இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்ட கடலூர் அன்னவள்ளியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் தொண்டர் ஆனந்த் அவர்களின் பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், நடராஜன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பு செயலாளர் பாவாணன் ஆகியோர் இன்று மலரஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈழத் தமிழருக்காக உயிர் தியாகம் செய்த ஆனந்தின் இறுதி ஊர்வலம் கடலூரில் நாளை நடைபெற உள்ளது. இதில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலை வர்கள் கலந்து கொள்கிறார்கள். அப்போது அவர்களுடன் பேசி ஆனந்த் குடும்பத்துக்கு நிதி வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.
இதுவரை தமிழகத்தில் 11 பேரும், வெளிநாட்டில் 3 பேரும் உயிர் தியாகம் செய்துள்ளனர். உயிர் தியாகம் செய்த அனைவரும் இளைஞர்கள். வாழ வேண்டிய வயதில் இலங்கை தமிழர் படும் வேதனைகளை கண்டு தாங்க முடியாமல் உயிர் தியாகம் செய்துள்ளனர். இதை நாங்கள் ஆதரிக்கவில்லை. யாரும் உயிர்த்தியாகம் செய்ய வேண்டாம் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக கேட்டு கொண்டுள்ளோம்.
இலங்கை பிரச்சினை தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. இதை அரசு உணர வேண்டும். சராசரியாக 4 நாட்களுக்கு ஒருவர் வீதம் உயிர் தியாகம் செய்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழக மக்கள் எரிமலையாக வெடிக்க போகிறார்கள். என்பதற்கான அறிகுறி இதுவாகும்.
தியாகத்துக்கு மதிப்பளித்து இலங்கை பிரச்சினையில் தலையிட்டு போர் நிறுத்தம் செய்ய மத்திய, மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு மத்திய-மாநில அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments