாத பேச்சுவார்த்தையுமில்லை, ஒப்பந்தமுமில்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இதற்கு முன், தங்கள் நாட்டரசும் எமது 'அயல் நாட்டுக் குள்ளநரியும்', எமது ஏக பிரதிநிதிகளை நிர்ப்பந்தித்து, தான்தோன்றித்தனமாகச் செய்த "இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும்" நீங்களோ நாங்களோ மறப்பதற்கில்லை.
அதேபோல், அந்த உடன்படிக்கை கிழிந்த - கிழித்தெறியப்பட்ட ஒக்டோபர் பத்தையும் அதன் பின்னான விளைவுகளையும் அவற்றின் பக்கவிளைவுகளையும், நாங்கள் யாருமே மறுப்பதற்குமில்லை, மறைப்பதற்கும் இல்லை.
இருந்தும், கால நிர்ப்பந்தங்களையும் புதிய உலக ஒழுங்கையும் சரிவரப் புரிந்து நம் தலைமை சர்வதேசங்களுமறிய நம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் சுமைகளைக் குறைப்பதற்காக இறுதியாகச் செய்த அவ்வுடன்படிக்கையின் கதி, என்னவாயிற்று??
ஏறத்தாழ முந்நூற்று எண்பது நாட்களுக்கு முன் ஒருதலைப்பட்சமாக அவ்வொப்பந்தத்தை முறித்துக் கொண்டு வெளியேறி, கொக்கரித்துக் கொண்டும் சூளுரைத்துக் கொண்டும் வஞ்சகமாக நம் மக்களைக் கொன்றொழித்தும் ஆண்டாண்டுகளாய் அவர்கள் வாழ்ந்து வந்த இடங்களை அழித்தொழித்து வன்பறிப்புச் செய்தும் வரும் சிங்களத்தின் உண்மைப் பேரினவாத முகம் உலகிற்குப் புரியாவிட்டாலும் - புரிந்தும் புரியாதவர்களாய் இருந்து கொண்டாலும், எவர் என்ன சொன்னாலும், ஆறரைக் கோடி தமிழ் மக்களான உங்களுக்கு இப்போ நன்கு தெரிகிறது என்பதும் வேறுபாடுகளை மறந்து நீங்கள் கொடுக்கும் ஒருமித்த குரலும் எமக்குப் பெருந்தொல்லைகளின் மத்தியிலும் பேருவகை அளிக்கவே செய்கிறது.
அதே வேளை, புலத்தின் வளத்தில் மக்கள் பலத்தில் களத்தில் நிற்கும் நம் வீரருக்கும், வாழ்க்கையே போராட்டமாகவும் போராட்டமே வாழ்க்கையாகியும்விட்ட பின்தளத்து மக்களுக்கும் நேரடியாகக் கவசமாய் இருந்து உங்களால் காப்பாற்ற முடியாதிருந்தாலும், பட்டினி கிடந்து அவல வாழ்வு வாழும் நம் சொந்தங்களுக்காக மனிதாபிமானத்துடன் நீங்கள் கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் ஒன்றுபட்ட உணர்வோடு அனுப்பியவை போன்று தற்போதும் அனுப்ப முயல்கின்ற அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் வந்து சேர்வதற்குள், ஆக்கிரமிப்பாளனுக்கு, வேண்டியளவு போர்த் தளபாடங்களும் உதவியாகப் படையினரும் உவ்விடமுள்ள தொடருந்தில் ஏற்றப்பட்டுக் கப்பல் கப்பலாக இங்கு வந்திறங்கியதாக அறிந்த போது, அதிர்ச்சியில் திகைத்தே விட்டோம்.
அவை மட்டுமா? எம் மக்களை வல்வளைப்புச் செய்து எமது மண்ணைச் சிறிது சிறிதாகக் கபளீகரம் செய்யும் எதிரிப்படைகளுக்குப் போர்ப்பயிற்சியும் நவீன இராணுவ தொழில்நுட்ப உதவிகளும் கூடவே உளவுத் தகவல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றனவாமே?
அன்புக்குரியவர்களே! கடந்த ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்கின்ற இந்த யுத்த சன்னதத்தால் எம் சுற்றாடல் சீர்குலைந்து உறவுகள் வயது வேறுபாடின்றிப் பெரும் துன்பத்துக்குள் தள்ளப்பட்டு, அன்றாடம் அடுத்து விடும் மூச்சுக்கே உத்தரவாதமற்ற சூழ்நிலையில் இருக்கையில், சிலதினங்கள் முன் உவ்விடமிருந்து வான் வழி வந்த சேதிகள் எம்மைப் பெரும் பிரமிப்பிலும் சோகத்திலும் ஆழ்த்தின.
ஆம்! உண்மைதான் - அங்கிருந்து, இங்கிருக்கும் எமக்காக, எம் நிலையைக் கண்டும் வாளாதிருக்கும் சில அரசியல்வாதிகளுடைய கையாலாகாத்தனத்தை வெளிக்கொணர்வதற்காகவும் இரட்டை வேடமிட்டு கபட நாடகங்களுக்குத் துணை போகும் அத்தகையவர்களின் போலி முகங்களின் திரையினைக் கிழிக்கும் வகையிலும் தமிழகக் குடிமக்கள் இருவர் தமக்கே தீயிட்டுச் சாவடைந்தார்கள் என்ற செய்தி எம் கண்களில் கண்ணீருடன் நெஞ்சிலே இரத்தததையுமல்லவா வரவழைத்து விட்டது?
சகோதரரே! ஒன்றா இரண்டா...........? எத்தனை ஆயிரம் உயிரிழப்புகள் இதுவரை.......?! ஆனால், இவை அத்தனையும் வீணாகிப் போகக் கூடாது என்றால், இவற்றை எல்லாம் அர்த்தமுள்ளதாக்க வேண்டும் என்றால், எமது இருப்பை நாம் தான் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இத்தகையதொரு வரலாற்றுப் புறநிலைகள் மிக்க கால கட்டத்தில் வாழும் நாம் எல்லோரும், இனியாவது நண்பர்களை இனம் கண்டு, எதிரிகளைப் புறந்தள்ளி துரோகிகளையும் ஒட்டுப்படையினரையும் தவிர்த்து அழித்து எம் அசைவுகள் ஒவ்வொன்றையும் அர்த்தமுள்ளதாக்கி, சரியான திசையில் ஒரே கொள்கையுடன் உண்மைத் தலைவன் வழியில் எவ்வித தாமதமுமின்றி உடனடியாகவே பயணித்தாக வேண்டும்.
எமது பாரம்பரிய மண்ணை அபகரித்த நிலையில் மக்களைப் பல்லாயிரக் கணக்கில் இடம்பெயர்த்து அகதிகளாக்கி அழித்தொழித்த வண்ணம் இன்று தனது அறுபத்து ஓராம் சுதந்திரதினத்தை ஆணவத்தோடும் இறுமாப்பபுடனும் பன்னாட்டுச் சமூகத்துக்குப் பொய்கள் பல உரைத்து, தன் நாட்டு மக்களுக்கு உண்மைகளை மறைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்காவின் சுதந்திர நாளில் - அரைநூற்றாண்டுக்கும் மேற்பட்ட எம் கடந்த கால வரலாறு, இதைத் தவிர வேறெந்த வழியையும் எமக்கு விட்டு வைக்கவில்லை என்ற பெரும் உண்மையை, நாம் எல்லோரும் ஒன்றிணைத்து, உலகின் மூலை முடுக்கெங்கும் பறை சாற்றியாகவே வேண்டும்.
அன்பானவர்களே! நாங்கள் நீந்துவது, எவ்விதமான கால வரையறையும் செய்ய முடியாத விடுதலை எனும் நீண்ட நெருப்பாற்றில் என்பது எமக்கு நன்கு தெரியும். இதுவரை காலமும் புலம்பெயர்ந்து பனிவிழும் தேசங்களிலும், பாலைவனங்களிலும் இயற்கையோடு போராடி வாழும் நம் உடன்பிறப்புகளின் உதவிகளுடன் நாங்கள் இதுவரை பயணித்து வந்து விட்டோம்.
தற்போது, சில மைல்கள் தொலைவிலுள்ள தொப்பூழ்க்கொடி உறவுகளான உங்களது அன்பும் ஆதரவும் பூரணமாக எமக்குள்ள நிலையில், அது தரும் தெம்புடன் நாம், நம் தாயகப் பயணத்தை நம்பிக்கையுடன் தொடர்கின்ற நேரத்தில், கடந்த சில வாரங்களாக உவ்விடத்தில் நிகழும் சகல போராட்டங்களுக்கும் உடலால் புலம்பெயர்ந்தும் மனத்தால் எம்முடனேயே வாழும் நம் பாசத்துக்குரியவர்களின் கவனயீர்ப்பு, உண்ணா நோன்பு, மனிதச் சங்கிலி, தீப்பந்தப் பேரணி போன்ற முன்னெடுப்புகளுக்கும் இங்குள்ளவர்களின் சார்பாக எமது அன்பையும் உளமார்ந்த நன்றிகளையும் இம்மடலூடாகத் தாழ்மையுடனும் உரிமையுடனும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
அதே வேளையில், உங்களின் அசைவுகள் எவையும் இதுவரை - சிங்கள அரசின் கொடூரத் தாக்குதல்களையோ, மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள், பொதுமக்களுக்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு வலயங்கள், அரச சார்பற்ற, தொண்டர் நிறுவனங்கள் மீதான கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையோ தடுத்திராவிட்டாலும், பொருளாதாரத் தடை, போக்குவரத்துத் தடை, மருந்துத் தடை, கல்வித்தடை, தொடர்பாடல் தடை போன்றவற்றை நீக்காது விட்டாலும் நீங்கள், தளராத மனதோடு தொடர்ந்தும் நியாயத்தின்பால் நிற்கும் உங்களின் செயற்பாடுகளைத் தீவிரமாக்கித் துணிவுடன் சரிவர முன்னேடுப்பீர்களென்றே எதிர்பார்க்கிறோம்.
அன்பானவர்களே! ஐக்கிய நாடுகள் சபையில் - ஆயிரமாயிரம் வேங்கைகள் இரத்தத்தில் நாம் ஏற்றுகிற எமது தேசியக் கொடியாம் புலிக்கொடி பட்டொளிவீசிப் பறக்கும் வரை, சிங்கள அரசும் அதன் படைகளும் செய்த - செய்து வருகின்ற அத்தனை அநியாயங்களுக்கும் முடிவு கண்டு, சர்வதேச நீதி மன்றில் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் வரை, அல்லலுற்றுள்ள எமது மக்களுக்கு நிரந்தரமான நீதியான சமாதானமும் சுகவாழ்வும் கிட்டும் வரை, நீங்களும் நாங்களும் ஒன்றுபட்டு, வலிகளை வலிமையாக்கி சுமைகளைச் சுகங்களாக்கி வேகமாகவும் விவேகமாகவும் செயற்படுவோமாக என்று கூறி இம்மடலை இத்துடன் நிறைவு செய்கிறேன்.
நன்றிகளுடனும் நல்வாழ்த்துக்களுடனும்,
தமிழீழ தேசம் விடுதலை காண உழைத்துக் கொண்டிருக்கும் உங்கள் பாசத்துக்குரியவர்கள் சார்பாக,
- உடன் பிறவாச் சகோதரி -
- ஆதவி
Comments